Skip to main content

நக்கீரன் ஆசிரியருக்கு பிஹைண்ட்வுட்ஸ் விருது!

Published on 17/12/2018 | Edited on 17/12/2018

பிஹைண்ட்வுட்ஸ் இணையதளம் மற்றும் யூ-ட்யூப் சேனல்களை நடத்திவரும் பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் திரைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சமூக அக்கறை மிகுந்த ஆளுமைகளுக்கும் பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது. 

 

nakkheeran gopal receives behindwoods gold medals



6-வது பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் விருதுகள் வழங்கும் விழா சென்னை டிரேட் செண்டரில் நேற்று நடைபெற்றது. இதில் நட்சத்திரங்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

 

nakkheeran gopal with gold medal



இந்த விழாவில் 'ஐகான் ஆப் இன்ஸ்பிரேஷன்' விருது நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபாலுக்கு வழங்கப்பட்டது. ''வாழுகின்ற பெரியாரிடம் (நல்லகண்ணு) இந்த விருதை நான் வாங்குவதில் பெருமை அடைகிறேன்" என்று பெருமையுடன் கூறி நல்லக்கண்ணுவிடம் விருதைப் பெற்றார். மேலும் நடிகர் ராகவா லாரன்ஸ்க்கு 'ஐகான் ஆப் சோசியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி இன் சினிமா' விருதும் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு 'ஐகான் ஆப் இன்ஸ்பிரேஷன்' விருதும் வழங்கப்பட்டது.   

 

 

Next Story

மீண்டும் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

Nirav Chopra made history by winning gold medal again

 

19வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்று வந்தது. கடந்த 9 நாட்களாக நடந்து வந்த போட்டியில் நேற்று இரவு ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிச்சுற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில், பங்குபெற்ற 12 போட்டியாளர்களில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா உட்பட 3 இந்தியர்கள் கலந்து கொண்டனர். அதனால், இந்தப் போட்டியை இந்திய ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். 

 

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி 2 வது சுற்றில் நீரஜ் சோப்ரா 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் 40 ஆண்டுகால வரலாற்றில் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் நீரஜ் சோப்ரா படைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 87.82 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து 2வது இடத்தை கைப்பற்றினார். மற்ற இந்திய வீரர்களான கிஷோர் ஜெனா 84.77 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து 5வது இடத்தையும், டி.பி.மானு 83.72 மீட்டருடன் 6வது இடத்தையும் பிடித்தனர். 

 

நீரஜ் சோப்ராவின் பதக்கம், உலக தடகளத்தில் இந்தியாவுக்கு கிடைத்த 3வது பதக்கமாக அமைந்துள்ளது. இதற்கு முன்பு 2003 ஆம் ஆண்டில் அஞ்சு ஜார்ஜ் நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கமும், கடந்த ஆண்டு இதே நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கமும் வென்று இருந்தனர். தங்கம் வென்ற ஹரியானா மாநிலத்தை சேர்ந்த நீரஜ் சோப்ராவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

முன்னதாக நேற்று முன்தினம் இரவு ஆண்கள் அணிகளுக்கான 4*400 மீட்டர் தொடர் ஓட்டபந்தயத்தின் தகுதி சுற்று நடந்தது. இதில் 17 அணியினர் இரு குழுவாகப் பிரிந்து தகுதி சுற்றில் ஓடினர். முகமது அனாஸ், அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் அடங்கிய இந்தியக் குழுவினர் 2 நிமிடம் 59.05 வினாடிகளில் இலக்கை அடைந்து 2வது இடத்தை பிடித்து 8 அணிகளில் ஒன்றாக இறுதி சுற்றில் நுழைந்தனர்.  2 நிமிடம் 58.47 வினாடிகளில் இலக்கை அடைந்து அமெரிக்கா முதல் இடத்தைப் பிடித்தது. இதற்கு முன்பு ஜப்பான் 2 நிமிடம் 59.51 வினாடிகளில் எட்டியதே ஆசிய சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இந்திய அணியினர் முறியடித்தனர். 

 

 

 

 

Next Story

வளைந்த செங்கோலும்; சாதி அரசியலைத் தோலுரிக்கும் கழுவேர்த்தி மூர்க்கனும்

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

Nakkheeran Gopal Exclusive

 

சில நாட்களுக்கு முன் நடந்த புதிய பாராளுமன்றத்தின் திறப்பு விழாவின் போது எழுந்த சர்ச்சைகளும், சமீபத்தில் வெளியான சாதி அரசியலைத் தோலுரித்துக் காட்டும் கழுவேர்த்தி மூர்க்கனைப் பற்றியும் ஒப்பிட்டு நக்கீரன் ஆசிரியர் பேசியதாவது.

 

சமீபத்தில் நடந்த புதிய பாராளுமன்றத் திறப்பு விழாவில் தனது சனாதன கொள்கைகளைத் தூக்கிப் பிடித்தார் பிரதமர் மோடி என்பதற்கு அங்கு நடந்த கொடுமைகளே சாட்சி. அந்த விழா நடந்தது சாமியார் மடமா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனென்றால், சுதந்திர இந்தியாவில் முதலில் உருவான பாராளுமன்றத்தின் திறப்பு விழாவின் போது, அன்றைக்கு இருந்த பிரதமர் நேரு, குடியரசுத் தலைவர், சட்டமேதை அம்பேத்கர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும் அங்கிருந்து நமது இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற நாடாக உருவாக்கினார்கள். ஆனால் நமது பிரதமர் மோடி, இந்தியாவில் சுற்றும் முக்கிய சாமியார்களை அழைத்து ஒரு விழா நடத்தியுள்ளார். மேலும் இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களுக்கும் ஒரு பிரதமராக இருக்கும் மோடி தான் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவன், ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவன் என்று அவ்வப்போது இதுபோன்ற நிகழ்ச்சிகளில் வெட்டவெளிச்சமாகக் காட்டி வருகிறார்.

 

தமிழர்களை முட்டாளென நினைத்துக்கொண்டு தமிழர்களைப் பெருமைப் படுத்துகிறோம் என்று சோழர் காலத்து செங்கோல் என்று கூறி ஒன்றை வைத்துள்ளனர். உண்மையில் சொல்லப் போனால் அந்த செங்கோல் சோழர் காலத்து செங்கோலே அல்ல. அதாவது சுதந்திரம் கிடைத்த போது இந்தியாவில் உள்ள முக்கியத் தலைவர்களும் அன்றைக்கு இருந்த பிரதமர் நேருவை சந்தித்து மரியாதை செலுத்தும் விதமாகப் பொன்னாடை அணிவித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்படித்தான் ஒரு ஆதினம் ஒரு செங்கோலை நேருவுக்கு கொடுத்து மரியாதை செலுத்தினார். அந்த செங்கோலை வாங்கிய நேரு அருகில் இருந்த உம்மிடி பங்காரு செட்டி அவர்களிடம் கொடுத்துள்ளார். அந்த செங்கோலை வாங்கிய பங்காரு செட்டி இப்படி மாறி மாறி உருமாற்றி தற்போது பாராளுமன்றம் வரை சென்றுள்ளது. இது புரியாமல் இங்குள்ள அரைவேக்காடு தமிழர்களும் சங்கிகளும் தமிழர்களைப் பெருமைப் படுத்திவிட்டார் எங்கள் மோடி என்று தலைகால் தெரியாமல் குதித்து வருகின்றனர்.

 

அப்படி உங்கள் மோடிக்கு தமிழர்களைப் பெருமைப்படுத்தியே ஆகவேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் அந்த பாராளுமன்றத்தில் இருக்கின்ற மூன்று கல்வெட்டுகளில் ஒன்று கூட தமிழில் இல்லையே. மாறாக அந்த மூன்று கல்வெட்டுகளில் ஹிந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தான் உள்ளது. மேலும் திடீரென்று செங்கோலை தூக்கிக் கொள்வது ஏனோ என்று பலதரப்பட்ட கேள்விகளுக்கு மத்தியில் உருவானது தான் இது. இங்கிலாந்தில் உள்ள மன்னர் பதவி ஏற்கும்போதும் பொதுமக்களை சந்திக்கும் போதும் அவ்வப்போது ஒரு செங்கோலை தூக்கிக் கொண்டு செல்வார். எதற்காக என்றால் இது மன்னராட்சி, இந்த நாடு எங்கள் குடும்பத்துக்கு மட்டும் கட்டுப்பாட்டில் உள்ளது என்று மக்கள் மனதில் விதைக்கத் தான். அதைத்தான் மோடி அவர்களும் நிரூபிக்கிறாரோ என்ற கேள்விகளும் அவ்வப்போது மனதில் எழுகிறது. ஒரு நாட்டுடைய பிரதமர் புதிய பாராளுமன்றத் திறப்பு விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒரு பழங்குடி இனத்தைச் சார்ந்தவர் என்பதால் அவரை அழைக்காமல்... தான் ஏற்றிருக்கும் சனாதன கொள்கைகளைப் பின்பற்றி வருகிறார் என்பது வெட்டவெளிச்சமாக இந்த நாட்டுக்குத் தெரிகிறது.

 

முந்தைய குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்தை கூட இந்த சனாதன கொள்கைகள் அடிப்படையில் தான் அழைக்கவில்லை என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் 585 இருக்கைகள் கொண்ட பாராளுமன்றத்தை மாற்றி தற்போது 888 இருக்கைகள் கொண்ட பாராளுமன்றத்தை மாற்றியது தங்களை கேள்வி கேக்க ஆள் இல்லை என்ற மெத்தனப்போக்கு தான். இதை ஒப்பிட்டு பார்த்தோமேயானால் தற்போது நான் திரையரங்கில் பார்த்த நடிகர் அருள்நிதி நடித்து, இயக்குநர் கௌதம ராஜ் இயக்கிய ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தில் இருந்த சம்பவத்தை புதிய பாராளுமன்றத்தில் நடந்த கொடுமைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கிறேன். ஏனென்றால், ஒரு உயர்சாதி வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் தாழ்ந்த சாதி வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் உள்ள நட்பை பிரிக்க, அரசியல்வாதி நடத்தும் சாதி அரசியலைத் தோலுரித்து இந்த படம் காட்டுகிறது. இந்த படத்தில் பல வசனங்கள் இங்குள்ள அரசியல்வாதிகள் நடத்தும் மத அரசியலையும் சாதி அரசியலையும் சாட்டையால் அடிக்கிறது.

 

குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், "எப்போதும் அடி வாங்குபவன் பக்கம் தான் இருக்க வேண்டும் அவனை அடிக்க விடாமல் பார்த்துக் கொள்வதற்காக", “மீசை என்பது ஆண்மையைப் பற்றியோ வீரத்தைப் பற்றியோ சாதியைப் பற்றியதோ அல்ல மாறாக அந்த மீசை என்பது வெறும் மயிறு தான்" என்ற வசனமும், "பதில் அளிக்க மட்டுமல்ல கேள்வி கேட்கவே அறிவு இருக்க வேண்டும்; நாங்கள் கேள்வி கேட்போமேயானால் எதிர்தரப்பினருக்கு பதில் கூற முடியாத அளவுக்கு இருக்கிறது” என்று ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த அருள்நிதியின் நண்பரான சந்தோஷ் பேசியுள்ளார். இப்படி தமிழகத்தில் சாதி அரசியலையும் மத அரசியலையும் எதிர்த்து நாங்கள் கேட்டுக்கொண்டிருக்க, மக்களின் பொதுவாக இருக்கும் பிரதமர் மோடி அவர்கள், கேரளா ஸ்டோரி படத்தையும் புதிய பாராளுமன்றத்தின் விழாவில் ஹிந்து சாம்ராஜ்யம் நடத்தி தான் வேறுபட்ட மனிதர் என்று மனுதர்மத்தை தூக்கிப் பிடித்துள்ளார். மேலும் புதிய பாராளுமன்றத் திறப்பு விழாவின் போது, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட நமது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வன்முறையைக் கண்டித்து நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் அந்த வீராங்கனைகளை அடித்து அராஜகம் நடத்தியுள்ளனர்.

 

பிஜேபி எம்பி பிரிஜ்பூஷன் சரண் சிங், அங்கு இருந்த மல்யுத்த வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் என அனைத்து பெண்களையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை எதிர்த்து மல்யுத்த வீராங்கனைகள் புதிய பாராளுமன்றத் திறப்பின் போது அந்த இடத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் காவல்துறையின் அராஜகத்தால் அங்குள்ள வீராங்கனைகள் துன்புறுத்தப்பட்டனர். இதனைக் கண்டித்து தமிழக முதல்வர் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில், "பாராளுமன்ற திறப்பின் போது இச்சம்பவம் நடந்தது கண்டிக்கத்தக்கது; முதல் நாள் அன்றே செங்கோல் வளைந்து விட்டது" என்று கண்டித்து ட்வீட் செய்துள்ளார். மேலும் இந்த கொடுங்கோல் ஆட்சியைப் பற்றி நாம் சொல்லிக்கொண்டே போகலாம்.