Advertisment

புதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே!

தான் போன ‘கைலாச’த்துக்கு எல்லாரையும் கூப்பிடுகிறார் சாமியார் நித்யானந்தா. செல்லப்பிராணிகளுடன் வரலாம் என்று சலுகையும் அறிவிக்கிறார். தன்னை ஒரு பரதேசி, பொறம்போக்கு என்று சொல்லிக்கொள்ளும் நித்தியானந்தா, தனக்கான நாட்டை உருவாக்கிவிட்டதாக கூறுவதும் அங்கே எல்லாரும் வந்து தங்கிக் கொள்ளலாம் என்பதும் ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதையாக இருக்கிறது.

Advertisment

kailaasa

இந்தியாவில் எதிர்கொள்ளும் பாலியல் வழக்குகளிலிருந்து தலைமறைவாகி, பசிபிக் பெருங்கடலில் உள்ள ஹைதி நாட்டில் இருப்பதாகச் சொல்லப்படும் நித்தியானந்தா, தென்அமெரிக்க நாடான ஈக்வடார் அருகே உள்ள ஒரு தீவை வாங்கி, அரசியல் சார்பற்ற இந்து நாடாக உருவாக்கிவிட்டதாக அறிவித்தார். அந்த நாட்டுக்கு தன் படத்தையும் நந்தி படத்தையும் போட்டு ஒரு கொடியையும் உருவாக்கி, தேசிய பறவை, தேசிய மலர், தேசிய விலங்கு ஆகியவற்றையும் அறிவித்து, “எல்லாரும் கைலாசா நாட்டுக்கு வாங்க” என்று இணையதளத்தில் கூவினார்.

kailaasa

Advertisment

ஈக்வடார் தூதரகம் பதறிப்போய், “எங்கள் நாட்டில் நித்தியானந்தாவுக்கு அடைக்கலம் எதுவும் தரவில்லை. எந்தத் தீவையும் அவருக்கு விற்கவில்லை. தனி நாடு என இணையத்தில் அவர் தெரிவிக்கும் தகவல்கள் எல்லாம் தவறானவை” என உண்மையை போட்டு உடைத்தது.

திருநெல்வேலி இருட்டுக் கடை ஒரிஜினல் அல்வா வாங்குவதற்கே சரியான திட்டமிடலும் முயற்சிகளும் தேவைப்படும் உலகில், ஒரு நாட்டை நினைத்த மாத்திரத்தில் உருவாக்கிவிட்டதாக எல்லாருக்கும் அல்வா கொடுக்கிறார் நித்தியானந்த சாமியார். 30 ஆண்டுகளுக்கு மேல் ஆயுதபோராட்டம் நடத்திய ஈழ மண்ணில் தனித் தமிழீழம் அமையவில்லை. ஸ்பெயின் நாட்டில் கேட்டலோனியா பகுதி மக்களின் தனி நாடு கோரிக்கை நிறைவேறவில்லை.

kailaasa

அமெரிக்கா தயவு வைத்தால், ஐ.நா.அவையின் ஒத்துழைப்புடன் புது நாடு உருவாக்கப்படும் என்பதற்கு இந்தோனேஷியாவிலிருந்து 2002ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட கிழக்கு தைமூரும், சூடானிலிருந்து 2011ல் பிரிக்கப்பட்ட தெற்கு சூடானும் அண்மைக்காலஎடுத்துக்காட்டுகளாகும். இந்த இரண்டு நாடுகளும் தங்களின் விடுதலைக்காக நடத்திய உள்நாட்டுப் போராட்டங்கள் நெடிய வரலாற்றைக் கொண்டவை. அதனை உலக அரசியல் கண்ணோட்டத்தில் தனக்கான சாதக-பாதகங்களின் அடிப்படையில் அமெரிக்கா அணுகியதன் விளைவாகவும், ஐ.நா.அவையின் உறுப்பு நாடுகள் பல ஆதரவளித்ததன் காரணமாகவும் இவை தனி நாடுகளாயின.

ஒரு நாட்டிற்குள் வாழும் மக்களின் விருப்பம், அதன் புவியியல் அமைப்பு, வரலாற்றுப் பின்னணி, சமூகச் சிக்கல், இனம்-மொழி-பண்பாட்டுக்கூறுகள் உள்ளிட்டவை அனைத்தும் கணக்கில் கொள்ளப்பட்டே தனி நாடு உருவாக்கப்பட்டு, ஐ.நா.வால் ஏற்பளிக்கப்படுகிறது.

நித்தியானந்தா கப்சா விடும் ‘கைலாசா’ அப்படிப்பட்டதல்ல. ஒரு நாட்டுக்கு சொந்தமான அந்தத் தீவில், பூர்வீக மக்களிடமிருந்து தனிநாடு கோரிக்கைக்குரிய விடுதலைப் போராட்டம் ஏதுமில்லை. எவ்வித இனச்சிக்கலும் எழவில்லை. உலக நாடுகளின் பார்வைக்குரிய எந்தப் பிரச்சினையும் அங்கு இல்லை.

சாமியார் நித்தியானந்தா ஒளிந்திருப்பது தென்பசிபிக் பெருங்கடல் பகுதியில்தான். பூமிப்பந்தில் உள்ள பெருங்கடல்களிலேயே பெரியது பசிபிக் பெருங்கடல். அதில் உள்ள ஏராளமான சிறிய தீவு நாடுகளில் ஒன்று பப்புவா நியூ கினியா. இது ஆஸ்திரேலியாவுக்குப் பக்கத்தில் உள்ளது. கடல் வழி கண்டுபிடித்த ஐரோப்பியர்கள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் குடியேறியதுபோல பப்புவா நியூ கினியாவிலும் டச்சுக்காரர்கள், பிரெஞ்சுகாரர்கள், பிரிட்டிஷார் என மாறி மாறி குடியேறினர். ஜெர்மனியர்கள், ஜப்பானியர்கள், அமெரிக்கர்கள் எனப் பலரும் தங்கள் ஆளுகையில் வைத்திருந்தனர். பின்னர், அது ஆஸ்திரேலியாவிடமிருந்து 1975ல் விடுதலை பெற்றது.

celebration

பப்புவா நியூ கினியா எனும் சிறிய நாட்டுக்குள் போகெய்ன்வில்லே என்ற குட்டித் தீவு உள்ளது. பழங்குடி மக்கள் நிறைந்த அந்தத் தீவில் உள்ள கனிம வளங்கள்தான் பப்புவா நியூ கினியாவின் பொருளாதார வளம். தனியார் மூலம் சுரங்கங்களை வெட்டி அந்தக் கனிம வளம் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு அரசு நிர்வாகம் நடைபெற்றது. தங்கள் பகுதியில் உள்ள தாமிரம் உள்ளிட்ட கனிம வளங்களை எடுத்துக்கொண்டு நியூ கினியா வளர்வதும், தங்கள் பகுதியில் இயற்கை வளம் அழிவதுடன், தங்களுக்கு எந்த முன்னேற்றமும் கிடைக்க வில்லை என்பதும் போகெய்ன்வில்லே மக்களை, தனி நாட்டிற்கானப் போராட்டத்தில் இறங்க வைத்தது.

vote

1980களிலிருந்து தொடர்ந்த ஆயுதப் போராட்டத்தால் 20ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்தனர். ஆனாலும் பப்புவா நியூகினியா அரசுப்படைகளுக்கும் போகெய்ன்வில்லே போராட்டப் படையினருக்குமான சண்டை ஓயாமல் நீடித்தது. பின்னர், நியூசிலாந்து தலையீட்டில் போர் நிறுத்தமும் ஒப்பந்தமும் உருவாகும் சூழல் ஏற்பட்டது. 2000ஆம் ஆண்டில் நியூகினியா நாட்டுக்குள் போகெய்ன்வில்லா தன்னாட்சி கொண்ட பகுதியாக உருவானது. அந்தத் தீவு மக்களின் தனி நாடு கோரிக்கை தொடர்ந்தது.

பப்புவா நியூ கினியா நாட்டு அரசும், போகெய்ன்வில்லே தன்னாட்சி அமைப்பும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் விளைவாக, தனி நாட்டிற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 3 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட தீவில் 2019 டிசம்பர் 7ந் தேதியுடன் முடிவடைந்த இரண்டுவார கால வாக்கெடுப்பில் 85% பேர் கலந்துகொண்டனர்.

கூடுதல் தன்னாட்சி உரிமையா, சுதந்திரமான தனி நாடா என்பதற்கானத் தேர்தலில் வாக்களித்தவர்களில் 98% பேர் சுதந்திர தனி நாடு என்பதையே ஆதரித்து வாக்களித்துள்ளனர். இதன் மூலம், உலகின் 194வது நாடாக போகெய்ன்வில்லே உருவாகும் வாய்ப்பு அமைந்துள்ளது. ஆனால், அதற்கான பாதை இன்னும் நீள்கிறது.

bougainville

எல்லை வரையறை, துறைமுகங்கள் நிர்வாகம், தனியார் சுரங்கங்களுடனான ஒப்பந்தம் உள்ளிட்டவற்றில் சுமூகமான தீர்வுகள் காணப்படவேண்டும். ஆஸ்திரேலியா, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் சமரச முயற்சிகளும், அமெரிக்காவின் ஆதரவும், ஐ.நா. உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பும் பசிபிங் பெருங்கடல் பகுதியில் ‘போகெய்ன்வில்லே’ என்ற புதிய நாட்டை உருவாக்கித் தரும் வாய்ப்பு உள்ளது.

அப்படியென்றால், கைலாசா?

அது, கைலாசம்தான்.

country nithiyandha kailaasa
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe