Skip to main content

பரோட்டா மாஸ்டர் பகீர் சுருட்டல்! ரிட்டயர்டு ஊழியர்களுக்கு வலைவீச்சு;சேலத்தில் தொடரும் நூதன மோசடி!

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

சேலத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை குறி வைத்து, நூதன முறையில் நிதி மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. பள்ளிப்படிப்பைக்கூட முடித்திடாத பரோட்டா மாஸ்டர் ஒருவர், அதிக வட்டி வருவதாக ஐந்நூறுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் 3 கோடி ரூபாய் வரை சுருட்டியிருப்பதன் மூலம், மோசடி கும்பலின் வண்டவாளங்கள் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

சேலம் பெரிய கொல்லப்பட்டி முல்லை நகரைச் சேர்ந்த முனியம்மாள் (46) என்பவர் ஜூலை 15ம் தேதி, சேலம் மத்திய குற்றப்பிரிவில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், ''சேலம் கோரிமேடு அன்பு நகரைச் சேர்ந்த கண்ணன் (34), பெரமனுரைச் சேர்ந்த ஜான்சன் (71) ஆகியோர் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே திருமலை டிரேடர்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். அதில், ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 121 நாள்களில் ஒன்றரை லட்சம் ரூபாயாக திருப்பி வழங்கப்படும் என்று உறுதிமொழி அளித்தனர். 

cheating


அதை நம்பி நானும், குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து 15.85 லட்சம் ரூபாய் முதலீடு செய்தோம். உறவினர்கள் சிலரையும் இந்த நிறுவனத்தில் உறுப்பினராக சேர்த்துவிட்டு, அவர்கள் மூலம் 85 லட்சம் ரூபாய் முதலீடு செய்தோம். ஆனால் முதிர்வுக்காலம் முடிவடைந்த பிறகும் கண்ணனும், ஜான்சனும் அசல் மற்றும் வட்டித்தொகையை திருப்பித் தராமல் மோசடி செய்து விட்டனர்,'' என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், கண்ணனையும், ஜான்சனையும் அன்றைய தினமே அதிரடியாக தூக்கி வந்து விசாரித்தனர். ஆரம்பத்தில் அப்படி எல்லாம் எந்த மோசடியும் செய்யவில்லை என்று மறுத்துள்ளனர். ஜான்சனோ, ''நான் ஒரு உண்மையான கிறிஸ்தவன். ஆண்டவர் கிறிஸ்துவுக்கு பயப்படுபவன். நான் ஒருபோதும் இந்த மாதிரியான மோசடிகளை செய்ய மாட்டேன்,'' என்று பரிசுத்த ஆவியின் பெயரில் சத்தியம் செய்தாராம். இருவரிடமும் காவல்துறையினர் தங்கள் பாணியில் 'பக்குவமாக' விசாரித்த பிறகுதான், 3 கோடி ரூபாய்க்கு மேல் அவர்கள் சுருட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. 

cheating


இருவரின் பின்னணி குறித்து நாம் களத்தில் இறங்கி விசாரித்தோம்.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியான கண்ணன், எட்டாம் வகுப்பைக்கூட தாண்டாதவர். இவருடைய பூர்வீகம், மதுரை மாவட்டம் சோழவந்தான். தற்போது சேலத்தில் செட்டில் ஆகிவிட்டார். அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி நிதி மோசடியில் ஈடுபடும் பாலபாடத்தை இவருக்குக் கற்றுக்கொடுத்ததும், இன்னொரு பகாசூர மோசடி பேர்வழியான சிவக்குமார்தான்.

 

cheating


'மோசடி மன்னன் சிவக்குமார்' என்று அவரின் லீலைகள் குறித்து நக்கீரன் இதழிலும், நக்கீரன் இணையத்திலும் ஏற்கனவே விரிவாக எழுதியிருக்கிறோம். அதன்பிறகே அவரால் ஏமாந்த பலர் புகார் கொடுக்க ஆர்வமாக முன்வந்தனர். 72 கோடி ரூபாய் சுருட்டி விட்டதாக அவர் மீது புகார்கள் எழுந்து, விசாரணையில் உள்ளது.

வின்ஸ்டார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்து வந்த கண்ணன், குருவின் வழியிலேயே கடந்த 2016ம் ஆண்டு சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில், திருமலை டிரேடர்ஸ் குரூப் ஆப் கம்பெனீஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த நிறுவனத்துக்கு கண்ணன் நிர்வாக இயக்குநர். இரண்டாவது குற்றவாளியான ஜான்சன், பொது மேலாளர். இவர், கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆரம்பத்தில் நிலத்தின் மீதான முதலீடு என்று சொல்லித்தான் முதலீடுகளை திரட்டி உள்ளனர். 

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள்தான் இந்த கும்பலின் முதல் இலக்கு. ஏனெனில், அவர்கள் ஓய்வு பெறும்போது கிடைக்கும் பி.எப்., கிராஜூட்டி தொகையை கொத்தாக தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ய வைப்பதை ஓர் உத்தியாகவே செயல்பட்டு வந்துள்ளனர். இதற்காகவே அவர்களிடம் டெலிபோனில் குழைந்து குழைந்து பேச முப்பதுக்கும் மேற்பட்ட இளம்பெண்களை பணியில் அமர்த்தியுள்ளனர். ஒரு லட்சம் ரூபாய் முதலீடு திரட்டி கொடுத்தால் 5000 ரூபாய் கமிஷன் கிடைக்கும் என்பதால், இளம்பெண்கள் எப்படியாவது பேசி பணத்தைக் கறப்பதில் ஆர்வமாகச் செயல்பட்டுள்ளனர்.
 

ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் பத்தாவது மாதத்தில் ஒன்றரை லட்சம் ரூபாயாக பெற்றுக்கொள்ளலாம். இத்தொகையை மாதந்தோறும் தலா 15 ஆயிரம் ரூபாயாக தவணை முறையில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் வாக்குறுதி அளித்துள்ளனர். பெற்றுக்கொள்ளும் தொகைக்கு வெற்றுக்காசோலைகள் மற்றும் ஒரு ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி அதில் கண்ணன் கையெழுத்திட்ட ரசீது ஒன்றையும் கொடுத்துள்ளார். நிறுவனம் தொடங்கிய இரண்டு ஆண்டுகள் வரை சொன்னபடி பலருக்கு பணத்தையும் திருப்பிக் கொடுத்துள்ளனர். ஆனால், கடந்த ஆறு மாதத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இதுவரை பத்து பைசா கூட பணம் வரவில்லை என்று நெஞ்சு நெஞ்சாக அடித்துக்கொண்டு புலம்பித்தவிக்கின்றனர், பணத்தை பறிகொடுத்தவர்கள்.

பத்து மாதத்தில் முதலீட்டு தொகையை எப்படி ஒன்றரை மடங்காக திருப்பிக் கொடுக்க முடியும் என்றும் விசாரித்தோம். 

கோரிமேடு, கருப்பூர், பேளூர் ஆகிய இடங்களில் ஆடு, மாடு, கோழிப்பண்ணைகள் வைத்திருப்பதாகவும், காமலாபுரம், ஓமலூர் பகுதிகளில் வீட்டுமனைகளில் முதலீடு செய்திருப்பதாகவும், கணிசமான தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பதாகவும் அவற்றில் இருந்து கிடைக்கும் லாபத்தில் இருந்து முதலீட்டாளர்களுக்கு பணத்தைக் கொடுத்து வருவதாகவும் பலரையும் நம்ப வைத்துள்ளனர் கண்ணனும், ஜான்சனும். ஆனால் அவர்கள் குறிப்பிட்ட மூன்று இடத்திலும் பெயரளவுக்கு நாட்டு  மாடு, ஆட்டுப்பண்ணைகள் வைத்துவட்டு, ஒரே மாதத்தில் அவற்றை காலி செய்திருப்பதும் தெரிய வந்தது. 

இதையடுத்து நாம் இந்நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த சிலரிடமும் நேரில் பேசினோம்.

சேலம் கோரிமேட்டைச் சேர்ந்த பெஞ்சமின் (74), ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். அவர் நம்மிடம், ''எனக்குத் தெரிந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பலர், கண்ணன் நடத்தி வந்த திருமலை டிரேடர்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து, அதன்மூலம் லாபமும் அடைந்திருந்தனர். அதை நம்பி நானும் இந்த நிறுவனத்தில் 2 லட்சம் முதலீடு செய்தேன். அத்தொகையை பெற்றுக்கொண்டகற்கு அத்தாட்சியாக 20 ரூபாய் பத்திரத்தில் எழுதியும் கொடுத்தனர். 

என் மகன் சத்ய ஜீசஸ் ராஜன் பலரிடம் கடன் வாங்கியும், மனைவியின் நகைகளை அடகு வைத்தும் 15 லட்சம் முதலீடு செய்தார். பேரனும் 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்திருந்தார். இப்படி திடீரென்று பணத்தை தராமல் கண்ணன் இழுத்தடித்து வருகிறார். ஒவ்வொரு முறை நாங்கள் கேட்கும்போதும், ஏதாவது ஒரு தேதியைக் குறிப்பிட்டு வாய்தா கேட்பாரே தவிர பணத்தைத் தந்ததில்லை. இதனால் நாங்கள் பணத்தைத் தொலைத்தது மட்டுமின்றி, குடும்பத்தின் நிம்மதியையும் தொலைத்து  விட்டோம்,'' என்று புலம்பினார்.

திருமலைகிரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சிவில் சப்ளைஸ் துறை ஊழியர், தனக்குக் கிடைத்த ஓய்வுக்கால பணப்பலன்கள், உறவினர்களிடம் பெற்ற தொகை என மொத்தமாக 41 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். இன்னும் அவருக்கு சல்லிக்காசுகூட கிடைத்தபாடில்லை என்கிறார்கள் சக முதலீட்டாளர்கள். கருப்பூர் ராஜன் (50) என்பவர் 3 லட்சம், ஆத்துக்காடு ஜெயராமன் (65) என்பவர் 2 லட்சம் ரூபாய், கோரிமேடு சம்பூர்ணம் 15 லட்சம் ரூபாய் என இந்த பட்டியல் நீள்கிறது. திருமலை டிரேடர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவர் தன் தாய்மாமகன்களிடம் பெற்றது, தனது சேமிப்புப்பணம் என 5 லட்சத்தை முதலீடு செய்துவிட்டு கண்ணீரும் கம்பலையுமாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்திருந்தார். 

மோசடி தொகையின் மூலம் கண்ணன் மதுரையில் சில இடங்களில் நிலங்களாக வாங்கிப் போட்டிருப்பதாகச் சொல்கிறது ஒரு தரப்பு. பொது மேலாளர் ஜான்சன், பெங்களூருவில் வசிக்கும் தன் மூத்த மகனுக்கு சொகுசு பங்களா, கடைசி மகனுக்கு சொகுசு கார் வாங்கிக் கொடுத்திருப்பதாகவும் சொல்கின்றனர். 
 

money

சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சதீஸிடம் கேட்டபோது, ''கண்ணன், பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்திருக்கிறார். அந்த அனுபவத்தில் திருமலை ஹோட்டல் என்ற பெயரில் சின்னதாக ஒரு உணவகம் நடத்தி வந்தார். பின்னர் நிதி நிறுவனம் தொடங்கி, அதிக வட்டி கொடுப்பதாகக்கூறி முதலீடுகளை திரட்டி இருக்கிறார். ஆரம்பத்தில் பத்து மாதங்களில் முதலீட்டு தொகையைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு அதிகமாக தருவதாகச் சொல்லி இருக்கிறார். ஆனால் சொன்னபடி முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

அதனால் அதிக முதலீடுகளை திரட்டுவதற்காக 100 நாள்களில் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி, பணத்தை திரட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. கண்ணன், ஜான்சன் ஆகியோர் மீது இதுவரை 15 பேர் புகார் அளித்துள்ளனர். அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம். இருவரும் 3 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்திருக்கலாம் இருக்கலாம் எனத் தெரிகிறது. விரைவில் இருவரையும் கஸ்டடி எடுத்து விசாரிக்க உள்ளோம். அப்போதுதான் எவ்வளவு தொகை ஏமாற்றி இருக்கிறார்கள், எங்கெங்கு சொத்துகள் வாங்கியுள்ளனர் என்பது தெரிய வரும்,'' என்றார். 
 

இதுகுறித்து தேசிய மக்கள் உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலின் மாவட்டத் தலைவர் சந்திரசேகர் கூறுகையில், ''இதுபோன்ற நிதி மோசடிகள் சேலத்தில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மக்களின் அறியாமை, மோசடி கும்பலின் வாய்ஜாலங்கள், எல்லாவற்றுக்கும் மேல் காவல்துறையின் ஒத்துழைப்பு ஆகிய காரணங்களால்தான் மோசடி கும்பல் மக்களின் பணத்தை வாரிச்சுருட்டிவிட்டு தலைமறைவாகி விடுகின்றனர்.

cheating


மோசடி மன்னன் வின்ஸ்டார் சிவக்குமாரிடம் இருந்து 'தொழில்' கற்றுக்கொண்ட கண்ணன், இப்போது பணத்தை வசூலித்துக்கொண்டு கம்பி நீட்டிவிட்டார். சிவக்குமாரிடம் பயிற்சிபெற்ற மற்றொரு ஊழியர் குறிஞ்சிநாதன் என்பவர் நகைக்கடை என்ற பெயரில் 100 கோடி ரூபாய் மோசடி செய்தார். 

இதே மாதிரி சேலத்தில் இன்னொரு மோசடி நடந்து கொண்டிருக்கிறது. அதுபற்றி காவல்துறையிடம் வாய்மொழியாக புகார் அளித்தேன். அவர்களோ சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு 'ஃபார்மல் விசிட்' செய்து விட்டு வந்துவிட்டனர். மோசடி நடந்திருப்பதாக யாராவது புகார் அளித்தால்தான் நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்லி காவல்துறை தப்பித்துக் கொள்ளும் வரை இன்னும் நூற்றுக்கணக்கான சிவக்குமார்களும், கண்ணன்களும் முளைத்துக்கொண்டுதான் இருப்பார்கள்,'' என்று கடுமையாக சாடினார். 

வின்ஸ்டார் நிறுவனம் 72 கோடி மோசடி, காயின் டோனா நிறுவனம் 30 கோடி மோசடி, திருமலை டிரேடர்ஸ் 3 கோடி மோசடி என புதுப்புது பெயர்களில் மோசடி மன்னர்கள் முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள். பேராசைக்காரர்களும், ஏமாளிகளும் இருக்கும் வரையிலும் இதுபோன்ற மோசடிகளும் முற்றுப்பெறப் போவதில்லை.

 

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.