Skip to main content

"சசிகலாவுக்கு எடப்பாடி செய்த துரோகத்தை மதிமுகவில் அனுமதிக்க முடியாது.." - துரை. வைகோ நியமனத்துக்கு நாஞ்சில் சம்பத் வரவேற்பு!

 

fdxg

 

மதிமுகவில் கடந்த வாரம் நடைபெற்ற கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகனுக்கு புதிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது. மதிமுகவின் தலைமைக் கழக செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் நியமனத்தை எதிர்த்து சிலர் கட்சியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் துரை.வைகோ நியமனம் பற்றி பல்வேறு கேள்விகளைத் திராவிட இயக்க சிந்தனையாளர் நாஞ்சில் சம்பத் அவர்களிடம் கேள்விகளாக முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் பின்வருமாறு...


தமிழக அரசு தற்போது சமூகநீதி கண்காணிப்புக் குழு ஒன்றை ஏற்படுத்தி அதன் தலைவராகப் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களை நியமித்துள்ளது. இதனை எப்படிப் பார்க்கிறீர்கள். தற்போது அதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாகக் கருதுகிறீர்களா?

 

சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையிலான ஆட்சி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதன் தாக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது. மத அரசியலைத் தமிழகத்தில் காலூன்ற விடாமல் தடுக்கும் நிகழ்ச்சியாகவே இதனை நான் பார்க்கிறேன். தற்போது தமிழக அரசு சமூகநீதி பாதுகாப்புக் குழு ஒன்றை அமைத்து அதன் தலைவராகப் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களை நியமித்துள்ளது, ஒரு பாராட்டப்பட வேண்டிய சம்பவம். அவரை விட இந்த பதவிக்கு வேறு யாரும் சிறப்பான தேர்வு கிடையாது. அவர் நிச்சயம் நல்ல முறையில் செயல்பட்டு சமூகநீதிக்கு எதிராகச் செயல்படுவோரை மாநில அரசின் பார்வைக்குக் கொண்டு செல்வார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

நீங்கள் தமிழக அரசின் முடிவுக்குப் பாராட்டு தெரிவிக்கிறீர்கள், ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அமைச்சர் ஒருவர், அரசு அலுவலர்களைப் பணி முடிந்து வீட்டுக்கு வரச்சொல்லி வேலை செய்ய வற்புறுத்தியதாகக் கூறுகிறாரே? 

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாய் இருக்கிறது என்ற காரணத்திற்காக எதை வேண்டுமானாலும் பேசி வருகிறார். மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர் தாராபுரத்தில் வந்து பிரச்சாரம் செய்தாலும் முருகனை வெற்றிபெற வைக்க முடியவில்லை. அப்படி முருகனை வீழ்த்தி இன்று அமைச்சராகப் பொறுப்புக்கு வந்திருக்கின்ற ஒருவரை அழுக்காக்கும் அருவருக்கத்தக்க அரசியலை அவர்கள் செய்து வருகிறார். சமையல் கட்டில் யார் சமைக்கிறார்கள் என்று அண்ணாமலைக்கு எப்படித் தெரியும். இவரிடம் யாராவது புகார் கூறினார்களா? இவர்கள் எப்போதுமே ஆதாரத்தோடு எதையும் பேசமாட்டார்கள். எனவே அவர்கள் பேச்சை சீரியஸாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. 

 

மதிமுகவில் தற்போது தலைமை கழக செயலாளராகத் துரை. வைகோ நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

மதிமுகவில் தலைமை கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தம்பி துரை. வைகோவிற்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதற்கான தகுதி அந்த தம்பிக்கு இருக்கிறது. கட்சித் தலைமை இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கான முழு தகுதியும் அவருக்கு இருக்கிறது. அவரை கட்சியினரும், வைகோவும் சரியான நேரத்தில் அடையாளம் கண்டுள்ளனர்.  அவரது தலைமையில் கட்சி சிறப்பாக இயங்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

 

அவரின் நியமனத்துக்குக் கட்சியில் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளதைப் போன்ற தோற்றும் ஏற்பட்டுள்ளதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 

கட்சியில் அனைவருக்கும் வைகோ பதவி கொடுத்துள்ளார். திருப்பூர் துரைசாமி தொடங்கி மல்லை சத்யா வரை அனைவரும் வேறுவேறு பொறுப்புகளில் இருந்து வருகிறார்கள். இவருக்குப் புதிதாக ஒரு பொறுப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது, வாரிசு அரசியல் என்று சொல்கிறீர்கள், அப்படியென்றால் நீங்கள் தமிழக அரசியலை இன்னும் படிக்கவில்லை என்று அர்த்தம். எடப்பாடி பழனிசாமி யார், எடப்பாடி ஊரைத் தாண்டினால் அவரை யாருக்கும் தெரியாது. அவரை யார் முதல்வர் ஆக்கினார்கள். சசிகலா அவரை முதல்வர் ஆக்கினாரே, அந்த சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார், கட்சியை விட்டு சசிகலாவை நீக்கினார். அதே போன்று ஒரு நிலை மதிமுகவுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இன்னொரு எடப்பாடி மதிமுகவில் உருவாக வேண்டுமா? இதை எல்லாம் கவனத்தில் கொண்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.