Skip to main content

ரூ. 1000 கோடி மதிப்பிலான கனவு திட்டத்தில் வெற்றிப்பெறுவாரா பிரதமர் மோடி?

Published on 10/12/2020 | Edited on 10/12/2020

 

simbu

 

 

பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தை உள்ளடக்கிய ‘செண்ட்ரல் விஸ்டா’ திட்டம். முதலில் இதுகுறித்த அறிவிப்பு வெளியானபோது 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் இந்த திட்டத்திலுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை மட்டும் முடித்திருக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த திட்டத்திற்கு பலரிடம் இருந்து எதிர்ப்பு வந்தது. உச்சநீதிமன்றத்தில் இதை எதிர்த்து கொத்தாக 10 மனுக்கள் உள்ளன. அந்த மனுக்களை பரிசீலனை செய்யும்வரை இந்த திட்டத்திற்கு அடிக்கல் மட்டுமே நடலாம், திட்டம் குறித்த வேறு எந்த பணியும் தொடங்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசை எச்சரித்திருந்தது. இதனால் இந்த திட்டம் தொடர்பாக எந்தவித பணிகளையும் தொடங்காமல் கவலையுடன் காத்திருக்கும் மத்திய அரசு, அனுமதி கிடைத்தவுடன் விறுவிறுவென புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்ட திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறது. அடிக்கல் மட்டும் நடலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று பிரதமர் மோடி செண்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். அதுமட்டுமல்லாமல் 12 வெவ்வேறு மதங்களை பின்பற்றும் மத குருக்களை வைத்து பூமி பூஜை செய்கிறது மத்திய அரசு. (இந்தியா மதசார்பற்ற நாடு என்பதால்)

 

தற்போதைய பாராளுமன்ற கட்டிடத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பிரதமர் இல்லம் மற்றும் துணை குடியரசுத் தலைவரின் இல்லம் ஆகியன அரசின் பார்வையில் போதுமானதாக இல்லை. இதுமட்டுமல்லாமல் பாராளுமன்றத்தையும் புது டெல்லியையும் பிரிட்டிஷார்கள் காலகட்டத்தில் லுட்டென் என்பவர் கட்டமைத்தார். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை இந்தியா தொட உள்ள நிலையில் இந்தியாவின் கலாச்சாரம் பண்பாட்டை மையப்படுத்திய பெரிய கட்டிட கலையுடன் இந்திய பாராளுமன்றம் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பிரதமரின் இல்லம் தெற்கு பிளாக்கில் உள்ள பிரதமரின் அலுவலகம் அருகில் கட்டப்படும், துணை குடியரசுத் தலைவரின் இல்லம் வடக்கு பிளாக்கிற்கு அருகில் கட்டப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தெற்கு மற்றும் வடக்கு ஆகிய இரு பிளாக்குகளும் அருங்காட்சியகமாக மாற்றியமைக்கப்பட உள்ளது.

 

இந்த செண்ட்ரல் விஸ்டா திட்டமானது மொத்தம் 64,500 சதுர மீட்டர் இடத்தை உள்ளடக்கியது. புதிய பாராளுமன்ற கட்டிட அமைப்பு முக்கோண வடிவத்தை கொண்டிருக்கிறது. தற்போதைய பாராளுமன்றத்தை காட்டிலும் மிகப்பெரிய கட்டிடமான புதிய பாராளுமன்றம் இருக்கும் என்று திட்ட வரைறையில் கூறப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் மொத்தம் 1,224 உறுப்பினர்களுக்கு இருக்கை இருக்கப்போகிறது. அதாவது மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களுக்கும் அமர்வதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் எம்பி தொகுதிகளை உயரும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதிருக்கும் 545 மக்களவை உறுப்பினர்களுக்கும், 245 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் புதிய பாராளுமன்றத்தில் அலுவலகம் அமைக்கப்பட இருக்கிறது. அப்போது, தற்போதைய பாராளுமன்றமும் சில நிகழ்வுகளுக்காக பயன்பாட்டில் இருக்குமாம். அலுவலகங்களில் காகிதங்கள் இன்றி முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமாக இருக்கப்போகும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட அலுவலங்களாக இவை அமைக்கப்பட உள்ளன. மக்களவை அலுவலகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத் துறை மத்திய அமைச்சகம், சி.பி.டபுள்யூ, என்.டி.எம்.சி உள்ளிட்ட துறை உறுப்பினர்கள், திட்டப் பணியில் செயல்படும் கட்டிட கலைஞர்கள் உள்ளிட்ட இவர்கள் அனைவரும் புதிய பாராளுமன்ற கட்டிட பணிகளை மேற்பார்வையிடும் அமைப்பில் இருப்பார்களாம். புதிய பாராளுமன்றத்தின் கட்டிட பணிகள் 2022 ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மொத்த செண்ட்ரல் விஸ்டா திட்டத்தை அடுத்த மக்களவை தேர்தலுக்கு முன்பாக 2024ஆம் ஆண்டு முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

 

தற்போதைய பாராளுமன்றம் பிரிட்டிஷ் காலனி ஆட்சியின்போது, பிப்., 12ஆம் தேதி 1921ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, ஆறு வருட பணிகளுக்குபின் ஜனவரி 18ஆம் தேதி 1927ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. எட்வின் லுட்டென்ஸ் மற்றும் ஹெர்பெர்ட் பேக்கர் என்பவர்களால் வடிவமைக்கப்பட்டது இந்த பாராளுமன்றம். சொல்லப்போனால் நியூ டெல்லியின் மொத்த கட்டமைப்பையும் இவர்கள்தான் திட்டமிட்டார்களாம். இதனால்தான் நியூ டெல்லியை லுட்டென்ஸ் டெல்லி என்று குறிப்பிடுகிறார்கள். அப்போதைய காலகட்டத்தில் இந்த பாராளுமன்ற திட்டத்தின் மொத்த செலவு 83 லட்சம், தற்போது திட்டமிடப்பட்டிருக்கும் செண்ட்ரல் விஸ்டாவின் செலவு தொகை ரூ. 971 கோடி. ஆனால், கால தாமதமானால் இதற்கு போடப்பட்ட செலவுத் தொகை அதிகரித்துக்கொண்டே செல்லும் என்று சொல்லப்படுகிறது. இந்த மொத்த திட்டத்திற்கான கட்டுமான டெண்டரை டாடா நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் உலக நாடுகளில் இருந்து பலர் இந்த கட்டிட பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. 

 

பிரதமரின் கனவு திட்டமாக செண்ட்ரல் விஸ்டா இருந்தாலும் இதை முழு மூச்சூடன் செயல்படுத்தி முடிப்பதற்குள் பெரும் சவால்கள் அவரை எதிர்நோக்கியுள்ளன. எதிர்கட்சிகளின் எதிர்ப்பு மட்டுமல்ல, நொடித்துக்கொண்டிருக்கும் பொருளாதாரம், கரோனா அச்சுறுத்தல் என இன்னும் பல விஷயங்களைக் கடந்து தன்னுடைய கனவு திட்டத்தை செயல்படுத்தி வெற்றிபெறுவாரா பிரதமர் மோடி?