Skip to main content

 மோடியின் வெற்றிக்காக தேர்தலுக்கு முன்பிருந்தே கூட்டுச்சதி! அதிரவைக்கும் சம்பவம்!

மின்னணு வாக்குப்பதிவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்துகிறார்கள் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். இந்த வாக்குப்பதிவில் தேர்தல் ஆணையத்தின் சதிகள் குறித்து இவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது மத்திய மோடி அரசு. தேசிய அளவில் நடக்கும் முக்கிய சம்பவங்களில் புதைந்து கிடக்கும் ரகசியங்களை அம்பலப் படுத்துவதற்காக, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட இந்திய ஆட்சிப் பணியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற உயரதிகாரிகள் 64 பேர் இணைந்து ஒரு அமைப்பை கட்டமைத்திருக்கிறார்கள்.
 

iasஅண்மையில் நடந்து முடிந்த நாடாளு மன்றத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார் பிரதமர் மோடி. தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பு, 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க. ஜெயிக்கும் என அழுத்த மாகச் சொன்னார் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.க. தலைவருமான அமித்சா. அதேபோல, பா.ஜ.க. மட்டுமே 303 இடங்களையும் அதன் கூட்டணிக் கட்சிகள் 50 இடங்களையும் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மீது பல்வேறு சந்தேகங்களை எழுப்பின எதிர்க்கட்சிகள். குறிப்பாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீதான நம்பகத்தன்மையை எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கேள்விக்குறியாக்கினர்.


இந்த நிலையில், பொதுத்தேர்தலில் நடந்த ஆபத்தான முறைகேடுகள் என ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள் இந்திய ஆட்சிப்பணியின் முன்னாள் உயரதிகாரிகள். அந்த அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்சாவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளது மத்திய உளவுத்துறை. தலைமைத் தேர்தல் ஆணையத்தின் மீது அந்த அறிக்கை குற்றம்சாட்டுவதால் கடந்த வாரம் டெல்லியில் அந்த அறிக்கையை உள்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளதாக டெல்லியி லிருந்து தகவல்கள் கசிந்துள்ளன. இந்திய ஆட்சிப்பணியின் முன்னாள் பணி யாளர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரியுமான தேவசகாயத் திடம் இது குறித்து நாம் பேசியபோது, ""கடந்த 30 ஆண்டுகளில் நம் நாட்டில் நடந்த தேர்தல்களி லேயே மிகவும் மோசமான, நேர்மையற்ற தேர்தலாக 2019-ல் நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தல் இருக்கிறது.

 

 

bjpஇதற்கு முன்பு நெறியற்ற அரசியல்வாதிகளும் கிரிமினல்களும் இணைந்து தேர்தலுக்கு பல வழிகளிலும் இடையூறுகள் ஏற்படுத்தியபோதும், விதிமீறல்கள் நடந்தபோதும் முடிந்தளவுக்கு தேர்தலை நியாயமாக நடத்தியிருக்கிறது தேர்தல் ஆணையம். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களாட்சியின் மாண்புகளையும் நெறிமுறைகளையும் பாதுகாக்க வேண்டிய தேர்தல் ஆணையம், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக, நேர்மையற்ற வழிகளை கையாண்டது ஜீரணிக்க முடியாதது. குறிப்பாக, கடந்த 15 ஆண்டுகளை கணக்கில் எடுத்துக்கொண்டால் 2004, 2009, 2014-ல் நடந்த தேர்தல்களின் அறிவிப்புகளை அந்தந்த ஆண்டு களின் முறையே பிப்ரவரி-29, மார்ச்-1, மார்ச்-5 ஆகிய தேதிகளில் அறிவித்தது தேர்தல் ஆணையம். அதேபோல, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்க விருந்த சட்டமன்றத் தேர்தல்களின் அறிவிப்பினை மார்ச் 5 தேதிக்குள் அறிவித்துள்ளது. ஆனால், 2019 தேர்தலின் அறிவிப்பை மார்ச் 10-ல் அறிவித்தது ஆணையம். இந்த காலதாமதத்திற்கு காரணம் என்ன?

பிப்ரவரி 8 முதல் மார்ச் 9 வரை பிரதமர் மோடியின் முக்கிய நலத்திட்டங்களை அறிவிப்ப தற்காக ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு தோதாக இந்த காலதாமதத்தை செய்தனர் ஆணைய அதிகாரிகள். அதேபோல, ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் நடக்கும் நாட்களின் எண்ணிக்கையை எந்த காரணமும் இல்லாமல் முடிவு செய்திருக் கிறார்கள். அதாவது, எந்த தில்லுமுல்லுகளை செய்தாலும் பா.ஜ.க.வால் ஜெயிக்க முடியாது என்கிற சூழல் இருக்கும் மாநிலங்களில் ஒரே கட்ட மாகவும், மற்ற மாநிலங்களில் பல கட்டங்களாகவும் தேர்தல் நடத்தினர். இந்த பல கட்டத் தேர்தல்கள் பிரதமர் மோடி மிகஇலகுவாக தேர்தல் பிரச்சாரம் செய்யவும், பா.ஜ.க.வின் முறைகேடான தேர்தல் வியூகங்களை நிறைவேற்றவும் பயன்பட்டன. மேலும், பா.ஜ.க.வுக்கு எதிரான சிறுபான்மையின ரின் வாக்குகள் பெரிய அளவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இதனை அம்பலப்படுத்தி ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்ற போதும் அது குறித்து ஆணை யம் அக்கறை காட்டவில்லை. பா.ஜ.க.வுக்கு சாதக மாக நடந்துகொண்டனர் தேர்தல் அதிகாரிகள்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது இனவாத, பிரிவினைவாத பிரச்சாரங்களை வேட்பாளர்கள் செய்வது இந்திய குற்றவியல் சட்டத்தின்படியும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படியும் தண்டிக்கப்பட வேண்டியதாகும். ஆனால், மோடி, அமித்சா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் பலரும் வெறுப்பு பிரச்சாரங்களை செய்தபோதும் அதனை கண்டுகொள்ளவில்லை ஆணையம். மாறாக, எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற் காக மட்டுமே இச்சட்டங்களை பயன்படுத்தினர். நடத்தை விதிகளை மோடி மீறியபோதும் அவருக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பக்கூட தயங்கியது ஆணையம். மோடியின் பிரச்சாரங்களையும் நிகழ்வுகளை யும் ஒலிப்பரப்புவதற்காகவே நமோ டி.வி. துவக்கப் பட்டது மிகப்பெரிய அத்துமீறல். இத்தனைக்கும் முறையான அனுமதியையும் விதிமுறைகளையும் பின்பற்றாமல் துவக்கப்பட்டது இந்த அலைவரிசை. அதன்மீது எந்த நடவடிக்கையும் ஆணையம் எடுக்க வில்லை. மோடியின் கேதார்நாத் பயணத்திற்கான செலவுகள் மோடியின் தேர்தல் செலவில் சேர்க்கப்படவில்லை. அதேபோல, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பணம் கைப்பற்றப்பட்டதால் சம்பந்தப்பட்ட தொகுதியில் தேர்தலை நிறுத்திய ஆணையம், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அத்தகைய உறுதியான நடவடிக்கையை எடுக்கவில்லை.


இவை எல்லாவற்றையும் மிட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மோசடிகள் மிகவும் மோசமானது. இந்த இயந்திரங்களை தயாரிக்க அங்கீகாரம் பெற்ற 2 பொது நிறுவனங்களும் கொடுத்துள்ள எண்ணிக்கையும், தேர்தல் ஆணையத்தால் தரப்பட்ட இயந்திரங்களின் எண்ணிக்கையும் ஒத்துப்போகவில்லை. அத னால் அனைத்து இயந்திரங்களின் எண்ணிக்கை யையும் சோதனைக்குட்படுத்த வேண்டும். அதேபோல, யாருக்கு வாக்களித்தோம் என்பதற் குரிய ஒப்புகைச் சீட்டின் எண்ணிக்கையையும் வாக்குப்பதிவான எண்ணிக்கையையும் குறைந்த பட்சம் 50 சதவீதமாவது ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் முன் வைத்த யோசனையை கண்டுகொள்ளாததுடன் அதனை நிராகரிக்கவும் செய்தது ஆணையம். இயந்திரங்களின் தேவையற்ற இடமாற்றமும் அதற்கான விளக்கத்தை தேர்தல் ஆணையம் சொல்லாததும் சந்தேகத்தையே ஏற்படுத்தின.

மேலும் வாக்குப்பதிவு எண்ணிக்கையிலும் ஒப்புகை சீட்டு எண்ணிக்கையிலும் பல இடங்களில் வேறுபாடு இருந்தது. இதனையும் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. இது மிகப்பெரிய தீமையின் அறிகுறி. இப்படி பல தில்லுமுல்லுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நடந்திருக்கிறது. ஆக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் மீதான குற்றச்சாட்டுகளில் முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் 370 தொகுதிகளின் முடிவுகளில் மாற்றங்கள் நடந்திருக்கும். ஆக, மோடியின் வெற்றிக்காக தேர்தலுக்கு முன்பிருந்தே கூட்டுச்சதியில் இறங்கியுள்ளது தேர்தல் ஆணையம். ஆணைய அதிகாரிகளின் ரகசிய தில்லு முல்லுகள், முறைகேடுகள் மூலமே மோடியின் இமாலய வெற்றி சாத்தியமாகியிருக்கிறது. மின்னணு இயந்திர வாக்குப்பதிவு முறை தடை செய்யப்பட வேண்டும். இந்த வாக்குப்பதிவு இருக்கும் வரை மோடிதான் பிரதமராக இருப்பார். இந்திய அரசியலமைப்பின் அடித்தளத்தையும் மக்களாட்சி தத்துவத்தையும் தகர்த்துக்கொண்டிருக்கிறது மின்னணு வாக்குப்பதிவு'' என விரிவாக சுட்டிக்காட்டுகிறார் தேவசகாயம்.
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...