ADVERTISEMENT

2022 ரீவைண்ட் : பிரதமரின் கான்வாய் முதல் மோர்பி பாலம் வரை

07:22 PM Dec 24, 2022 | praveenkumar@n…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மறிக்கப்பட்ட பிரதமர் கான்வாய்:
விவசாயிகளின் ஒரு வருடப் போராட்டம் நிறைவடைந்து சில மாதங்கள் கழித்து, பஞ்சாப் ஃபெரோஸ்பூரில் ஜனவரி 5ம் தேதி நடக்கவிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள அம்மாநிலத்திற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். இதற்காக பதிண்டா விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, மோசமான வானிலையின் காரணமாக, வான் வழியைத் தவிர்த்து சாலை மார்க்கமாக தனது கான்வாயில் புறப்பட்டார்.

ஃபெரோஸ்பூரில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள மேம்பாலத்திற்கு கான்வாய் வந்தபோது, அந்தப் பாதையில் சில விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதன் காரணமாக அங்குள்ள மேம்பாலம் ஒன்றில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பிரதமர் மோடி காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. குறிப்பாக அந்தப் பகுதி பாகிஸ்தான் எல்லையில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது மேலும் பதட்டத்தை அதிகரித்தது. இதனால் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு பாதியில் திரும்பிய பிரதமர் மோடி, “நான் பதிண்டா விமானம் நிலையம் வரை உயிருடன் திரும்பியதற்கு உங்கள் முதல்வரிடம் நன்றி சொன்னேன் என்று கூறுங்கள்” என ஆத்திரமாகக் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றதாக கூறப்பட்டது.

மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு என பல்வேறு தரப்பினரும் தெரிவித்த நிலையில், ‘இது பிரதமரைக் கொல்ல நடந்த சதி’ என்று பாஜக தலைவர்கள் பலரும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை குற்றம் சாட்டினர். பஞ்சாப் காங்கிரஸின் அன்றைய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, “பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி எதுவும் இல்லை. பிரதமர் ஹெலிகாப்டரில் செல்லும் திட்டம்தான் முதலில் இருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் அவர் சாலை வழியாகச் செல்ல இருப்பதாகத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. எனவே, இந்த விஷயத்தில் பாஜக அரசியல் செய்யக்கூடாது” எனவும், விவசாயிகள் தரப்பினர், பாஜகவினரைத் தடுக்கவே போராட்டம் நடத்தியதாகவும், பிரதமர் சாலைவழியாக வந்தது தங்களுக்குத் தெரியாது என்றும் தெரிவித்திருந்தனர்.

ஹிஜாப் விவகாரம்:
கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அதற்கு கண்டனம் தெரிவித்து அம்மாணவிகள் கல்லூரி வாசலில் போராடினர். இது மாநிலம் முழுக்க பரவ, மாணவர்களில் ஒரு பிரிவினர் தங்கள் கல்வி வளாகங்களில் காவித்துண்டு அணிந்து வரத் தொடங்கினர். மேலும், கல்வி வளாகங்களில் தேசியக் கொடியேற்றும் கொடிக்கம்பத்தில் காவிக் கொடியேற்றிய சம்பவங்களும் அரங்கேறின. கல்லூரி வளாகமொன்றில் இஸ்லாமிய மாணவியான முஸ்கான் கான் முன்பாக ‘ஜெய் ஸ்ரீராம்’ என மாணவர் கூட்டம் ஒன்று கோஷமிட அதற்கு எதிர்வினையாக அந்த மாணவி ‘அல்லாஹு அக்பர்’ என்று கோஷமிடும் காணொலி இணையத்தில் வைரலாகப் பரவியது. அதைத் தொடர்ந்து ஹிஜாப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் போராட்டங்கள் நாடு முழுவதும் பரவின. பல்வேறு கட்சித் தலைவர்களும் இதுகுறித்து தங்களது ஆதரவையும் எதிர்ப்பையும் பதிவு செய்தனர்.

இந்நிலையில், ஹிஜாபுக்கு கர்நாடக மாநில அரசு பிப்ரவரி 5 ஆம் தேதி தடை விதித்தது. கர்நாடக அரசின் உத்தரவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் அனைத்தும் மார்ச் 15 ஆம் தேதி அன்று உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஹிஜாப் அணிவது முஸ்லிம் சட்டத்தில் அத்தியாவசியமானது அல்ல. பள்ளிச் சீருடை விதிகளை மீறுவது சரியல்ல. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது.

கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு அக்டோபர் 13 ஆம் தேதியன்று தீர்ப்புகளை வழங்கியது. அதில், ஹிஜாப் தடைக்கு ஆதரவாக சுதான்ஷு துலியாவும் ஹிஜாப் தடைக்கு எதிராக ஹேமந்த் குப்தாவும் தீர்ப்பு வழங்கினர். மாறுபட்ட தீர்ப்பால் ஹிஜாப் வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

நுபுர் சர்மா சர்ச்சை:
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கியான்வாபி மசூதி சர்ச்சை தொடர்பாக பேசுகையில் நபிகள் நாயகத்தை விமர்சித்து பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளரான நுபுர் சர்மா பேசிய விவகாரம் கடந்த ஜூன் மாதம் சர்ச்சையாகி நாடெங்கும் இஸ்லாமியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

நுபுர் சர்மா மற்றும் அவரது கருத்தை ஆதரித்து ட்விட்டரில் பதிவிட்ட டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் நவீன் ஜிண்டால் ஆகியோர் மீது மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல பகுதி காவல்நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டன. நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். கான்பூர், ராஞ்சி உள்ளிட்ட சில இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறின. ராஞ்சியில் போலீசார் துப்பாக்கிச் சூட்டில் பத்தாம் வகுப்பு சிறுவன் மற்றும் ஒரு இஸ்லாமிய இளைஞர் பலியாயினர். இதன் தொடர்ச்சியாக நுபுர் சர்மாவின் கருத்தை ஆதரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக ஜூன் 21 ஆம் தேதி மராட்டிய மாநிலம் அமராவதியைச் சேர்ந்த மருந்துக் கடைக்காரர் உமேஷ் கோல்கேவும், ஜூன் 28 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் தொழிலாளி கண்ணையா லாலும் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டனர்.

அப்போதைய இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அரசுப் பயணமாக கத்தார் சென்றிருந்த போது கத்தார் இந்தியத் தூதரிடம் அந்நாடு இதுகுறித்து விளக்கம் கேட்டது இந்தியாவிற்கு தலைகுனிவாக அமைந்தது. மேலும் குவைத், ஈரான், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் கண்டனங்களையும் பெற்றுத் தந்தது. ஆஃப்கானிஸ்தான் தலிபான் அரசு கூட இந்தியாவுக்கு அறிவுரை கூறியது. ஒரு தீவிரவாத இயக்கம் தாக்குதல் நடத்துவோம் என எச்சரிக்கையும் விடுத்தது. இதனிடையே, நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டாலை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து பாஜக அறிவித்தது. அதுவரை தான் அவ்வாறு பேசவில்லை என்று கூறி மறுத்து வந்த அவர் பேசியதை ஒப்புக்கொண்டு பகிரங்க மன்னிப்பு கோரினார்.

நுபுர் சர்மா தன் மீதான அத்தனை வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவின் மீது கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், "நாட்டில் நடைபெறும் வன்முறைகளுக்கு இந்தப் பெண் ஒரு தனி நபராகக் காரணமாகியுள்ளார். அவர் நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கடுமையாகக் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்தாண்டு இறுதியில் கூகுள் வெளியிட்ட டாப் 5 தேடலில் தனிநபர் பட்டியலில் நுபுர் சர்மா அதிகம் பேரால் தேடப்பட்டு முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அக்னிபாத் திட்டம்:
கடந்த ஜூன் மாதத்தில் மத்திய அரசு அக்னிபாத் எனும் திட்டத்தைக் கொண்டுவந்து தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளிலும் தற்காலிக ஒப்பந்தப் பணியாக 4 வருட இராணுவப் பணியை அறிமுகப்படுத்தியது. அவர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுவார்கள் என்றும், 4 வருட முடிவில் அவர்களில் இருந்து 25 சதவீதத்தினர் மட்டுமே இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெரும் வன்முறை வெடித்தது. பல்வேறு இடங்களில் இளைஞர்கள் இரயில்களுக்குத் தீயிட்டுக் கொளுத்தினர். காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும், இத்திட்டத்தில் இருந்து பின்வாங்காத மத்திய அரசு அதன்பின் ஆட்சேர்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு முப்படைகளிலும் அக்னிவீரர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். இதனிடையே, அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. மேலும், 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட கூகுள் தேடலில் அக்னிபாத் முதலிடம் பெற்றுள்ளது.

5ஜி ஏலம்:
ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ், விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆக்மெண்டட் ரியாலிட்டி என வருங்கால உலகத்துக்கு தேவையான வேகம் அளிக்கக் கூடிய, 4ஜி-யை விட 10 மடங்கு அதிக வேகம் கொண்ட 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் இந்தாண்டு ஜூலை மாதம் நடந்தது. 7 நாட்களாக நடைபெற்ற ஏலத்தில் ரூ. 57,122 கோடிக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் ரூ. 18,699 கோடிக்கு பார்தி ஏர்டெல் நிறுவனமும் ரூ. 1,993 கோடிக்கு வோடஃபோன் ஐடியா நிறுவனமும், ரூ. 212 கோடிக்கு அதானி டேட்டா நெட்வொர்க் நிறுவனமும் 5ஜி அலைக்கற்றைகளை ஏலம் எடுத்தன. மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் இதில் பங்கேற்கவில்லை.

இந்த ஆண்டு மொத்தமாக 72 ஜிகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகள் 4.3 லட்சம் கோடிக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 51 ஜிகா ஹெர்ட்ஸ் மட்டும் 1.5 லட்சம் கோடிக்கு ஏலம் போனது. ஆனாலும் இது 2010 ஆம் ஆண்டு ஏலம் விடப்பட்ட 3ஜி-யை விட மூன்று மடங்கு அதிகம். ரூ. 78 ஆயிரம் கோடிக்கு ஏலம் விடப்பட்ட 4ஜி-யை விட இரு மடங்கு அதிகம்.

நாடு முழுவதும் 5ஜி சேவையை அக்டோபர் 1 முதல் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாட்டின் பெரிய தொலைதொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் மூலம் நாடு முழுவதும் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட 50 நகரங்களில் 5ஜி சேவை இதுவரை தொடங்கப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட்:
44 வது செஸ் ஒலிம்பியாட் தொடர் முதலில் ரஷ்யாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், ரஷ்ய-உக்ரைன் போர் காரணமாக செஸ் ஒலிம்பியாட்டை நடத்தும் வாய்ப்பு முதன்முதலாக இந்தியாவுக்குக் கிடைத்து. உலகின் மிகப்பெரிய செஸ் போட்டியை நடத்தும் உரிமையை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கியது. அதன்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த நிகழ்விற்கு என ரூ. 92 கோடி ஒதுக்குவதாகத் தெரிவித்தார். சர்வதேச செஸ் சம்மேளனம் (ஃபிடே), அகில இந்திய செஸ் சம்மேளனம் (ஏஐசிஃஎப்) மற்றும் தமிழக அரசு இணைந்து ரூ. 120 கோடி செலவில் இத்தொடரை நடத்தின.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘நம்ம செஸ் நம்ம பெருமை’ என்ற வரவேற்புப் பாடல் மற்றும் தொடரின் அதிகாரப்பூர்வ சின்னமான ‘தம்பி’ என்று அழைக்கப்படும் தமிழ் பாரம்பரிய வேஷ்டி, சட்டை அணிந்த குதிரை சிலை மூலமாக இந்தியா முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்டது.

ஜூலை 29-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ம் தேதி அன்று நிறைவு பெற்றது. 187 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,736 வீரர் வீராங்கனைகள் இந்தத் தொடரில் பங்கேற்று விளையாடினர். செஸ் ஒலிம்பியாடின் துவக்க விழா மற்றும் நிறைவு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இந்த ஒலிம்பியாட் தொடரில் ஒட்டுமொத்த சாம்பியனாக உக்ரைன் முதலிடத்தையும், அர்மேனியா இரண்டாமிடத்தையும், இந்தியா-2 அணி மூன்றாமிடத்தையும் பிடித்தன. போட்டியில் பங்கேற்க வந்த பல நாடுகளும் தொடரை மிகச்சிறப்பாக நடத்தியுள்ளதாகப் பாராட்டியதன் மூலம் உலகளவில் கவனம் பெற்றது. போட்டியைப் பார்வையிட வந்த, 2024 ஆம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் நடத்தவுள்ள ஹங்கேரி நாட்டுக் குழுவினர் இங்கு கற்றுக்கொள்ள நிறைய இருப்பதாகத் தெரிவித்தனர்.

வந்தே பாரத்:
இந்தியாவில் ரயில் சேவையை மேம்படுத்தும் வகையில் 75 நகரங்களை இணைக்கும்படி நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் பிப்ரவரி 17, 2019 ஆம் ஆண்டிலேயே முதன்முறையாக டெல்லி - வாரணாசி இடையே இயக்கப்பட்டது. 2வது வந்தே பாரத் ரயிலும் டெல்லி - வைஷ்ணவி தேவி வழித்தடத்தில் அந்த ஆண்டிலேயே இயக்கப்பட்டது. ஆனாலும், கொரோனா பரவல் காரணமாக அடுத்தடுத்த வழித்தடங்களில் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டு 2022 ஆண்டில்தான் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி காந்திநகர் - மும்பை இடையே 3வது வழித்தடத்திலும், அக்டோபர் 23 இல் இமாச்சலப்பிரதேசம் உனா - டெல்லி இடையே 4வது வழித்தடத்திலும், நவம்பர் 11 இல் சென்னை - மைசூர் இடையே 5வது வழித்தடத்திலும், பிலாஸ்பூர் - நாக்பூர் இடையே 6வது வழித்தடத்திலும் இயக்கப்பட்டது. 7வது வழித்தடமாக விசாகப்பட்டினம் - செகந்திராபாத் இடையே இயக்கப்பட உள்ளது.

சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப்.-இல் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அதிநவீன வசதிகளுடன் மணிக்கு 150 கி.மீ. வேகம் வரை செல்லக்கூடிய நாட்டின் அதிவேக ரயில் என்ற சிறப்பினைக் கொண்டிருந்தாலும், 2022 ஆம் ஆண்டில் அடிக்கடி கால்நடைகள் மீது மோதி முகப்பு பகுதி சேதம் அடைவதும், மறுபடி சீரமைக்கப்படுவதுமாக சர்ச்சையானது. ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் வரை கடந்த 6 மாதங்களில் மட்டும் விலங்குகள் மீது மோதி 68 முறை விபத்து ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தில் மத்திய அரசே தெரிவித்துள்ளது.

வந்தே பாரத் ரயில் உயர்தர எஃகு கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், ரயிலின் முன்பகுதி வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆனது. இந்த விபத்துகளால் எஞ்சின் பகுதிக்கு எந்தவித சேதமும் இல்லை எனவும், ப்ளாஸ்டிக் ஃபைபரால் ஆன முகப்பு மட்டுமே சேதம் அடைவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

2022 இல் நாட்டையே உலுக்கிய கொலைச்சம்பவங்கள்:
கேரள நரபலி:
கடந்த அக்டோபர் மாதம் வெளிவந்த, கேரளாவில் நடந்தேறிய நரபலி சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லா அருகே எலந்தூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத வைத்தியர் தம்பதி பகவல் சிங் மற்றும் லைலா. இவர்கள் முகமது ஷாஃபி என்கிற போலி மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த இரு பெண்களை துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுத்து அவர்கள் வீட்டிலுள்ள தோட்டத்தில் புதைத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா எர்ணாகுளத்தில் லாட்டரி விற்கும் வேலையைச் செய்து வந்தார். சில தினங்களாக தனது தாயை தொடர்பு கொள்ள முடியாத பத்மாவின் மகன் சேட்டு, கேரளா சென்று தனது தாயைக் காணவில்லை என்று கடந்த அக்டோபர் மாதம் அங்குள்ள காவல்நிலையத்தில் புகாரளித்தார். தொடக்கத்தில் சுணக்கம் காட்டிய கேரள போலீசார், சேட்டு தொடர்ந்து காவல்நிலையம் சென்று அழுத்தம் கொடுத்ததால் விசாரணையை துரிதப்படுத்திய நிலையில், அதிர்ச்சியூட்டும் இந்த நரபலி குறித்த தகவல்கள் வெளியாயின.

இதைத் தொடர்ந்து பகவல் சிங், லைலா மற்றும் ஷாஃபி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். காவல்துறையின் அடுத்தகட்ட விசாரணையில் மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக கேரள மாநிலம் கொச்சி காலடியைச் சேர்ந்த ரோஸ்லின் என்கிற பெண்ணையும் கடந்த ஜூன் மாதமே இம்மூவரும் நரபலி கொடுத்தது தெரியவந்தது. இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளியான போலி மந்திரவாதி முகமது ஷாஃபி மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளது என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஷ்ரத்தா கொலைவழக்கு: டெல்லியில் இளம்பெண் ஒருவர் தனது காதலனாலேயே கொலைசெய்யப்பட்டு 35 துண்டுகளாக வெட்டப்பட்டு பல்வேறு இடங்களில் வீசப்பட்ட சம்பவம் கடந்த நவம்பர் மாத இறுதியில் வெளியில் தெரியவந்து நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மகாராஷ்ட்டிராவைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஷ்ரத்தா வாக்கரும், அதே மாநிலத்தைச் சேர்ந்த அஃப்தாப் பூனவாலாவும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு ஷ்ரத்தாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இருவரும் புதுடெல்லிக்குச் சென்று தனியாக வசித்து வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்ளாமல் இவர்கள் வசித்து வந்த நிலையில், இவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது. கடந்த மே 18ம் தேதி இரவு ஏற்பட்ட சண்டையை அடுத்து, அஃப்தாப் ஷ்ரத்தாவை கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி, உடல் பாகங்களை வைப்பதற்காக புதிதாக ஃப்ரிட்ஜ் வாங்கி அதில் வைத்து ஒவ்வொன்றாக அப்புறப்படுத்தி உள்ளார்.

ஷ்ரத்தாவை காணவில்லை என அவரது தந்தை டெல்லி போலிசாரிடம் அளித்த புகாரின் பேரில் மேற்கொண்ட விசாரணையில், கொலை நடந்த ஆறு மாதங்களுக்கு பிறகு இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டெல்லி போலீசாரால் அஃப்தாப் கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கு நடந்து வருகிறது.

பிஎஃப்ஐ தடை:
கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்கு சொந்தமான நாடு முழுவதும் உள்ள 100-க்கும் மேற்பட்ட இடங்களில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆபரேஷன் ஆக்டோபஸ் என அழைக்கப்பட்ட இந்த மெகா சோதனையில், கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, அஸ்ஸாம், உத்தரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டு 106 பேர் கைது செய்யப்பட்டனர்.

‘எதிர்ப்பாளர்களின் குரலை நசுக்க அரசு விசாரணை அமைப்புகளை பயன்படுத்துகின்றது’ என இந்தச் சோதனை குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு குற்றஞ்சாட்டியிருந்தது. கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள அந்த அமைப்பின் தலைவரான ஓஎம்ஏ சலாம் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு விசாரணைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, ரெகாப் இந்தியா பவுண்டேஷன், ரெகாப் பவுண்டேஷன், கேம்பஸ் ஃபிரண்ட் ஆப் இந்தியா, அனைத்திந்திய இமாம் கவுன்சில், தேசிய மனித உரிமைகள் கூட்டமைப்பு, தேசிய மகளிர் ஃபிரண்ட், ஜூனியர் ஃபிரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேஷன் உள்ளிட்ட 8 இயக்கங்களுக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பி.எஃப்.ஐ மற்றும் தடைசெய்யப்பட்ட மற்ற அமைப்புகளின் அலுவலங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

மோர்பி தொங்கு பால விபத்து:
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் ஓடும் மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த நூற்றாண்டு பழமையான தொங்கு நடைபாலம் புனரமைப்பு பணிகள் முடிந்த 4 நாட்களிலேயே, அக்டோபர் 30 ஆம் தேதி, சத் பூஜைக்காக மக்கள் கூடிய பொழுது அறுந்து விழுந்ததில் 135 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். நாடு முழுவதும் இவ்விபத்து அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடி நேரில் சென்று ஆறுதல் கூறினார். எதிர்க்கட்சியினரும் இது தொடர்பாக தங்களது இரங்கலைத் தெரிவித்திருந்தனர். மோடியின் வருகைக்காக பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையில் இருக்கும் போதே மருத்துவமனையில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்ட நிகழ்வு விமர்சனத்துக்கு உள்ளானது.

மோர்பி பால விபத்து தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணையை மேற்கொண்ட நிலையில், குஜராத் அரசின் குளறுபடிகள் குறித்து சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க அறிவுறுத்தியதைத் தொடர்ந்து மாநில அரசின் சார்பில் ரூ. 8 லட்சமும் பிரதமர் நிவாரண நிதிலியிருந்து ரூ. 2 லட்சமும் சேர்த்து ரூ. 10 லட்சமாக அறிவிக்கப்பட்டது. இவ்வழக்கில் பாலத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட ஓரிவா நிறுவனத்தைச் சேர்ந்த 9 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த விபத்தில் தண்ணீரில் தத்தளித்த பலரையும் காப்பாற்றியதாகப் பாராட்டப்பட்ட காண்டிலால் அம்ருதியா டிசம்பர் மாதம் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் மோர்பி தொகுதியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் தாயார் மறைவு:
2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் போது தனது தாயாரான ஹீராபென்னிடம் ஆசீர்வாதம் வாங்க பிரதமர் மோடி சென்றதில் இருந்து ஹீராபென் நாடெங்கும் அறியப்பட்ட முகமானார். குஜராத் மாநிலம், மெசானா மாவட்டத்தில் உள்ள வத் நகரைச் சேர்ந்த ஹீராபென், காந்தி நகர் அருகிலுள்ள ரேசான் பகுதியில் வசித்து வந்தார். கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடி இருந்தார்.

டிசம்பர் 5 ஆம் தேதி நடந்து முடிந்த குஜராத் தேர்தலின்போது கூட ஹீராபென் சக்கர நாற்காலியில் உறவினர்கள் உதவியுடன் சென்று வாக்களித்தார். அதனைத் தொடர்ந்து ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 28 அன்று அகமதாபாத் யு.என்.மேத்தா இதய நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி டிசம்பர் 30 ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு காலமானார். அதைத் தொடர்ந்து குஜராத் விரைந்த பிரதமர் மோடி தனது தாயாரின் இறுதி ஊர்வலத்தில் அவரது உடலைச் சுமந்து சென்றார். பின்னர், காந்திநகரில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், மூத்த பாஜக தலைவர்கள் வெங்கையா நாயுடு, அத்வானி, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT