Skip to main content

காஷ்மீரை துண்டித்த மோடியின் டிஜிடல் இந்தியா!

Published on 23/09/2019 | Edited on 23/09/2019

ஒரு நாள் போன் உபயோகப் படுத்தாமல், டி.வி.பார்க்காமல், இணையத் தொடர்பு இல்லாமல், சொந்தக்காரக் குடும்பங்களை பார்க்காமல் இருந்தால் நம் மனநிலை எப்படி இருக்கும்?
 

jammu and kashmir

 

 

காஷ்மீர் மக்கள் 50 நாட்களாக இதேநிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கும்? டிஜிடல் இந்தியா, கேஷ்லெஸ் இந்தியா என்று சுதந்திர தினத்தில் பேசிய மோடி, காஷ்மீரை இந்தியாவிலிருந்து மட்டுமின்றி, உலக நாடுகளிடமிருந்தும் துண்டாடி இருக்கிறார்.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் காஷ்மீரை இரும்புத்திரை போட்டு மூடியிருக்கிறது மத்திய அரசு. காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதே வெளியுலகுக்கு தெரியவில்லை. கடந்த 12 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்ஸாலிடம் இந்த இரும்புத்திரை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அப்போது பதிலளித்த கன்ஸால், இணையத் தொடர்புகளை பாகிஸ்தான் தவறாக உபயோகப்படுத்தக்கூடும் என்ற அச்சம் இருப்பதால் தடை செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.

உடனே, “பாகிஸ்தான் எல்லாக்காலத்திலும்தான் இருக்கிறது. பாகிஸ்தானை எப்போதான் இந்தியா அடக்கப்போகிறது? காஷ்மீரில் இணையத் தொடர்பை எப்போதான் கொடுக்கப்போகிறது?” என்று செய்தியாளர்கள் கேட்டார்கள்.

அதன்பிறகு, கடந்த 10 நாட்களாக அவர் செய்தியாளர்களையே சந்திக்கவில்லை.

வெற்றிகரமான 50 ஆவது நாளாக டிஜிடல் இந்தியாவிலிருந்து காஷ்மீர் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

டெல்லியிலிருந்து 800 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஸ்ரீநகர் வெறிச்சோடிக் கிடக்கிறது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து பறிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் வெளியுலகத்துடன் அது துண்டிக்கப்பட்டது.

நான்கு வயது ஆயிஷா தனது தந்தையின் மொபைல் போனில் கார்ட்டூன் படங்களை பார்க்க முடியாமல் போயிற்று… அதுமட்டுமின்றி, வீட்டிலிருக்கும், தொலைக்காட்சிப் பெட்டியும் உயிரற்றுப் போயிற்று. செட்டாப் பாக்ஸை ரீசார்ஜ் செய்யும் வசதியும் துண்டிக்கப்பட்டுவிட்டது.

16 வயது முகமது மோஹ்சென் தனது என்ஜினீரிங் சேர்க்கைக்கு ஆன்லைன் தேர்வை எழுதமுடியாமல் போயிற்று.

ஸ்ரீநகரில் இயங்கிய ஐ.டி.நிறுவனம் தனது பணியாளர்களை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.

சமூக வலைத்தளங்கள் வழியாகவும் இணையம் வழியாகவும் உலக நடப்புகளை அறியும் வாய்ப்பு சாதாரண காஷ்மீர் குடிமக்களுக்கு தடைசெய்யப்பட்டது. மொத்ததில் காஷ்மீர் மக்கள் அனைவரும் அவர்களுடைய வீட்டைவிட்டு வெளியேறமுடியாத நிலையில் இருட்டுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர் என்கிறார் அஸார் பாபா என்ற பட்கம் மாவட்ட இளைஞர். இவர் தனது ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகி வருகிறார். தனது படிப்பை இணையத்துண்டிப்பு கடுமையாக பாதித்திருக்கிறது என்கிறார். தனது படிப்புக்காக டெல்லிக்கு செல்லலாம் என்று திட்டமிட்டிருப்பதாக கூறும் இவர், இணையத்தில் தொடர்புடையவர்களை நெட்டிஸன் என்று அழைப்பார்கள். காஷ்மீரில் அந்த வார்த்தைக்கு அர்த்தமில்லாமல் போயிற்று என்கிறார்.

காஷ்மீரில் உள்ள மீடியா ஆட்கள் தங்களுடைய செய்திகளையும் போட்டோக்களையும் பென் டிரைவில் போட்டு, டெல்லி செல்லும் ஆட்களிடம் கொடுத்து அனுப்பும் நிலை இருந்தது.

விமர்சனங்கள் வலுத்தவுடன், அரசு சார்பில் தலைநகர் ஸ்ரீநகரில் மீடியா மையம் உருவாக்கப்பட்டது. அதில் 9 கம்ப்யூட்டர்களும், ஒரு இணைய இணைப்பும் மட்டுமே இருந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து மீடியா ஆட்கள் தங்கள் செய்திகளை சம்பந்தப்பட்ட மீடியாக்களுக்கு அனுப்ப வேண்டியிருக்கிறது.

அரசு சார்பிலான விழிப்புணர்வு பிரச்சாரங்கள்கூட தடுக்கப்பட்டிருக்கின்றன.

பிரதமரின் உயர்சிகிச்சை உதவியும் காலவரையறையின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தொழில் அதிபர்களும், வர்த்தகர்களும் தங்கள் வருமானவரிக் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான கடைசித்தேதியை தவறவிட்டு தவிக்கிறார்கள்.

இதுதான் டிஜிடல் இந்தியாவின் காஷ்மீர் நிலை என்கிறார் ஒரு வர்த்தகர்.

2016ல் இதுபோல இணையத்தடை விதிக்கப்பட்டது. அப்போது தொடர்ந்து 6 மாதங்கள் வரை கலவரம் நீடித்தது. அந்த சமயத்திலேயே வெறும் 10 நாட்கள் மட்டுமே இணையதள சேவைக்கு தடைவிதிக்கப்பட்டது. ஆனால், இப்போது 50 நாட்களைக் கடந்தும் தடை நீடிப்பதால் மக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள்.

2008ல் அமர்நாத் கோவில் நிர்வாகத்துக்கு காஷ்மீர் வனத்துறை நிலங்களை அரசு கொடுத்தது. அப்போதும் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. அப்போதும் அவ்வப்போது இணையச் சேவைகள் பல மாநிலங்களில் துண்டிக்கப்பட்டன.

கடந்த ஆறு ஆண்டுகளில் இணையச் சேவை துண்டிப்பு காரணமாக மட்டும் 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டிருப்பதாக சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான சர்வதேச ஆராய்ச்சி கவுன்சில் கூறியிருக்கிறது.

காஷ்மீரில் இணையச் சேவை துண்டிப்பு குறித்து அமித்ஷாவிடம் கருத்துக் கேட்டபோது, “இது ஒன்றும் புதிதில்லை. இந்தியாவில் மற்ற எல்லா பகுதிகளிலும் இணைய சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, 16 ஆண்டுகளுக்கு பிறகுதான் காஷ்மீருக்கு இணைய சேவை கிடைத்தது. மொபைல் சர்வீஸும் மற்றப் பகுதிகளைக் காட்டிலும் 17 ஆண்டுகளுக்கு பிறகுதான் காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டது” என்று நியாயப்படுத்துகிறார்.

காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கோ, “இணையத்தையும், மொபைல் போன் சர்வீஸையும் பயன்படுத்தி தீவிரவாதிகள் மக்களைத் திரட்டி போராட்டத்துக்கு தூண்டுகிறார்கள். அவர்களுக்கான ஆயுதமாக பயன்படும் இணையத்தை தடை செய்வது தவறில்லை” என்கிறார்.

ஆனால், இணைய சேவைகளை மட்டுமல்ல, மக்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதையே தடை செய்திருப்பது ஏன் என்பதற்கான விளக்கம் இதுவரை கிடைக்கவேயில்லை.

அரசாங்கம் இதை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், மொபைல் ஆபரேட்டர்கள் சங்கம், நாள் ஒன்றுக்கு 2 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறியிருக்கிறது.