ADVERTISEMENT

தவறாக கணித்த அமித்ஷா, மோடி... பாஜகவிற்கு செக் வைக்கும் அரசியல் மூவ்... வீழ்த்திய சரத் பவார்!

11:13 AM Dec 02, 2019 | Anonymous (not verified)

"அரசியல் சாணக்கியர்' என வர்ணிக்கப்பட்ட அமித்ஷாவின் திட்டங்கள் மகாராஷ்டிராவில் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. மோடி- அமித்ஷாவுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க் கட்சிகள் ஒன்றிணையாத சூழலில், மகாராஷ்ட்ராவில் ஏற்பட்டுள்ள திருப்பங்கள் அந்த ஒற்றுமையை இனி கொண்டுவரும் என்கிறார்கள் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸார்.

ADVERTISEMENT


மகாராஷ்ட்ராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இணைந்த கூட்டணியை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்க ஜனாதிபதி ஆட்சியையும் அதன்பிறகு பா.ஜ.க.வின் ஆட்சியையும் அமல்படுத்தினார் பிரதமர் மோடி. இது, தேசம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்த வழக்கும், நீதிபதிகள் கொடுத்த உத்தரவும் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமலே முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும், துணைமுதல்வர் அஜித்பவாரும் பதவியை ராஜினாமா செய்தார்கள்.

ADVERTISEMENT


இதனால், சட்டமன்ற ஜனநாயகம் மீண்டும் உயிர்ப்பித்தது. சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே தலைமையிலான, மாநிலத்துக்கான மேம்பாட்டு முன்னணி ‘தங்களது கூட்டணி ஆட்சியை அமைத்தது. மகாராஷ்ட்ரா முதல்வராக பதவியேற்றார் உத்தவ்தாக்கரே. இந்த விழாவில் கலந்துகொள்ள தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், தெலுங்கு தேசம், சி.பி.ஐ., சி.பி.எம். உள்ளிட்ட பா.ஜ.க.வுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளையும் அழைத்திருந்தார் தாக்கரே. ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் அவரை வாழ்த்தியிருக்கின்றன. விழாவில் கலந்துகொள்ள மும்பை சென்றார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். மாநில கட்சிகளின் தலைவர்கள் பலரும் விழாவில் பங்கேற்றனர்.



இது குறித்து தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவனிடம் பேசியபோது, "மோடி அமித்ஷாவின் அதிகாரமும் திட்டமும் பா.ஜ.க.வின் இறுமாப்பும் மகாராஷ்ட்ராவில் வீழ்த்தப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதற்கு உத்தவ்தாக்கரேவின் பதவியேற்பு விழா அச்சாரமாக இருக்கும்'' என்கிறார். சோனியாவும் ராகுல்காந்தியும் தனது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென விரும்பிய தாக்கரே, சோனியாவை தொடர்பு கொண்டு பேசினார். அந்த பேச்சு 20 நிமிடங்கள் நீடித்திருக்கிறது.

அது குறித்து நாம் விசாரித்தபோது, "தனது அமைச்சரவையை பற்றி சோனியாவிடம் விவரித்திருந்தார் தாக்கரே. அப்போது, "பா.ஜ.க.வோடு இணைந்து இதுவரை ஆட்சி செய்தீர்கள். யாரை எதிர்த்து நீங்கள் மக்களிடம் வாக்கு சேகரித்தீர்களோ அவர்களோடு இணைந்து முதன் முதலாக உங்கள் தலைமையில் தற்போது ஆட்சி அமைக்கிறீர்கள். அதனால், பா.ஜ.க. ஆட்சியை போலில்லாமல் சிறந்த ஆட்சியை மக்களுக்கு கொடுங்கள்' என சொல்லியிருக்கிறார் சோனியா. அவரது அட்வைஸை ஏற்றுக்கொண்ட தாக்கரே, கடந்த கால நிகழ்வுகள் குறித்து வருத்தமான குரலில் பேசியதுடன் "ஒரு நல்ல ஆட்சியை மராத்தாவில் நிலை நிறுத்துவேன், பா.ஜ.க.வின் துரோகத்தை மக்களிடம் அம்பலப்படுத்துவதும் எனது கடமை' என்றிருக்கிறார். மேலும், "பா.ஜ.க.வுக்கு எதிரான எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமையை ஏற்படுத்துவதும் முக்கிய பொறுப்பாக உணர்கிறேன்' எனவும் சொல்லியுள்ளார் அவர்'' என்கிறார்கள் தங்களின் காங்கிரஸ் மேலிடத்தோடு தொடர்புடைய தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள்.


முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும் கட்சிகளின் தலைவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதுடன் அவர்களுடன் தனித்தனியாக கலந்துரையாடவும் ஏற்பாடு செய்தார் தாக்கரே. குறிப்பாக, நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலினின் வருகை மிக முக்கியமானது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.


மேலும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை மோடியும் அமித்ஷாவும் உற்றுக் கவனிக்கத் துவங்கியிருப்பதாகச் சொல்லும் அரசியல் ஆய்வாளர்கள், அறுபது ஆண்டுகால அரசியல் சாணக்கியரான சரத்பவாரின் மூவ்களை மோடியும் அமித்ஷாவும் தவறாக எடை போட்டதும், அஜித் பவாரின் பின்னணி பலத்தை யோசிக்காமல் அதிகம் நம்பியதும் பா.ஜ.க.வின் சறுக்கல்களுக்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.

ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வந்ததும், அது நள்ளிரவில் விலக்கிக்கொள்ளப்பட்டதும் அவசரம் அவசரமாக தேவேந்திரபட்னாவிஸை முதல்வராக பதவியேற்க வைத்ததும், தேசியவாத காங்கிரசை உடைக்க நினைத்த முயற்சியும் மோடி, அமித்ஷாவின் வியூகங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியதுடன் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வழி வகுத்திருக்கிறது. அத்துடன், அஜித் பவார் மீதான ஊழல் வழக்குகளும் வாபஸ் ஆகியுள்ளன.

இதற்கிடையே, சிவசேனாவின் அடிப்படை கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும் தாக்கரேவுக்கு ஆட்சியை சுமுகமாக நடத்திச் செல்வது பெரிய சவால்தான். வலிமையான அரசியல் அனுபவம் கொண்ட சரத்பவாரை சமாளித்து ஆட்சியை நகர்த்துவதில் இருக்கிறது தாக்கரேவின் அரசியல். அதனால், தங்களின் ராஜதந்திரம் தோற்றுப் போனதில் அப்செட்டான மோடியும் அமித்ஷாவும், தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சி முறையின் அடுத்த கட்டத்தை கவனித்து அதற்கேற்ப காய்களை நகர்த்த காத்திருக்கிறார்கள். கர்நாடகாவில் பதுங்கி பாய்ந்தது போல மகாராஷ்ட்ராவுக்கும் காலம் வரும் என காத்திருக்கிறது பா.ஜ.க. தலைமை!


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT