Skip to main content

கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு பெயர் சூட்டிச்

கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு பெயர் சூட்டிச் சென்ற மீனவர்! 

வ்வொரு மீனவனும் கடலுக்கு போகும்போது தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள் என எல்லோரும் சொல்லும் உருக்கமான வார்த்தைகள்..,

''மீன் கொஞ்சமா கிடைச்சாலும் பரவாயில்ல, மீனே கிடைக்கலனாலும் பரவாயில்ல, நீ பத்தரமா வாய்யா அதுவே போதும், நீதாய்யா எங்களுக்கு முக்கியம்'' என்பதுதான்.

தங்களது வாழ்வாதாரமே கடல்தான். வேறு எதுவும் தங்களுக்கு தெரியாது என கடலில் இறங்கும் அவர்களுக்கு இன்று புயல் வருமா, சுனாமி வருமா என தெரியாது. கடலுக்கு செல்லும் மீனவர்கள் கரைக்கு திரும்ப ஒரு வாரமாகும், பத்து நாளாகும்.புயல் மழையாவது இயற்கை சீற்றங்கள். இவை தவிர, நடுக்கடலில் தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் என்பது மனித மிருகங்களின் தாக்குதல். இந்தக் கொடுமை இன்றுவரை தொடர்கிறது. எல்லையைத் தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான தமிழக மீனவர்கள் பலர். படுகாயங்களோடும், உயிருக்கு ஆபத்தான் நிலையிலும் திரும்பியவர் பலர். சிறைப்பிடிக்கப்பட்டு இலங்கை சிறைகளில் சித்தரவதைகளை அனுபவிப்பவர்கள் பலர்.

இந்த துயரங்களுக்கு ஊடான வாழ்க்கையில்தான் சில நாட்களுக்கு முன் ஓகி புயலின் கொடூர தாக்குதல் நிகழ்ந்தது. இந்தப் புயல் குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன் கடலுக்கு சென்றவர்களின் நிலைமை என்ன ஆனது என்று அவர்களது குடும்பத்தினர் கதறிய கதறல் கடல்மாதாவுக்கே கண்ணீரை வரவழைத்திருக்கும்.இந்நிலையில்தான், குமரி மீனவர்கள் குஜராத்தில் மீட்பு. குமரி மீனவர்கள் இங்கு மீட்பு, அங்கு மீட்பு என தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாகின. மீட்கப்பட்டவர்களில் தனது கணவர் இருப்பாரா, மகன் இருப்பாரா, அப்பா இருப்பாரா என்று ஏங்கி தவித்த மீனவ குடும்பங்கள் ஏராளம். இதேபோல் சவுதி அரேபியா கடற்கரையில் ஒதுங்கிய மனித உடல்கள் குமரி மீனவர்களா என்ற கேள்வியோடு வாட்ஸ் அப்பில் வெளியான வீடியோவை பார்த்தும், கோழிக்கோடு கடற்கரை பகுதியில் 19 மீனவர்களின் உடல்கள் மீட்பு என்ற வீடியோவை பார்த்தும் அடையாளம் தெரியாமல் அதிர்ச்சியாகி கண்ணீர் விட்டவர்களும் உண்டு.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஓகி புயலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரும், கேரளாவை சேர்ந்த 186 மீனர்களும் காணாமல் போயிருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தங்களது குடும்பத்தினர் எங்கோ சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை மீட்க வேண்டும் என்று அரசுக்கு மனுக்களை அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள் குமரி மீனவர்கள். ஓகி புயல்  தாக்கம் குறைந்தவுடனேயே தேடும் பணிகளை துவங்கியிருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என்கிறார்கள் குமரி மீனவர்கள்.இத்தகைய சோகம் நிலவும் குமரியில், நெஞ்சை பிழியும் ஒரு சம்பவம் எல்லோரையும் கலங்கவைத்தது. ஆம், புயலுக்கு முன் கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர் தனது கர்ப்பினி மனைவியிடம் பேசிச் சென்ற வார்த்தைகள்தான் அவை...

"நமக்கு பிறக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால் வர்ஷினி என்றும், ஆணாக இருந்தால் வர்ஷன் என்றும் பெயர் வைக்கலாம்"

என்று கூறிவிட்டு சென்ற கணவர் இதுவரை வரவில்லை. அவருக்காக காத்திருக்கிறார் அவருடைய கர்ப்பிணி மனைவி.

(குமரி மாவட்டம், நீரோடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வர்கீஸ்தாஸ் என்பவருக்கும் 2013ல் திருமணம் ஆனது. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. தற்போது ராஜு 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். கடந்த மாதம் 21ஆம் தேதி தேங்காய்ப்பட்டிணத்தில் இருந்து கடலுக்கு சென்ற நிலையில் ஒக்கி புயலில் சிக்கியதால் இன்றுவரை வர்கீஸ்தாஸ் கரை திரும்பவில்லை. இதற்கிடையே புயலில் மாயமானவர்கள் லட்சத்தீவுகளில் கரைசேர்ந்திருக்கிறார்கள் என்ற தகவலும் வந்துள்ளதால் அதில் வர்கீஸ்தாஸூம் இருப்பார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறது அவரது குடும்பம்.)தரை மேல் பிறக்க வைத்தான்
எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான்
பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்... என்று எம்ஜியாருக்காக படகோட்டி படத்தில் வாலி எழுதிய பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது...

-வே.ராஜவேல்
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்