ADVERTISEMENT

"நானா போய் கேட்கமாட்டேன், வருவதை விடமாட்டேன்" - நடிகர் நாஞ்சில் சம்பத்     

05:06 PM Feb 23, 2019 | rajavel

ADVERTISEMENT

அரசியல் மேடைகளிலும் இலக்கிய மேடைகளிலும் ஓங்கி ஒலித்த, சங்க இலக்கியத்தையும் சரித்திர கதைகளையும் வரி மறக்காமல் பேசிய நாஞ்சில் சம்பத்தின் குரல் முதல்முறையாக திரையில் ஒலிக்கிறது. அரசியலில் இருந்த பொழுதே மீம்ஸ் உலகம் மெல்ல அவரை தத்தெடுத்தது. ஒரு பக்கம் தன் தமிழுக்காக அரசியல் வட்டாரத்தில் புகழ் பெற்றிருந்த நாஞ்சில் சம்பத் மற்றொரு பக்கம் இணைய இளைஞர்களிடையே புகழ் பெற்றார். தினகரன் அணியிலிருந்து விலகிய நாஞ்சில் சம்பத் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். தற்போது எல்.கே.ஜி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி வைத்துள்ளார். நடிகர் நாஞ்சில் சம்பத்திடம் பேசினோம்...

ADVERTISEMENT


பொதுவாக சினிமாவில் நடித்துவிட்டு அரசியலுக்கு வருவார்கள். அரசியலில் இருந்துவிட்டு நடிக்கச் சென்றது எப்படி உள்ளது?

என் கையில் ஏதாவது பொறுப்பை தந்தால் அதனை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் என்று நினைப்பேன். கட்சி, அரசியலில் இருந்து விலகி வேலையில்லாமல், வருமானத்துக்கு வழியில்லாமல் இருந்த நேரத்தில் ஆர்.ஜே.பாலாஜி என்னை கூப்பிட்டார். வருகிறேன் என்று சொன்னேன். எல்லோரும் இன்று என் நடிப்பை நன்றாக உள்ளது என்று பாராட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

தொடர்ந்து நடிப்பீர்களா?

திரைத்துறையில் தொடர்ந்து பயணிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன்.

மேலும் படங்களில் நடிக்க முயற்சி செய்கிறீர்களா?

யாரிடமும் நான் நடிக்க வாய்ப்பு கேட்க மாட்டேன். வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்திக்கொள்வேன்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்துப்போட்டியிடும் என்று அறிவித்தார் ஜெயலலிதா. இப்போது அதிமுக தலைவர்கள் பாமக மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார்களே?

தற்கொலைக்கு சமம் இன்று அதிமுக எடுத்திருக்கிற முடிவு. மாநில உரிமைகளுக்கு வாளாகவும், கேடயமாகவும் இருந்த கட்சி தங்களது உரிமைகளையெல்லாம் விட்டுக்கொடுத்திருக்கிறது. தன்னுடைய உரிமைப்பாட்டை இழந்து நிற்கிறது. டெல்லியில் இருப்பவர்களின் கண் அசைவுக்கு புரிந்துகொண்டு அவர்களது கட்டளைக்கு அடிபணிந்து நிர்கிறார்கள். 40 இடங்களில் தன்னந்தனியாக நின்று 37 இடங்களில் வெற்றி பெற்ற ஒரு கட்சி, இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக மாறிக்கொண்டிருப்பது வேதனையை தருகிறது.

இரு திராவிடக் கட்சிகளுடன் இனி கூட்டணி கிடையாது என்று கூறிய ராமதாஸ், அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளாரே?

ராமதாஸ்க்கு தேவை மகனுக்குப் பதவி, பணம். அது எங்கு கிடைக்கிறதோ அங்கு செல்வார். அவர்களுக்குக் கொள்கையும் கிடையாது, கோட்பாடும் கிடையாது. பொதுவாழ்வில் ராமதாஸ் அளவுக்கு குட்டிக்கரணம் போட்டவர்கள் தமிழ்நாட்டில் யாரும் கிடையாது.

மக்கள் நலன் சார்ந்து 10 கோரிக்கைகளை முன் வைத்துதான் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக ராமதாஸ் கூறியிருக்கிறாரே?

அப்படித்தான் சொல்லுவார். மகனுக்கு மந்திரி பதவி வாங்கும்வரை அப்படித்தான் பேசிக்கொண்டிருப்பார்.

திமுக தலைமையிலான கூட்டணியை எப்படி பார்க்கிறீர்கள்?

திமுக கூட்டணி வெற்றிப்பெற வேண்டும். வெற்றிப்பெற வேண்டியது காலத்தின் கட்டாயம். அவர்களை வெற்றிப்பெற வைப்பது தமிழர்களின் கடமை.

திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது. வைகோவுக்காக பிரச்சாரம் செய்வீர்களா?

வாய்ப்பு அளித்தால் வைகோவுக்காக பிரச்சாரம் செய்வேன்.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பொதுக்கூட்டங்களில் கமல்ஹாசன் பேசி வருகிறார். அதை எப்படி பார்க்கிறீர்கள்?

கமலுடைய பிரச்சாரம் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நடைமுறைப்படுத்துவதற்கான அமைப்பு பலம் கமலுடைய கட்சிக்கு இல்லை. அதுதான் பலவீனம்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT