ADVERTISEMENT

''என் கொள்கை -எம்ஜிஆர் தெய்வம்!” -அதிரடி அரசியலால் ‘உயர்ந்த’ ஜேப்பியார்!

03:11 PM Jun 18, 2019 | kalaimohan

இன்றைய நாளிதழ்களில் ஜேப்பியார் போட்டோவுடன் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி விளம்பரத்தைக் காண முடிந்தது. மதுரை – செங்கோட்டை ரயிலில் நம்முடன் பயணித்த முதியவர் ஒருவர், நாளிதழின் அந்தப் பக்கத்தைப் புரட்டினார். அப்போது அவருடைய 9 வயது பேரன் அந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, “யாரு இந்தத் தாத்தா?” என்று கேட்டான். தன் கையில் எம்.ஜி.ஆர். படத்தைப் பச்சை குத்தியிருந்த அந்த முதியவர் “ஜேப்பியார்..” எனச்சொல்லிவிட்டு, பழைய நினைவுகளில் மூழ்கினார். ‘பெரியவரே! ஜேப்பியார் குறித்து உங்களுக்கு எதுவும் தெரியுமா?’ என்று நாம் கேட்க, கண்களை மூடிப் பெருமூச்சு விட்டார். பிறகு, ஆர்வத்தோடு பேசினார்.

ADVERTISEMENT


இன்று ஜேப்பியார் நினைவு நாள். அதிமுக அனுதாபியான அந்த முதியவர் கூறிய விபரங்கள் இதோ -

ஜேப்பியாரின் சொந்த ஊர் குமரி மாவட்டத்தில் உள்ள முட்டம். ஜே.பங்குராஜ் என்ற பெயர்தான் பின்னாளில் ஜேப்பியார் ஆனது. காவல்துறையில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றிய அவர், எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசி. அதிமுக தொடங்கப்பட்ட நேரத்தில், கட்சி உறுப்பினர் படிவத்தில் எம்.ஜி.ஆர். கையெழுத்திட்டபோது, இவரும் கையெழுத்திட்டு உறுப்பினர் ஆனார். ஒரு பாதுகாவலராக இருந்து தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆருடன் சுற்றுப்பயணம் செய்தார். 1973-ல் இவரை தென் சென்னை அதிமுக மாவட்டச் செயலாளர் ஆக்கினார் எம்.ஜி.ஆர். அதிமுக ஆட்சி அமைந்ததும், குடிநீர் வாரிய தலைவர் ஆனார். எம்.எல்.சி யாகவும் மேலவை கொறடா ஆகவும் இருந்தார். எம்.ஜி.ஆர். இறந்ததும், ஜானகி அணியில் தன்னை இணைத்துக்கொண்ட அவர், “கவலையே படாதீங்க. விரட்டிடலாம்..” என்று ஜெயலலிதாவுக்கு எதிராக கடுமையாக நடந்துகொண்டார்.

ADVERTISEMENT


எம்.ஜி.ஆர். இறந்தவுடன், அவரை அடக்கம் செய்வதற்கான இடத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, முதலில் மெரினா பீச் ஐ.ஜி. அலுவலகம் எதிரில், எந்த இடத்தில் எந்தமாதிரியான அமைப்பில் சமாதி அமைக்க வேண்டும் என்று நாவலர் நெடுஞ்செழியனும் உயர் அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினார்கள். ஜேப்பியாரோ, அன்றைய உள்துறைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமனோடு சேர்ந்துகொண்டு, ‘அண்ணாவின் இதயக்கனி என்று பெயரெடுத்தவர் எம்.ஜி.ஆர். அதனால், அண்ணா சதுக்கத்துக்கு அருகில்தான் அவரைப் புதைக்க வேண்டும்.” என்று கடுமையாக வாதிட்டு, நாவலர் நெடுஞ்செழியனையும் சம்மதிக்க வைத்தார்கள்.


ஜேப்பியார் எப்போதுமே அதிரடி அரசியல்வாதிதான். அதனால் ‘மாவீரன்’ என்ற அடைமொழி, அவருடைய பெயருக்கு முன்னாள் சேர்ந்துகொண்டது. திமுக ஆட்சியின்போது, வழக்கு பதிவாகி சிறையில் அடைபட்டிருக்கிறார். மேடையிலும்கூட அனல் பறக்கப்பேசுவார் ஜேப்பியார். அவருடைய பேச்சு எப்படி இருக்கும் என்பதற்கு 1982-ல் மதுரை பொதுக்கூட்டத்தில் பேசியதை உதாரணமாகச் சொல்லலாம்.

“டேய்.. எனக்கு பெரிய கொள்கை லட்சியம்னு எதுவும் இல்ல. நான் எம்.ஜி.ஆர். ரசிகன். எம்.ஜி.ஆர். என் தலைவன். இன்னைக்கு நான் இந்த வசதி அந்தஸ்தோட இருக்கேன்னா.. அதுக்கு என் தலைவன்தான் காரணம். சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளா இருந்த என்னை ஜேப்பியாரா இந்த அளவுக்கு உயர்த்தியது என் தலைவன்தான். என் தலைவனுக்காக உயிரையும் கொடுப்பேன்.”


கொள்கையே தனக்கு இல்லை என்று பேசிய ஜேப்பியார்தான், 1988-ல் எம்.ஜி.ஆரின் தாயார் சத்யபாமா பெயரில் இன்ஜினியரிங் காலேஜ் ஆரம்பித்து கல்வித்தந்தை ஆனார். அது இப்போது பல்கலைக்கழகம் ஆகிவிட்டது. ஜோசப் பொறியியல் கல்லூரி, ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, பனிமலர் பொறியியல் கல்லூரி, சத்யபாமா மருத்துவக் கல்லூரி, செயின்ட் மேரீஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட், பனிமலர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட், எஸ்.ஆர்.ஆர்.பொறியியல் கல்லூரி, மாமல்லன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, பனிமலர் பாலிடெக்னிக் என பல கல்வி நிறுவனங்களை உருவாக்கிய அவர், ஜேப்பியார் குடிநீர், ஜேப்பியார் பால், ஜேப்பியார் இரும்பு, ஜேப்பியார் சிமெண்ட், ஜேப்பியார் உப்பு, தொழில்நுட்ப பூங்கா என பிற தொழில்களிலும் ஈடுபட்டார். அட, பத்திரிக்கைத் துறையையும் அவர் விட்டுவைக்கவில்லை.

ஒரே ஒரு குறைதான்! எம்.ஜி.ஆரைப் போல் சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற நினைப்பு உள்ளுக்குள் இருந்தது. அதற்கான நேரமும் வந்தது. எம்.ஜி.ஆர். நடித்த சில படங்கள் பூஜையோடு, சில காட்சிகள் மட்டும் எடுக்கப்பட்டு, அப்படியே நின்றிருக்கின்றன. அதுபோன்ற ஒரு படம்தான் நல்லதை நாடு கேட்கும். அந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். நடித்த காட்சிகளை இடையிடையே சேர்த்து, ஹீரோவாக நடித்தார் ஜேப்பியார். அந்தப் படத்தில் கதை, திரைக்கதை, வசனம் டைரக்ஷன் ஜேப்பியார் என்றே டைட்டிலில் காண்பித்தனர்.


அந்தப்படத்தில், எம்.ஜி.ஆர். பாணியில் “அண்ணன் சொல்லுறத கேட்டு நடந்துக்கிட்டாலே வாழ்க்கை நல்லாயிருக்கும்.” என்று தனக்கு ஜோடியாக நடித்த ரேகாவிடம் பேசுவார் ஜேப்பியார். “லட்சியத்துக்காக என் உயிரையும் பொருட்படுத்தாமல் வாழ்ந்துக்கிட்டிருக்கிறவன் நான்.” என்று தன்னை ஒரு லட்சிய புருஷனாகக் காட்டவும் அவர் தவறவில்லை.

ரயிலில் பச்சை குத்திய அந்த முதியவர் ‘நான்-ஸ்டாப்’ ஆக, ஜேப்பியார் புராணம் பாடிட, நாம் இறங்க வேண்டிய இடம் வந்தது. போட்டோவோ, பெயரோ வேண்டாம் என்று மறுத்த அவரிடம், ‘சரிங்கய்யா.. ஒரு வார்த்தைல சொல்லுங்க.. மொத்தத்துல ஜேப்பியார் எப்படி?’ என்று கேட்டோம்.

பலமாகச் சிரித்துவிட்டு, “இறந்து ரெண்டு வருஷம் ஓடிருச்சு.. அதனால, அவரைப் பற்றி நெகடிவா எதையும் சொல்ல விரும்பல. சினிமாவுல வேணும்னா சகலாகலா வல்லவன்னு யாரும் பெயர் எடுத்திருக்கலாம். நிஜத்துல ஜேப்பியார் ஒரு சகலகலா வல்லவன்னு தாராளமா சொல்லலாம். அந்த அளவுக்கு நெறய சாதிச்சிருக்காரு.” என்றவரிடம், வணக்கம் கூறி விடைபெற்றோம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT