ADVERTISEMENT

தூத்துக்குடி அருகே குலசேகரநல்லூரில் நாயக்கர் கால சதிகற்கள் கண்டுபிடிப்பு

02:09 AM Oct 08, 2017 | Anonymous (not verified)

தூத்துக்குடி அருகே குலசேகரநல்லூரில் நாயக்கர் கால சதிகற்கள் கண்டுபிடிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குலசேகரநல்லூர் என்ற கிராமத்தின் சாலையோரம் நாயக்கர் கால சதிகற்கள் பேராசிரியை மற்றும் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் பிரியா கிருஷ்ணன், தொல்லியல் ஆர்வலர் வினோத் ஆகியோரால் கண்டறியப்பட்டது. தென்னகத் தொல்லியல் வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் பிரியா கிருஷ்ணன் இதைப்பற்றி கூறியதாவது,



சதிகல் என்பது போரில் கணவர் வீரமரணம் எய்தியதும் மனைவி தீப்பாய்ந்து உடன்கட்டை ஏறுவது. இந்த முறை வட மாநிலங்களிருந்து பரவியதாகக் கருதப் படுகிறது. பொதுவாக அந்தக் காலத்தில் மன்னர்கள், அமைச்சர்கள், படைத் தலைவர்கள் போன்ற உயர் நிலையில் உள்ளவர்களின் மனைவிமார்கள் மட்டுமே உடன்கட்டை ஏறினர். ஆனால் காலப்போக்கில் சமுதாயத்தின் ஒரு அங்கமாகவே அது மாறிவிட்டதாகத் தெரிகிறது. அக்காலத்தில் மன்னர்களுக்கு கல்வெட்டுகள், மெய்கீர்த்திகள் இருந்ததைப் போல் சாதாரண வீரர்களைப் பற்றி அறிய உதவுவன இம்மாதிரியான நடுகற்களே. நடுகற்களில் பல வகைகள் இருந்தப்போதிலும் சதிகல் என்பது பெண்களின் வீரம் மற்றும் கற்புடைமையைப் பற்றிய அன்றைய நிலையினை எடுத்துகாட்டுவதாக அமைகிறது.

கள ஆய்வின் போது குலசேகரநல்லூரில் நாயக்கர் கால சதிகற்கள் கண்டறியப்பட்டது. நாயக்கர் கால சதிகற்களான இவை கிபி 17 அல்லது கிபி 18ஆம் நூற்றாண்டை சார்ந்ததாக இருக்கலாம். வீரபாண்டிய கட்டபொம்மன் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு மாய்ந்தவர் பலர். அவர்களுள் இருவருக்காக இந்த சதிகற்கள் வணங்கப்படுவதாகவும் அவ்வூர் மக்களால் சொல்லப்படுகிறது. இரண்டு சதிகற்களும் கணவன் மனைவியுடன் நேர்த்தியான கலைப்பாட்டுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.



முதல் சதிகல்லின் பெயர் சின்ன பாயும் புலி. ஆங்கிலேயரை எதிர்த்துப் போரில் இறந்து பட்ட வீரன். இந்த சதிகல்லில் வீரனும் அவனது மனைவியும் ஒரு காலை மடித்து மற்றொரு காலை தொங்கவிட்டபடி இறை நிலையில் அமர்ந்து இருப்பது போல காட்சிபடுத்தபட்டிருக்கிறது. போர் வீரன் இரண்டு கைகளிலும் குறுவாள் வைத்துள்ளான். கால்களில் வீரகழல் அணிந்துள்ளான். அவனது மனைவி காதிலும் கழுத்திலும் கைகளிலும் இடையிலும் கால்களிலும் அணிகலன்கள் அணிந்து கையில் அல்லி மலரை வைத்திருக்கிறாள். கையில் வளை அணிந்து அல்லி மலரை வைத்திருப்பது சுமங்கலியாய் தீப்பாய்ந்து இறந்ததை குறிக்கிறது. வீரனின் கையில் கீழ் நோக்கி காணப்படும் குறுவாளும், கணவன் மனைவியாக உள்ளதாலும் இது சதிகல் என்பதை உறுதிப்படுத்துகிறது இதன் கீழ்பகுதியில் அலங்கரிக்கப்பட்ட குதிரை சிற்ப வேலைபாடுகளுடன் காணப்படுகிறது. அதனை எதிர்த்து வீரன் போரிடுவது போல காட்சிபடுத்தப்பட்டிருக்கிறது. இது வீரன் போரில் இறந்தான் என்பதை தெளிவுற உணர்த்துகிறது.



மற்றொரு சதிகல்லின் பெயர் பெரிய பாயும் புலி. ஆங்கிலேயரை எதிர்த்துப் போரில் வீரமரணம் எய்தியவர். இவரும் இரண்டு கரங்களிலும் குறுவாள் வைத்துள்ளார். இவரின் மனைவியும் அணிகலன்கள் அணிந்து அமர்ந்த நிலையில் கையில் அல்லி மலரை பிடித்தப்படி காணப்படுகிறாள். இதன் கீழ்பகுதியில் குதிரை அழகான வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. இதனை எதிர்க்கும் வீரன். அதனருகில் இன்னொரு பெண்ணும் கையை உயர்த்திய நிலையில் அல்லி மலரை பிடித்தபடி காணப்படுகிறாள். இவளும் அவனது இரண்டாவது மனைவியாக இருக்க வாய்ப்புண்டு. இரு சதிகற்களில் காணப்படும் வீரர்களும் உபவீதம் மாதிரியான அணிகலன்களை அணிந்துள்ளனர். இந்த சதிகற்கள் மழையிலிருந்தும், வெயிலிலிருந்தும் பாதுகாப்பதற்காக மேற்கூரை சற்று வெளியே நீட்டியபடி உள்ளவாறு சிற்ப வேலைபாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.



மூன்றாவது கற்சிற்பம், ஒரு பெண் மட்டும் அமர்ந்து இருப்பது போல் மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெண் அமர்ந்தநிலையில், காதணியும், கழுத்தணியும், கையில் வளையணிந்தும், அரையில் இடையணி அணிந்தும் நேர்த்தியான உடை அலங்காரத்துடன் இறைவிப் போல் அமர்ந்த நிலையில் கரங்களில் அல்லி மலரை வைத்துள்ளபடி இருக்கிறது. இந்த கற்சிற்பத்தில் உள்ள மல்லம்மாள் என்ற கன்னிப் பெண் தீப்பாய்ந்து இறந்ததால் தெய்வமாக வணங்கப்படுகிறாள்.இந்த கற்சிற்பத்திற்கு மட்டும் சிறிய அளவிலான செங்கற்களாலான ஒரு கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இதனை மாலைக்கோவில் என்றழைக்கின்றனர். தற்போது இந்த கோவில் எவ்வித பாரமரிப்பும் இன்றி சிதலமடைந்த நிலையில் காணப்படுகிறது. பொதுவாக ஒரு பெண் சிற்பம் மட்டும் உள்ள கற்சிற்பங்களை தீப்பாஞ்சம்மன் என்று அழைப்பது வழக்கம். பெண்ணுக்கு மட்டும் தனியாக நடுகல் வைத்து வணங்க ஏதேனும் முக்கிய காரணம் இருந்திருக்கலாம்.ஊர் நன்மைக்காக உயிர் தியாகம் செய்திருக்கலாம். வழிபடும் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அதனை பற்றிய வேறு தகவல் தெரியவில்லை என்றும், மூதாதையர் வழி வணங்குவதாகவே கூறுகின்றனர். கட்டபொம்மு என்ற மற்றொரு சதிகல் இருந்ததாதாகவும் தற்போது அது அங்கு இல்லை என்றும் கூறினர். மாலைக்கோவிலின் இடதுபுறம் நிறைய சின்னசின்னதாக நிறைய கற்கள் நடப்பட்டிருந்தது. அவை யாவும் போரில் இறந்த வீரர்களுக்காக நடப்பட்டது என்றும்,அந்தப் பகுதி அந்த காலத்தில் போர்களமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.



சிவராத்திரி நாளில் மட்டும் வழிபாடு இருந்திருக்கிறது அதன்பின் நாளடைவில் அதுவும் இல்லாமல் யாரும் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாகத் தூத்துக்குடி பகுதியில் தென்னகத் தொல்லியல் வரலாற்று ஆய்வு நடுவத்தால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆங்காங்கே பராமரிப்பும் பாதுகாப்பும் அற்ற நிலையில் காணப்படும் தொன்மை வாய்ந்த தொல்லியல் எச்சங்களை அதன் பெருமை அறிந்து அரசும் மக்களும் பாதுகாக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும் என்று தெரிவித்தார்.

-இரா. பகத்சிங்

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT