Skip to main content

விண்ணுக்கும் மண்ணுக்கும் தாவினாலும் பாஜகவால் அது மட்டும் முடியாது... நாஞ்சில் சம்பத் அதிரடி..

Nanjil Sampath

 

 

விண்ணுக்கும் மண்ணுக்கும் தாவினாலும் பாஜக தமிழக சட்டமன்றத்திற்குள் பிரவேசிக்க முடியாது என அரசியல் விமர்சகரும், இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

 

நக்கீரன் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டி:-

 

2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக கை காட்டும் கட்சிதான் ஆட்சி அமைக்கும். இன்னும் ஆறு மாதத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் என்கிறார்களே தமிழக பாஜக தலைவர்கள்...

 

அரசியல் மாற்றம் நடக்கப்போகிறது என்றால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்க்கப்போகிறார்கள், கவர்னர் ஆட்சியை கொண்டு வந்து பாஜக ஆட்சியை திணிக்கப்போகிறார்கள் என்று அர்த்தம். ஆனால் இவர்கள் விண்ணுக்கும் மண்ணுக்கும் தாவினாலும் இவர்களது கட்சியைச் சார்ந்த ஒருவர் கூட சட்டமன்றத்திற்குள் பிரவேசிக்க முடியாது. அது மட்டும்  முடியாது. ஓலமிடும் கடல் ஊமையானாலும் ஆகும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் சட்டமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு தமிழகத்தில் இல்லை. 

 

தமிழக சட்டமன்றத்திற்குள் பாஜக உறுப்பினர்கள் செல்வார்கள் என்று மிக உறுதியாக சொல்கிறார்களே...

 

பாஜக மற்றும் பாஜகவுடன் கூட்டணி சேரும் கட்சிகளுக்கு தமிழ்நாட்டு மக்கள் தோல்வியைத்தான் பரிசாக தருவார்கள். 

 

தேசிய மற்றும் தமிழக வளர்ச்சிக்கு தி.மு.க தடையாக இருக்கிறது என தமிழக பாஜக செயற்குழுவில் அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா பேசியிருப்பது பற்றி... 

 

திமுக செய்த சாதனைகளை அறிவாலயத்தில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று பாரதி பாடினான். அதை நடைமுறைப்படுத்தி காட்டியது திமுக ஆட்சி. திமுக ஆட்சியில்தான் இன்றைக்கு முதல் தலைமுறை பட்டதாரி ஒவ்வொரு குடும்பத்திலும் உருவாகியிருக்கிறார்கள். விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தை போக்குவதற்கு எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் உழவர் சந்தையை திறக்கப்பட்டது. கிராமங்களுக்கு நடந்து சென்ற மக்களுக்கு மினி பேருந்து ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. இந்திய துணைக்கண்ட அரசியல் வரலாற்றில் கோட்டையில் சுதந்திரத் தினத்தன்று கொடியேற்ற உரிமை வாங்கித்தது திமுகதான். பாஜக தமிழகத்தில் காலூன்ற கனவு கண்டால் பெரியாரின் பூமியில், அண்ணாவின் நந்தவனத்தில் அது ஒருகாலம் நடக்காது.

 

வரும் தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஏன் விரும்புகிறீர்கள்...

 

திமுக ஆட்சி அமைக்கவில்லை என்றால் இந்தியாவில் மாநில உரிமைகளைப் பற்றி பேசுவதற்கு வேறு அரசாங்கம் இருக்காது. இந்தியாவில் உள்ள 13 தலைவர்களுக்கு இடஒதுக்கீடு குறித்து திமுக தலைவர் கடிதம் எழுதியிருக்கிறார். வேறு யார் எழுதினார்கள். நேற்று முன்னுக்குப் பின் முதலமைச்சர் பேசுகிறார். கரோனாவை காரணம் காட்டி இந்த வருடம் நீட் தேர்வு வேண்டாம் என்கிறார். நீட் தேர்வே வேண்டாம் என்று சொல்லுவாற்கு தைரியம் இல்லை. எல்லா இடத்திலேயேயும் கமிஷன். எங்கு பார்த்தாலும் ஊழல். எங்கே பார்த்தாலும் முறைகேடு. லஞ்ச லாவண்யம் கொடிகட்டிப் பறக்கிறது. இந்த கொடியவர்களின் ஆட்சிக்கு முடிவு கட்ட தமிழ்நாட்டு மக்கள் முடிவு எடுத்துவிட்டார்கள். திமுகதான் வர வேண்டும். திமுகதான் வரும் என்றார் உறுதியாக. 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்