Skip to main content

நக்கீரன் நியூஸ் எஃபெக்ட்! பணிநீக்கம் செய்யப்பட்ட பதிவாளர்! சுகாதாரத்துறை செயலர் அதிரடி!

Published on 12/10/2019 | Edited on 12/10/2019

 

நக்கீரனால் அம்பலப்படுத்தப்பட்ட இந்திய மற்றும் ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் பதிவாளர் இராஜசேகரன் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டது சுகாதாரத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 

கவுன்சில்களில் நிரப்பப்பட்ட பணிநியமனத்தில் மாபெரும் முறைகேடுகள் செய்த சித்த மருத்துவக் கவுன்சில், இந்திய மருத்துவக்கவுன்சில், ஹோமியோபதி மருத்துவக்கவுன்சில் ஆகிய மூன்று கவுன்சில்களுக்கும் பதிவாளரான இராஜசேகரன் குறித்து நக்கீரனில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினோம்.  நக்கீரனின் செய்தியை வைத்து அதிரடி விசாரணைக்கு உத்தரவிட்டார் சுகாதாரத்துறை செயலர் பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ்.
 

விசாரணையில் தனது உறவினர்களுக்கு தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் முறைகேடாக அரசுப்பணி வழங்கியிருப்பது தெரியவந்ததால் சித்த மருத்துவக் கவுன்சில், இந்திய மருத்துவக்கவுன்சில், ஹோமியோபதி மருத்துவக்கவுன்சில் ஆகிய மூன்று கவுன்சில்களின் பதிவாளர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் பதிவாளர் இராஜசேகரன்.  

 

sw213



ஆயுஷ்’ எனப்படும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, நேச்சுரோபதி அண்ட் யோகா, ஹோமியோபதி ஆகிய இந்திய மருத்துவர்கள் ஒரிஜினலா? போலியா? என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டிய கவுன்சிலிலேயே போலியான பணிநியமனங்கள் நடந்திருக்கிறது. இப்படியிருந்தால், போலி டாக்டர் சான்றிதழ்களை ஏன் இவர்களே அச்சடித்துக் கொடுத்து போலி டாக்டர்களை உருவாக்கமாட்டார்கள்?” என்று கேள்வி கேட்டு ஷாக் கொடுத்தார்கள் நக்கீரனை தொடர்புகொண்ட மருத்துவர்கள். 
 

இதனால், நாம் விசாரணையில் இறங்கியபோதுதான் பதிவாளர் இராஜசேகரனின் தில்லுமுல்லுகள் தெரியவந்தது.
 

ஆயுர்வேதம், யுனானி, நேச்சுரோபதி அண்ட் யோகா மருத்துவங்கள்  படித்தவர்கள் தமிழ்நாடு இந்திய மருத்துவக்கவுன்சிலில் பதிவுசெய்தால்தான் மருத்துவர்களாக பணி செய்யமுடியும். அதேபோல், சித்தமருத்துவம் படித்தவர்கள் சித்தமருத்துவ மன்றத்திலும் ஹோமியோபதி மருத்துவம் படித்தவர்கள் ஹோமியோபதி கவுன்சிலிலும் பதிவு செய்யவேண்டும். ஹோமியோபதி மருத்துவக்கழகத்திற்கு மட்டுமே தலைவர் டாக்டர் ஞானசம்பந்தம் உள்ளார். மற்ற, இரண்டு கவுன்சிலுக்கு இதுவரை தேர்தல் நடத்தப்படாததால் தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது. இந்த, மூன்று கவுன்சில்களுக்குமே  தமிழக சுகாதாரத்துறையில் கூடுதல் செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற இராஜசேகரன் என்பவர்தான் பதிவாளராக நியமிக்கப்பட்டார். இந்த, கவுன்சில் அலுவலகங்களில் நியமிக்கப்பட்ட பணியாளர்கள்தான் எந்த விதமான தகுதியும் வெளிப்படைத்தன்மையும் இல்லாமல், தேர்வுகளும் வைக்கப்படாமல் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் இதில் பெரும்பாலானாவர்கள் பதிவாளர் இராஜசேகரனின் உறவினர்கள் என்பது நமது விசாரணையில் தெரியவந்தது.
 

தமிழக சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் இம்மூன்று கவுன்சில்களும் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா மருத்துவமனை வளாகத்தில் உள்ளன. இதில், சித்த மருத்துவமன்றம் மற்றும் தமிழ்நாடு இந்திய மருத்துவக்கவுன்சிலில் பதிவாளர் இராஜசேகரனுக்குக்கீழ் உதவியாளர் ஜெயக்குமார், இளநிலை உதவியாளர் நிர்மல்குமார், தட்டச்சர் மோகனாம்பாள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பாலாராஜ், அலுவலக உதவியாளர் எசக்கியேல், துப்புரவு பணியாளர் இந்திராணி ஆகியோரும் ஹோமியோபதி மருத்துவக்கவுன்சிலில் கவிதா, பாபு, ஜோசுவா என்கிற வாசுதேவன்,  கோமதி, வில்லியம், டேவிட் ஆகியோர் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். சித்த மருத்துவமன்றம் மற்றும் தமிழ்நாடு இந்திய மருத்துவக்கவுன்சிலுக்கு அரசாணைப்படி தற்காலிக பணியாளர்களை நியமித்துக்கொள்ளலாம்.


 

இதைப் பயன்படுத்திக்கொண்ட பதிவாளர் இராஜசேகரன் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் உறவினர்களுக்கும் இரண்டு மாதம் மூன்று மாதம் என தற்காலிகப் பணிகளை வழங்கி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக பணியமர்த்தி வைத்திருக்கிறார். 
 

மேலும், சித்தமருத்துவமன்றம் மற்றும் இந்திய மருத்துவக்கவுன்சில் இரண்டிலும் பணிபுரியக்கூடிய பணியாளர்கள்  எந்த தகுதி, திறமை, தேர்வும் வைத்தும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதுகுறித்து, ஆர்.டி.ஐ. மூலம் தகவல் கேட்டாலும் கொடுக்காமல் மறைத்துவந்தார் பதிவாளர் இராஜசேகரன். 
 

ஹோமியோபதி  மருத்துவக்கவுன்சிலுக்கு அதன் விதிப்படி  டி.என்.பி.எஸ்.சி. மூலமோ அல்லது வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமோதான் தகுதி, திறமை, தேர்வு அடிப்படையில் நியமிக்கவேண்டும். அப்படி, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஹோமியோபதி கவுன்சிலில் பணிநியமனம் செய்யப்பட்டவர்தான் உதவியாளர் கவிதா. 
 

ஆனால், இங்கு நடக்கும் தில்லுமுல்லுகள் குறித்து கவிதா வாய்திறக்கக்கூடாது என்பதற்காக கவிதாவின் தங்கை மோகனாவுக்கு சித்தமருத்துவ மன்றத்தில் பணி வழங்கிவிட்டார் இராஜசேகரன். கைலாசம் என்பவர் இத்துறையில் பணியின்போது இறந்துபோனதால் கருணை அடிப்படையில்  அவரது மகளுக்கு துப்புறவு பணியாளர் பணி வழங்கப்பட்டது. ஆனால், இவரையும் சரிகட்ட முறைகேடாக ரெக்கார்டு க்ளார்க்காக பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. 


 

ஜோசுவா என்கிற வாசுதேவன், வில்லியம், அண்ணன் மகன் டேவிட், நிர்மல்குமார், பாலாராஜ் உள்ளிட்டவர்கள் பெரும்பாலானவர்கள் பதிவாளர் இராஜசேகருக்கு வேண்டப்பட்டவர்களே. அதுவும், இசக்கியேல் என்பவர் இவரது பர்சனல் கார் டிரைவர். ஆனால், இவருக்கு சம்பளம் கொடுப்பதற்கு பதிலாக சித்தமருத்துவமன்றத்தில் பியூன் என்ற பணியை வழங்கி அரசு சம்பளத்தை கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
 

 மதபோதகர் போல எப்போதும் கையில் பைபிளை வைத்துக்கொண்டு நேர்மையானவர்போல் காட்டிக்கொள்ளும் பதிவாளர் இராஜசேகரன் என்பதால் 67 வயதாகியும் மூன்று கவுன்சில்களுக்கும் பதிவாளராக இருந்துகொண்டு மூன்று சம்பளம் என 1 லட்சத்திற்குமேல் வாங்குவதோடு ஓய்வூதியமும் பெற்றுவருகிறார். இன்னும் சொல்லப்போனால், ஹோமியோபதி கவுன்சிலில் பதிவாளரின் வயது 62 தான் இருக்கவேண்டும். ஆனாலும், தற்போது சுகாதாரத்துறையில் கூடுதல் செயலாளராக உள்ள அன்பு போன்ற அதிகாரிகள் இவருக்குக்குகீழ் பணிபுரிந்தவர்கள் என்பதால் அந்த அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு இவரே மூன்று பதவிகளையும் அனுபவிப்பதோடு பணிநியமனத்திலும் மாபெரும் மோசடியை செய்திருக்கிறார். 
 

இவரது, தில்லுமுல்லுகள் குறித்து ஆர்.டி.ஐ.யில் மறைக்கிறார் என்று மேல்முறையீடு செய்தால் ஹோமியோபதி மருத்துவக்கவுன்சிலின் தலைவரும் மேல்முறையீட்டு அலுவலருமான ஞானசம்பந்தத்திடம் கடிதத்தை காண்பிக்காமலேயே இவரே மேல்முறையீட்டு அலுவலராக சட்டத்துக்குப்புறம்பாக பதில் அனுப்புவார். இப்படி, ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். போலி பணிநியமனம் செய்யப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது.

          


 

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

பெரியார் பல்கலை. பதிவாளர் விவகாரம்; உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Periyar University Registrar Matters The High Court questions

'பியூட்டர் பவுண்டேஷன்' என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கி பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தராக இருக்கக்கூடிய ஜெகநாதன் மற்றும் பதிவாளர் பொறுப்பு வகித்த தங்கவேல், இணை பேராசிரியராகப் பணியாற்றி வந்த சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த ராம் கணேஷ் ஆகியோர் கல்விக் கட்டணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கொடுத்த புகாரில் சேலம் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த ஜெகநாதன் மீண்டும் துணை வேந்தராகப் பணியாற்றி வருகிறார்.

அதே சமயம் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கணினி அறிவியல் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்த தங்கவேல், தனது துறைக்குத் தேவையான கணினி, இணைய சேவைக்கான பொருட்களை வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும், ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பாடத் திட்டங்களில் பெரும் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் தணிக்கைக் குழு ஆய்வு செய்திருந்தது. இந்த ஆய்வில் முறைகேட்டில் தங்கவேல் ஈடுபட்டது நிரூபணமானது.

அதன்பின்னர் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தமிழக அரசு கடந்த 7 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பழனிசாமி குழு அறிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக் பிறப்பித்திருந்தார். இருப்பினும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்யாமல் இருந்து வந்தார். இதற்கு ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து பதிவாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கணினி அறிவியல் துறை தலைவராக உள்ளார். அதே சமயம் தங்கவேல் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கேட்டு துணைவேந்தர் ஜெகநாதன் உயர்கல்வித் துறைக்கு கடிதம் எழுதி இருந்தார். இது தொடர்பாக தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக், துணை வேந்தருக்கு மீண்டும் எழுதியிருந்த கடிதத்தில், “பதிவாளராக இருந்த தங்கவேலு மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தங்கவேல் மீது 8 புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Periyar University Registrar Matters The High Court questions

இதற்கிடையே பணிநீக்கம் தொடர்பான உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவாளராக இருந்த தங்கவேல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று (28.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தங்கவேல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், “பல்கலைக்கழகம் என்பது தனிச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இதில் சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் உள்ளனர். மனுதாரர் 34 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர். நாளை ஓய்வு பெற உள்ள நிலையில் பணிநீக்கம் செய்வது தொடர்பான பரிந்துரை தங்கவேலுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே பணிநீக்கம் தொடர்பான பரிந்துரைக்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி இளந்திரையன், “உயர் கல்வித்துறை செயலாளரின் பரிந்துரை குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது” எனக் கேள்வி எழுப்பினார்.

Periyar University Registrar Matters The High Court questions

இதற்குப் பதிலளித்த தற்போதைய பதிவாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரகுமார், “பணி நீக்கம் குறித்து பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும். இது தொடரான பரிந்துரை சிண்டிகேட் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “நிதி முறைகேடு புகார் தொடர்பான விசாரணை அறிக்கையைத் தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். உயர் கல்வித்துறை செயலாளரின் பரிந்துரை மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் துணைவேந்தர் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டது ஏன்? முறைகேடு புகார் தொடர்பாக சேலம் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மீது துணைவேந்தர் உரிய நடவடிக்கை எடுக்கலாம். மார்ச் 14 ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்தார். பதிவாளராக இருந்த தங்கவேல் நாளையுடன் (29.02.2024) பணி ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.