Advertisment

மும்பை TO உளுந்தூர்பேட்டைக்கு டூவீலரில் வந்த இளைஞர்கள்: வீட்டுக்குப் போகாமல் எங்குச் சென்றார்கள் தெரியுமா?

Two young men

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது ம.குன்னத்தூர். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஐயப்பன், ஹரி ஆகிய இருவரும் வேலை தேடி மும்பைக்குச் சென்றனர், அங்கு வேலூரைச் சேர்ந்த ஒரு ஒப்பந்தக்காரரிடம் வேலைக்குச் சேர்ந்து தினசரி கூலிவேலை செய்து வந்துள்ளனர். இந்தநிலையில் கரோனா பரவல் அதிகரித்ததையடுத்து மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவையடுத்து கடந்த இரண்டு மாதங்களாக அந்த இளைஞர்களுக்கு அங்கு வேலை இல்லை. சாப்பாட்டிற்கும் மிகுந்த சிரமப்பட்டதோடு, தங்குவதற்கு இடம் இன்றி அவதிப்பட்டனர்.

இந்த நிலையில் எப்படியாவது நாம் ஊருக்கு போய் சேர வேண்டும், இங்கே பசி பட்டினி கிடந்து சாவதைவிட ஊருக்குச் சென்று அங்கு கிடைத்த வேலையை செய்து கஞ்சி கூழ் குடித்தாவது பிழைத்துக் கொள்வோம் என்று முடிவு செய்தனர். ஆனால் ஊருக்குச் செல்வதற்கு பஸ், ரயில், கார் என எந்தப் போக்குவரத்து வசதியும் இல்லை. ஆனால் எப்படியும் ஊருக்குப் போய்ச் சேர்வது என்ற உறுதியான முடிவு எடுத்த அந்த இரு இளைஞர்களும் தங்களை வைத்து வேலை செய்த ஒப்பந்தகாரரிடம் சென்றனர். அவரிடம் தங்கள் நிலைமையை எடுத்துக்கூறி எப்படியாவது எங்களை ஊருக்கு அனுப்புவதற்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டுள்ளனர்.

அவர்கள் நிலைமையைப் புரிந்துகொண்ட ஒப்பந்தக்காரர், சிறிது நேரம் யோசித்துவிட்டு அவரிடம் உள்ள டூவீலரை கொடுத்து, இந்த டூவீலரை எடுத்துச் செல்லுங்கள், போகும்போதே வேலூரில் உள்ள எனது வீட்டில் டூவீலரை ஒப்படைத்து விட்டு, அங்கிருந்து ஏதேனும் வாகனம் பிடித்து நீங்கள் ஊருக்குப் போய் சேர்வதில் சிரமமிருக்காது, அதன்படி செய்யுங்கள் மிகக்கவனமாகச் செல்லுங்கள் என்று கூறி தனது டூவீலரை கொடுத்துள்ளார்.

Advertisment

டூவீலரில் இளைஞர்கள் இருவரும் மூன்று இரவுகள், மூன்று பகல்கள் என இடைவிடாமல் பல்வேறு சிரமங்களுக்கும், தடைகளுக்கும் இடையே நேற்று காலை வேலூர் வந்து சேர்ந்தனர். மும்பையில் ஒப்பந்தக்காரர் கூறியபடி அவரது டூவீலரை அவரது வீட்டில் உள்ளவர்களிடம் கொண்டுபோய் ஒப்படைத்தனர். பிறகு அங்கிருந்து தங்கள் ஊருக்குச் செல்வதற்கு வாகனத்தைத் தேடி அலைந்தனர். அப்போது உளுந்தூர்பேட்டையில் இருந்து காய்கறிகள் ஏற்றிக்கொண்டு வேலூர் வந்த டாடா ஏசி வாகனம் ஒன்று மீண்டும் உளுந்தூர்பேட்டை நோக்கிச் செல்வதைத் தெரிந்து கொண்டனர்.

அந்த டாடா ஏஸ் வேன் ஓட்டுனரிடம் சென்று தங்கள் நிலைமையை எடுத்துக் கூறினார்கள். அவர்கள் மும்பையிலிருந்து மிகுந்த சிரமப்பட்டு வேலூர் வந்துள்ளது கண்டு பரிதாபப்பட்ட அந்த டிரைவர், டாட்டா ஏசி வாகனத்தில் அவர்களை ஏற்றிக்கொண்டு உளுந்தூர்பேட்டை நோக்கிப் புறப்பட்டார். வேனில் ஏறியவுடன் ஊர் போய்ச்சேர போகிறோம் என்ற சந்தோஷம் ஒரு புறம் இருந்தாலும், கரோனா பற்றிய நிலவரம் ஊரில் எப்படி உள்ளது, நாங்கள் ஊருக்கு நேரடியாக வரலாமா என்பது பற்றி ஊரில் உள்ள அவரது நண்பர் தம்பிதுரைக்குத் தங்களது செல்போன் மூலம் விபரம் கேட்டறிந்தனர்.

அவர்கள் நிலைமையைக் கேட்ட தம்பித்துரை, நீங்கள் நேரடியாக ஊருக்கு வந்தால் நீங்கள் மும்பையில் இருந்து வருவதால் உங்கள் இருவரையும் அரிகாரிகள் கரோனா மருத்துவப்பரிசோதனைக்கு அழைத்துச் செல்வார்கள். அவர்கள் ஊருக்குள் வந்து உங்களை அழைத்துச் செல்வதை விட, நீங்களே நேரடியாக ஊருக்கு வருவதற்கு முன்பாக உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குமாரமங்கலம் கரோனா சிறப்புப் பரிசோதனை முகாமிற்குச் செல்லுங்கள், அங்கே சென்றதும் அங்கு உள்ள மருத்துவக் குழுவினரிடம் நீங்கள் மும்பையில் இருந்து நேரடியாக முகாமிற்கு வந்துள்ள தகவலை கூறினால், அவர்கள் உங்களை மருத்துவப் பரிசோதனை செய்வார்கள். மருத்துவப் பரிசோதனையில் உங்களுக்கு நோய்த் தொற்று இல்லை என்றால் உங்களை உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். ஒருவேளை நோய்த்தொற்று இருந்தால் முகாமிலேயே தங்க வைத்து சிகிச்சை அளிப்பார்கள். இரண்டு வார சிகிச்சைக்குப் பிறகு நோய் குணமானதும் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். அதனால் எந்தவித தயக்கமுமின்றி தைரியமாக நீங்கள் இருவரும் நேரடியாக முகாமிற்குச் சென்று பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுங்கள் என்று ஆலோசனை கூறியுள்ளார்.

அதன்படி ஐயப்பனும், ஹரியும் மாலை 6 மணி அளவில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குமாரமங்கலம் சிறப்புப் பரிசோதனை மையத்திற்கு நேரில் சென்று மும்பையிலிருந்து ஊருக்குச் செல்லாமல் நேரடியாக முகாமிற்கு வந்துள்ள தங்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யுமாறு கூறியுள்ளனர்.

அவர்களது நேர்மையைப் பாராட்டிய மருத்துவக் குழுவினர், அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர். இவர்களது பரிசோதனை அறிக்கை விபரம் கிடைப்பதற்கு இன்னும் இரண்டு நாட்கள் ஆகும். அதுவரை முகாமில் தங்கியிருக்குமாறு குழுவினர் கூறிய ஆலோசனையை ஏற்றுக்கொண்ட அந்த இளைஞர்கள் இருவரும் முகாமில் தற்போது தங்கி உள்ளனர். அவர்களிடம் பேசியபோது, மும்பையில் கரோனா பரவல் அதிகம் இருப்பதால் நாங்கள் ஊருக்குச் செல்லாமல் நேரடியாக முகாமிற்கு வந்து எங்களைப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளோம். காரணம் மும்பையில் அதிக அளவு கரோனா பரவல் இருப்பதால் அங்கிருந்து வரும் எங்களுக்கு ஒருவேளை நோய்த்தொற்று இருப்பின் அதன் மூலம் எங்கள் குடும்பத்தினருக்கும் மற்றவர்களுக்கும் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. பரிசோதனையில் நோய்த் தொற்று இல்லாவிட்டால் எல்லோருக்கும் நிம்மதி எனக் கருதினோம். ஊரில் உள்ள எங்கள் நண்பர் தம்பிதுரையும் சரியான ஆலோசனைக் கூறினார். எனவேதான் ஊருக்குச் சென்று குடும்பத்தினருக்கும் மற்றவர்களுக்கும் சிரமத்தைக் கொடுக்கக் கூடாது என்பதற்காக நேரடியாக நாங்களே முகாமிற்கு வந்து பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளோம் என்றனர்.

http://onelink.to/nknapp

பல்வேறு மாநிலங்களில் இருந்து தங்கள் ஊருக்கு வருபவர்கள் சத்தமில்லாமல் தங்கள் வீடுகளுக்குச் சென்று தங்குகிறார்கள். ஒருவேளை இவர்களுக்கு நோய்த்தொற்று இருந்து அது மற்றவர்களுக்கும் பரவிவிடும் வாய்ப்பு இருப்பதை பலர் உணர மறுக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை கூட அப்பகுதியில் வசிப்பவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விடுவதால் வெளியூர்களில் இருந்து வருபவர்களால் பரிசோதனைகளில் இருந்து தப்ப முடியவில்லை. அதே நேரத்தில் கௌரவம் பார்க்காமல் மும்பையிலிருந்து வந்த இந்த இளைஞர்கள் வீட்டுக்குக் கூட வராமல் அவர்களே நேரடியாக மருத்துவப் பரிசோதனை முகாமுக்குச் சென்று மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்ட தகவலைக் கேள்விப்பட்ட ம.குன்னத்தூர் கிராம மக்கள் அந்த இளைஞர்களுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

travel bike ulundurpet Mumbai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe