Skip to main content

டீ வியாபாரம் டூ ரபேல் விமான வியாபாரம்?

Published on 09/02/2019 | Edited on 09/02/2019

 

modi

 

மோடியைப் பற்றி பேசும் அவருடைய கட்சிக்காரர்கள் அவர் சிறுவயதில் ரயில் நிலையத்தில் டீ விற்றதை பெருமையாக கூறுவார்கள். மோடியும்கூட இதை அவ்வப்போது கூறிக்கொள்வது உண்டு.

 

தன்னை ஒரு ஏழைத்தாயின் மகனாக காட்டிக்கொண்டு அனுதாபம் பெற விரும்பும் மோடி, குஜராத்தில் கலவரத்தை ஏற்படுத்தி அங்கு நடத்திய படுகொலைகளைப் பற்றி பேசமாட்டார். தனக்கு மனைவி இருந்ததையே மறைத்த அவர், பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் சமயத்தில் உண்மை வெளியானதால் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டார்.

 

சமீப நாட்களாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மோடி ஒரு திருடர் என்று பகிரங்கமாக கூறிவருகிறார். அடிக்கடி இந்த வார்த்தையை மோடியை நோக்கி கூறினாலும் அதற்கு நேரடியாக மறுப்புத் தெரிவிக்க மோடி தயாராக இல்லை. 5 நிமிடம் தன்னுடன் விவாதிக்க தயாரா என்றுகூட ராகுல் கேட்டுவிட்டார். விவாதிப்பதைத் தவிர வேறு எல்லா வகையிலும் கத்திப் பேசுகிறார் மோடி.

 

modi

 

நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கும் மறுக்கிறார். ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி 30 ஆயிரம் கோடி மக்கள் பணத்தை அள்ளி அனில் அம்பானிக்கு வாரிக்கொடுத்துவிட்டார். அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகலை இழுத்து மூட மோடி திட்டமிட்டிருக்கிறார். அம்பானி புதிதாக தொடங்கப்போகிற விமான உதிரிபாக உற்பத்தி நிறுவனத்திற்கு மக்கள் பணம் 30 ஆயிரம் கோடி ரூபாயை அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார் மோடி என்றெல்லாம் ராகுல்காந்தி குற்றம்சாட்டுகிறார்.

 

ராணுவ அமைச்சகத்தை புறக்கணித்துவிட்டு, பிரதமர் அலுவலகமே ரபேல் விமான பேரத்தில் நேரடியாக தலையிட்டிருக்கிறது. பிரான்ஸ் அரசாங்கத்துடன் மோடியே நேரடியாக பேச்சு நடத்தி, யாருக்காக இந்த ஒப்பந்தத்தை ரகசியமாக முடித்துக் கொடுத்தார். முன்னாள் ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் இந்த விவகாரத்தில் எதிர்ப்புத் தெரிவித்தும் அவரை மீறி பிரதமர் அலுவலகம் இந்த பேரத்தை முடித்தது எப்படி என்றெல்லாம் வினாக்கள் எழுப்பினார். இப்போது அதற்கான ஆதாரங்களை தி ஹிண்டு ஆங்கில நாளிதழில் மூத்த பத்திரிகையாளர் என்.ராம் வெளியிட்டு வருகிறார்.

 

இவற்றைப்பற்றி நாடாளுமன்றத்தில் எழுப்பினால் முடிந்த பிரச்சனையை திரும்பத்திரும்ப கிளறுவதாக நிர்மலா சீதாராமன் கூறுகிறார். ஒரு பிரச்சனை முடிந்துவிட்டது என்று எப்படி அவர் கூறுகிறார் என்பதே தெரியவில்லை. ஒருவர் செத்துப் போய்விட்டார் என்று புதைத்துவிட்டாலும், அவருடைய சாவில் சந்தேகம் எழுப்பினால் பிணத்தை தோண்டி விசாரணை நடத்துவதில்லையா? அப்படி இருக்கும்போது, அடுத்தடுத்து ஆதாரங்களும் சந்தேகங்களும் எழும்போது, அதுவும் பிரதமர் மீதே நேரடியாக புகார்கள் எழும்போது விளக்கம் அளிப்பதுதானே சரியாக இருக்கும்? அதைவிடுத்து, பிரச்சனை முடிந்துவிட்டது என்று அமைச்சரே கூறினால் எப்படி சரியாகும்?

 

modi


 

நிர்மலா சீதாராமன் சொல்வதைப் போல ரபேல் விவகாரம் செத்த பாம்பு அல்ல… அது படமெடுத்து சீறும் பாம்பு. அந்த பாம்பு பிரதமரை விடாமல் துரத்துகிறது. அவரும் நிர்மலா, ஜெட்லி போன்றோர் பின்னால் ஒளிந்து தப்ப முயற்சிக்கிறார். இது எங்கே கொண்டுபோய் முடியும் என்பதை நாடு வேடிக்கை பார்க்கிறது.

 

இதனிடையே, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பெருகிவரும் ஆதரவு, மோடியை திணறடிக்கிறது. தனது முதலாளிகளுக்கு சாதகமாக ரபேல் விமான பேரத்தை முடித்து, ஊழல் செய்திருக்கிறார் மோடி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடுமையாக குற்றம்சாட்டியிருக்கிறார்.

 

சுதந்திர இந்தியாவின் எந்த பிரதமரும் இதுவரை மோடியைப் போல நேரடியாக ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டதில்லை. பிரதமரே தனது முதலாளிக்காக பேரம்பேசியதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பது இதுதான் முதல்முறை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.

 

எல்லாவற்றுக்கும் மேலாக, இதுவரை தன்னை சாயா விற்பவராக கூறிவந்த மோடி, இப்போது ரபேல் விமான வியாபாரம் செய்பவராக மாறியிருக்கிறார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி கிண்டல் செய்திருக்கிறார்.

 

 

 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.