ADVERTISEMENT

பெண்ணியவாதிகளாக வளரும் என் பிள்ளைகள்!

09:42 PM Oct 12, 2017 | Anonymous (not verified)

பெண்ணியவாதிகளாக வளரும் என் பிள்ளைகள்!

சர்வதேச பெண் குழந்தைகளுக்கான தினமாக உலகம் முழுவதும் அக்டோபர் 11ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கான சுதந்திரமான, பாகுபாடற்ற, பாதுகாப்பான, ஒடுக்குமுறைகளற்ற சமூகத்தை உருவாக்கித்தந்து, சுகாதாரமும் ஊட்டச்சத்தும் நிறைந்த உணவு, அடிப்படை உரிமைகள், வன்முறைகளற்ற சூழல்களை ஏற்படுத்தித் தருவதை உறுதிசெய்வதே இந்த நாளின் நோக்கமாகும்.

இந்த நாளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், கனடா நாட்டின் பிரதமரான ஜஸ்டின் திரிதேயு, ‘ஏன் என் பிள்ளைகளை பெண்ணியவாதிகளாக வளர்க்கவேண்டும்?’ என்ற கட்டுரையை வெளியிட்டுள்ளார். பலராலும் பாராட்டுக்களைப் பெற்ற இந்த கட்டுரையில், ஒரு பிரதமர் என்கிற அதிகார மேடையில் இருந்து இறங்கிவந்து, ஒரு அப்பாவாக (பொதுவாக எல்லா அப்பாக்களும்) அவரது தனது பிள்ளைகளை சமூகத்திற்கானவர்களாக வளர்ப்பது குறித்து குறிப்பிடுகிறார்.

ஜஸ்டின் திரிதேயு எழுதிய கட்டுரை..

ஒரு அரசியல்வாதி என்பதைக் காட்டிலும், ஒரு அப்பாவாக நான் செய்யவேண்டியதுதான் இங்கு அதிகம். ஒவ்வொரு நாளும் நானும் என் மனைவி சோஃபியும் இணைந்து எங்கள் மூன்று குழந்தைகளை இரக்ககுணமும், அன்பும், சமூகநீதியில் அக்கறையும் கொண்டவர்களாக வளர்த்தெடுப்பதில் கவனம் கொள்கிறோம். எங்கள் மகள் எல்லா கிரேஸின் பேச்சாற்றலையும், துடிப்பையும், உலகத்தோடு ஒத்துப்போகும் குணத்தையும் கண்டு மகிழ்ச்சி கொள்கிறோம். அதேசமயம், ஒரு மகனாக, ஒரு அப்பாவாக, ஒரு கணவனாக, ஒரு குடிமகனாக பெண்கள் இந்த சமூகத்தில் சந்திக்கும் தடைகளை ஒவ்வொரு நாளும் பார்த்தபடியே இருக்கிறேன்.



இந்த 2017ஆம் ஆண்டிலும் உலகம் முழுவதிலும் உள்ள பெண்கள் வன்முறைகளாலும், பாகுபாடுகளாலும், சமமற்ற வாய்ப்புகளாலும் அவர்களது கனவுகளை எட்டமுடியாத நிலைதான் இன்னமும் இருக்கிறது. துடிப்பும், வேகமுமிக்க என் மகள் வளர்வதைப் பார்க்கும்போது நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். ஆனால், அவள் சகமனுஷி என்பதையும் தாண்டி ஒரு பெண் என்ற காரணத்திற்காக, அவளது குரலை கவனிக்காமல் ஒதுக்கும் ஒரு கூட்டமும் இந்த உலகில் இருக்கிறதே என்பதை எண்ணி நான் அச்சம் கொள்கிறேன்.

என்னால் இதுமாதிரியான பிரச்சனைகளில் இருந்து என் மகளைக் காக்கவும், அவற்றை அவளிடமிருந்து மடைமாற்றவும் முடியும். ஆனால், அவற்றை எதிர்கொள்ளும் திறன் என் மகளிடம் இருந்தே வரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். நானும் சோஃபியும் எங்களது மகளின் எல்லா துயர்நிறைந்த தருணங்களிலும் உடனிருக்க முடியாது. ஆனால், அந்த வலிமைக்கூறுகளை எல்லாம் அவள் கற்றுக்கொள்ள, பிரச்சனைகளை எதிர்கொள்ள அவளே போதுமானவள் என்பதை அவளுக்கு நாங்கள் கற்றுக்கொடுப்போம். அவளிடம் எந்தவிதமான பிரச்சனைகளையும் சந்திக்கும் வலிமையும், உண்மையும் இருக்கிறது என்பதை உணர்த்தி அவளை உயர்த்தும் வார்த்தைகளும், நம்பிக்கைகளுமே அதற்கு சாட்சி. இதுதான் பெண்ணியம்.

ஒருநாள் சோஃபி என்னிடம், ‘நம் மகளை பெண்ணியவாதியாக மாற்றும் முயற்சிகள் அருமை. ஆனால், நம் இரண்டு மகன்களையும் சமூகத்தில் பெண்கள் படும் துயரங்களுக்கு எதிராக குரல்கொடுப்பவர்களாக வளர்க்கவேண்டுமே?’ என்ற கேள்வியை எழுப்பினாள்.

உண்மையில் பெண்ணியம் என்பது பெண்களுக்கு மட்டுமானது அல்ல. ஆண்களுக்கு கொடுக்கப்படும் வாய்ப்புகளைப் போலவே பெண்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்; அதை உண்மையாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும். எங்கள் மகன்களான சேவியர் மற்றும் ஹாட்ரீனுக்கு சமூகத்தில் இருக்கும் பாலின பாகுபாடுகளைக் களையும் வலிமையும், கடமையும் இருக்கிறது. அவர்கள் இப்போது சிறுபிள்ளைகளாக இருந்தாலும், இளைஞர்களாக வளரும்போது சமூகத்தில் திறந்த உண்மையும், அன்பும் மற்றும் நீதியோடு இணக்கமானவர்களாகவும் இருக்கவேண்டும். ஆண்மைத்தனங்களால் திணிக்கப்பட்டிருக்கும் அழுத்தங்களை சக ஆண்கள் மற்றும் சமூகத்தில் இருந்து விரட்டுபவர்களாக அவர்கள் வளர வேண்டும். அவர்கள் அவர்களாகவும், பெண்ணியவாதிகளாகவும் வளர்ந்து சமூகத்தில் அவர்களை அவர்களே பெருமையாகப் பார்க்கும் நிலை உருவாக வேண்டும்.

ஆணும் பெண்ணும் சமம் என்பதை நிலைநாட்டுவதுதான் பெண்ணியம் என்ற புரிதல் இங்கு இருக்கிறது. உண்மையில் பாலின சமத்துவம் இருந்தால், இங்கு ஒவ்வொருவரும் பாதுகாப்புடன் இருக்கலாம் என்ற அறிவுக்கண்ணுடன் அதைப் பார்க்கவேண்டும் என்பதே என் எண்ணம். இருபாலருக்கும் சமமரியாதையும், அன்பையும் கொடுக்கும் உலகை உருவாக்க நாம் அனைவரும் ஓர் ஒப்பற்ற ஈடுபாடுடன் செயல்படவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஏனென்றால், உங்கள் உரிமைகளும், சுதந்திரமும் பாதுகாப்பானதாக இருக்கும்பட்சத்தில் அது எனக்கானதுமாகத்தானே இருக்கும்.



அந்த உலகம் இன்னமும் உருவாக்கப்படவில்லை. ஆனால், அது மக்களை நேசிப்பவர்களால் நிச்சயம் கட்டமைக்கப்படும். அதுதான் நாம் வாழ நினைக்கும் உலகம். நம் பிள்ளைகள் வாழநினைக்கும் உலகம். நம் பிள்ளைகளை பெண்ணியவாதிகளாக வளர்த்து, அந்த உலகைக் கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தை அவர்களுக்கு உணர்த்தவேண்டும். நம் பிள்ளைகளை பெண்ணியவாதிகளாக வளர்த்து, அவர்களை பெருமைப்படச் செய்யவேண்டும். ஏனென்றால், அவர்களுக்கு இந்த உலகை இன்னும் அழகாக்குவதற்கான கடமையும், உரிமையும் இருக்கிறது.

தமிழில்: ச.ப.மதிவாணன்

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT