Skip to main content

81 வயதில் பிரதமர்... 4 வருடத்துக்கு ஒருமுறை பிறந்தநாள்! - தேசாய் எனும் மாமனிதன்!

Published on 10/04/2021 | Edited on 10/04/2021

 

fghj

 

1977ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதி இந்தியாவுக்கு மிக முக்கியமான நாள். சுதந்திரம் அடைந்த 30 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த தலைவர்கள் தொடர்ச்சியாக பிரதமர் நாற்காலியை அலங்கரித்து வந்த நிலையில், இதோ நான் இருக்கிறேன், நீங்கள் விலகுங்கள் என்று அரியணையில் ஏறினார் ஒருவர். அவர் பிறந்த இடம் வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம், வளர்ந்த இடம் கூட வளம் இல்லாமல் சராசரியாக இருக்கலாம். ஆனால், அவரின் நேர்மை இன்றளவும் இந்திய அரசியல்வாதிகளிடம் இருக்கிறதா என்றால் அதற்கு நம்மிடம் சரியான பதில் இருக்காது. ஆம், நேர்மையின் மறுஉருவம் அவர், அவர் வேறு யாரும் அல்ல காங்கிரஸ் கட்சியை முதன்முதலாக கூப்பில் அமர வைத்து, ஜனதா கட்சியன் சார்பாக இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற மொரார்ஜி தேசாய்தான் அவர். 

 

நேர்மையை அவரிடம் பிரதானப்படுத்த என்ன இருக்கிறது என்று கூட சிலர் கேட்கலாம், அதற்கு வலிமையான காரணம் இருக்கிறது. முன்பு ஒருமுறை அவர் பம்பாய் மாகாணத்தின் அமைச்சராக இருந்தபோது, அவரின் மகள் மருத்துவம் படித்துக்கொண்டிருந்தார். ஒரு பாடத்தில் அவர் தோல்வி அடையவே, அவரின் மகள் மீண்டும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க தயாரானார். இதற்காக தன் தந்தையிடம் அனுமதி கேட்டார். ஆனால் அவர் உடனடியாக மறுத்துவிட்டார். தான் அமைச்சராக இருப்பதால் மகளுக்கு சலுகை காட்ட வாய்ப்பிருப்பதாக அடுத்தவர்கள் நினைப்பார்கள் என்று கூறி மகளின் கோரிக்கையை நிராகரித்தார். இதனால் வருத்தமடைந்த அவரின் மகள் தற்கொலை செய்துகொண்டார். தேசாயின் நேர்மைக்கு இது ஒன்றே போதுமான சாட்சியாக இருக்கும்.

 

தேசாய் அரசியல் வாழ்க்கை என்பது நேரு, காந்தி காலத்தில் ஆரம்பித்தது. நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரரான அவர், எமர்ஜென்சியின்போது ரகசிய சிறையில் அடைக்கப்படார். கிட்டதட்ட 18 மாதங்கள் அவர் சிறையில் இருந்தார். 1977ஆம் ஆண்டு ஜனவரியில் அவர் வெளியே வருகிறார், மார்ச் மாதம் பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார் என்றால், அவர் சிறையிலும் அரசியல் செய்யாமல் இல்லை. அவர் பிரதமராக இருந்த அந்த இரண்டு ஆண்டுகள் பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை நிறைவேற்றினார். இன்றைக்கு குறைந்த விலையில் உணவு என்று எல்லா மாநிலங்களும் போட்டி போட்டுக்கொண்டு திட்டங்களை அறிவிப்பதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் தேசாய் என்றால் அது மிகையல்ல. ஒரு ரூபாய்க்கு ஜனதா சாப்பாடு என்ற திட்டத்தை அவர் கொண்டு வந்தார். அப்படி சாப்பாடு தர முடியாத ஓட்டல்களுக்கு அங்கீகாரம் தர முடியாது என்று அறிவித்தார். 

 

தங்கத்தின் விலையைக் குறைக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். வரதட்சணை என்ற வார்த்தையே அவருக்குப் பிடிக்காது. தான் கலந்துகொள்ளும் திருமணங்களில் வரதட்தணை கொடுக்கப்பட்டதாக தகவல் தெரிந்தாலே அந்த திருமணத்துக்கு செல்லாமல் தவிர்த்துவிடுவாராம். ஒருமுறை அவர் தமிழகம் வந்தபோது ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் செய்ய முடிவெடுத்து சென்றுள்ளார். 5 ரூபாய் கட்டணம் கட்டி வரிசையில் நின்றே அவர் சாமி தரிசனம் செய்துள்ளார். தன்னுடைய பதவியை தனக்கான லாப நோக்கத்திற்காக அவர் எப்போதும் பயன்படுத்தியதில்லை. இதனால்தான் என்னவோ நம்முடைய எதிரி நாடாக கருதப்படும் பாகிஸ்தான் கூட, அந்நாட்டின் மிக உரிய விருதான நிஷான்- இ - பாகிஸ்தான் விருதினை அவருக்கு அளித்து கவுரவப்படுத்தியுள்ளது. இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்றிருக்கிறார்.  

 

பாகிஸ்தான் மற்றும் இந்திய அரசுகளின் உரிய விருதுகளைப் பெற்ற இந்தியாவின் ஒரே முன்னாள் பிரதமர் என்றால் அது தேசாய் மட்டுமே. இதைவிட அவருக்கு வேறு ஒரு சிறப்பு இருக்கிறது. அவர் தன்னுடைய பிறந்தநாளை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் கொண்டாடுவார். ஏனென்றால் அவர் பிப்ரவரி 29ஆம் தேதி பிறந்தவர். தன்னுடைய 98 வயது வாழ்க்கையில் 25 முறை கூட அவர் பிறந்தநாள் கொண்டாடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தால் என்ன, அவர் சாதனைகள் இன்றளவும் கொண்டாடப்பட்டுக் கொண்டே இருக்கிறதே! இன்று அவரின் நினைவு நாள் என்பது கூடுதல் சிறப்பு.

 

 

Next Story

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
CM MK Stalin Thanks for Former PM Manmohan Singh

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 54 பேர் இன்று (03.04.2024) ஓய்வு பெறுகின்றனர். அவர்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒருவர் ஆவார். இதன் மூலம் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இவருடன் 9 மத்திய அமைச்சர்களும் ஓய்வு பெறுகின்றனர். கடந்த 1991 ஆண்டு அக்டோபர் மாதம் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 2019 ஆண்டில் இருந்து தற்போது வரை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார்.

மன்மோகன் சிங் இந்தியாவின் 14 ஆவது பிரதமராக கடந்த 2004 ஆம் ஆண்டு பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராக பதவி வகித்து வந்தார். முன்னதாக, இவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், கடந்த 1991 ஆண்டு முதல் 1996 வரையிலான முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அதே சமயம் மன்மோகன் சிங் ஓய்வைத் தொடர்ந்து, அந்த காலியிடத்திற்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். சோனியா காந்தி முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நன்றி தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “அன்புள்ள முனைவர் மன்மோகன் சிங் அவர்களுக்கு, கடந்த 33 ஆண்டுகளாக மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினராக தேசத்திற்கு நீங்கள் செய்த அளப்பரிய சேவைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் எனது சார்பிலும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பதவிக் காலம் முழுவதும், பணிவு, புத்திசாலித்தனம் மற்றும் அரசியல் திறன் ஆகியவற்றின் அரிய கலவையை நீங்கள் வெளிப்படுத்தியுள்ளீர். அரசியல் பயணம் முழுவதும் மரியாதை மற்றும் பாராட்டைப் பெற்றீர்கள். உங்கள் தலைமைத்துவம், குறிப்பாக சவாலான காலங்களில், நான் உட்பட பலருக்கு உத்வேகம் அளித்தது. உங்கள் வாழ்க்கையின் புதிய கட்டத்திற்கு நீங்கள் மாறும்போது, இந்திய நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் உங்கள் மகத்தான பங்களிப்பில் நீங்கள் பெருமிதம் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

CM MK Stalin Thanks for Former PM Manmohan Singh

தி.மு.க. சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும், உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் நிறைவாக இருக்க வாழ்த்துகிறேன். உங்கள் அறிவாற்றல் மற்றும் தொலைநோக்குப் பார்வை மூலம் எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஓய்வு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Former Prime Minister Manmohan Singh retires

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 54 பேர் இன்று (03.04.2024) ஓய்வு பெறுகின்றனர். அவர்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒருவர் ஆவார். இவருடன் 9 மத்திய அமைச்சர்களும் ஓய்வு பெறுகின்றனர். இதன் மூலம் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

கடந்த 1991 ஆண்டு அக்டோபர் மாதம் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 2019 ஆண்டில் இருந்து தற்போது வரை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். 

மன்மோகன் சிங் இந்தியாவின் 14 ஆவது பிரதமராக கடந்த 2004 ஆம் ஆண்டு பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராக பதவி வகித்து வந்தார். முன்னதாக இவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், கடந்த 1991 ஆண்டு முதல் 1996 வரையிலான முன்னாள் பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

அதே சமயம் மன்மோகன் சிங் ஓய்வைத் தொடர்ந்து, அந்த பதவிக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். சோனியா காந்தி முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.