Skip to main content

என்னை யாரும் சமாதானப்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டாம்: நாஞ்சில் சம்பத் பேட்டி

Published on 19/03/2018 | Edited on 19/03/2018

 

ஆளும் அதிமுகவுக்கு எதிராக டிடிவி தினகரன் அணியில் இருந்து தக்க பதிலடி கொடுத்து வந்த நாஞ்சில் சம்பத், தினகரன் தனது புதிய அமைப்பை அறிவித்தவுடன், திராவிடத்தையும் அண்ணாவையும் மறந்துவிட்டதாக குற்றம் சாட்டியதுடன், அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். 

இந்த நிலையில் நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்த தினகரன் அணியின் தங்கத்தமிழ் செல்வன், நாஞ்சில் சம்பத் நல்ல மனிதர். நாஞ்சில் சம்பத்துக்கு பக்க பலமாக இருந்தோம். பல மேடைகளில் பேசியிருக்கிறார். அந்த உழைப்பை மதிக்கணும். என்ன காரணத்திற்காக போனார் என்று தெரியவில்லை. வாய்ப்பு இருந்தால் பேசி சமாதானம் ஆகிவிடலாம் என்பதே எங்கள் கருத்து என கூறியிருந்தார்.

இதுகுறித்து நாஞ்சில் சம்பத்திடம் கேட்டபோது, 

என்னை யாரும் சமாதானப்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டாம். நான் எடுத்த முடிவில் தெளிவாக இருக்கிறேன். யார் மீதும் எனக்கு வருத்தமோ, வன்மமோ இல்லை. நான் எதிர்நிலை அரசியல் எடுக்கவும்மாட்டேன் டிடிவி தினகரனுக்கு எதிராக. இனி உள்ள காலங்களில் தமிழ் மேடைகளில் என்னுடைய கொடி பறக்கும். நான் முடிந்துபோவேன் என்று கருதினால் தமிழ் எனக்கு முடிசூட்டும் என்ற நம்பிக்கையோடு வாழ்க்கையில் அடுத்த அத்தியாயத்திற்கு கால் எடுத்து வைக்கிறேன். இவ்வாறு கூறினார்.

Next Story

"ஆறு மாத சஸ்பெண்ட் தப்புக்கு தண்டனையா...? கே.டி. ராகவனை அண்ணாமலை எப்போது சேர்த்துக்கொள்ளப் போகிறார்..." - நாஞ்சில் சம்பத்

Published on 29/11/2022 | Edited on 29/11/2022

 

ரகத

 

பாஜகவிலிருந்த திருச்சி சூர்யா சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த டெய்சி என்பவரோடு பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரத்தில் திருச்சி சூர்யாவைக் கட்சியிலிருந்து ஆறு மாதம் நீக்கி அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதுதொடர்பாக  அறிக்கை வெளியிட்டு இருந்த பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எப்போதும் பெண்களை மதிக்கும் கட்சி என்றும், அவர்களுக்குப் பாதிப்பு என்றால் முதல் ஆளாகக் குரல் கொடுப்போம் என்றும் தெரிவித்து இருந்தார்.

 

இதுதொடர்பாக நாஞ்சில் சம்பத் அவர்களிடம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு, " இவர் என்ன குரல் கொடுக்கப் போகிறார். தப்பு செஞ்சவனுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இதை அடுத்தவர்கள் பாராட்டுகிறார்கள் என்று வேறு சொல்கிறீர்கள், யார் எதற்காகப் பாராட்டுகிறார்கள்.

 

சரியான முடிவை அண்ணாமலை என்ன எடுத்துவிட்டார், கே.டி.ராகவனை நாளைக்குக் கட்சியில் சேர்த்துப்பாரா அண்ணாமலை? அவருக்கும் இன்னும் ஆறு மாசம் முடியவில்லையா? அண்ணாமலைக்கு தன்பயம் அதிகம் வந்துவிட்டது. தன்னைத் தவிர வேறு யாரும் கட்சியில் இயங்குவதைக் கூட அவர் விரும்பவில்லை.  பாஜகவில் வேறு யாரும் தன்னைத் தாண்டி வளர்ந்துவிடக்கூடாது என்ற பயமும் அவரை வாட்டி வதைக்கின்றது. காயத்ரி, சூர்யா ஆகிய இருவரும் முருகனுடைய ஆதரவாளர். முருகனுக்கு பாஜக அலுவலகத்தில் தனி அறை போட்டாச்சு. அண்ணாமலைக்கு எப்போது ஆபத்து வரும் என்று சொல்ல முடியாது.

 

இந்தப் பேட்டியை எடுத்துக்கொண்டு நீங்கள் வீடு போய்ச் சேருவதற்குள் அண்ணாமலையில் பதவியைப் பறித்தால் கூட ஆச்சரியமில்லை. அண்ணாமலை தமிழக பாஜக தலைவராகத் தொடர்ந்து நீடிக்க முடியாது என்ற தகவல் பாஜகவில் இருந்தே கசிந்துகொண்டு இருக்கிறது. அண்ணாமலை குறிப்பிட்ட சாதியினருக்கு எதிராகச் செயல்படுகிறாரா என்ற கேள்வி எழுப்புகிறீர்கள், அப்படி என்றால் அவர் மோகன் பகவத்துக்கு எதிராகத்தான் செயல்பட வேண்டும், கேள்வி கேட்க வேண்டும். அதை எல்லாம் அவர் ஒரு போதும் செய்யமாட்டார். தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

 

அதன் தொடர்ச்சியாக அவருக்கு வேண்டாத நபர்களுக்கு எதிராக சில வாய்ப்புக்கள் அமையும் போது அவர்களுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய கட்சிகளில் இது ஒன்றும் புதிதல்ல. பல மாநில தலைவர்களைத் தேசிய கட்சிகள் பார்த்துள்ளது. எனவே இந்தப் பதவி என்பது அவருக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். எனவே அதை வைத்து சில அரசியல் ஆட்டங்களை ஆடலாம் என்று கூட அவர் முயற்சி எடுக்கலாம். ஆனால் அவருக்கே எதிராகக் கள சூழ்நிலை இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. எனவே அவரின் அரசியல் விளையாட்டுக்கள் நீண்ட காலம் தொடர வாய்ப்பில்லை. விரைவில் அவர் பதவிப் பறிக்கப்படக் கூட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே அவரின் இந்தப் பேச்சுக்களைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை" என்றார்.

 

 

Next Story

"ஆபாசமா பேசிட்டு அக்கா தம்பியா...? இதுக்கு ஆறு மாசம் சஸ்பெண்ட் ஒருகேடு; இப்படி ஒரு கட்சி இந்தியாவிலேயே இல்லை..." - நாஞ்சில் சம்பத்

Published on 29/11/2022 | Edited on 29/11/2022

 

sdf

 

பாஜகவிலிருந்த திருச்சி சூர்யா சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த டெய்சி என்பவரோடு பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரத்தில் திருச்சி சூர்யாவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்த அக்கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம்-ஐ கட்சியிலிருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீக்கினார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதுதொடர்பாக நாஞ்சில் சம்பத்திடம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

பாஜகவில் கடந்த சில நாட்களாக ஆடியோ சர்ச்சை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் சிலரை கட்சியின் தலைமை நீக்கியுள்ளது. இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

 

நான் தவறான பலான படங்களையோ அல்லது அதுதொடர்பான ஆடியோவையோ எப்போதும் கேட்பதில்லை. இதில் என்ன பெரிய நடவடிக்கை எடுத்ததாக நீங்கள் கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை. கட்சியில் தவறு செய்தால் அதிகபட்சம் கட்சியை விட்டு நீக்குவார்கள். அதுதொடர்பாக விசாரிக்க சில சமயம் குழு கூட அமைப்பார்கள். ஆனால் இந்த மாதிரி ஆறு மாதம் நீக்குவது, மூன்று மாசம் நீக்குவது என்பதை நான் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. ஆறு மாசத்துக்கு அப்புறம் கட்சியில் சேர்த்துக்கொள்வார்களா?  இது எல்லாம் ஒரு தண்டனையா என்று எனக்குத் தெரியவில்லை. 

 

இப்போ அக்கா தம்பி ஆகிட்டாங்கன்னு நீங்கள் சொல்றீங்க, இதில் நான் என்ன சொல்ல இருக்கிறது. பாஜகவோட தரம் என்ன என்று தற்போது அனைவருக்கும் தெரிய ஆரம்பித்திருக்கும். இந்த மாதிரி ஒரு கேவலமான கட்சி இந்தியாவில் எங்குமே இருக்காது. தேடப்படும் குற்றவாளிகளை எல்லாம் கூட கட்சியில் இணைத்துக் கொள்கிறார்கள். இவர்கள் மக்களுக்கு சேவை செய்யவா அவர்களை இணைத்துக் கொள்கிறார்கள். இந்த மாதரி ஆட்களை எல்லாம் கட்சியில் இணைத்தால் அவர்கள் என்ன திருக்குறளும், திருவாசகமுமா பேசுவார்கள். 

 

இந்த மாதிரிதான் அநாகரிகமாகப் பேசுவார்கள், அடுத்தவர்களைச் சீண்டுவார்கள்,பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பார்கள். ரோட்டில் போவோர் வருவோரை எல்லாம் கட்சியில் சேர்த்துவிட்டுத் தவறு செய்தவுடன் நாங்கள் நீக்கிவிட்டோம் என்பதெல்லாம் யாரை ஏமாற்ற என்று தெரியவில்லை. இது ரொம்ப நாளைக்கு நடக்காது. மக்கள் முன் எளிதில் அம்பலப்பட்டுப் போவார்கள். பாஜகவின் கொள்கை கோட்பாடு பிடித்திருக்கிறது என்று கூறி இதுவரை யாராவது கட்சியில் சேர்ந்து கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? கோட்பாடு கொள்கை என்று அக்கட்சிக்கு இதுவரை எதாவது இருக்கிறதா, ஏதோ கட்சி நடத்துகிறார்கள், அடாவடி செய்யும் நான்கு பேர் கட்சியில் இணைவார்கள். அவர்கள் கையும் களவுமாக அகப்படும்போது அங்கிருந்து வேறு இடத்திற்கு மாறுவார்கள். 


தற்போது எதற்காக பாஜகவில் இருப்பவர்கள் எல்லாம் அங்கிருந்து வெளியேறுகிறார்கள். கு.க. செல்வம் எதற்காக அங்கிருந்து வெளியேறினார். மதுரை சரவணன் எதற்காகக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றார். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் கட்சியிலிருந்து அனைவரும் வெளியேறுவார்கள் என்பது மட்டும் நிஜம். பிரச்சாரத்தின் போது வெறும் நாற்காலிகளைப் பார்த்து எப்படி பரப்புரை செய்வார்களோ அதைப்போல வெறும் கட்சி பெயரை மட்டுமே வைத்துக்கொண்டு இவர்கள் தேர்தலைச் சந்திக்கும் காலம் மிக விரைவில் வரும். வட நாட்டு மக்களை ஏமாற்றுவதைப் போல் தமிழக மக்களை இவர்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் அதில் நிச்சயம் இவர்களுக்குத் தோல்விதான் கிடைக்கும்.