Skip to main content

மோடியின் குகையில் கலக்கிய காங்கிரஸ்

Published on 18/12/2017 | Edited on 18/12/2017

"மோடியின் குகையில் கலக்கிய காங்கிரஸ்" - தமிமுன் அன்சாரி கருத்து! 

குஜராத், இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றது குறித்து நாகை சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி நக்கீரன் இணையதளத்திடம் தெரிவித்த கருத்து...



இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டிருக்கிற தோல்வி என்பது அந்த கட்சியின் செயல்பாடுகளுக்கு கிடைத்த தோல்வி. ஆனால் குஜராத்தில் முன்பைவிட கூடுதல் இடங்களையும், கூடுதல் வாக்கு வங்கியையும் காங்கிரஸ் கட்சி பெற்றிருப்பதை தார்மீக ரீதியான வெற்றியாக பார்க்க வேண்டும்.

குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக இருக்கின்றபோது, அவர்கள் முன்பைவிட அதிக வெற்றியை பெற்றிருக்க வேண்டும். அப்படி பெற முடியாமல் போயிருக்கிறது என்பதே அவர்கள் தார்மீக ரீதியாக தோல்வியை சந்தித்திருக்கிறார்கள் என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது.

முதல் கட்ட தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றிப்பெற்றிருக்கிறது. அதன் பிறகு பாகிஸ்தான் குழுவினர் மன்மோகன் சிங்கையும், மணிசங்கரையும் சந்தித்தனர் என்கிற அவதூறு பிரச்சாரத்தை பிரதமர் முன்னெடுத்த பிறகு நடைபெற்ற தேர்தல்களில் பாஜக வெற்றிப்பெற்றிருக்கிறது.

இதைப் பார்க்கின்றபோது, முதல் கட்ட தேர்தல் குறித்து வெளியான உளவுத்துறை ஆய்வுகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள், பிறகு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்களில் அவதூறுகளை கையெடுத்து பாமர மக்களை ஏமாற்றி பாகிஸ்தான் எதிர்ப்பு என்ற குஜராத்தியர்களுடைய மனநிலையை வென்றெடுத்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.

எது எப்படி இருந்தாலும், மோடியின் சொந்தக் குகையில் காங்கிரஸ் கலக்கியிருக்கிறது என்பதுதான் உண்மை. அதே சமயம் இந்த வெற்றிகளை வைத்து தமிழ்நாட்டில் அது தொடரும் என்று பேசுவது அவர்களது அரசியல் அறியாமையை வெளிக்காட்டுகிறது.

தமிழ்நாட்டின் திராவிட இயக்கங்களும், தமிழ் தேசிய இயக்கங்களும் உயிரோட்டமாக இருக்கும்வரை பாஜகவால் ஒரு காலத்திலும் வெற்றி பெற முடியாது. அதுபோல கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகள் உயிரோட்டமாக இருக்கும்வரை அங்கும் அவர்களால் வெற்றிபெற முடியாது. இதனை தமிழிசை போன்றவர்கள் உணர வேண்டும்.

குஜராத்தில் உண்மையில் பாஜகவுக்குத்தான் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அது எதனால் என்பதை பார்க்க வேண்டும். மோசமான பொருளாதார சீர்குலைவு, மதவெறித்தனமான பேச்சுகள் புதிய தலைமுறையினரையும், சாமானிய மக்களையும் வெகுவாக எரிச்சலூட்டியிருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

-வே.ராஜவேல்

சார்ந்த செய்திகள்