Advertisment

Throwback; பொள்ளாச்சி கொடூரம் - வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நக்கீரன் கட்டுரை!

Nakkheeran exposed pollachi case

"இளம்பெண்கள் 275 பேரை சமூக வலைத்தளம் மற்றும் நேரடித் தொடர்புகளால் மயக்கி ஆயிரத்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள்' என்ற பேரதிர்ச்சியை நக்கீரன் இதழில் கட்டுரையாகவும், வீடியோவாகவும் வெளியிட்ட நிலையில்... அந்த வீடியோவில், ""உன்னை நம்பித்தானே வந்தேன்...'' என்று கதறியபடியும், ""பெல்ட்டால் அடிக்காதீங்கண்ணா... வலிக்குது... நானே கழட்டிடுறேன்...'' என்று அலறியபடியும் மாணவிகள் துடிப்பதைப் பார்த்து பதறிய தமிழகத்தின் பல தரப்பினரும் ""அந்தக் கொடூரக் குற்றவாளிகளை உடனே தண்டியுங்கள்'' எனக் குமுறினர். கடும் நடவடிக்கையை வலியுறுத்தி அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பலரும் அறிக்கை விட்டுள்ளனர். கைதானவர்கள் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. பொள்ளாச்சி வழக்கறிஞர்கள் யாரும் குற்றவாளிகளுக்காக ஆஜராவதில்லை எனத் தீர்மானித்திருப்பது பாராட்டைப் பெற்றுள்ளது.

Advertisment

""ஆனா அரசும் போலீசும், இந்த திருநாவுக்கரசு விஷயத்தில் அம்பராம் பாளையத்து ஆத்து தண்ணியில போட்ட கல்லு போல மௌனமாய்த்தான் இருக்காங்க அண்ணா'' என நமது நண்பர்களின் உதவியோடு பேசினார் அந்த ஆபாச வீடியோ கும்பலில் சிக்கிய ஓர் இளம் பெண்ணின் சகோதரி.

Advertisment

அவர் நம்மிடம், ""அண்ணா இவனுக படுமோசமானவனுக. கைது செய்யப் பட்டிருக்கிற சதீஷ், பொள்ளாச்சி கடை வீதில "ஜோக்கர் ரெடிமேடு கடை'ன்னு ஒண்ணு வச்சிருக்கான். அங்க நெறைய பொண்ணுக வேலை செய்யுறாங்க. அங்கதான் என் தங்கச்சி ப்ரீதா (பெயர் மாற்றப் பட்டுள்ளது) வேலைக்குப் போனா. அவள் கிட்ட இந்த சதீஷ் காதல் வசனம் பேசி மயக்கி சின்னப்பம்பாளையம் பண்ணை வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிருக்கிறான். இவளும் அவனை நம்பிட்டா. ஆனா, அவனோடு சேர்ந்து பத்து பேர் உள்ள வந்துருக்கானுக. அதுல முக்கியமா கெரோன், பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டுல டூவீலர் கடை வச்சிருக்கற பைக் டீலிங் பாபு, "பார்' நாகராஜ் இவனுக பெல்ட்டை கழட்டி அடிச்சு என் தங்கச்சிய மயக்கமாக்கிய பின்னாலதான் அவளை சைக்கோத் தனமா ஒடம்பெல்லாம் கடிச்சு வச்சு நாய்போல குதறி எடுத்திருக்கானுக. "இங்க நடந்ததை வெளிய சொன்னா... இந்த ரூமுக்குள்ள எடுத்த உன் வீடியோ எல்லார் வீட்டுக்குள்ளேயும் இருக்கும்'னு சொல்லி அவளை கந்தல்துணியா பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டுல இறக்கி விட்டிருக்கானுக.

அவ வீட்டுக்கு வந்ததும் எங்ககிட்ட சொல்லி அழுதா. எதுவும் நாங்க வெளிய சொல்ல முடியாது. பண்ணை வீட்டுக்கு வந்த பசங்க, "நாங்க யார் தெரி யுமா? எவனும் எங்களை ஒண்ணும் புடுங்க முடியாது'ன்னு சொல்லியே அனுப்பியிருக் கானுக. பெரிய இடத்தை பகைச்சுக் கிட்டு எங்க மாதிரி அப்பாவிங்க என்ன பண்ணமுடியும்? நியாயமே கெடைக் காதுங்களா அண்ணா?'' என கண்ணீர் வழிகிற அந்த சகோதரியிடம் நாம் என்ன சொல்ல?

பொள்ளாச்சி நகர போலீஸ் ஸ்டே ஷனில் இருக்கும் நமது போலீஸ் நண்பரிடம் பேசியபோது... ""நாங்க கைதுபண்ணுன நாய்க, இனி கைது செய்யாமலே இருக்கப்போற நாய்க எல்லாருமே, அரசியல் பின்புலம் இருக்கு இந்த பொண்ணுக மேட்டரு விஷயம் பொள்ளாச்சிக்கே தெரியும். சிக்குன திருநாவுக்கரசு டீம்ல இருக்கற பசங்க போன்லயிருந்து மட்டும் 1100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் கெடச்சிருக்கு. அவனுக வச்சிருந்த ஒவ்வொரு போனும் லட்ச ரூபாய் மதிப்பு இருக்கும். போலீஸ் விசாரணையில சிக்குன வீடியோ வெளியே போகாம இருந்தாலே பெரும்பாடு.

pollachi-incident

வீடியோக்களில் இருக்கிற பல ஆட்கள் ஆளுங்கட்சியை(அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக)சேர்ந்தவங்க. அதனால போலீஸ் அதிகாரிகளே... பல கோடிகளை லஞ்சமா ஆளுங்கட்சி ஆட்களிடமே கேக்குறாங்க. அவுங்களும் தரத் தயாராத் தான் இருக்காங்க. இப்ப உங்க நக்கீரன் உள்ளிட்ட பத்திரிகைகள் மூலம் விவகாரம் வெளிவந்ததால சிக்குனவங்க மேல ஸ்ட்ராங்கா கேஸ் போட வேண்டியதாயிடிச்சி. ஆனா, விசாரணை விரிவா நடந்தாதான் இதில் சம்பந்தப்பட்ட ஆளுந்தரப்பு புள்ளிகள் மாட்டுவாங்க'' என்றார்.

பொள்ளாச்சி டி.எஸ்.பி, ""திருநாவுக்கரசு கைது ஆவதற்கு முன்னர் அவனே வெளியிட்ட வீடியோவில்... நிறைய அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிருப்பதா சொன்னது போலியானது. எங்க கைக்கு வந்திருக்கிற வீடியோக்கள் உண்மையா? இல்லையா?னு பரிசோதனை நடந்துக்கிட்டிருக்கு. அதுக்குப் பிறகே நடவடிக்கை எடுக்கப்படும்'' என மீடியாக்களிடம் சொல்லியுள்ளார்.

இந்நிலையில் இந்த இளம் பெண்கள் பிரச்சினையில் தீவிரமாகப் போராடிவரும் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நவநீத கிருஷ்ணன், ""இந்த வழக்குல சம்பந்தப்பட்ட திருநாவுக்கரசு உட்பட நான்குபேரையும் குண்டர் சட்டத்துல அடைச்சிட்டாங்க. உண்மைகளை எங்கே அடைக்கப் போறாங்களோ? தேர்தல் நேரத்துல இப்படி ஒரு செய்தி வந்தது ஆளும்கட்சி(அதிமுக)யின் முக்கிய புள்ளிக்கு பெரும் தலைவலியாக இருக்கு. அந்த வலிக்கு பொள்ளாச்சி போலீஸார் தைலம் தடவுறாங்க'' என கொதிக்கிறார்.

அ.தி.மு.க. மீது பழி போடு வதற்காக தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அவதூறு பரப்புகின்றன என்று அதிமுகவை சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், இந்தக் கொடூரத்தில் சம் பந்தப்பட்ட "பார்' நாகராஜனை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி ஓ.பி.எஸ்(அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரக இருந்தபோது)மேற்கொண்ட ஒழுங்கு நடவடிக்கையின் மூலம் இதில் அ.தி.மு.க.வுக்கு உள்ள தொடர்பு வெளிப்பட்டுள்ளது.

திங்கள் மாலை பேட்டி அளித்த கோவை எஸ்.பி. பாண்டியராஜன் (திருப்பூரில் டாஸ் மாக்குக்கு எதிராகப் போராடிய பெண்களைத் தாக்கிப் பெயர் பெற்றவர்) ""4 வீடியோக்கள்தான் இருந்தது. இதில் அரசியல் தொடர்பு ஏதும் இல்லை'' எனத் "தீர்ப்பு' போலக் கூறியவரின் வார்த்தைகளில் ஊடகங்களையும் வலைத்தள செயல்பாட்டாளர்களையும் மிரட்டும் தொனி வெளிப்பட்டது.

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தின் முழுப் பின்னணி வெளிவராதபடி .திருநாவுக்கரசு டீம் முடக்கப்படும்' என்பதுதான் பொள்ளாச்சி போலீசின் நிலைமையாய் இருக்கிறது. வெறிபிடித்த காம வேட்டை நாய்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய வகையில் விசாரணை தீவிரமாக வேண்டும். அதே நேரத்தில் பாதிக்கப் பட்ட பெண்கள் தொடர்பான வீடியோக்களும் விவரங்களும் எதிர்கால நலன் கருதி பாதுகாக்கப்பட வேண்டும். நேர்மையான அதிகாரி விசாரித்தால் மட்டுமே இது சாத்தியம்.

admk CBI nakkheeran pollachi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe