Skip to main content

ஊரடங்கு குறித்து மோடி அறிவிப்பின் பின்னணி... டிரம்ப் செய்த மாபெரும் தவறு என்ன? சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக அரசு!

Published on 15/05/2020 | Edited on 15/05/2020

 

bjp


நான்காம் கட்ட ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என மே 12 இரவு 8 மணியிலிருந்து 8.33 வரை உரையாற்றிய பிரதமர் மோடி, கடைசி ஒரு நிமிடத்தில்தான், ஊரடங்கு நீடிக்கும் என்பதை அறிவித்தார். அது எப்படி மாறுபட்டதாக இருக்கும் என்பது 18 ஆம் தேதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்றார்.


நோய்த்தொற்று அளவுக்கு இந்தியாவை ஆட்டிப்படைக்கிறது பொருளாதாரச் சூழ்நிலை. கடந்த ஆறு ஆண்டுகால பா.ஜ.க. அரசின் பொருளாதார நடவடிக்கைகள் பலன் தரவில்லை என்பதை ஆய்வறிக்கைகள் அம்பலப்படுத்திவிட்டன. ஆனாலும், பிரதமர் தனது உரையில், உலகத்திற்கு இந்தியா நம்பிக்கை ஒளிக்கீற்றாக உள்ளது என்றும், கரோனா காலத்திற்குப் பிறகு உலகத்திற்கே வழிகாட்டும் வகையில் இந்தியாவின் பொருளாதாரம் தற்சார்பு நிலையை அடையும் என்றும், உள்நாட்டுச் சந்தை நம்மைப் பாதுகாக்கும் என்றும், இதற்காக 20 லட்சம் கோடி ரூபாயிலான சிறப்புத் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் இதற்காகப் பயன்படுத்தப்படும் என்றும் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
 

market


மக்களிடம் கடும் அதிருப்தி ஏற்பட்டு வருவதைத் தவிர்க்கவும் வகையில் பிரதமரின் உரை அமைந்துள்ள நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கு மேலும் சில தளர்வுகளுடன் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதேநேரத்தில், மூன்று கட்ட ஊரடங்கில் கவனிக்கத் தவறியவையும், தளர்வுகளால் ஏற்படக்கூடிய சிக்கல்களும் விடாமல் துரத்தும் என்கிறார்கள் மருத்துவத்துறையினர். அத்துடன், கரோனா தொற்று இரண்டாவது தடவையாக ஒரு பெரிய சுனாமி அலையாக எழுந்து இந்தியாவைத் தாக்கப்போகிறது என எச்சரிக்கிறார்கள் உலக சுகாதார நிறுவனத்தைச் சார்ந்தவர்கள்.

1918 இல் 'ஸ்பானிஷ் ஃப்ளு' என்கிற தொற்று நோய் கரோனாவைப் போலவே முதல் அலையாக வந்து சில ஆயிரம் பேரை தாக்கியது. அந்த தாக்குதலை கண்டு பயந்துபோன உலகம், தற்பொழுது கரோனாவிற்கு எதிராக நாம் கடைப்பிடிக்கும் குவாரண்டைன் எனப்படும் தனிமைப்படுத்துதல், ஊரடங்கு போன்றவற்றை கடைப்பிடித்தது. அத்துடன் பிரச்சனை முடிந்தது, ஸ்பானிஷ் ஃப்ளு ஒழிந்தது என உலகம் நிம்மதி பெருமூச்சு விட்டது. ஆனால் ஒரு சில மாதங்களிலேயே அந்த ஸ்பானிஷ் ஃப்ளுவுக்காகக் கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கு, தனிமைப்படுத்துதல், சிகிச்சை ஆகியவை முடித்துவைக்கப் பட்டு சகஜ நிலை திரும்பியவுடன் அமெரிக்காவை ஸ்பானிஷ் ஃப்ளு இரண்டாவது அலையாக வந்து தாக்கியது. அந்த இரண்டாவது அலை தாக்குதலில் ஃபிலடெல்பியா என்கிற அமெரிக்க நகரம் அழிந்துபோனது. 70 லட்சம் பேர் இறந்து போனார்கள். அத்துடன் அந்த ஸ்பானிஷ் ஃப்ளு நிற்கவில்லை. மூன்றாவது அலையாக வந்தும் தாக்கியது. இந்த மூன்று தாக்குதலின்போதும் வேறுவழியில்லாமல் அமெரிக்கா தனிமைப்படுத்துதல், ஊரடங்கு போன்ற நிலைகளுக்குச் சென்றது.
 

ward


அதுபோல கரோனா 17ஆம் தேதி முதல் இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் ஊரடங்கு நடைமுறையில் ஏற்படுத்தப்படும் தளர்வினால் கரோனா தனது இரண்டாவது தாக்குதலைத் தொடுக்கும் எனச் சொல்கிறார்கள் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள். இந்தத் தாக்குதலின்போது இந்தியா முழுவதும் நோயாளிகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயரும். அதில் தற்பொழுது வரை குறைந்த எண்ணிக்கையில் நோய்த்தொற்றுள்ளவர்கள் உள்ள மாநிலங்களான உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் எண்ணிக்கை உயரும்.


இந்த மாநிலங்களைவிட அதிக சோதனைகளை நடத்தி வரும் மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்றவை இப்பொழுது அதிக கரோனா நோய் பாதித்தவர்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பெற்றிருக்கின்றன. ஆனால் இரண்டாவது அலை உருவாகும்போது சோதனைகள் அதிகம் மேற்கொள்ளப்படாத வடஇந்திய மாநிலங்கள் லட்சக்கணக்கான கரோனா நோயாளிகளைக் கொண்டு வரும் என்கிறார்கள்.

அதற்கு உதாரணமாக இரண்டாவது அலை கரோனா தாக்குதல் நடத்தும் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை உதாரணமாக சுட்டிக்காட்டுகிறார்கள். நியூயார்க் நகரத்தில் கரோனா உலகெங்கும் உச்சக்கட்டமாக இருந்த பிப்ரவரி, மார்ச் காலத்தில் 13 ஆயிரம் விமானங்களில் பயணிகள் வந்திறங்கினார்கள். அதனால் முதல் கட்டமாக நியூயார்க் கரோனாவின் பிடியில் சிக்கிக்கொண்டது. அதன் பிறகும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கவனக்குறைவாகச் செயல்பட்டதால் இப்பொழுது லட்சக்கணக்கான நோயாளிகள், ஆயிரக்கணக்கான மரணங்கள் என உச்சக்கட்டத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது.
 

trump


நியூயார்க்கைப் போலவே சிங்கப்பூரிலும் கரோனா இரண்டாவது கட்டமாக எழுந்து ஆயிரக்கணக்கில் அந்தச் சின்னஞ்சிறு நாட்டில் நோயாளிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. சுவீடன், இங்கிலாந்து போன்ற நாடுகள் கரோனாவின் இரண்டாவது அலை தாக்குதலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன. இரண்டாவது அலை தாக்குதல் என்பது சமூகப் பரவல். இந்தியா அந்த நிலைக்கு வரவில்லை என பல வடஇந்திய மாநிலங்களில் சோதனைகளை முறையாக நடத்தாமல் மத்திய அரசு அறிவித்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்திலும் கோயம்பேடு சந்தைக் காரணமாக கரோனா நோய்த்தொற்று, சமூகப் பரவலாக மாறிவிட்டது. அதனால் தான் கோயம்பேட்டுடன் தொடர்புடையவர்கள் எனக் கண்டுபிடிக்கப்பட்ட 7 ஆயிரம் வணிகர்களைத் தாண்டி காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், செவிலியர்கள் எனக் கரோனா சென்னை நகரம் முழுக்க பரவியதோடு மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா எனப் பல்வேறு இடங்களுக்குப் பரவிக் கொண்டிருக்கிறது.


தென்னிந்திய மாநிலங்கள் தொடர்ந்து கரோனா சோதனை நடத்துவன் மூலம் இந்தப் பரவலை கண்டுபிடித்து வருகின்றன. ஆனால் 17ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு தளர்த்தப்பட்டால் இன்று ஆயிரத்திற்குள் இருக்கக்கூடிய கரோனா நோய்த் தொற்று பல்லாயிரமாகப் பெருகிவிடும் என எச்சரிக்கிறார்கள் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள்.

இந்தச் சூழ்நிலையில் டாஸ்மாக்கைத் திறக்காமல் இருந்தால் ஓரளவு கரோனாவின் சமூக பரவலான இரண்டாவது தாக்குதலைத் தவிர்க்க முடியும். முன்பு தமிழ்நாடு முழுவதும் இருந்த ஆயிரக்கணக்கான மார்க்கெட்டுக்களை பேருந்து நிலையத்திற்கு அரசு மாற்றியது. காசிமேடு மீனவர் சந்தைகளை அரசு மூடியது. ஆனால் ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் மக்கள் வந்து செல்லும் கோயம்பேடு பகுதி மார்க்கெட்டை மூடாமல் வைத்தது. சென்னை மாநகராட்சி, சென்னை மாநகர காவல்துறை போன்றவை கோயம்பேடு அரசியல் பலத்தின் முன்பு மண்டியிட்டது. அதன் விளைவாக கரோனா தமிழகம் முழுக்க வேகமாகப் பரவியது.

அதுபோல டாஸ்மாக்கைத் திறந்தால் கரோனா வேகமாகப் பரவும். அதைத் தவிர்க்க முடியாதா எனத் தமிழக அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் கேட்டோம். தமிழக அரசு வருமானத்தில் பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி விதிப்பும், டாஸ்மாக் மூலம் வரும் வருமானமும் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன. இந்த இரண்டையும் தவிர்த்தால் ஏற்கனவே நாலரை லட்சம் கோடி ரூபாய் கடனில் இயங்கும் தமிழக அரசு திவாலாகிவிடும். மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியில் தமிழக அரசுக்குக் கொடுக்க வேண்டிய பங்கைக் கொடுக்காமல் இருக்கும் சூழலில் அரசை நடத்த டாஸ்மாக்கைவிட்டால் வேறு வழியில்லை என்கிறார்கள்.

எப்படி இதுவரை முறையாகச் சோதனை நடத்தாத வடஇந்திய மாநிலங்கள் கரோனாவில் இரண்டாவது அலை தாக்குதலின் எழுச்சிப் புள்ளியாக அமையுமோ அதுபோல இதுவரை கரோனாவின் மேல்படியாக உள்ள தமிழகத்தில், கிராமங்களையும் கரோனாவின் தாக்குதலுக்கு உட்படுத்தும் நிகழ்வாக டாஸ்மாக் திறப்பு அமையும் என்கிறார்கள் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.
 

http://onelink.to/nknapp


ஆக கரோனாவின் இரண்டாவது கட்ட தாக்குதல் தவிர்க்க முடியாத சம்பவமாகத் தமிழகத்தில் அமையப்போகிறது. இதில் ஒரே ஒரு ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் ஸ்பானிஷ் ஃப்ளு மூன்று கட்டமாக தாக்குதல் நடத்தியது. மூன்றாவது கட்ட தாக்குதல், முதல் இரண்டு கட்ட தாக்குதல்போல் வலுவானதாக இல்லை. மூன்றாவது கட்டத்தில் ஸ்பானிஷ் ஃப்ளு முனை உடைந்த தாக்குதலைத்தான் நடத்தியது. அதற்குப் பிறகு மடிந்துபோனது.

கரோனா இரண்டாவது கட்ட தாக்குதலைத் தொடர்ந்து, மூன்றாவது கட்ட தாக்குதலை நடத்துமா? அதன் பிறகு முனை உடைந்து போகுமா? கரோனா தாக்குதலில் இருந்து மக்கள் தப்பிப்பார்களா? என்பதையெல்லாம் காலம்தான் முடிவு செய்யும். இரண்டாவது அலை தாக்குதல் லட்சக்கணக்கில் பெருகுமானால் இப்பொழுது இருந்ததைவிட கடினமான கண்டிஷன்களுடன் மறுபடியும் ஒரு நாடு தழுவிய ஊரடங்கை மோடி நிச்சயம் அறிவிப்பார் என்கிறார்கள் சுகாதாரத்துறை வல்லுனர்கள்.