திமுகவுக்கு கடிவாளம்? மோடியின் மாஸ்டர் ப்ளான்! - ஆளுநர் நியமனமும் அதிரடி பின்னணியும்!

Modi's plan for dmk.. History of TamilNadu new Governor RN Ravi

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், தற்போது பஞ்சாப் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வந்துசேரும் முன்னரே அவரைப் பற்றிய சர்ச்சைகள் தமிழ்நாடு வந்தடைந்து விட்டன.

ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி எனும் ஆர்.என்.ரவி பிஹார் தலைநகரான பாட்னாவில் கடந்த 1952-ம் ஆண்டில் பிறந்தவர். இவருக்கு லக்ஷ்மி எனும் மனைவியும் மூன்று குழந்தைகளும் இருக்கின்றனர். இயற்பியல் துறையில் பட்டமேற்படிப்பை முடித்த ரவி, பத்திரிகை துறையில் பணியாற்ற வேண்டும் என விரும்பினார். சில காலம், பத்திரிகையாளராக இருந்த ரவிக்கு, 1976-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாகும் வாய்ப்பு கதவைத் தட்டியது. அதையடுத்து, கேரள பேட்சில் ஐபிஎஸ் ஆகப் பணியாற்றிய ரவி, சுமார் பத்தாண்டுக்காலம் அங்கு பணியாற்றினார். அதனால், கேரள அரசியலின் ஆழ அகலத்தை அளந்தவர், அண்டை மாநிலமான தமிழகத்தின் தட்பவெப்பத்தையும் உள்வாங்கிக் கொண்டார். அதைப்போல, இந்தியாவின் பல மாநிலங்களிலும் பணியாற்றியுள்ளார்.

Modi's plan for dmk.. History of TamilNadu new Governor RN Ravi

ஆர்.என்.ரவியின் திறமையைக் கண்டுணர்ந்த மத்திய அரசு, அவரை சிபிஐ அதிகாரியாகப் பணியில் அமர்த்தியது. சில காலத்திலேயே உளவுத்துறைக்குப் பணிமாற்றம் பெற்றார். இந்த காலகட்டத்தில், வடகிழக்குப் பகுதிகளில் இயங்கிவந்த தீவிரவாதக் குழுக்களை ஒடுக்கும் பணியில் சிறப்பாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இது போன்ற பல குறிப்பிடத்தக்கச் செயல்களால், உளவுத்துறை கூடுதல் இயக்குநராகப் பணிஉயர்வுப் பெற்றார். பிறகு, 2012-ம் ஆண்டு இப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற ரவிக்கு 2014-ல் புதிய பொறுப்பு ஒன்று தேடிவந்தது. உபயம் பிரதமர் நரேந்திர மோடி.

ஆம், பிரதமராக மோடி பொறுப்பேற்றுக் கொண்டதும் நம்பிக்கைக்குரிய தளபதியாக அஜித் தோவலை தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக பணியில் அமர்த்தினார். ரவிக்கு ஏற்கனவே அறிமுகமான அஜித் தோவல், இப்போது ரவியைக் கூப்பிட்டுப் பேசினார். விளைவு, பிரதமர் அலுவலக கூட்டுக் குழுவின் தலைவரானார் ஆர்.என்.ரவி. அப்போது கொழுந்துவிட்டு எறிந்த நாகலாந்து பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு ரவியை நாகாலாந்து அனுப்பிவைக்க முடிவெடுத்தது மோடி அரசு.கடந்த, 2014 ஆகஸ்ட் 29-ம் தேதி, நாகாலாந்து கிளர்ச்சிக் குழுக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் இந்திய அரசின் சிறப்புப் பிரதிநிதியாக ஆர் என் ரவி நியமிக்கப்பட்டார்.

Modi's plan for dmk.. History of TamilNadu new Governor RN Ravi

இதுவரை சுமுகமாகச் சென்றுகொண்டிருந்த ரவியின் கிராஃபில், இப்போதுதான் சர்ச்சைகள் சூழத்தொடங்கியது. வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர் போன்ற பகுதிகளில் வாழும் 'நாகா' இன மக்களை ஒன்றுதிரட்டித்தனி நாடாக உருவாக்க வேண்டும் எனும் கோரிக்கை அம்மக்கள் மத்தியில் மிக நீண்ட நாட்களாக இருந்துவருகிறது. இதனால், அப்பகுதியில் பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் இயங்கி வருகின்றன. ஆயுதம் தாங்கி நடமாடி வரும் இவர்கள், தனி அரசாங்கமே நடத்தி வருகின்றன. இதனால், போராட்டக் குழுக்களுடன் இந்திய அரசு மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்தது. பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இருதரப்புக்கும் மத்தியில் 1997-ம் ஆண்டு சண்டை நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. ஆனால், பல குழுக்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. ஆனாலும், நாகாலாந்தில் மட்டும் தனிநாடு கோரிக்கை உயிர்ப்புடன் இருந்துவருகிறது. இது மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்துவந்தது.

இந்த நிலையில்தான், ஆர். என். ரவி சிறப்புப் பிரதிநிதியாக நாகாலாந்து செல்கிறார். நாகா இன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய போராட்டக் குழுவான தேசிய சோஷலிஸ்ட் கவுன்சிலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். விளைவாக, பிரதமர் மோடியின் இல்லத்தில், 2015-ம் ஆண்டு இருதரப்பு ஒப்புதலுடன் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம், அரசாங்கத்தின் தலைவலிக்கு 'சண்டுபாம்' தடவும் என எதிர்பார்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2018-ல் தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகர் பதவியும், 2019-ல் நாகலாந்து மாநில ஆளுநர் பதவியும் ஆர்.என்.ரவி வசம் வந்துசேர்ந்தது. ஆனாலும், அதன் பிறகும் நாகா குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அரசின் பிரதிநிதியாக அவரே இருந்து வந்தார். இந்த நிலையில்தான், "நாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் நிறைய மாற்றங்களை ரவி செய்துவிட்டார். அவர் காட்டும் ஒப்பந்தம் போலியானது. அவரை பேச்சுவார்த்தை குழுவில் இருந்து அகற்ற வேண்டும்" எனக் கோரியது தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில்.

Modi's plan for dmk.. History of TamilNadu new Governor RN Ravi

இதனால், அதிருப்தியடைந்த ஆளுநர் ரவி, "நாகாலாந்தில் ஆயுதக் குழுக்களின் கொட்டம் அதிகரித்துவிட்டது. அவர்கள் மறைமுக அரசாங்கமே நடத்திவருகின்றனர். இனி, ஆளுநராகிய என்னைக் கேட்காமல் எந்த அதிகாரியையும் ட்ரான்ஸ்ஃபர் செய்யக்கூடாது" எனக் கூறினார். இதனால், பாஜக வுடன் கூட்டணியில் இருந்த அம்மாநில அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, ஆளுநர் ரவியைச் சந்தித்த நாகாலாந்து முதல்வர் நெஃபியூ ரியோ, இது உண்மையல்ல என விளக்கம் கொடுத்தார். கிளர்ச்சிக் குழுக்களுடன் ஏற்பட்ட மோதலால், இதுவரை ஒப்பந்தத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் தேங்கிக் கிடக்கிறது. போராட்டக் குழுக்களின் மீதான இந்தத் திடீர் விமர்சனத்தால் ரவியை முக்கியப் போராட்டக் குழுக்களும் புறக்கணித்தன. அவர், மத்தியஸ்தராக இருக்கும் வரை பேச்சுவார்த்தைக்கு வரமாட்டோம் என முரண்டு பிடித்தன.

இன்னொரு பக்கம், மத்திய அரசு சார்பில், நாகாலாந்து அரசுக்கு ஒதுக்கப்பட்ட டெல்லி பங்களாவை காலி செய்யாமல் இழுத்தடித்து வந்ததாக ஆர் என் ரவி மீது காத்திரமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பிரதமர் அலுவலகக் கூட்டுக் குழுவின் தலைவரான போது, அவருக்கு டெல்லியில் உள்ள 'டோனி நியூ மோதி பேக்' குடியிருப்பு வளாகத்தில், அரசு சார்பில் வீடு ஒதுக்கப்பட்டது. ரவி, கடந்த 2018-ம் ஆண்டு, புலனாய்வுத் துறையில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு இந்த இடத்தைக் காலி செய்யுமாறு அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படுள்ளது. ஆனால், அதைப் பெரிதாகப் பொருட்படுத்தாத ரவி, தொடர்ந்து அதே பங்களாவில் வசிக்க அனுமதி கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். நாகலாந்து ஆளுநரகாப் பொறுப்பேற்ற பிறகும் கூட இந்த இல்லத்தை அவர் காலி செய்யவில்லை. நாகாலாந்து மாநில ஆளுநருக்கு என துக்ளக் சாலையில் தனியாக வீடு ஒதுக்கப்பட்டும் அவர் இந்த பங்களாவை காலி செய்ய மறுத்து வருகிறார் எனக் கூறப்படுகிறது.

Modi's plan for dmk.. History of TamilNadu new Governor RN Ravi

ஆர்.என். ரவி பங்களாவுக்கு இன்னும் கிட்டத்தட்ட 64 லட்சம் வாடகைப் பணம் செலுத்தவில்லை. இதனால், அரசுக்குச் சொந்தமான இடத்தில் வசிக்கும், அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் சட்டம், 1971 இன் கீழ் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, விசாரணைக்காக எஸ்டேட்ஸ் இயக்குநரகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தில் ஆஜராகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியானது. போராட்டக் குழுக்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் குளறுபடி, அரசு பங்களாவை காலி செய்வதில் இழுபறி, கூட்டணிக் கட்சிகளுடனேயே மோதல் எனப் பல சர்ச்சைகளில் பேசப்படுகிறார் ஆர்.என்.ரவி.

இந்த நிலையில், தமிழக ஆளுநராக ரவியை நியமித்ததன் மூலம், நாகலாந்து பிரச்சனையில் சுமுகத் தீர்வு காணவும் தமிழக ஆளுங்கட்சியான திமுகவை கட்டுக்குள் கொண்டுவரவும், மோடி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிகின்றன. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்க்குக் குறிவைக்கும் மோடியின் திட்டம் பலிக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

modi tamilnadu governor
இதையும் படியுங்கள்
Subscribe