Skip to main content

கடைசி நேரத்தில் அ.தி.மு.க.-விற்கு செக் வைத்த பா.ஜ.க... மோடிக்குச் சென்ற ஊழல் ரிப்போர்ட்... இ.பி.எஸ். மீது அதிருப்தியில் இருக்கும் மத்திய அரசு!

 

bjp


எடப்பாடி பழனிச்சாமி அரசின், சுமார் 2,000 கோடிக்கான டெண்டரை இறுதி செய்யும் கடைசி நேரத்தில், மத்திய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்தியுள்ளது. இந்தியா முழுவதுமுள்ள கிராமங்களுக்கு அதிவேக இணையச் சேவையை வழங்குவதற்காக பாரத் இணையச் சேவை திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது மத்திய பாஜக அரசு. தமிழகத்தில் இத்திட்டத்தை அமல்படுத்த கடந்த 2019 செப்டம்பரில் அறிவிப்பு செய்யப்பட்டது. அதன்படி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அடங்கிய 55,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்தத் திட்டத்தைக் கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஒரு வினாடிக்கு ஒரு ஜி.பி. அளவு வேகத்துடன் அதிவேக இணைய வசதி கிராமங்களுக்கு கிடைக்கும்.

 

இத்திட்டத்திற்காக, தரை வழி ஆப்டிகல் ஃபைபர் கேபிள் கட்டமைப்பு வசதியை உருவாக்குவதற்கு தமிழக அரசின் தமிழ் இணையச் சேவைக்கு 2,441 கோடி வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டிருந்தார் எடப்பாடி. ஆனால், 1,815 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்தது மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறை. பிறகு அந்தத் தொகை 1,950 கோடியாக உயர்த்தப்பட்டது. பாரத் இணையச் சேவை மற்றும் எடப்பாடி அரசின் இணையச் சேவைகள் நிறைவேறும்போது, தமிழகத்தில் சுமார் 12,500 கிராமங்களுக்குத் தகவல் தொடர்பு சேவை தடங்கலின்றி கிடைக்கும்.

 

இப்படிப்பட்ட சூழல்களில்தான் இந்தத் திட்டத்தின் டெண்டர் விவகாரங்களில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து தமிழக அதிகாரிகள் சிலர், பிரதமர் மோடியின் கவனத்துக்கும் ரகசியமாகக் கொண்டு சென்றனர். இந்த நிலையில், மத்திய ஊழல்கள் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்துக்கும், மத்திய தகவல் தொடர்புத்துறைக்கும் இது குறித்த புகார்களை அனுப்பியது அறப்போர் இயக்கம். அதேசமயம், இந்த டெண்டர் முறைகேடுகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் தி.மு.க. எம்.பி.-யும் வழக்கறிஞருமான ஆர்.எஸ்.பாரதி.
 

dmk

 

இந்த நிலையில், பலமுறை தள்ளிவைக்கப்பட்டு வந்த இத்திட்டத்தின் டெண்டரை இறுதி செய்து. ஒப்பந்தக்காரரை (காண்ட்ராக்டர் ) முடிவு செய்வதற்காக கடந்த 12-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு டெண்டரை திறக்க எடப்பாடி திட்டமிட்டிருந்த நிலையில், 'டெண்டரை திறக்கக் கூடாது' என 4 மணிக்கு தடுத்து நிறுத்தியது மத்திய அரசு. இதனால், முதல்வர் எடப்பாடி, தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உதயக்குமார் மற்றும் அரசின் உயரதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

 

2,000 கோடி மதிப்பிலான திட்டத்தில் என்ன முறைகேடுகள் நடந்துள்ளன என அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசனிடம் நாம் பேசியபோது, "தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் ’தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனம்தான் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிறது. 1,950 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தின் டெண்டர்களை 4 டெண்டர்களாக (ஏ.பி.சி.டி.) வகைப்படுத்தினர். தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் செயற்குழுவால் இந்த டெண்டர்களும் அதன் விதிமுறைகளும் அங்கீகரிக்கப்பட்டு ஒப்புதலளிக்கப்பட்டன. அதன்படி, இதற்கான அறிவிப்பினை கடந்த டிசம்பர் 6ஆம்  தேதி வெளியிட்டிருந்தது ஃபைபர்நெட் கார்ப் பரேசன் .

dmk

 

குறிப்பிட்ட 2 நிறுவனங்களுக்கு டெண்டரை ஒதுக்க தீர்மானித்திருந்த தமிழக அரசு, சம்மந்தப்பட்ட உயரதிகாரிகளுக்கு இது தொடர்பாக அழுத்தம் தந்துள்ளது. அவர்கள் ஒப்புக்கொள்ளாததால் உயரதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்தார் தலைமைச் செயலாளர். ஃபைபர்நெட் கார்ப்ப ரேசனின் இயக்குநராக ரவிச்சந்திரன் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார். இதனை நாம் அம்பலப்படுத்தினோம்.

 

இதனால் இந்த டெண்டர் விவகாரங்களை கிடப்பில் வைத்த தமிழக அரசு, கரோனா வைரஸ் அதிகரிப்பில் நாடே தத்தளிக்கும் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு கடந்த ஏப்ரல் மாதம் சத்தமில்லாமல் மிகப்பெரிய மாற்றங்களை டெண்டர் விதிகளில் புகுத்தியது. குறிப்பாக, டெண்டரில் கலந்துகொள்ளும் நிறுவனங்களின் அனுபவ தேவையையும், குறைந்தபட்ச டேர்ன் ஓவர் தேவையையும் 300 சதவீதம் கூடுதலாக்கப்பட்டிருந்தன. இது தவிர, பி-வகை டெண்டரில், கடந்த 3 வருடங்களில் 615 கோடி டர்ன் ஓவர் இருக்க வேண்டும் என்கிற நிபந்தனையை, 3 வருடங்களிலும் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 615 கோடி இருக்க வேண்டும் எனத் திருத்தியிருந்தனர். அதேபோல, ஆப்டிகல் ஃபைபர் கேபிளை பதித்த அனுபவத் தேவையில், 3 ஆண்டுகளில் 204 கோடி மதிப்பிலான அனுபவம் இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு ஆண்டிலும் 204 கோடி ரூபாய் மதிப்பிலான அனுபவம் இருக்க வேண்டும் என விதிகளை மாற்றினர். இதேபோல, 4 வகையிலான டெண்டர்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.
 

admk

 

பொதுவாக, டெண்டர்களில் சிறிய வகை மாற்றங்கள் அனுமதிக்கப்படுவது இயல்பானது- ஏற்புடையது. ஆனால், தற்போது செய்திருப்பது மிகப்பெரிய திருத்தங்கள். ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தும் போதே அதற்கான திட்ட வரையறைகள், டெண்டர் மதிப்பீடுகள், நிபந்தனைகள், விதிகள் எல்லாவற்றையும் முடிவுசெய்த பிறகே முறையாக அறிவிக்கின்றனர். அப்படியிருக்கையில், திட்டமும் அதற்கான டெண்டரும் அறிவிக்கப்பட்ட பிறகு இடையில் திருத்தங்களும் மாற்றங்களும் செய்வது எதற்காக? ஆதாயம் இல்லாமல் இப்படி மாற்றங்களையும் திருத்தங்களையும் அரசு செய்திருக்க முடியாது. தமிழ்நாடு உள்கட்டமைப்பு வாரியத்தின் செயற்குழுவின் ஒப்புதலோடு அறிவிக்கப்பட்ட இந்த டெண்டரை, வாரியத்தின் சம்மதம் இல்லாமலே திருத்தம் செய்திருப்பது சட்ட விரோதம்.

 

மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகம், மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்திற்குப் புகார்கள் அனுப்பியிருந்தோம். எங்கள் புகார் மீதான விசாரணையை முடிக்கும் வரை டெண்டரை இறுதிச் செய்யக்கூடாது என கடந்த மாதம் மத்திய தகவல் தொடர்புத்துறை தமிழக அரசை எச்சரித்திருந்தது. அதனை மீறும் வகையில் கடந்த 12-ஆம் தேதி டெண்டரை திறக்க தமிழக அரசு முடிவு செய்திருந்ததை அறிந்து, டெண்டரை திறக்க அரைமணி நேரத்திற்கு முன்பாக தடை விதித்தது மத்திய அரசு. கரோனா சிக்கல்களைப் பயன்படுத்தி பல்வேறு டெண்டர் முறைகேடுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் எடப்பாடி அரசில் நடந்து வருகின்றன'' என்கிறார் விரிவாகவும் அதிரடியாகவும்.

 

இந்த டெண்டர் முறைகேடுகளுக்கு எதிராக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிடகோரி தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கின் விசாரணை 16-ஆம் தேதி வந்த போது, இதற்குப் பதிலளிக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

 

இந்த நிலையில், தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, ’இந்த டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக மத்திய அரசின் தொழில் மற்றும் உள்வர்த்தகத்தை மேம்படுத்து வதற்கான துறைக்கு (டி.பி.ஐ.ஐ.டி.) சென்ற புகார்களின் அடிப்படையில் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகத்துக்கும், தமிழக அரசிடமும் விளக்கம் கேட்டிருந்தது டி.பி.ஐ.ஐ.டி.! இது குறித்து தகவல் தொடர்புத் துறை அமைச்சகத்துக்கு விளக்கமளித்துள்ள ஃபைபர்நெட் கார்ப்பரேசன், விதிகளுக்கு உட்பட்டே டெண்டர் விதிகள் உருவாக்கப்பட்டதாகவும் எந்தத் தவறுகளும் நடக்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது. இதனை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. அதன் முடிவுகள் தெரிவதற்கு முன்பே டெண்டர் திறக்க தீர்மானித்ததால்தான் டி.பி.ஐ.ஐ.டி. அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளது'' என்கிறார்கள்.
 

http://onelink.to/nknapp


இதுகுறித்து தகவல்தொழில்நுட்ப அமைச்சர் ஆர்.பி. உதயக்குமாரிடம் கேட்டபோது, "கிராமங்களுக்கு இணைய வசதி என்பது தகவல் தொழில்நுட்பத்தில் மிகப் பெரிய புரட்சி. அதனை விரைந்து செயல்படுத்த மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அதற்காக அனுபவம் மற்றும் டர்ன் ஓவர் மதிப்பீடுகளில் சில மாற்றங்களை செய்ய வேண்டியதிருந்தது. மத்திய அரசிடம் தெரிவித்துவிட்டே நிபந்தனைகளில் திருத்தம் செய்யப்பட்டது. குறிப்பிட்ட நிறுவனத்துக்கேற்ப விதிகள் திருத்தம் செய்யப்பட்டது என்பதில் உண்மையில்லை. எந்த ஒரு டெண்டரிலிலும் ஏதேனும் ஒரு நிறுவனம்தான் தேர்வு செய்யப்படும். அப்படியானால் அந்த டெண்டர்களிலெல்லாம் தவறுகள் நடந்துள்ளது என அர்த்தமா? டெண்டர்களில் நாங்கள் வெளிப்படையாகத்தான் இருக்கிறோம். டெண்டரே முடிவு செய்யப்படாத நிலையில் ஊழல்கள் எப்படி நடக்கும்? இந்த டெண்டருக்கு மத்திய அரசு தடையெல்லாம் விதிக்கவில்லை. தி.மு.க.-வும் சில அமைப்புகளும் தங்களின் சுயநலன்களுக்காக இல்லாததை இருப்பதாக பூதாகரமாக்குகின்றன. அவர்களின் முகங்கள் நீதிமன்றத்தில் அம்பலமாகும்'' என்கிறார் அதிரடியாக.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்