Skip to main content

"எனக்கு மோகன் மாதிரி மாப்பிள்ளை வேண்டும்" - 80களின் பெண்களை பித்துப் பிடிக்கவைத்தவர்! 

 

actor mohan

 

'மைக்' மோகன், தமிழ் சினிமாவில் 80களில் ரஜினி, கமல் என்ற இரண்டு துருவங்களைத் தாண்டி தமிழ் மக்களின் கண்களில் பட்ட நாயகன். வெள்ளி விழாக்களை சில ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்திருந்தார் என்று கூட சொல்லலாம். நடித்த படங்களில் தொண்ணூறு சதவிகிதத்துக்கும் மேல் மிகப்பெரிய வெற்றிப்படங்கள்தான். 

 

மோகன், கர்நாடகாவைச் சேர்ந்தவர். இவரை திரையில் முதலில் அறிமுகம் செய்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவரது இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1977ஆம் ஆண்டு வெளியான 'கோகிலா' என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார் மோகன். அதன் பின் தமிழில் இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான 'நெஞ்சத்தை கிள்ளாதே' படத்தில் அறிமுகமானார். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய, மோகன் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பெற்றார். அதனைத் தொடர்ந்து வெளியான 'கிளிஞ்சல்கள்' 250 நாட்களுக்கு மேல் ஓடியது. வெற்றிக்காத்து பலமாக வீச பயணங்கள் முடிவதில்லை, உதய கீதம், கோபுரங்கள் சாய்வதில்லை, விதி ஆகிய படங்கள் தொடர்ந்து வெற்றியடைந்தன. இவரது படங்களில் பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன. பட்டி தொட்டியெங்கும் ஹிட் என்பது இவர் காலத்தில் உருவானதே. அந்தக் காலத்தில், காதல் தோல்வியடைந்தவர்களுக்கு இவரது பாடல்களும், டி.ஆர் பட பாடல்களும் பெரும் வரமாக இருந்தன.   

mike mohan

 

'மைக்' மோகன் என்று இவருக்கு பெயர் வர காரணம், இவர் நடித்த படங்களில் மைக் வைத்துக்கொண்டு பாடல் காட்சிகளில் பாடுவார். பெரும்பாலும் பாடகராகத்தான் நடித்தார். அது ஒரு சென்டிமெண்ட்டாகக் கூட கருதப்பட்டது. இவர் நடித்த முக்கால்வாசிப்படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்துள்ளார். மோகன், பாலு மகேந்திரா தன்னை அறிமுகம் செய்ததால் அவரை தனது  மானசீக குருவாக கருதினார். 1984ஆம் ஆண்டு, ஒரு நடிகருக்கு இவ்வளவு திரைப்படம் வருமா என்று ஆச்சரியம் அடையும் அளவிற்கு மோகனுக்கு 19 படங்கள் வெளியாகின. அதில் அவர் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்த நூறாவது நாளும் ஒன்று.

 

இவரின் நடிப்பைக் கண்டு அந்தக் கால பெண்கள் இவருக்கு தீவிர ரசிகைகளாக இருந்தனர். இவர் தேர்ந்தெடுக்கும் கதையெல்லாம் காதல் மற்றும் குடும்பம் சார்ந்ததாகவே இருக்கும். 1986ஆம் ஆண்டு ஒன்பது படங்களில் மோகன் நடித்தார் அதில் இரண்டு படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. ஒன்று மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'மௌன ராகம்', இன்னொன்று, ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான 'மெல்லத்திறந்தது கதவு' திரைப்படம். இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இந்தப் படத்துக்கு இளையராஜா, எம்.எஸ்.வி என்று இரு இசை ஜாம்பவான்களும் இசையமைத்தனர்.

 

மோகனின் நடிப்பையும், நிஜ வாழ்வில் அவர் நடத்தையையும் கண்டு பல நடிகைகளின் அம்மாக்கள் தங்கள் மகளை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டுள்ளார்களாம். தமிழகத்தில் அந்த காலகட்டத்தில் பெண்கள், தங்களுக்கு மோகன் போன்ற மாப்பிள்ளை வேண்டுமென்றும், ஆண்கள், மோகன் போன்ற தோற்றத்தையும் அவரது உடை பாணியையும் பின்பற்ற முயன்று வந்தனர். தனது படங்களிலெல்லாம் பாடகராகவே தோன்றிய மோகனுக்கு, படங்களில் வெளிப்பட்ட குரல் அவரது குரல் இல்லை. இவருக்கு அனைத்து படங்களுக்கும் நடிகர் விஜயின் மாமாவும் பாடகருமான எஸ்.என்.சுரேந்தர் குரல்கொடுத்துள்ளார், பெரும்பாலான பாடல்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் வந்தன.

 

மோகன், 'பாசப்பறவைகள்' படத்தில் தனது குரலில் பேசியது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவிலிருந்து தமிழுக்கு நடிக்க வந்து புகழின் உச்சத்திற்கு சென்றவர்கள் என்று ஐவர் உள்ளனர். ரஜினிகாந்த், மோகன், முரளி, பிரகாஷ்ராஜ், அர்ஜுன் இதில் ரஜினிக்கு பிறகு மோகனுக்குதான் அடுத்த இடமளிக்கலாம். அந்த அளவிற்கு வெற்றியை 80களில் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்திற்குப் பிறகு இவரால் தொடர்ந்து தாக்குப்பிடிக்க முடியவில்லை, சரியான படங்கள் அமையவில்லை. இவரது வாழ்வின் இன்னொரு டிராஜடியாக, இவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார் என்ற வதந்தி 90களின் இறுதியில் தமிழகமெங்கும் பரவியது. அதன் பின்னர், 'அன்புள்ள காதலுக்கு' என்ற படத்தில் நடித்து, தமிழ் சினிமாவுக்குத் திரும்பினார். ஆனால், அது வெற்றிகரமாக அமையவில்லை. இதுவரை கிட்டத்தட்ட 100 படங்கள் நடித்துள்ளார் 'மைக்' மோகன். அவர் திரையில் வரவில்லை என்றாலும் அவரின் 'நிலாவே வா', 'வா வெண்ணிலா', 'மன்றம் வந்த தென்றலுக்கு' போன்ற பாடல்கள் இன்றளவும் இரவில் பலருக்கு தாலாட்டாக உள்ளது.