ADVERTISEMENT

மோடியின் “பஹுத் அச்சா” பேட்டியில் “படா படா” பொய்கள்!

01:33 PM Jan 02, 2019 | Anonymous (not verified)


2014 ஆம் ஆண்டு 69 சதவீத எதிர்க்கட்சிகள் வாக்கு சிதறியதால், 31 சதவீதம் வாக்குகளில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று பிரதமரானவர் மோடி. இதுவரை அவர் பத்திரிகையாளர்களை சந்தித்ததில்லை. நாடாளுமன்ற விவாதங்களில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்ததில்லை.

ADVERTISEMENT

பதவியேற்ற நான்கரை ஆண்டுகளில் 19 நாட்கள் மட்டுமே பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கிறார். அதுவும் பெரும்பாலும் பார்வையாளராகவே அமர்ந்திருக்கிறார். 2 ஆயிரத்து 21 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து 92 நாடுகளுக்கு பயணித்திருக்கிறார். ஒன்றுமே சாதிக்காமல் வெறும் திட்ட அறிவிப்புக்காக மட்டுமே 4 ஆயிரத்து 126 கோடி ரூபாய் விளம்பரத்துக்காக செலவழித்திருக்கிறார்.

ADVERTISEMENT

வெளிநாடு செல்லும் பிரதமர்கள் செய்தியாளர்களை அழைத்துச் செல்வார்கள். வெளிநாடுகளில் அந்தந்த நாட்டு தலைவர்களுடன் பிரதமர் பத்திரிகையாளர்களைச் சந்திப்பார். அப்போது தெரிவிக்கும் விவரங்களை பத்திரிகைகள் வெளியிடுவது 2014க்கு முன்புவரை கடைப்பிடிக்கப்பட்ட வாடிக்கை.

ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளில் மோடி தனது பயணத்தின்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததே இல்லை. வெறும் சந்திப்பு புகைப்படங்களை மட்டுமே தருவது வழக்கமாகிவிட்டது. அதிகபட்சமாக, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களைச் சந்தித்து, அவர்களிடம் தனது பெருமைகளை முழக்கிவிட்டு வந்திருக்கிறார், செல்ஃபி பிரதமர் என்று பெயரெடுத்திருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

உலகநாடுகளில் நாடாளுமன்றங்களில் 8 மணி நேரம் விவாதம் நடப்பதாகவும் நாமும் அதுபோல ஆரோக்கியமான விவாதங்களை நடத்தலாம் என்றும் நேற்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மோடி கூறியிருக்கிறார்.

அதாவது, இந்தப் பேட்டியை வழக்கமான செய்தியாளர் பேட்டியாக நினைத்துவிடக் கூடாது. இந்தப் பேட்டிக்காக மோடியிடம் கேட்கப்படும் கேள்விகளை முதலிலேயே எழுதிக் கொடுத்துவிட வேண்டும். பிறகு அவற்றுக்கு பதிலை அவர் தயார் செய்துவிட்டு, அந்தப் பதிலில் தவறு இருந்தால் எடிட் செய்துவிட்டு ஔிபரப்பாகிற பேட்டி என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தப் பேட்டியில்தான் வெளிநாட்டு நாடாளுமன்றங்களைப் பற்றி பேசியிருக்கிறார். இந்திய நாடாளுமன்றத்தில் அதுபோன்ற ஆரோக்கியமான விவாதங்களை அறிமுகப்படுத்த வேண்டிய பொறுப்பு யாருடையது என்பதை மோடி மறந்துவிட்டார். அதுபோன்ற விவாதங்களை ஆரோக்கியமான தலைப்புகளில் விவாதிக்க இவர் முன்வந்ததைப் போலவும், யாரோ இவரைத் தடுத்ததைப் போலவும் பதில் கூறியிருக்கிறார்.

நிஜத்தில் நாடாளுமன்றத்துக்கே வராத இவர், இதுபோன்ற பெரிய விஷயங்களையெல்லாம் எப்படித்தான் கூசாமல் போலியாக பேசுகிறாரோ தெரியவில்லை.

இந்தப் பேட்டியில் இன்னொரு விஷயத்தையும் கூறியிருக்கிறார் மோடி. அதாவது, 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் தேர்தலில் சாமானியனான தனக்கும் எதிர்க்கட்சிகளின் மகாகூட்டணிக்கும் இடையிலான போட்டி என்று பெருமை பீற்றியிருக்கிறார். மோடி என்ற தனி மனிதனின் வெற்றியாகவே 2014 வெற்றியை பில்டப் செய்தார்கள். நிஜத்தில் அந்தத் தேர்தலில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சுமார் 21 கட்சிகளை கூட்டணியாக சேர்த்தே பாஜக தேர்தலை சந்தித்தது. இப்போதும் அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறிய சிவசேனா, தெலுங்குதேசம் உள்ளிட்ட சில கட்சிகளைத் தவிர, ஐக்கிய ஜனதாதளம், அகாலிதளம், லோக் ஜனசக்தி உள்ளிட்ட 17க்கு மேற்பட்ட கட்சிகளை தனது கூட்டணியில் வைத்திருக்கிறது பாஜக.

உண்மை இப்படி இருக்க, மோடி அகங்காரத்துடன் இந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக தோற்றதை தனது பேட்டியில் தவிர்த்துவிட்டு, தெலங்கானாவில் தனக்கு எதிரான கூட்டணி தோல்வியடைந்தது என்று கூறியிருக்கிறார். அங்கு முக்கியக் கட்சியாக டிஆர்எஸ்சுக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும்தான் போட்டி இருந்தது என்பதை மோடி வசதியாக மறைக்கிறார்.

ரபேல் விமான ஊழலில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தனக்குச் சாதகமாக கூறியிருக்கிறார் மோடி. ஆனால், உச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்களை அறிக்கையாக அளித்து அந்த தீர்ப்பு பெறப்பட்டது என்பதை மறைத்திருக்கிறார். அப்படி அவர் மறைத்த விஷயத்தை எதிர்க்கேள்வியாக கேட்க அங்கே செய்தியாளர் இல்லை என்பதை தனக்கு சாதகமாக ஆக்கியிருக்கிறார் என்பதை மறந்துவிடக்கூடாது.

பெண்களுக்கு எதிரான கூட்டு வன்முறைக்கு எதிராக அனைவரும் நிற்க வேண்டும் என்றும், இந்த விஷயத்தை அரசியலாக்கக் கூடாது என்றும் மோடி கூறியிருக்கிறார். காஷ்மீரில் ஆஷிபா, உ.பி.யில் உன்னாவோ கிராமத்தில் 15 வயது சிறுமி உள்ளிட்ட பல பாலியல் பலாத்கார விவகாரங்களில் சிக்கிய பாஜக எம்எல்ஏக்களைப் பற்றி மோடியிடம் ஏஎன்ஐ நிருபர் எதிர்க்கேள்வி கேட்காததால் இஷ்டத்துக்கு பொய்யை அள்ளி வீசியிருக்கிறார் மோடி.

மொத்தத்தில் அவருடைய பேட்டியைப் பற்றி இரண்டாவது பகுதி விமர்சனம் செய்யும் அளவுக்கு வெறும் பொய்களையே அள்ளி விதைத்திருக்கிறார் மோடி.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT