Skip to main content

முதல் பெண்... முதல் கொலை...  ஆட்டோ சங்கர் #13

Published on 22/07/2018 | Edited on 29/07/2018
as 13 title

எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப் பிறகு அதிமுகவில் நடந்த கலவரத்தில், ஜா., ஜெ.,  இரு தரப்புக்கும் என் ஆதரவு தேவைப்பட்டது. எம்.எல்.ஏக்களுக்கு எல்லாமே சப்ளை செய்ததில் ஏகப்பட்ட பணம் கிடைத்தது. 30 லட்சத்தை ஐநூறு ரூபாய் கட்டுகளாக மாற்றி பத்திரமாக்கினேன். தாம்பரம் தொகுதியில் எம்.எல்.ஏ. சீட்டுக்கு போட்டியிட திட்டமிட்டேன்! அப்போது தேர்தல் செலவுக்கு இந்த பணத்தை பயன்படுத்த எண்ணம். ஆனால், வாழ்க்கை நாம் நினைக்கும் வழியில் செல்வதில்லை. திடீரென்று வலது பக்கம் கைகாட்டி, இடது பக்கம் திரும்பி, சுற்றியடித்து செல்லும் திசை மறக்கச் செய்யும். அது பைபாஸ் ரோடு அல்ல, பெரும் காடு. அது காட்டியதுதான் திசை.

லலிதா! அவளை நடனக்காரி என்று மட்டுமே அறிந்திருந்தேன். மவுண்ட் ரோடு சாந்தி தியேட்டர் எதிரில் இருந்த ப்பாலா  (Pala) கேப்ரே அரங்கிலிருந்து ஒரு போதை ராத்திரியில் அவளை கூட்டிவந்தேன். லட்சுமிபுரத்தில் ஒரு பங்களாவில் குடியமர்த்தி, மினி வசந்த் அன் கோ, நகை நட்டு, துணி மணி,  பண்ட பாத்திரம் போக விஸ்கியும், பிராந்தியும் ததும்பி வழிந்தது. வீட்டுவேலைகளை செய்ய ஒரு வேலைக்கார கிழவியை அவளுக்கு துணையாக அமர்த்தினேன்! நான் ஆசைப்பட்டு அழைத்துவந்த முதல் பெண்.

 

auto sankar romance



ஒரு நாள் சாராயக்கடையில் இருந்தேன்... தொலைபேசி வீறிட்டது. எடுத்தேன். எதிர்முனையில் அந்த வேலைக்கார கிழவி!

"தம்பி! நீங்க உடனே இங்கே வரமுடியுமா?''

"ஏம்மா... லலிதாவுக்கு ஏதாவது சுகவீனமா?''

"ஆமாம் தம்பி! புத்தி சுகவீனம்'' என்றதும் பதறிப் போனேன்.

"எ... என்னம்மா சொல்றீங்க?''

"நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில வச்சுட்டீங்களே தம்பி! அந்த பொண்ணுக்கு புத்தி பிசகிதான் போயிருக்கணும்... இல்லைன்னா நீங்க இல்லாதப்ப  அந்த போலீஸ்காரனை பெட்ரூமுக்கு வரவைச்சு...''

 

 


காதுகளுக்குள் கோடி நாகங்கள் கொத்தின வலி. அடிவயிற்றில் ஒரு நெருப்பு மாநாடு. மனசுக்குள் கோபம் ப்ரேக் டான்ஸ் ஆடினது. வாழ்க்கையில்   என்றைக்குமே அவ்வளவு விஸ்கி சாப்பிட்டதில்லை! அதுவும் "ராவாக'. போதையும் கோபமும் போட்டி போட்டுக் கொண்டு மூளைக்குள் ஏறிற்று.   லட்சுமிபுரத்திற்கு மிதந்தேன். லலிதாவை பார்க்கப்போன போது அவளும் அளவுக்கு மீறின போதையில் இருந்தாள்.

வீட்டில் நாங்கள் ரெண்டு பேர் மட்டுமே! வீட்டிற்கு வந்த பின்னும் விஸ்கி பாட்டில்... கன்னித்தீவு சிந்துபாத் கணக்கா முடிவில்லாததாயிருந்தது குடி!வரவழைத்த நிதானத்துடன் லலிதாவிடம் விசாரித்தேன்.

 

 


"இன்ஸ்பெக்டர் தலையானமலை இங்கே வந்தானா லலிதா?''

லலிதாவின் முகம் பூரா வியர்வை அறுவடை அதிர்ச்சியை மறைக்க சிரமப்பட்டாள்.

"எ... என்ன... கே... கேட்டீங்க...?''

"ஏன் காதும் கெட்டுப் போச்சா...? தொழில் பண்ணி பண்ணி உடம்பு கெட்டுப்போன பன்னி... உனக்கு காதும் கெட்டுப் போச்சா''ன்னு கேட்டேன்.''

எச்சிலைக் கடித்து விழுங்கினாள்.

"ஆமா! நான் அதுதான்; தெரிஞ்சுதானே கூட்டி வந்தீங்க! குடிப்பழக்கம் இருக்கிறது தெரிஞ்சு விஸ்கியும் பிராந்தியும் வாங்கி வைச்சிருக்கிறது மாதிரி நாலைந்து ஆட்களையும் எனக்கு வாங்கி வைக்கிறதுதானே...?! நான் காமத்துக்கும் அடிக்ட் ஆனவ சங்கர்! குடிச்சதும் எனக்கு ஆம்பிளை வேணும்'' -சிணுங்கினாள் பலூன் கேட்கும் சிறுமி போல.

அத்தனை எண்ணங்களிலும் ஆத்திரமாகி கன்னம் நோக்கி கைவீசினேன்.

"பளார்” என பொறி கலங்கிப் போகும்படி ஒரு அறை! அவள் இன்னொரு கன்னத்தை காட்டவில்லை. அதற்காக நான் விட்டு வைக்கவுமில்லை. இன்னுமொரு பளார்!

"போலீஸ்காரனெல்லாம் என்னை கண்டா கிட்ட வராம பத்து அடி தள்ளி நின்னு பேசிட்டு மாமூல் வாங்கறானுங்க; எத்தனை ரௌடி பசங்களை   அடக்கி வச்சிருக்கேன்? கேவலம் ஒரு...... , ஊர் பொறுக்கி நீ என்னடான்னா என் சோத்தை தின்னுகிட்டு என்கிட்டே இவ்வளவு திமிராவா பேசறே?''

 

 

nedusalai



கோபம், வெறுப்பு, போதை எல்லாம் சேர்ந்து கூட்டு சதி செய்ய அந்த நிமிடத்து அரக்கனானேன்! மறுபடி அவளது கன்னங்களில் அறை மழை!  அடிபட்ட வலியும், வார்த்தைகளும் கோபமேற்ற எதிர்வார்த்தைகளை வீசினாள்… வார்த்தைகளா அவை...? ம்ஹும்! அதற்கு பதில் என் முகத்தில் காறித் துப்பியிருந்தால் கூட அப்படி அவமானப்பட்டிருக்க மாட்டேன். எது எனது மிகப்பெரிய பலவீனமோ எந்த அவலத்தை ஊமைக்காயமாக சுமந்து கொண்டிருந்தானோ அதை குத்தி ரத்தமும் சீழுமாக வெளியே கொண்டுவந்ததும், அதுவும் அந்த வகைப் பெண்ணே அந்த கைங்கரியத்தை செய்ததும் நொறுங்கிப் போனது பழைய மனசு.

"என்னடி சொன்னே?'' விஸ்வாமித்திர கோபத்துடன் அவளை நெருங்கினேன். கோபத்தில் பற்கள் கடிபட்டது. துரோகம் செய்ததுமல்லாமல் இந்த திட்டு திட்டுகிறாளே, அதுவும் சப்தத்துடன்! அக்கம்பக்கம் கேட்டால் மரியாதை என்னாவது?


"வாயை மூடுறி, முதல்ல!'' -பற்கள் நறநறத்தன!

"என் வாயை ஏண்டா கிளறினே...? இப்ப மூடணுமாமில்ல! உன் வண்டவாளத்தை வெளியே சொல்லாம வாயை மூடமாட்டேன்!''

"மூடமாட்டே?'' - மேலும் கிட்டத்தில் நெருங்கி... உஷ்ணக்காற்று என் முகத்தில் பட்டது. விரல்களை மடக்கி குவித்து வாயை குறிவைத்து   ஆக்ரோஷமாக ஒரு குத்து...

 

 


பேசுகிற வாயை வெற்றிலை பாக்கு போட வைத்தால் அப்புறம் பேசுவாளா என்று எண்ணியதால் வாய் நோக்கி தாக்கினேன். லலிதாவுக்கு போதாத நேரம். தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக அவள் திமிற, அந்த குத்து விமான வேகத்துடன் தொண்டையைத் தாக்கினது. 'கர் கர்' என்று   தொண்டையை அடைத்துக்கொண்டதைப் போல அவளிடமிருந்து சப்தம் வந்தது. கை, கால்கள் வலிப்பு வந்த மாதிரி உதறிக்கொண்டன. உள்ளுக்குள் மூச்சுக் காற்றை இழுத்துப் பிடிக்க நுரையீரல் உன்னதமாய் போராடினது.

என்னை வெறித்துப் பார்த்தபடி லலிதா சரியத் தொடங்கினாள். அவளுடன் என்னுடைய வாழ்க்கையும் சரிய ஆரம்பித்தது அப்போதுதான் என்பது   எனக்குத் தெரியாது. 

 

குறிப்பு: பயன்படுத்தப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சித்தரிப்புக்காகவே. தொடரின் மனிதர்களுக்கும்  புகைப்படங்களுக்கும் தொடர்பில்லை. 

முந்தைய பகுதி...

ஜெயலலிதாவுக்கும் எனக்கும் அடித்த பம்பர் பரிசு! - ஆட்டோ சங்கர் #12
 

அடுத்த பகுதி...

குழி தோண்டிப் புதைத்து... சிமெண்ட் பூசி மறைத்து... ஆட்டோ சங்கர் #14

 

 

 

 

Next Story

ஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்! ஆட்டோ சங்கர் #23

Published on 07/12/2018 | Edited on 09/12/2018

தேவியுடன் சேர்ந்து கூத்தடித்தேன். என்னிடம் பெண் கேட்டு வரும் ஸ்திரிலோலர்களில் அதிக திடம் அதிக சக்திவாய்ந்த ஆசாமிகளை அனுப்பி வைத்தேன்! அவளுக்கும் பரம திருப்தி. அந்த வாட்டசாட்டன்களிடமிருந்து நமக்கும் வசூல்! ஒரு கல்லில் ரெண்டு மாங்காய். சென்னையிலிருந்த இளம் நீக்ரோக்கள் நெல்சன் மண்டேலாவை விட அதிகம் நேசித்தது அந்த பெண்மணியைத்தான்!

 

auto sankar



பெரியார் நகரில் புதுசாக வீடு கட்டி, கிரகப்பிரவேசத்துக்கு அத்தனை முக்கிய போலீஸ் அதிகாரிகளும் ஆஜர் ஆகியிருந்தனர். ரிப்பன் வெட்டி வீட்டைத் திறந்து வைத்தது டி.எஸ்.பி.தங்கய்யாதான்! நம்ப அம்மையார் குத்து விளக்கு ஏற்றி வைக்க ஏகதடபுடல்.   சங்கரது சாராய வியாபாரத்தை விளக்கேற்றி தொடங்கி வைத்தது போலவே கிரகப்பிரவேசத்துக்கும் தவறாமல் கலந்து கொண்டனர் போலீஸார்!

அவர்களைச் சொல்லி தவறே இல்லை. காவல்துறை என்று பெயரே தவிர, யாருக்குக் காவல் என்று சொல்லவில்லையே? சாராய வியாபாரிகளுக்கும், மாமாக்களுக்கும் நாம்தான் காவல் காக்க வேண்டியிருக்கும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாவம்! நன்றி மறக்காத காவல் துறையினர்!

கிரகப்பிரவேச நிகழ்ச்சிகள் எல்லாமும் வீடியோவில் பதிவாயிற்று. எனக்கு ஒரு கலர் கனவு இருந்தது! என்றைக்காவது   சட்டசபைக்குள் எம்.எல்.ஏ.வாக நுழைய வேண்டும் என்ற ராஜ கனவு! அதற்கான அவ்வளவு தகுதிகளும்(!) கைவசம் என்றாலும் நேரம்தான் வாய்க்கவில்லை.

 

auto sankar house celebration



எப்படியும் தேர்தல் சமயத்தில் உபயோகப்படும் என்றே எல்லா 'பெரிய மனிதர்களோடும்' பழகினேன்! பெரிய மனிதர்களின் அழுக்கு அந்தரங்கங்களுக்கு- கறுப்பு சிந்தனைகளுக்கு- பயன்பட்டது என் நீலப்பட்டறை! பிற்பாடு தேர்தல் சமயம் அரசியல் வட்டாரத்தில் என் செல்வாக்கைக் காட்டுவதற்காகவே பூரா வி.ஐ.பி.களையும் அதிகாரிகளையும் விழாவுக்குக்   கூப்பிட்டேன். வீடியோவில் அவர்களை விழ வைத்தேன். தேர்தல் வருமுன் நான் மட்டும் விழாமல் இருந்திருந்தால் தேர்தல் வெற்றி விழாவும் நடத்தியிருப்பேன்!

அம்மையாரிடம் விளையாடி விட்டு அப்போதுதான் வீடு திரும்பியிருந்தேன். வாசலில் ஜீப் ஒன்று டயர் தேய வந்து நின்றது.   கான்ஸ்டபிள்கள்  ரெண்டு பேர் இறங்கி வந்தனர். புருவத்தில் கேள்வி முடிச்சு! 'பெரிய அய்யா' உடனே அவனைக் கூட்டி வர   சொன்னாராம். தெரிவித்தார்கள்! எனக்குத் தூக்கி வாரிப் போட்டது! 

'பெரிய அய்யா' என்பது அந்த அம்மையாரின் கணவர்! இதுவரை அவரை நேருக்கு நேர் சந்தித்ததில்லை; காவல்துறையில் அந்த ஒருவரை மட்டும் நெருங்கவேயில்லை நான்! அவர் மனைவியுடன் பழகி வரும்போது அவரை சிநேகிக்க சங்கடமாயிருந்தது. ஒரு விதமான இடைவெளியை அடைகாத்து வந்தேன், கூச்சம் காரணமாக. அவரிடம் ஆக வேண்டிய காரியங்களை அவள் மூலமாகவே கவனித்துக் கொண்டிருந்தேன்.

இப்போது அவர் கூப்பிட்டார் என்றதும் அதிர்ச்சி! எதற்குக் கூப்பிட்டிருப்பார்! அவர் மனைவியிடம் உள்ள உறவு தெரிந்திருக்குமோ? அதை விசாரிக்கப் போகிறாரோ? மனசுள் பயமுயலொன்று குறுகுறுவென ஓடிற்று. முதுகுத் தண்டில் ஐஸ் நதி வருடினது மாதிரி ஜில்லிட்டது.

முந்தைய பகுதி :

அதிகாரியின் மனைவி... ஆட்டோசங்கரின் தோழி! - ஆட்டோ சங்கர் #22 

ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்... மறைக்கப்பட இருந்த  பெரும் உண்மைகளை சிறை வரை சென்று மீட்ட கதை... விறுவிறுப்பான முழு புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்... 

 

books.nakkheeran.in

 

 

 

Next Story

அதிகாரியின் மனைவி... ஆட்டோசங்கரின் தோழி! - ஆட்டோ சங்கர் #22 

Published on 17/11/2018 | Edited on 09/12/2018
auto sankar 22



ஆட்டோவா, ஆகாய விமானமா என சந்தேகப்படும்படியான, நம்ப முடியாத வேகத்தில் வண்டி பறந்தது.

"கடைக்கு பலத்த சேதமா...?''

"ஆமாண்ணே...! யாரோ நாலு பேர் புகுந்து. இந்த மிஷின்லே ஏதோ ஃபிராடு இருக்குது... எப்பவுமே காசு விழறதில்லை... ஏமாத்தவா செய்யறீங்க'ன்னுஅடிச்சு நொறுக்கறாங்களாம்... நாமும் வேணா ஒரு நாலைந்து சேர்த்துப்போமா... சந்தடி சாக்கிலே கடையைத் தரை மட்டமாக்கிடலாம்!?''

"உளறாதே, பேசாம போ!''

சண்டையில் அமளி துமளிப்பட்டது கடை... அந்த நாலுவாட்ட சாட்டன்களும் பிரதேசத்தை உண்டு, இல்லை பண்ணிக்   கொண்டிருந்தனர். முதலாளியம்மா பதட்டமாகி ஃபோனுக்குப் பாய ஸ்டூல் ஒன்று பறந்து வந்து தொலைபேசியில் மோத சிதறித்   தெறித்தது. அம்மையார் அலறித் தீர்த்தார்.

இன்னொருவன் கல்லா பெட்டியில் கைவைக்க முயன்ற நிமிஷம், கடைமுன்னர் பெரிய சப்தத்துடன் போய் நின்றது அவசர ஆட்டோ., சரேலென வெளிப்பட்டேன். ஒரு நிமிடம் சண்டையை நிதானமாய் கவனித்தேன். வெறுப்புடன் காரித் துப்பினேன்! தம்பி மோகனிடம் "நான் மட்டும் உள்ளே போய் கவனிச்சுக்கறேன்... நீ ஆட்டோவிலேயே இரு!'' சொல்லிவிட்டு உள்ளே பாய்ந்து சண்டை ஜோதியில் சேர்ந்து கொண்டேன். அவர்கள் நான்கு பேரோடும் ஒற்றை ஆளாகச் சமாளித்தேன்.

வாசகர்களே, நீங்கள் யாருடைய ரசிகர்? ரஜினி? கமல்? விஜயகாந்த்? சத்யராஜ்? அல்லது வாத்தியார்? உங்கள் அபிமான நடிகர்   யாரோ அவரை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்! திரையில் அவர் எப்படி எதிரிகளை சமாüப்பாரோ அப்படி ஒரு ஸ்டைல்! சாகஸம்! கெட்டிக்காரத்தனம்!

ஒரு ஆளாக நின்று கொண்டு எதிரிகளைப் பந்தாடினேன். ரௌடிகள் நான்கு பேரும் உதட்டில் எட்டிப் பார்த்த ரத்தத்துடன் துடித்தனர். வலி தாங்காமல் பெற்றவளைக் கூப்பிட்டுக் கொண்டே கீழே சாய்ந்தனர். கடையை விட்டு வெளியே பாய்ந்து மறைந்தனர். அம்மையார் கண்களில் ஆச்சரியம் பிரகாசம் காட்டிற்று. என்னை பரவசம் பொங்கப் பார்த்தார்.

 

auto sankar 22-1



'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் திருடனை விரட்டின எம்.ஜி.யாரின் பலம் பார்த்து பிரமித்த சரோஜாதேவி கூட அப்படித்தானே   பார்த்தார்?!' அது சரோஜாதேவி, இவர்... ஏதோ ஒரு தேவி! அம்மணி என்னைப் பார்த்து தோழமையுடன் சிரித்தார்.

"ரொம்ப நன்றி...! நல்ல நேரத்தில் வந்து கை கொடுத்தீங்க!''

உதட்டில் புன்னகை உருவாக்கிக் காட்டினேன்.

"அதனால என்னங்க... உங்களுக்கு எப்ப, என்ன உதவி தேவைப்பட்டாலும் எனக்குப் ஃபோன் பண்ணுங்க'' -விசிட்டிங் கார்டை அவர் கையில் திணித்தேன். என் உதவி அவருக்கும் அவர் உதவி எனக்கும், அப்புறம் அடிக்கடித் தேவைப்பட்டது. அந்த பெண்மணிக்கு அடிக்கடி ஃபோன் செய்து என்னைக் கூப்பிடத் தெரிந்தது. பரஸ்பரம் தொழிலுதவி செய்யத் தெரிந்தது; போலீஸ் வட்டாரத்தில் என்னை மேலும் நெருக்கமாக்க தெரிந்தது.

வீடியோ கடையில் நடந்த மோத-ல் சண்டை போட்டவர்கள் என்னுடைய ஆட்கள்... அந்த சண்டையே ஒரு "செட்அப்' என்பது மட்டும் தெரியாது! 

 

bookstore ad



சூரியனும், சந்திரனும் கூட அப்போதெல்லாம் நான் சொன்னபடி கேட்டது என்றே சொல்லலாம்! சூரிய, சந்திரர் மட்டுமா? ஒரு சில   நட்சத்திரங்களும் கூட! சினிமா நட்சத்திரங்கள்! நடிகைகள்! என் ஓட்டு எப்போதும் சூரியனுக்குத்தான்! கட்சி உறுப்பினராகவும் அந்த வட்டாரத்தில் ஒரு பொறுப்போடும் இருந்தேன். ஆனால் அப்போது ஆட்சியிலிருந்தது அந்தக் கட்சியில்லை!

அதனாலென்ன... அந்தக் கட்சியில் அரசியல்வாதிகளுடன் நெருக்கமென்றால், ஆளும் கட்சியில் அதிகாரிகளிடம் செல்வாக்கு!அதுவும் அந்த உயர் அதிகாரி! 'ஐயா'வின் மனைவியின் நட்பு என்னை அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாக்கிற்று! செருப்புக்கு பாட்டாவும் இரும்புக்கு டாட்டாவும் இருந்தது மாதிரி சாராயத்துக்கு சங்கர் என பேரெடுக்க முடிந்தது, தேவியின் தயவால்!

எனக்கு இதில் இன்னொரு சந்தோஷம் கூட உண்டு! சட்டத்தின் நீள அகலமான கதவுகள் எனக்காக திறந்துவிடப்பட்டதே... இதற்கு எந்தக் கமிஷனும் கேட்கவில்லை தேவி! ஆனால் வேறு ஒன்று கேட்டார்... எனக்கு அது சம்மதமானது; சந்தோஷமானதும்!  

முந்தைய பகுதி:

என் கடைக்கு எதிர் கடை போட்ட பெண்மணி! - ஆட்டோ சங்கர் #21 

அடுத்த பகுதி :

ஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்! ஆட்டோ சங்கர் #23