ADVERTISEMENT

சீன அதிபரை விட மோடிக்கே கூடுதல் விளம்பரம்...சந்திப்பில் அரங்கேறிய வெளிவராத கேமரா ஆக்ஷன்!

01:04 PM Oct 17, 2019 | Anonymous (not verified)

கலைநகரமான மாமல்லபுரத்தை உலகறியச் செய்திருக்கிறது, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடியின் விசிட். மோடி-ஜின்பிங் இடையிலான முதல் முறைசாரா சந்திப்பு சீனாவில் நடந்தபோது, இந்தியாவிற்கு வருமாறு ஜின்பிங்கிற்கு அழைப்பு விடுத்திருந்தார் மோடி. இதை ஜின்பிங்கும் ஏற்றுக்கொண்டார். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்தபோதுதான், மோடியின் சொந்தத் தொகுதியான வாரணாசி மற்றும் மாமல்லபுரம் பகுதிகள் மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டன. அந்த இரண்டில், பல நூற்றாண்டு பாரம்பரிய வரலாற்று ரீதியான தொடர்பு கொண்டிருக்கும் மாமல்லபுரத்தைத் தேர்வுசெய்தது சீன அரசு.

ADVERTISEMENT



உடனடியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான குழு, தமிழகம் வந்து ஆய்வுகளைத் தொடங்கியது. GRT, Shelton, Fishermans Cove உள்ளிட்ட சில ஐந்து நட்சத்திர ஓட்டல்களின் பட்டியல் எடுக்கப்பட்டு அதிலிருந்து Fishermans Cove ஓட்டலை மோடிக் கும், ஐ.டி.சி. சோழா ஓட்டலை ஜின்பிங்கிற்கும் இறுதிசெய்தார்கள். மத்தியக் குழுவினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினாலும், தமிழக டி.ஜி.பி. திரிபாதி தலைமையிலான குழுவும் பணிகளை முடுக்கிவிட்டிருந்தது. 17 ஆயிரம் காவலர்கள் பணியில் இருந்தனர். கடற்கரை கிராமங்களில் ஐந்து வீடுகளுக்கு ஒரு போலீஸ் வீதம் ஆவணங்களைச் சரிபார்க்கும் பணிகளை மேற்கொண்டார் வடக்கு மண்டல ஐ.ஜி.நாகராஜ்.

ADVERTISEMENT



ஐ.டி.சி. சோழா ஓட்டலில் இருந்து மாமல்லபுரம் வரை சீன அதிபர் காரில் பயணித்த 44 கி.மீ. தூரத்திற்கும் 50 அடிக்கு 4 சி.சி.டி.வி. கேமராக்கள் அமைத்து, கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிப்பு வேலைகள் நடந்தன. சாதாரண நாட்களிலேயே போக்குவரத்து நெரிசல் மோசமாக இருக்கும் சென்னை நகரத்தில், உயர்மட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ள நேரத்தை சமாளித்தது பற்றி கூடுதல் ஆணையர் அருள் பேசியபோது, "இதுவரை சென்னை வந்த எந்தத் தலைவரும் தரைவழியாக பயணம் மேற்கொண்டதில்லை. அதுவும் வார இறுதி நாட்களில் இந்த சந்திப்பு நடந்ததால், மிகவும் சவாலாக இருந்தது'' என கூறுகிறார்.



தாம்பரம் - பிராட்வே, தாம்பரம் - கோயம்பேடு, தாம்பரம் - பூந்தமல்லி என எல்லா பகுதிகளிலுமே பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தார்கள். இந்தக் கொடுமைக்கு மத்தியில் வாகனசோதனை என்ற பெயரில் வேறு கடுப்பேற்றினார்கள். ஓ.எம்.ஆர்., ஈ.சி. ஆர். பகுதிகளில் கடைகள் மூடப்பட்டன. மூன்று நாட் களாக மீனவர்களும் கட லுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1932-ல் உருவாக்கப்பட்ட வெள்ளிக் கிழமை பல்லாவரம் சந்தை மூடப்பட்டது வரலாற்றிலேயே இதுதான் முதன் முறை.



சீன அதிபர், பிரதமர், ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் வரவேற்க, பூரண கும்பம் ஏந்தியபடி நின்ற அர்ச்சகர்களை அலட்சியமாகப் பார்த்தபடி அதிபர் நகர்ந்தது தனி கவனம் பெற்றது. பிரதமர் வழிகாட்டுதலில் அதிபருக்கு மாமல்லபுரம் கலையழகு விவரிக்கப்பட, மொழிபெயர்ப்பாளர்களும் உடனிருந்தனர். கலை நிகழ்ச்சிகளும் களைகட்டின. கோவிலுக்கு அருகே அமைக்கப்பட்ட ஸ்பெஷல் குடிலில் அதிபருக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டது. பிரதமர் மோடி தான் தங்கியிருந்த தாஜ் ஃபிஷர் மேன்ஸ் கோவ் ஓட்டலில், 12-ந்தேதி அதிகாலையில் வாக்கிங் சென்றபோது, அங்கு கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தினார். இதுதொடர்பான வீடியோக்களும், புகைப் படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.



இதுபற்றி பேசிய ஓட்டல் நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர், "மோடி மாமல்லபுரம் வரப் போவது உறுதியானதும், கோவளத்தில் இருக்கும் ஐந்து நட்சத்திர ஓட்டலான தாஜ் ஃபிஷர்மேன்ஸ் கோவ்ல் தங்கப்போகிறார் என்பது இரண்டு மாதங்களுக்கு முன்பே முடிவானது. அப்போதே மத்தியஅரசு, தமிழக உள்ளாட்சித்துறை, காவல்துறை இவர்களோடு சேர்த்து, அத்திவரதர் தரிசனப் பணிகள் முடிந்த கையோடு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் என அனைவரும் இந்த ஓட்டலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு இங்குவந்த மும்பை தாஜ் குரூப்ஸ் ஓட்டலின் பொது மேலாளர், தலைவர்களுக்கு பரிமாறப்படும் உணவு மற்றும் சந்திக்கும் இடங்கள் பற்றிய ஆலோசனைகளை மேற்கொண்டார்.



தாஜ் ஃபிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலுக்கும், கடற்கரைக்கும் 150-200 மீட்டர் இடைவெளி. ஒருபுறம் குப்பம் தூண்டில் வளைவுப் பகுதியும், இன்னொருபுறம் முட்டுக்காடு கழிமுகமும் இருக்க, இதற்கிடைப்பட்ட ஒரு கி.மீ. நீளமுள்ள கடற்கரை ஃபிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டல் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதி. மிக ரம்மியமான இந்தக் கடல்பகுதி ஆபத்தான ஆழமிக்கது. இந்தக் கடலில் இறங்கிக் குளித்தபோதுதான் தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.கந்தசாமி உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்குப் பிறகு நன்கு பயிற்சிபெற்ற நீச்சல் வீரர்களின் கண்காணிப்பிலேயே வாடிக்கையாளர்களை குளிக்க அனுமதிக்கிறது ஓட்டல் நிர்வாகம்.

ஓட்டல் நிர்வாகத்தில் உள்ள கடற்கரையைப் பொறுத்தவரை முழுக்க முழுக்க இயந்திரங்களைக் கொண்டே தூய்மைப் பணிகளை மேற்கொள்கிறோம். வெளிநாட்டவர்கள் சன் பாத் எடுப்பதால், மணல்கூட சுத்தமாகவே இருக்கும். பௌர்ணமி நாட்களில் ஆக்ரோஷம் அடையும் அலைகளின் வழியே கடற்கரையில் வீசப்படும் குப்பைகளை அவ்வப்போது அகற்றிவிடுகிறார்கள். 12-ந்தேதி காலை குப்பம் பகுதியில் இருந்து கையில் அக்குபிரஷர் குச்சியோடு நடைபயிற்சி சென்ற மோடி, கடற்கரையின் அழகைக் காட்ட வைக்கப்பட்டிருக்கும் ஒளிவிளக்குகளைச் சுற்றியிருந்த ப்ளாஸ்டிக் கவரைக் கையிலெடுத்து குப்பைகளை அகற்றத் தொடங்கியிருக்கிறார். அப்போது அவருடன் ஏழுபேர் இருந்திருக்கிறார்கள். மோடியின் சிறப்பு அழைப்பின்பேரில் அங்கு வந்திருந்த இஸ்ரோ சிவனும் அப்போது உடனிருந்தார்.

ஆனால், பௌர்ணமிக்கு முன்பே இவ்வளவு குப்பைகளைக் கொட்டியதன் பின்னணியில் கடற்படையினரின் வேலை இருப்பதாக சொல்கிறார்கள். அன்றைய தினம் கடற்கரையில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் கடற்படைக்குச் சொந்தமான மூன்று ரோந்துக் கப்பல்களிலிருந்து குப்பைகளைக் கொட்டியிருக்கலாம் என்றும், மோடி அகற்றியவற்றில் இருந்த நீலநிற பாட்டில்கள் இங்கே வர வாய்ப்பேயில்லை'' என்றார் நம்மிடம். "கடற்கரையின் இருபுறங்களிலும் உள்ள குப்பம் மற்றும் முட்டுக்காடு பகுதிகளில் உள்ள மக்கள், ஒரு மாதத்திற்கு முன்பே கடற்கரைக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. இதில் எங்கிருந்து நாங்கள் குப்பைகளைக் கொட்டப்போகிறோம்'' என்கிறார்கள் அந்தப் பகுதிவாசிகள்.

மோடி கிளம்பிய பிறகு நடந்த கூத்துகளை விவரித்த ஓட்டல் நிர்வாகத்தினர், "மோடி ஜின்பிங் சந்திப்பு முடிந்து ஓட்டலைவிட்டு வெளியேறிய அடுத்த சில நிமிடங்களிலேயே வாழை, கரும்புகளால் போடப்பட்டிருந்த அலங்காரங்களை அகற்றிவிட்டார்கள். ஜின்பிங் வருகைக்காகவே பிரத்யேகமாகக் கொண்டுவரப்பட்ட புத்தர் சிலையையும் இருட்டில் கிடக்கிறது. எப்போதும் சுத்தமாக இருக்கும் எங்கள் ஓட்டலை அசுத்தமாகக் காண்பித்து, அவர்கள் கிளம்பியதுமே அசுத்தமாக ஆக்கி டன் கணக்கில் குப்பைகளை போட்டுவிட்டுச் சென்றார்கள்’’ என்றார்கள்.


தலைவர்களின் சந்திப்புக்காக ஒப்பற்ற அழகு கொண்ட மாமல்லபுரம், அரசின் மெனக்கிடல்களால் கூடுதல் அழகு பெற்றிருந்தது. செய்தி ஊடகங்களும் இதனை நொடிக்கு நொடி காட்டியதால் ஆர்வம் அதிகமான பொதுமக்கள், ஞாயிற்றுக்கிழமை அன்று மாமல்லபுரத்தில் கூடினார்கள். தமிழகத்தில் அத்திவரதருக்குப் பிறகு மாமல்லபுரத்தில்தான் கூட்டம் கூடியது என்று சொல்லுமளவுக்கு மாமல்லபுரம் கடற்கரையே மக்கள்திரளால் அலைமோதியது. ஆனால், அவர்கள் காணவந்த எந்த அழகையும் விட்டுவைக்கவில்லை அரசு நிர்வாகம். செயற்கைப் புல்தரைகள் அடுத்த நாளே கட்டாந்தரையாகின. ஒளிவெள்ளத்தில் ஜொலித்த பாறை சிற்பங்கள், புத்தர் சிலைகள், பந்தங்கள் எல்லாம் இருளடைந்து கிடந்தன. எல்லா அலங்கார ஏற்பாடுகளும் அப்புறப்படுத்தப்பட்டு, குப்பை மேடுகள் போல காட்சியளித்தன.


இருநாட்டு வர்த்தகம், தீவிரவாத ஒழிப்பு, எல்லைப் பிரச்சனையில் தீர்வு என ஏராளமான விஷயங்கள் இதில் இருந்தாலும், தமிழ்நாட்டுக்கும் சீனாவின் தென்கிழக்குக்கரை மாகாணமான ஃபூஜியனுக்கும் (Fujian) இடையில் ஒரு உறவை உருவாக்குவதற்கான முன்னகர்வு முன்மொழியப்பட்டுள்ளது. இவ்விரு மாநிலங்களையும் சகோதரி மாநிலங்கள் (sister states)என்று அறிவித்திருக்கிறார்கள். 1200 ஆண்டுகால வர்த்தக உறவு இந்த இரு நகரங்களுக்கும் இருந்திருக்கிறது. செங்கிஸ்கானின் பேரர் குப்ளாய்கான் காலத்தில் சீனர்களுக்கும் தமிழர்களுக்கும் நெருங்கிய வணிக உறவு இருந்திருக்கிறது. அந்த உறவை நீட்டித்துக்கொள்ள இப்போதும் சீனா விரும்புகிறது என்பதையே இந்த சந்திப்பு உணர்த்துகிறது. நாளைய பலன்கள் வரவேற்பிற்குரியவை, அதற்காக அரங்கேற்றப்பட்ட காட்சிகள் பலவும் அரசியல் விளம்பரமாகவே அமைந்துவிட்டன. சீன அதிபரை விட மோடிக்கே கூடுதல் விளம்பரம் கிடைத்ததுதான் மாமல்லபுரம் விசிட்டின் உடனடி பலன்.

- அரவிந்த், மதிவாணன்
படங்கள்: ஸ்டாலின், குமரேஷ்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT