Skip to main content

உலகிலேயே பெண்களுக்கு மிக ஆபத்தான இடம் எது தெரியுமா???

Published on 28/11/2018 | Edited on 28/11/2018
women

 

 

 

கடந்த சில வருடங்களாக இந்தியாவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சுட்டிக்காட்டும் அளவில் குறைந்த எண்ணிக்கையில் நடக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 5 மாத குழந்தை முதல் 60 வயது முதியவர் வரை அனைவரும் பாலியல் வக்கிரங்களுக்கு ஆளாகின்றனர். பெண்களுக்கு அரணாகவும், பாதுகாப்பாகவும் இருக்கவேண்டிய ஆண்களே அதை செய்வது மிகவும் வெட்கமான, வருந்தத்தக்க, கேவலமான பொருள் (விஷயம்). பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் இந்தியாதான் என மார்தட்டிக்கொள்ளும் நிலையில்தான் இப்படியான அதிர்ச்சிகர தகவல் வெளிவந்துள்ளது. கடந்த 25ம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் நாள் கடைபிடிக்கப்பட்டது. அப்போது ஐ.நா. சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான ஒரு ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டது. அதில் சற்றும் எதிர்பார்த்திராத அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. 
 

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல், இந்தியாவில் வரதட்சணை கொடுமை காரணமாக நிகழும் கொலைகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கடந்தாண்டு 87 ஆயிரம் பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 50 ஆயிரம் பேர் கணவன் அல்லது குடும்ப உறுப்பினர்களாலேயே கொல்லப்பட்டுள்ளனர். அதன்படி பார்த்தால் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 6 பெண்கள் கொலை செய்யப்படுகின்றனர். 
 

கடந்த 2016ம் ஆண்டு, இந்தியாவில், பெண்கள் கொல்லப்பட்ட சதவீதம் 2.8 சதவீதமாக இருந்ததுள்ளது. ஏனைய நாடுகளை விடவும் இது அதிகமாகும். இந்தியாவில் 15 வயது முதல் 49 வயது வரையிலான பெண்களில், 33.5 சதவீதம் பேர் தங்களின் வாழ்நாளில் ஒரு முறையாவது உடல்ரீதியான பாலியல் சித்திரவதை செய்யப்படுகின்றனர். இது, கடந்தாண்டு 18.9 சதவீதமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லை, வரதட்சணையால் ஏற்படும் இறப்புகள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் தெரியவந்துள்ளது. மேலும் உலகிலேயே பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடம் வீடுதான் என்ற யாரும் எதிர்பார்த்திராத அதிர்ச்சிகரமான தகவலும், இதன்மூலம் வெளிவந்துள்ளது.  உலகளவில் கணவர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கையானது ஒரு லட்சம் பெண்களுக்கு 1.3 சதவீதமாக உள்ளது. இந்தியா நவீனமயமாகிவருகிறது, பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டுவருகிறது, பெண்கள் வெளிவர தொடங்கிவிட்டனர். மத சடங்குகள், சம்பிரதாயங்கள், வரதட்சணையெல்லாம் இன்னும் முழுமையாக ஒழியவில்லை என்பதை உணர்த்தும் விதமாக இந்த அறிக்கை உள்ளது.

 

 

 

Next Story

சகோதரிகள் இருவரை 5 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
 Police arrested 4 people for misbehaving with two sisters

அருப்புக்கோட்டை - கல்லூரணியைச் சேர்ந்த பெண் ஒருவர், அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், ‘என்னுடைய தங்கை,  அருப்புக்கோட்டை பெர்கின்ஸ்புரத்தில் வசித்து வருகிறார். நாங்கள் இருவரும் குறிஞ்சாங்குளத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில், எனது சம்பளப் பணத்தை வாங்குவதற்காக அருப்புக்கோட்டையில் உள்ள என்னுடைய தங்கை வீட்டிற்குச் சென்றபோது, எங்களுக்கு அறிமுகமான ராஜ்குமார் என்பவர் எங்களிடம், ‘உங்க மாமாவுக்கு ஆக்ஸிடன்ட் ஆயிருச்சு.’ என்று கூறி, எங்களை அழைத்துக் கொண்டு வாழ்வாங்கி காட்டுப் பகுதிக்கு கூட்டிச் சென்றார்.  அங்கு  மறைந்திருந்த  நான்கு பேரும், ராஜ்குமாரை தாக்குவது போல் தாக்கி, அவர் கண் முன்னே எங்கள் இருவரையும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர்.’  எனக் குறிப்பிட்டிருந்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். டிஎஸ்பி ஜெகந்நாதன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்ட காவல்துறையினர், இளம் பெண்களை அழைத்துச் சென்று விசாரணை  நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, சேதுராஜபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 24) என்பவரைப் பிடித்து விசாரித்தபோது, ராஜ்குமாரும், இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மற்ற நான்கு பேரும் கூட்டாளிகள் என்பதும், அதிலொருவன் 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து ராஜ்குமார் அளித்த தகவலின் அடிப்படையில், அந்த 17 வயது சிறுவன், ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் (வயது 26), சூரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலாஜி (வயது 26) மற்றும் இளம் பெண்களை அழைத்துச் சென்ற ராஜ்குமார்(24) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். தலைமறைவான பந்தல்குடியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞரைத் தேடி வருகின்றனர்.

Next Story

துக்க வீட்டிற்கு வந்த பெண்களுக்கு நேர்ந்த சோகம்; திட்டக்குடியில் பரபரப்பு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Six women were injured in an electric shock at a funeral home and were admitted to hospital

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கீழ் செறுவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயது முருகானந்தம். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஒரு விபத்தில் மரணமடைந்தார். அவரது உடலைச் சொந்த கிராமமான கீழ் செறுவாய் கிராமத்திற்கு அவரது உறவினர்களால் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக பிரீசர் பாக்ஸில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இறந்து போன முருகானந்தம் உடலுக்கு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்த வருகை தந்தனர். அவர்களில் சிலர் சவப்பெட்டியை சுற்றிலும் நின்று கொண்டு ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்தனர். அப்போது சவப்பெட்டியில் இருந்து மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை யாரும் எதிர்பாராத நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் கனகவல்லி, ராஜாம்பாள், லலிதா, கௌரி, மகேஸ்வரி, கருப்பாயி உட்பட ஆறு பேர் காயமடைந்தனர்.

உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களுக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். துக்கம் விசாரிக்க வந்த இடத்தில் சவப்பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக பெண்கள் படுகாயம் அடைந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.