Skip to main content

தமிழ்நாட்டில் இரண்டாம் தர குடிமக்களாகும் தமிழர்கள்? நக்கீரன் புலனாய்வில் அம்பலமான உண்மை!

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

nakkheeran report north indians settled TamilNadu with permission central government
பரத்

 

தினந்தோறும் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் நாம் பார்க்கும் காட்சிகளில் ஒன்று, ஆயிரக்கணக்கில் வடமாநிலத் தொழிலாளர்கள் வந்து இறங்குவதுதான். இவர்கள் எல்லாம் எங்கே போகிறார்கள்? இத்தனை பேருக்கும் வேலையிருக்கிறதா தமிழகத்தில்..? இந்த கேள்விகளுடன் அவர்களைப் பின்தொடர்ந்தோம். பல அதிரவைக்கும் தகவல்கள் வந்து கொட்டின.

 

மதுரையிலிருக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள் சிலரைச் சந்தித்தோம்.

 

டீக்கடை வைத்திருப்பவர் பரத்ராஜ். அவர் நம்மிடம், “நான் மதுரைக்கு வந்து 8 வருடங்கள் ஆகிவிட்டது. கூலி வேலைக்குத்தான் வந்தேன். இங்கு குஜராத்தைச் சேர்ந்தவரின் கடையில் வேலை பார்த்தேன். அதன்பின் சொந்தமாகக் கடையைப் பிடித்தேன். பொருட்கள் எல்லாம் குஜராத்திலிருந்து வந்திறங்கியது. அதை வைத்து வியாபாரம் செய்கிறேன். முதலில் வேலைக்கு இங்கிருக்கும் தமிழ் ஆட்களைத் தான் நம்பியிருந்தேன். இப்போது அப்படி இல்லை. எங்கள் சங்கத்திலிருந்து ஒன்றிய அரசின் அனுமதியோடு ஈ-ஷ்ரம் கார்டு போட்டு எங்க ஆட்களே வந்துவிட்டனர். இனி எந்த பிரச்சனையும் இல்லை. முழுப் பாதுகாப்பு கிடைத்துவிடும்” என்றார்.

 

நாம் அவரிடம், “அது என்ன ஈ-ஷ்ரம் கார்டு?” என்றோம்.

 

nakkheeran report north indians settled TamilNadu with permission central government
ஈ-ஷ்ரம் கார்டு

 

“அது எங்களுக்கு முழுப் பாதுகாப்பு. இப்பெல்லாம் கார்டு போட்டுத்தான் இங்கு அனுப்புகிறார்கள். வந்திறங்கியதும் கார்டை வைத்து பேங்க் அக்கவுண்ட் தொடங்கிக் கொள்ளலாம். ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை வாங்கிக்கொள்ளலாம்” என்று தன்னிடமுள்ள வாக்காளர் அட்டையைக் காண்பித்தார். “எனக்காவது 7 வருடம் ஆகிவிட்டது. என் கடையில் வேலை பார்ப்பவர்கள் வந்து 2 மாதங்கள் தான் ஆகிறது. எல்லோருக்கும் ரேஷன் கார்டு முதல் வாக்காளர் அட்டை வரை கிடைத்துவிட்டது. வடநாட்டில் வேலை செய்யும் ஒரிசாவைச் சேர்ந்தவர்களுக்காக ஒரிசாவில் தூதரகம் போல் ஒரிசா பவன் தொடங்கியிருக்கிறார்கள். அதுபோல் தமிழகமெங்கும் பணிபுரியும் வட இந்தியர்களுக்காக ‘உத்தர்பாரத் பவன்’ என்று தொடங்கவிருப்பதாகச் சொல்கிறார்கள். அது வந்தால் இன்னும் தைரியமாக தொழில் செய்யலாம்” என்றார்.  

 

தமிழகத்தில் தொடர்ச்சியாக நடந்த சில சம்பவங்களைப் பார்ப்போம்...

 

கடந்த மாதம் மதுரை உயர்நீதிமன்றத்தில், நீலகிரி துப்பாக்கி தொழிற்சாலையில் வேலை தொடர்பாக சரவணன் என்பவரின் வழக்கில் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி இருவரும், “தமிழகத்தில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனங்களில் இந்தியில் தேர்ச்சி பெறாத நிலையில், தமிழில் அதிக மதிப்பெண் பெற்று எப்படி தேர்ச்சியாகிறார்கள்?” என்ற கேள்வியை எழுப்பினார்கள். 

 

அடுத்து, கள்ளக்குறிச்சி பகுதியில் வங்கி மேலாளர் முதல் அலுவலக உதவியாளர் வரை அனைவரும் வடமாநிலத்தவர்கள் பணியாற்றியதால், சரியாகத் தொடர்புகொள்ள முடியாமல் பொதுமக்களே அந்த வங்கியைப் பூட்டி சீல் வைத்த சம்பவம் நடந்துள்ளது. 

 

கடந்த 7 ஆம் தேதி தஞ்சை அதிராம்பட்டினத்தில் தமிழக கூலித் தொழிலாளர்கள் தங்களின் வேலையை வடமாநிலத் தொழிலாளர்கள் பறிப்பதாக சாலைமறியலில் ஈடுபட்டுக் கைதாகினர்.

 

மதுரையில் பிப்ரவரி 10 ஆம் தேதி செல்போன் உதிரிப்பாகங்கள் மற்றும் செல்போன் சர்வீஸ் செய்யும் தமிழக இளைஞர்கள் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில், “எங்களை அடியாட்களை வைத்து மார்வாடிகள் மிரட்டுகிறார்கள். நாங்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியிருக்கும் நான்கு மாசி வீதிகளிலும், பெரியார் பேருந்து நிலையம் போன்ற இடங்களிலும் செல்போன் விற்பனை மற்றும் உதிரிப்பாக சர்வீஸ் கடைகள் வைத்துள்ளோம். அங்கிருக்கும் வடமாநில மார்வாடிகள் பெரும்பாலும் செல்போன் உதிரிப்பாகக் கடை வைத்துள்ளார்கள். அனைத்துமே டூப்ளிகேட் ஐய்ட்டங்கள் தான். விலை குறைவாகக் கிடைக்கிறதே என்று மார்வாடிகளிடம் முதலில் போவார்கள். பின் அது டூப்ளிகெட் என்று தெரிந்ததும் எங்களிடம் வந்தார்கள். இதில் போட்டி இருந்து வந்தது.

 

தற்போது அதிகளவில் மார்வாடிகள் வந்து குவியத் தொடங்கி அவர்களே சர்வீஸும் செய்கிறார்கள். எங்களை நசியச் செய்ய, அங்கிருக்கும் கடைகளின் வாடகையை வேண்டுமென்றே கூட்டிக் கொடுக்கிறார்கள். இதனால் இங்கிருக்கும் நம்மவர்களே எங்களிடமிருந்து மார்வாடிகளுக்கு கடையைப் பிடுங்கிக் கொடுக்கிறார்கள். கொடுக்க மறுத்தால் ஆட்களை வைத்து மிரட்டுகிறார்கள். நாங்கள் ஜி.எஸ்.டி. பில் போட்டு கொடுக்கிறோம். அவர்கள் எல்லாமே இரண்டாம் பில்லுதான். ஜி.எஸ்.டி. கட்டுவதில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அமைச்சர் மூர்த்தியிடம் கொண்டு சென்றோம். அவர் உடனடியாக ஆக்‌ஷன் எடுத்து மார்வாடிகள் 90% ஜி.எஸ்.டி கட்டுவதில்லை என்று அறிக்கை விட்டார். இந்த மோதலில் கடைகளை காலி பண்ணச் சொல்லி மிரட்டத் தொடங்கியுள்ளனர். எனவே, மதுரை ஆட்சியரிடம் புகார் கொடுக்க வந்தோம்” என்றார் செல்போன் கடை வைத்திருக்கும் சிவா. 

 

nakkheeran report north indians settled TamilNadu with permission central government
வழக்கறிஞர் தீரன் திருமுருகன்

 

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன், சுற்றியுள்ள அனைத்துக் கடைகளின் பெயர்ப்பலகைகளும் பெரும்பாலும் இந்தி எழுத்துகளில் இருந்ததால் அதிர்ச்சியாகி, நாம் தமிழகத்தில் இருக்கிறோமா? இல்லை, உத்தரப்பிரதேசத்தில் இருக்கிறோமா? என்று கோபமாகி அங்கிருக்கும் பஜன்லால் சேட் வைத்திருந்த ஹோட்டலுக்குப் போனவர், அங்கிருக்கும் உரிமையாளரிடம், "ஏன் இந்தியில் பெயர்ப்பலகை வைத்துள்ளீர்கள்? தமிழகத்தில் அதுவும் தமிழ் வளர்த்த மதுரையில் கடை வைத்துக்கொண்டு ஏன் தமிழில் பெயர்ப்பலகை வைக்கவில்லை'' என்று கேள்வி கேட்க, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதை யாரோ வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட வைரலாகியது. 

 

வழக்கறிஞர் தீரன் மேலும் கூறுகையில், “தமிழக நிலங்கள் அதிகாரப்பூர்வமாக வடஇந்திய மக்களின் நிலமாக மாறி வருகிறது. காஷ்மீர் மாநிலத்தில் வெளிமாநில மக்கள் நிலங்களை வாங்க முடியாது. காரணம், 370வது பிரிவு நில உரிமை சிறப்பு சட்டம் அங்கு இருந்தது. ஆனால் தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் நிலங்கள் வாங்கலாம் என்ற நிலையில் மிகவேகமாக நிலங்கள் தமிழர்களை விட்டு பறிபோய்க் கொண்டுள்ளது.

 

குஜராத், ராஜஸ்தான் மற்றும் அனைத்து இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள சட்டத்தின் படி, இந்தி மொழி தெரியாதோர் அம்மாநிலத்தில் அரசுப் பணிகளில் சேரமுடியாது. கிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம், மிசோரம், அஸ்ஸாம், மணிப்பூர், மேகாலயா, கோவா போன்ற மாநிலங்களில் கல்வி, வேலைவாய்ப்பில் அந்தந்த மாநிலத்திற்கு மட்டுமே முன்னுரிமை. ஆந்திராவில் அரசமைப்புச் சட்டம் 371-டி மற்றும் 371-இ ஆகியவற்றின் படி, தெலுங்கானா பகுதிகளுக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கப்பட்டு கல்வி, வேலைவாய்ப்புகளில் 90% அம்மாநிலத்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. 

 

1983-ல் கர்நாடக அரசு நியமித்த சரோஜினி அறிக்கையின்படி அரசு வேலைவாய்ப்புகளில் கன்னடர்களுக்கே முன்னுரிமை மற்றும் வெளிமாநிலத்தவர்கள் வீடு வாங்கிக் குடியேற, விளைநிலங்கள் வாங்கத் தடை உள்ளது. தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் வந்து குடியேறலாம், நிலம் வாங்கலாம். அடிமட்ட வேலைகள் முதல் அரசு வேலைகள் வரை தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்” என்று குமுறினார்.  

 

வரும் வழியில், மதுரை ஆட்சியர் அலுவலகத்தில், ‘இந்திக்காரர்களை வெளியேற்று!… தமிழ்நாட்டில் திட்டம் போட்டு வடமாநிலத்தவரை குடியமர்த்தும் ஒன்றிய அரசின் திட்டங்களைத் தடுக்க சட்டம் கொண்டு வா!’ என்று போராட்டம் நடத்திய தமிழ்த்தேசிய பேரியக்கத்தினரின் கோஷம் விண்ணைப் பிளந்தது.   

 

அதன் மாவட்டத் தலைவர் ஆனந்தன் நம்மிடம், “தமிழ்நாட்டிலுள்ள இந்திய அஞ்சல் துறையில் 946 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் தமிழர் ஒருவர் கூட இல்லை. இரயில்வே துறையில் 5000 பேர் நியமனத்தில் வெறும் 65 பேர்தான் தமிழர்கள். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 60% இந்திக்காரர்களின் ஆதிக்கமே மேலோங்கியிருக்கிறது. இப்படி வேலைவாய்ப்புகளில் திட்டமிட்டு வடநாட்டவர்களைப் புகுத்துவதற்குப் பின்னால் மிகப்பெரிய சதி இருக்கிறது. முழுக்க வடக்கர்மயமாகி, தமிழர்கள் இரண்டாம் குடியாகும் முன் தமிழ்நாடு அரசும் தமிழர்களும் விழித்துக்கொள்ள வேண்டிய நேரமிது” என்று முடித்துக் கொண்டார். 

 

nakkheeran report north indians settled TamilNadu with permission central government
விஷால் லால்.

 

கடைசியாக நாம் விஷாலைச் சந்தித்தோம். “நான் இப்போது பா.ஜ.க.வில் பகுதிச் செயலாளராக இருக்கிறேன். மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி 20 ஆயிரம் பேர் எங்க ஆட்கள் இருக்கிறார்கள். வாக்காளருக்கான ஜாபீதா புத்தகத்தைப் பாருங்கள். இந்த 10 வார்டுகளில் எல்லாம் எங்க ஆளுக தான். அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வாங்கிக் கொடுத்துள்ளேன். நான் ஈ-சேவை மையம் வைத்துள்ளேன். இங்கிருக்கும் பெரும்பாலான ஈ-சேவை மையம் வடநாட்டுக்காரர்கள் நடத்துவதுதான். உத்தர்பாரத் பவன் வந்தால், இனி இந்திக்காரர்களுக்கு என்ன பிரச்சனை என்றாலும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்” என்று நமக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தினார் விஷால் லால்.

 

 

 

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.