ADVERTISEMENT

தந்தை பெரியாரின் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டம் இது...

09:25 AM Sep 17, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ராமசாமியின் வாழ்க்கையில் இது புது அனுபவமாக இருந்தது. அவருக்கு அப்போது 25 வயது. தந்தை வெங்கட்ட நாயக்கருக்கு என்றும் இல்லாத அளவுக்கு மகன்மீது கோபம் வந்துவிட்டது. கடுமையாக கண்டித்தார். கைநீட்டி அடித்தும் விட்டார். இது ராமசாமிக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. வீட்டைவிட்டு கிளம்பி விஜயவாடாவுக்கு சென்றுவிட்டார். அங்கு ஏற்கெனவே, இவரைப் போல கோபித்துக் கொண்டு வந்த இரண்டு அய்யர்கள் நண்பரானார்கள். இம்மூவரும் ஹைதராபாத்துக்குப் போனார்கள். பிச்சையெடுத்து சாப்பிடுவதென்று முடிவு செய்தார்கள்.

ADVERTISEMENT

ராமசாமி தங்க நகைகள் அணிந்திருந்தாலும், அவற்றை விற்று சாப்பிட வேண்டும் என்று நினைக்கவில்லை. அவர், தான் அணிந்திருந்த தங்கக்காப்பு, காது கடுக்கன், கழுத்துச் சங்கிலி, மோதிரங்கள், தங்க அரைஞாண் ஆகிய அனைத்தையும் கழற்றி பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டார். பின்னர் நண்பர்கள் மூவரும் வீடு வீடாகப் போய் பிச்சை எடுத்துச் சாப்பிட்டார்கள். ஓய்ந்த நேரத்தில் பிளாட்பாரத்தில் உட்கார்ந்து புராணங்களைப் பற்றி விவாதம் செய்வார்கள். இரண்டு அய்யர்களும் கூறும் கதைகளுக்கு ராமசாமி விதண்டாவாதமாக பேசுவார்.

சாலையில் போகிறவர்கள் இவர்களுடைய பேச்சை கேட்டு ரசிப்பார்கள். அங்கு சமஸ்தானத்தில் வேலை செய்யும் ஒரு தமிழர் இவர்களுக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்தார். ஆனால் இவர்கள் பிச்சை எடுக்கும் விஷயம் தெரிந்தவுடன் வருத்தமடைந்தார். தனது நண்பர்களிடம் வசூல் செய்து கொடுத்தார். ராமாயண பிரசங்கம் செய்யும் வாய்ப்பும் இவர்களுக்கு கிடைத்தது. பிரசங்கம் செய்யும்போது, ராமசாமி தனது சொந்த சரக்குகளை எடுத்து விடுவார். அந்தக் கதைகளை ரசித்து கைதட்டுவார்கள்.

அங்கு சில மாதங்கள் கழிந்தன. பிறகு மூவரும் காசிக்கு செல்ல முடிவு செய்தார்கள். ராமசாமி தனது நகைகளை பத்திரப்படுத்தி, அடைக்கலம் கொடுத்த நண்பரிடம் ஒப்படைத்தார். ஒரே ஒரு மோதிரத்தை மட்டும் வைத்துக் கொண்டார். காசிக்குப் போய்ச் சேர்ந்ததும் நண்பர்கள் இருவரும் தனியாகப் பிரிந்து போனார்கள். ராமசாமி தனி ஆளானார். அங்கு ஏராளமான தர்ம சத்திரங்கள் இருந்தன. ஆனால் பிராமணர்களுக்கு மட்டுமே அங்கு சாப்பாடு கிடைக்கும். வந்த முதல் நாளிலேயே ராமசாமியின் கையிலிருந்த காசு முழுவதும் செலவாகிவிட்டது. அடுத்தநாள் முழுவதும் பட்டினி. பசி தாங்க முடியாமல் ஒரு அன்ன சத்திரத்திற்குள் நுழைந்தார். இவர் பிராமணர் அல்ல என்பதைக் கண்டு கொண்ட காவலாளி ராமசாமியை வெளியே விரட்டினான். பசியும், கோபமும் ராமசாமியை வாட்டி எடுத்தன, அந்தச் சமயத்தில் சத்திரத்திற்குள்ளிருந்து எச்சில் இலைகளை வெளியே எறிந்தார்கள். பசி தாங்கமாட்டாமல் ராமசாமி இலைகளை நோக்கி ஓடி அவற்றில் இருந்ததை எல்லாம் வழித்துப் போட்டு பசியை தீர்த்துக் கொண்டார்.



வேலை கிடைக்குமா என்று தேடினார். கிடைக்கவில்லை. தலையில் முடியும் முகத்தில் மீசையும் இருப்பதால் தன்னை யாரும் துறவியாக நினைப்பதில்லை என்று நினைத்தார். பிச்சைக் காசில் மொட்டையடித்துக் கொண்டார். கங்கைக் கரை ஒரமாக அமைந்துள்ள மடமொன்றுக்குப் போய் சேர்ந்து ஏதாவது வேலை கிடைக்குமா என்று கேட்டார். தினமும் குளித்து திருநீறு பூசி பூஜைக்கு வில்வம் பறித்துக் கொடுத்தால் ஒரு வேளை சாப்பாடு கிடைக்கும் என்று சாமியார்கள் கூறினார்கள். அதற்கு சம்மதித்தார்.


ஆனால் அவருக்கு குளிக்கும் பழக்கம் இல்லை. எனவே, குளிக்காமலேயே விபூதி பூசி ஈரத்துண்டைக் கட்டிக் கொண்டு வில்வம் பறித்துக் கொடுத்தார்.
இதுவும் சாமியார்களுக்கு தெரிந்துவிட்டது. தகராறு ஏற்பட்டு மடத்திலிருந்து வெளியேறினார். சாமியார்கள் மத்தியில் நடக்கும் ரகசிய விவகாரங்களை அவர் தெரிந்து கொள்ள இது உதவியது.


மடத்திலிருந்து வெளியேறிய ராமசாமி, சாப்பாட்டுக்கு புதிய வழியைக் கண்டுபிடித்தார். இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் உறவினர்கள் பிச்சைக்காரர்களுக்கு போடும் சாப்பாடுக்கு வரிசையில் நின்றார். இதிலும் அதிக நாட்கள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. காசியில் தூய்மையான வாழ்க்கை வாழ முடியும் என்று நம்பிய ராமசாமிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒழுக்கக் கேடுகள் மலிந்திருந்தன. உடனே ஊருக்குப் புறப்பட்டார். ஹைதராபாத்தில் இருந்து காசிக்கு வரும்போது தனது அரைஞாண் கயிற்றில் ஒரு மோதிரத்தை மட்டும் கோர்த்து வந்திருந்தார். அந்த ஒன்றரைப் பவுன் தங்க மோதிரத்தைக் கொண்டு போய் 19 ரூபாய்க்கு விற்றுவிட்டு அசன்ஸால், பூரி ஆகிய இடங்களுக்கு சென்றார். பிறகு ஆந்திரா வந்தார். அங்கிருந்த குடும்ப நண்பர் வீட்டில் சுமார் ஒரு மாதம் தங்கியிருந்தார்.


அப்போதுதான் தனது மகனைப் பற்றிய விபரம் வெங்கட்ட நாயக்கருக்குக் கிடைத்தது. உடனே அவர் துணைக்குச் சில ஆட்களையும் அழைத்துக் கொண்டு எலூருக்கு சென்றார். தந்தை வந்தவுடன், ஹைதாபாத்திலிருந்த காஞ்சிபுரம், முதலியார் நண்பருக்கு தந்தி அனுப்பி நகைகளைக் கொண்டு வருமாறு கூறினார். அவரும் நகைகளை கொண்டுவந்து கொடுத்தார். நகைகளைப் பார்த்த நாயக்கருக்கு வியப்பு...

“அடே இத்தனை நாள் எப்படிடா சாப்பிட்டாய்?”


“அதுவா, நாம் ஈரோட்டில் எத்தனை பேருக்கு பிச்சை போட்டிருக்கிறோம். அதையெல்லாம் மொத்தமாக வசூல் பண்ணி சாப்பிட்டேன்”


ராமசாமி இப்படி பதில் சொன்னதும் நாயக்கருக்கு சிரிப்பும் துக்கமும் சேர்ந்து வந்தது. நகைகளை அணியச் சொல்லி, மகனை ஈரோட்டுக்கு அழைத்து வந்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT