Skip to main content

மோடி ஆட்சியை பதற வைத்த சம்பவம்... அதிர்ச்சியை ஏற்படுத்திய உச்சநீதிமன்றம்...  நடந்த ஆபத்தான முறைகேடுகள்!

Published on 30/12/2019 | Edited on 30/12/2019

தேசிய குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு என மக்களை பதட்டத்திலேயே வைத்திருக்கும் மத்திய மோடி அரசுக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கும் சத்தமில்லாமல் ஒரு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

ஏப்ரல் மே மாதங்களில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார் பிரதமர் மோடி. தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே, 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க. ஜெயிக்கும் என அழுத்தமாகச் சொன்னார் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.க. தலைவருமான அமித்சா. அவர் சொன்னது போல, பா.ஜ.க. மட்டுமே 303 இடங்களையும் அதன் கூட்டணி கட்சிகள் 50 இடங்களையும் கைப்பற்றியது. மோடி-அமித்ஷா கூட்டணியின் அந்த அசுரத்தனமான வெற்றி குறித்து பல்வேறு சந்தேகங்கள் எதிரொலித்தன. குறிப்பாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கின எதிர்க்கட்சிகள்.

 

bjp



இந்தச் சூழலில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட இந்திய ஆட்சிப்பணியின் முன்னாள் உயரதிகாரிகள் 64 பேர் இணைந்து, நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் நடந்த ஆபத்தான முறைகேடுகள் என ஒரு அறிக்கையை வெளியிட்டதுடன் அதனை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பி வைத்தனர். ஆனால், ஆணையமோ அந்த அறிக்கையில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளை கிடப்பில் போட்டுவிட்டது.
 

sagayam



இந்தநிலையில் தான், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் "காமன் காஸ்' ஆகிய இரண்டு தொண்டு நிறுவனங்கள், தேர்தல் முடிவுகளில் பல முரண்பாடுகள் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான முதல் அமர்வு, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றுக்கு பதிலளிக்குமாறு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் அந்த நோட்டீஸ், தற்போது பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

congress



தொண்டு நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள மனு குறித்து விசாரித்தபோது,  2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்தன. அனைத்துக் கட்ட தேர்தலும் நடந்து முடிந்ததும் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியிருந்த செயலி (ஆப்) மூலம், 6 கட்டங்களுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை கிடைத்தது. கடைசிக் கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை வடிவில் அல்லாமல் சதவீத கணக்கில் கிடைத்தது. இந்த புள்ளி விபரங்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளிவிபரங்களையும் ஆய்வு செய்தோம்.

 

bjp



அந்த ஆய்வில் தேர்தல் நடந்த 542 தொகுதிகளில் 347 தொகுதிகளில் பதிவான வாக்குகளில் வித்தியாசங்கள் இருந்ததை கண்டறிந்துள்ளோம். பல தொகுதிகளில் 1 வாக்கு முதல் 1,01,323 வாக்குகள் வரை முரண்பாடுகள் இருந்ததையும் காண முடிந்தது எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளதுடன், பதிவான மொத்த வாக்குகளில் இந்த முரண்பாடுகளின் வித்தியாசம் 10.49 சதவீதமாக இருக்கிறது என்பதையும் மனுவில் குறிப்பிட்டுள்ளன தொண்டு நிறுவனங்கள். மேலும், பல்வேறு மாநிலங்களில் பல தொகுதிகளில் வெற்றி பெற்றவருக்கும் அவருக்கு அடுத்து வந்தவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசத்தைவிட பதிவான வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என்பதையும் அந்த நிறுவனங்கள் தங்களது ஆய்வில் கண்டறிந்துள்ளன.

இது குறித்து விரிவான தகவலைப்பெற, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தகவல் கேட்கப்பட்டதையும், அதற்கு தேர்தல் ஆணையம் தகவல் தர மறுத்ததையும் தங்களது மனுவில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். தவிர, வாக்குப்பதிவு பற்றிய சரியான கணக்குகள் இல்லாமலேயே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு கூறியுள்ளதுடன், நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளன சம்பந்தப்பட்ட நிறுவனங்கள். இந்த மனு மீதுதான் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்சநீதிமன்றம்'' என சுட்டிக்காட்டுகிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள்.


இது குறித்து இந்திய ஆட்சிப்பணியின் முன்னாள் உயரதிகாரிகளுக்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியுமான தேவசகாயத்திடம் கேட்டபோது, "நிறைய ஆய்வுகளை நடத்தி முறைகேடுகள் நடந்துள்ளதற்கான ஆதார புள்ளிவிபரங்களை சேகரித்த பிறகே அந்த நிறுவனங்கள் வழங்கு தொடர்ந்திருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். தேர்தல்களின் புனிதத் தன்மையை நிலை நிறுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் தேர்தல் முடிவுகள் துல்லியமாக இருக்க வேண்டும். ஆனால், அந்த துல்லியம் நடந்து முடிந்த தேர்தலில் இல்லை. தேர்தல் முடிவுகளில் உள்ள முரண்பாடுகளையும் தில்லுமுல்லுகளையும் அவ்வளவு எளிதாக புறந்தள்ளிட முடியாது. தள்ளிடவும் கூடாது.

நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு விதிமீறல்களையும், ஒரு பக்க சார்பையும் தேர்தல் ஆணைய அதிகாரிகளே கடைப் பிடித்ததுதான் தேர்தல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியது. மக்களாட்சியின் மாண்புகளையும் நெறிமுறைகளையும் பாதுகாக்க வேண்டிய தேர்தல் ஆணையம், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக நேர்மையற்ற வழிகளை கையாண்டது ஜீரணிக்க முடியாதது.

நாங்கள் ஆய்வு நடத்திய போதும் மின்னணு வாக்குப்பதிவில் நடந்துள்ள முறைகேடுகள் பல அதிர்ச்சிகளை தந்தன. குறிப்பாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரிக்க உரிமை பெற்ற 2 நிறுவனங்கள் தந்த இயந்திரங்களின் எண்ணிக்கையும், தேர்தல் ஆணையம் அறிவித்த இயந்திரங்களின் எண்ணிக்கையும் சமமாக இல்லை.


மேலும், வாக்குப்பதிவின்போது பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும், ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கையும் ஒத்துப் போகவில்லை. நிறைய முரண்பாடுகள் இருந்தன. இவற்றை ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றபோதும் அதில் ஆணைய அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து எழுப்பப்பட்ட எந்த ஒரு சந்தேகத்திற்கும் தீர்க்கமான பதிலை ஆணையம் சொல்லவில்லை. மோடியின் வெற்றியை உறுதி செய்வதற்காக மத்திய அரசும் ஆணையமும் இணைந்து தில்லுமுல்லு தேர்தலை நடத்தி முடித்துள்ளன என்பதை சுட்டிக்காட்டி, ஆணையத்துக்கு நாங்கள் அனுப்பிய புகார்களுக்கு இதுவரை பதில் கிடையாது. மின்னணு வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடந்திருப்பது ஆணைய அதிகாரிகளுக்கு தெரியும். அதனால்தான் எங்கள் குற்றச்சாட்டுகளை மறுப்பதற்குரிய வலிமையான பதில்கள் அவர்களிடத்தில் இல்லை என்கிற நிலையில் எங்கள் புகாரை கிடப்பில் வைத்துவிட்டனர்.

தற்போது இது தொடர்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது ஆரோக்கியமானதுதான். ஆனால், உண்மையான தகவலையும் தரவுகளையும் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்கிறபோதும், ஆழமான விசாரணை நடக்கிற போதும்தான் பல உண்மைகள் அம்பலமாகும். அப்போது, மோடி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் சட்டவிரோதமானது என்பதும் வெளிச்சத்துக்கு வரும். மக்களாட்சி தத்துவத்தை தகர்த்தெறிந்துள்ளன மின்னணு வாக்குப்பதிவு முறைகேடுகள்''‘என்கிறார் மிக ஆவேசமாக.

மின்னணு வாக்குப்பதிவு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு விரிவான பதில்களை தாக்கல் செய்யச்சொல்லி உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸ், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தலைமைகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கும் நிலையில், தொண்டு நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் உள்ள விபரங்களை மீண்டும் ஆராயத் துவங்கியுள்ளதாக டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தமிழக பா.ஜ.க. வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசியபோது, "எண்ணிக்கையில் சில முரண்பாடுகள் இருப்பதாகத்தான் சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனங்கள் சொல்லியிருக்கிறதே தவிர, பா.ஜ.க. உள்ளிட்ட எந்த ஒரு அரசியல் கட்சி மீதும் தனிப்பட்ட முறையில் தங்கள் மனுவில் குற்றம் சொல்லவில்லை. முந்தைய தேர்தலை விட 2019 தேர்தலில் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை பா.ஜ.க. ஜெயித்து ஆட்சியை தக்க வைத்துக்கொண்டதாலும், பிரதமர் மோடியை வீழ்த்த முடியவில்லையே என்கிற இயலாமையிலும்தான் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை எழுப்புகின்றனர். அந்த குற்றச்சாட்டுகள் தவறானவை என தேர்தல் ஆணையம் ஆதாரங்களுடன் நிரூபிக்கும்'' என்கிறார்கள்.

 

 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.