Skip to main content

விபச்சார புரோக்கருக்கு இத்தனை மரியாதையா? சல்யூட் அடிக்கும் சல்லாப போலீஸ்!

ttttt

 

 

சில தினங்களுக்கு முன்னர், நாகர்கோவில் சற்குணவீதியில் இருக்கும் ஒரு வீட்டில் கோழிக்கடை என்ற போர்வையில், விபச்சாரம் நடத்திவந்த இலந்தையடிவிளையை சேர்ந்த விஜய் ஆனந்தை தனிப்படை எஸ்.ஐ. சாம்சன் மற்றும் போலீசார் கைது செய்தனர். அவருடன் திருவனந்தபுரம், மதுரை மற்றும் ராஜபாளையத்தை சேர்ந்த மூன்று இளம்பெண்கள் உட்பட, சல்லாப ஆண்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

 

விஜய் ஆனந்த் மீதான இந்த கைது நடவடிக்கை குமரி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மட்டுமின்றி, கடந்த நான்காண்டுகளாக குமரி மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு ட்ரான்ஸ்ஃபரில் சென்ற உயரதிகாரிகள், எஸ்.ஐ.கள் உள்ளிட்ட சல்லாப காக்கிகள் சிலருக்கு ஷாக்கை ஏற்படுத்தி இருக்கிறது.

 

இந்நிலையில், வழக்குப்பதிவு செய்து கோட்டார் காவல்நிலையத்தில் உட்கார வைக்கப்பட்டிருந்த விஜய் ஆனந்தை, ஒரே மணிநேரத்தில் காவல்துறை உயரதிகாரி ஒருவரின் உத்தரவின் பேரில், காவல்நிலைய ஜாமீனில் விடுவித்து, காவல்துறை வாகனத்திலேயே அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதோடு அவர் வழியில் குறுக்கிட்ட தனிப்படை அதிகாரியும் மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஒரு விபச்சார புரோக்கருக்கு காவல்துறையில் இத்தனை மரியாதையா என்ற கேள்வியுடன் விஜய் ஆனந்தை பற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது நமக்கே அதிர்ச்சி உண்டானது.

 

“வழக்கறிஞர் என்று சொல்லிக் கொண்டாலும் விஜய்ஆனந்த் எந்த பாரிலும் உறுப்பினராக இல்லை. மாவட்டத்தின் பல இடங்களில் ஆயுர்வேத மசாஜ் சென்டர்களைத் தொடங்கி, அதில் விஐபிக்களுக்கும், நவீன கோழிக்கடை என்ற பெயரில் மிடில் தரப்பினருக்கும் என ரகம்பிரித்து விபச்சாரம் நடத்துவதுதான் அவரது பிரதான தொழில். தனது சல்லாப தொழிலுக்கு இடையூறு செய்யாமல் இருப்பதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து மட்ட போலீஸ் அதிகாரிகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு, அவர்களுக்கு வேண்டும் போதெல்லாம் பெண்களை அனுப்பிவைத்து, கைநிறைய கரன்சியையும் கொடுத்தனுப்புவார். இதனாலேயே குமரி மாவட்ட காவல்துறையில் அவருக்கு அடிபணிந்து கிடக்கும் அதிகாரிகள் ஏராளம்.

 

மாவட்டத்தில் புதிதாக எந்த காவல்துறை அதிகாரி வந்தாலும், விஜய் ஆனந்த் பழகிவிடுவார். அல்லது ட்ரான்ஸ்ஃபரில் போகிறவர் இவரை, புதிய அதிகாரிக்கு அறிமுகம் செய்துவிடுவார். இப்படி விஜய் ஆனந்துடன் பழக்கம் வைத்திருந்த பல அதிகாரிகள், சென்னை உட்பட பல பகுதிகளில் முக்கியப் பதவிகளில் இருக்கின்றனர். இன்றைக்கும் அவர்கள் குமரி மாவட்டம் வரும்போதெல்லாம் விஜய் ஆனந்தின் ஏற்பாட்டில் எஸ்டேட் பங்களாக்களில் குளிர் காய்ந்துவிட்டுத்தான் செல்கிறார்கள். தற்போது விஜய் ஆனந்தை ஸ்டேஷன் பெயிலில் விடச்சொன்னதே கூட, குமரியில் சப்-டிவிஷன் அதிகாரியாக இருந்து, இப்போது மீண்டும் குமரிக்கு பதவி உயர்வில் வந்திருக்கும் ஈசனின் பெயரைக் கொண்ட அதிகாரிதான். மேலும், குமரி மாவட்டத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கும் 3 டிஎஸ்பிக்கள், 9 இன்ஸ்பெக்டர்கள் விஜய் ஆனந்தின் ரெகுலர் கஸ்டமர்களாக இருக்கிறார்கள்.

 

சாத்தான்குளம் லாக்கப் படுகொலை புகழ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், இங்கு டியூட்டியில் இருந்தபோது விஜய் ஆனந்துக்கு தனி மரியாதையே இருந்தது. ஸ்ரீதருக்கு சல்லாபம் தேவைப்படும் போதெல்லாம், அவர்கேட்ட விதத்தில் கச்சிதமாக பெண்களை ஏற்பாடு செய்து தருவார் விஜய் ஆனந்த். அதேபோல், விஜய் ஆனந்தின் ரெகுலர் கஸ்டமரான எஸ்.பி. அலுவலகத்தில் இருக்கும் மாவட்ட குற்ற ஆவணக் காப்பகத்தின் டி.எஸ்.பி. மகேந்திரனுடன் அலுவலகத்திலேயே விஜய் ஆனந்த் பீர் குடித்த சம்பவம், அந்த அலுவலக அமைச்சு பணியாளர்கள் மூலமாக எஸ்.பி.க்கு போனதால், டிஎஸ்.பி. மதுரைக்கு மாற்றப்பட்டாரே தவிர, விஜய் ஆனந்த் மீது துரும்புகூட படவில்லை. எஸ்.பி. அலுவலகத்திற்கு விஜய் ஆனந்த் வந்தால், அதிகாரிகளுக்கு இணையாக சல்யூட் போடுமளவுக்கு, குமரி மாவட்ட காவல்துறை கேடுகெட்டுப் போயிருக்கு’’ என்று தலையில் அடித்துக் கொள்கிறார்கள், விஜய் ஆனந்த் பற்றிய தகவல்களை நம்மிடம் விளக்கிய காவல்துறையினர்.

 

விஜய் ஆனந்தைக் கைதுசெய்த தனிப்படை போலீசாரிடம் பேசினோம். "புது எஸ்.பி.க்கு வந்த தகவலின் அடிப்படையில், அவரது உத்தரவின் பேரில்தான் விஜய் ஆனந்தையும், அவரது கும்பலையும் பிடித்தோம். இந்த ஊரடங்கு நேரத்தில் இ-பாஸ் கூட இல்லாமல், வேறு மாவட்டங்களில் இருந்து இளம்பெண்களைக் கூட்டிவந்து தொழில் நடத்துமளவுக்கு, மாவட்ட எல்லையில் செக்போஸ்ட் போலீசாரும் உடந்தையாக இருந்துள்ளனர்'' என்றனர்.

 

ppttt


எஸ்.பி. பத்ரி நாராயணிடம் இதுபற்றி கேட்டபோது, "நான் புதிதாக வந்து சில நாட்கள்தான் ஆகிறது. யார்யார் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்து கொண்டிருக்கிறேன். விஜய் ஆனந்த் பற்றி விசாரிக்கிறேன்'' என்றார்.

 

கடந்த நான்கு ஆண்டுகளாக குமரி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் செய்கிற தவறையெல்லாம் கண்டிக்க வேண்டிய உச்ச அதிகாரி ஒருவர், அவர்களைத் தட்டிக் கொடுத்துக்கொண்டே இருந்தார். இதனால், அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதையே செய்வார்கள். இதுதான் குற்றங்கள் அதிகரிக்கவும் காரணம் என்கின்றனர் குமரி மாவட்ட காவல்துறையை நன்கு அறிந்தவர்கள்.