ADVERTISEMENT

பிரதமர் மோடியை சித்த மருத்துவர்கள் சந்தித்ததன் பின்னணி... கரோனாவிற்கு தீர்வு கொடுக்கும் சித்த மருத்துவம்?

06:08 PM Apr 04, 2020 | Anonymous (not verified)

கரோனா வைரஸை அழிப்பதற்கான மருந்தினை கண்டுபிடிப்பதில் ஆங்கில மருத்துவ உலகம் போராடிக் கொண்டிருக்கும் சூழலில், தமிழகத்தின் பாரம்பரிய மூலிகை மருத்துவமான சித்தா, மற்றும் ஆயுர்வேதா உள்ளிட்ட மருத்துவத்தால் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியுமா என்பது குறித்து அந்தந்த மருத்துவத்துறை ஆராய்ச்சியாளர்களிடமும், நிபுணர்களிடமும் காணொலி காட்சி மூலம் விவாதித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

இதில் பங்கேற்ற சித்த மருத்துவ ஆராய்ச்சியாளரும், நிபுணருமான டாக்டர் சிவராமன் நம்மிடம் அது பற்றி விளக்கினார். பிரதமரின் காணொலியில் மத்திய அரசின் ஆயுஷ் துறையைச் சேர்ந்த மூத்த பேராசிரியர்கள் 12 பேர் கலந்துகொண்டனர். ஒவ்வொருவரும் 4 நிமிடங்கள் பேச வேண்டும் என பிரதமர் அலுவலகம் சொல்லியிருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


மத்திய சித்த மருத்துவ கவுன்சிலின் டைரக்டர் ஜெனரல் டாக்டர் கனகவல்லி, மாநில மருந்து உரிமை வழங்கும் அதிகாரியும் பேராசிரியருமான டாக்டர் பிச்சையா குமாருடன், முக்கிய சித்த மருத்துவ பயிற்சியாளர் எனும் அடிப்படையில், எனக்கும் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. எங்களது கலந்துரையாடலுக்குப் பிறகு நாங்கள் முன்வைத்த விஷயங்களை சித்த மருத்துவத்தின் மூத்த பேராசிரியரும் தேசிய சித்த மருத்துவ மருந்தியல் குழுவின் தலைவருமான ஜெயப்பிரகாஷ் நாராயாணன் பிரதமரிடம் எடுத்துச் சொல்லி நேரடியாக விவாதித்தார்.

பிரதமரிடம் அவர் பேசும்போது, "கரோனாவைத் தடுக்கும் மருந்துகள் சித்தாவில் உண்டு. பல்வேறு மூலிகைகளை வைத்து உருவாக்கப்படும் கபசுரக் குடிநீரை கரோனாவில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கரோனா தாக்குதலை தடுக்க முடியும். அதனை மாநில அரசுக்களுக்கு மத்திய அரசு பரிந்துரைப்பது அவசியம். மேலும், நவீன மருத்துவத்துடன் கூட்டாக, இந்நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கும் ஆய்வு செய்வதற்குமான வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்' என கேட்டுக் கொண்டார். முந்தைய காலங்களில் நவீன மருத்துவத்துடன் இணைந்து நிலவேம்பைச் சிறப்பாக கையாண்டு தமிழகம் முழுவதும் டெங்குவை எதிர்கொண்டதையும் சுட்டிக்காட்டிப் பேசினார் ஜெயப்பிரகாஷ் நாராயணன். பிரதமரும் அதைக் குறித்துக்கொண்டார்.

டெல்லி, கோவை, பெங்களூர், ஹரித்துவார் உள்ளிட்ட நகரங்களிலுள்ள சித்தா-ஆயுர்வேதா பேராசிரியர்கள் பலரின் கருத்துகளையும் குறிப்பெடுத்துக்கொண்ட பிரதமர், நெருக்கடியான இந்த நேரத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா, ஹோமியோபதி துறைகளின் பங்களிப்பு மிக முக்கியம். ஆனால், ஆதாரப்பூர்வமான கண்டுப்பிடிப்பும் ஆராய்ச்சியும் இருக்க வேண்டும் என்பதை அழுத்தமாக விவரித்தார் என்கிறார் டாக்டர் சிவராமன்.



இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் குறித்து அவரிடம் பேசியபோது, "உலகம் முழுவதும் இதன் தாக்குதல் குறித்து அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் நோய் பரவுதல் மற்றும் அதன் பொருளாதாரம் மற்றும் கொள்கைகள் பிரிவின் ஆய்வுத் துறை (சி.டி.டி.இ.பி.) பல ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. அந்த துறையின் வல்லுநர்கள் பல எச்சரிக்கைகளை இந்தியாவுக்கு வழங்கியுள்ளனர். அதில் மிக முக்கியமானது தற்போதிருக்கும் 21 நாள் ஊரடங்கு முக்கியமென்றாலும் அதோடு இந்த வைரஸ் நின்று விடாது'' எனச் சொல்கின்றனர்.

மக்களிடம் அலட்சியம் இருக்கக்கூடாது. ஊரடங்கு முடியும் ஏப்ரல் 14-க்கு பிறகு சில ஆபத்துகள் உருவாக வாய்ப்பு அதிகம் என்றும் ஆய்வு சொல்கிறது. சமூக பரவலின் வீரியம் அதிகமாகும்போது எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்கும், தீவிர மருத்துவம் தேவைப்படும். அத்தனைப் பேருக்கும் அவசரமாக சிகிச்சை செய்ய வேண்டியதிருக்கும் என ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு கூறுகிறது. அதனால், ஏப்ரல் துவக்கத்திலிருந்து எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க, நாம் வீட்டுக்குள்ளே சுய பாதுகாப்பில் இருப்பது மட்டுமே ஒரே வழி!

அதேசமயம், தட்ப வெட்பத்திற்கும் காற்றின் நீர்த்துவத்துக்கும் வைரஸ் பரவலுக்கும் உள்ள தொடர்பு குறித்த ஆய்வின் முடிவுகள் சின்னதாக ஒரு ஆறுதலை தருகிறது. மெசஷுட்ஸ் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வில், 6 டிகிரி முதல் 18 டிகிரி வரை தட்பவெட்பமுள்ள பகுதியிலும், காற்றில் குறை நீர்மமுள்ள பகுதியிலும்தான் கரோனா வைரஸின் உச்சக்கட்ட உக்கிர தாக்குதல் மற்றும் உயிரிழப்பு அதிகம் நிகழ்கிறது என்பதை கணக்கிட்டுள்ளனர். அதேசமயம், இந்தியாவில் நடக்கும் அனுபவத்தை வைத்துத்தான் முடிவுக்கு வர முடியும் என்கிறது ஆய்வு.

கோடையில் இத்தொற்று குறையும் என்கிற கருத்தை உலக சுகாதார நிறுவனம் ஏற்காத நிலையில், 25 முதல் 35 டிகிரி வெப்பமுள்ள தமிழகத்தில் வைரஸின் பரவுதல் குறையக்கூடும் என்கிற நம்பிக்கையும் இருக்கத்தான் செய்கிறது. எப்படி இருப்பினும் ஏப்ரல் 14 வரை தனித்திருப்பதும் வீட்டுக்குள் சுய பாதுகாப்புடன் இருப்பதும்தான் இப்போதைக்கு சரியான தீர்வு. பிரதமர் மோடியின் வலியுறுத்தலும் அதுவாகத்தான் இருக்கிறது. அதனால் வீதியில் நடமாடாதீர்கள், நீங்கள் போகும் பாதையில் காவலர்கள் இல்லாமல் இருக்கலாம் ஆனால், கரோனா என்கிற காலன் இருக்கக்கூடும்'' என எச்சரிக்கிறார் டாக்டர் சிவராமன்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT