Advertisment

அரசு அதிகாரிகளை திணறடிக்கும் நவீன கொள்ளையர்கள்

விழுப்புரம் - கள்ளக்குறிச்சி - உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் தினசரி கொள்ளை சம்பவம் தொடர்கதையாக உள்ளது. இதில் விசேஷம் என்னவென்றால் கொள்ளையர்கள் திருடும் வீடுகள் அனைத்துமே அரசு அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், கார் வைத்துள்ள பெரிய வீடுகளை மட்டுமே நோட்டமிட்டு கொள்ளையடித்து வருகிறார்கள்.

Advertisment

home

கடந்த 4ஆம் தேதி முதல் இன்று வரை சுமார் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளையர்கள் விளையாடியுள்ளனர். விழுப்புரத்தில் டாக்டர் இனியவன், டாக்டர் சுந்தரராஜன் வீடுகளில் 60 பவுன் நகை பணம் கொள்ளை, புது பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள மினி தொழிற்சாலையில் 12 லட்சம் பணம்,நகை கொள்ளை, மஞ்சு நகர் பகுதியில் குடியிருக்கும் நடமாடும் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் வீட்டில் 70 பவுன் தங்க நகை, 11 கிலோ வெள்ளி மற்றும் 60 ஆயிரம் ரொக்கம் கொள்ளை, புதுக்கோட்டையில் மாவட்டக் கல்வி அதிகாரியாக உள்ள விஜயலட்சுமி என்பவரின் விழுப்புரம் வீட்டில் பணம் நகை கொள்ளை, இந்த வீடு மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தின் பின்பகுதியில் உள்ளது.

Advertisment

home

சுரேஷ், ஜெயக்குமார், மோகன்

உளுந்தூர்பேட்டையில் ஆறாம் தேதி இரவு மட்டும் அன்னை தெரசா நகரிலுள்ள ஹரி கிருஷ்ணன் வீட்டில் சுமார் 100 பவுன் தங்க நகைகள், 50 லட்சம் மதிப்புள்ள வெள்ளிபொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இவர் சேலம் மாவட்டத்தில் முதுநிலை வணிக மேலாளர் பணியில் உள்ளவர். இவரது அடுத்த வீட்டில் உள்ளவர் சார்பதிவாளர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற சேகர். இவரது வீட்டிலும் பல லட்சம் மதிப்புள்ள நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இவர் வீட்டையடுத்து உள்ள பாலாஜி டிரைவிங் ஸ்கூல் நடத்தும் ராஜராஜன் வீட்டிலும் பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதே பகுதியில் உள்ள ஒரு முஸ்லிம் பிரமுகர் வீட்டிலும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரே இரவில் உளுந்தூர்பேட்டையில் அடுத்தடுத்து நான்கு வீடுகளில் மிக சாவகாசமாக பூட்டை உடைத்து வீட்டுக்குள் இருந்த நகை பணம் என கோடிக்கணக்கில் அள்ளி சென்றுள்ளனர்.

இப்படி தொடர் கொள்ளையில் ஈடுபடுபவர்களை பிடிக்க தனி போலீஸ் கிரைம் டீம் இருந்தும் கொள்ளையர்களை பிடிபடவில்லை. இது ஒரு பக்கம் என்றால் கொள்ளையர்கள் மிகச்சரியாக கார் வைத்துள்ள, சிசிடிவி கேமரா பொருத்தி உள்ள வீடுகளாக பார்த்து பார்த்து கொள்ளையடிக்கிறார்கள். மேலும் கொள்ளையடிக்க செல்லும் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள பதிவுகளையும் கையோடு கழட்டி எடுத்துக்கொண்டு போய்விடுகிறார்கள். இப்படி தடயமே இல்லாமல் மிக சாமர்த்தியமாக தைரியமாக கொள்ளை வேட்டை நடத்துகிறார்கள். காவல்துறை தடுமாறுகிறது என்கிறார் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த ஜெயக்குமார்.

குறிப்பாக இதுபோன்ற கொள்ளையர்கள் சாதாரண கொள்ளையர்கள் இல்லை. இவர்கள் கார் போன்ற வாகனங்களில் வந்து சாவகாசமாக கொள்ளையடித்து செல்கிறார்கள். ஆனால் காவல்துறை, அப்பாவிகள் சிலரை பிடித்து இவர்கள் கொள்ளையர்கள் என போட்டோவுக்கு போஸ் கொடுத்து கணக்கு காட்டுகிறது. உண்மையான கொள்ளையர்களை பிடிக்காததால் தொடர் கொள்ளையில் திணறுகிறது விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் என்கிறார் சுரேஷ்.

home

பொதுவாக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இருந்தால் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அதன் மூலம் விரைவில் கண்டுபிடித்துவிடலாம் என்று காவல்துறை உட்பட எல்லோரும் நம்புகிறோம். ஆனால் அந்த நவீன முறையையும் உடைத்து எறிகிறார்கள் கொள்ளையர்கள். சிசிடிவி கேமரா உள்ள வீடுகளிலும் கார் போன்ற வசதி படைத்தவர்கள் வீடுகளையும் மட்டுமே நோட்டமிட்டு அவர்கள் வெளியூர் செல்வதை உறுதிப்படுத்திக்கொண்டு கொள்ளையடித்து செல்கிறார்கள். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி இருந்தும் பயன் இல்லாத நிலை உருவாகி வருகிறது. காவல்துறை குற்றவாளிகளை பிடிக்க பல நவீன முறைகளை கையாண்டு வரும் நிலையில், அதையும் உடைத்தெறிந்து தடயங்கள் இல்லாமல் கொள்ளை சம்பவங்களை நடத்துகிறார்கள் நவீன கொள்ளையர்கள் என்கிறார் மோகன்.

மேலும் அப்பாவிகளை பிடித்து கொள்ளையர்களாக சித்தரித்து காண்பிக்காமல் காவல்துறைக்கு சவால் விடும் இந்த உண்மையான கொள்ளையர்களை காவல்துறையினர் எப்போது பிடிப்பார்கள் என்கிறார் மோகன்.

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் கொள்ளைபோன அரசு அதிகாரிகள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் காவல் துறையில் கொள்ளை போன நகை பணம் மதிப்புகளை குறைத்து சொல்கிறார்கள். இதில் சிலர் போலீஸிடம் புகார் கொடுக்கவே தயங்குகிறார்கள். காரணம் தாங்கள் முறைகேடாக சம்பாதித்த பணம் விவரம் வெளியே தெரிந்துவிடும் அதை வைத்து அமலாக்கத்துறை உள்ளே புகுந்து குடைய ஆரம்பித்து விடும் என்று மிரண்டு போய் பயப்படுகிறார்கள்.

கொள்ளை போன வீடுகளுக்கு சென்று பத்திரிகை மீடியாக்கள் படம் எடுத்த பிறகு கொள்ளை நடந்த விவரம் பற்றி கேள்வி கேட்டால் நாங்களெல்லாம் காவல்துறையிடம் சொல்லிக் கொள்கிறோம் நீங்கள் புறப்படுங்கள் என்று துரத்துகிறார்கள். இதையெல்லாம் நன்றாக யோசித்து விசாரித்து விட்டுதான் கொள்ளையர்கள் அரசு அதிகாரிகள் அரசு ஊழியர்கள் பற்றி விவரமாக தெரிந்துகொண்டே அவர்கள் வீடுகளாக பார்த்து பார்த்து கொள்ளையர்கள் துணிந்து கொள்ளையடிக்கிறார்கள். அவர்கள் பிடிபட்டாலும் கூட கொள்ளை போன பணம் நகைகளின் உண்மை மதிப்பு காவல்துறையினர் வெளியே காட்டமாட்டார்கள். கொள்ளையர்களை காவல்துறை பிடித்தாலும் கூட அவர்களிடம் ரெக்கவரி செய்யும் பணம் நகைகள் உண்மையான கணக்கை வெளியே காட்டாமல் அவர்களே ஆட்டையபோடும் நிலையும் உள்ளது.

விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் கிரிமினல் குற்றவாளிகளை புலனாய்வு செய்து பிடிப்பதில் கைதேர்ந்தவர். ஆனால் அவருக்கே டாட்டா காட்டுகிறார்கள் இந்த நவீன கொள்ளையர்கள். அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய எஸ்பி ஜெயச்சந்திரன் கொள்ளையர்களை பிடிப்பதில் இனிமேல்தான் தீவிரம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளார். முதலில் கொள்ளையர்களை இவர்கள் பிடிப்பதற்கு முன்பு ஏற்கனவே குற்றவாளிகளை பிடிப்பதற்கு என்று மாவட்ட அளவில் தனி கிரைம் டீம் உள்ளது. அவர்கள் மீது பொதுமக்களின் சந்தேகப் பார்வை பலமாக திரும்பியுள்ளது.

காரணம். அந்த டீமில் உள்ள ஒவ்வொருவரும் கார், பங்களா போன்ற வீடுகள் என ஆடம்பரமாக வாழ்கிறார்கள். சாதாரணமாக கிரேடு 1, கிரேடு 2 என்ற காவலர் நிலையில் உள்ளவர்கள் கூட கார் பங்களா என வாழ்வது பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. முதலில் இந்த டீமில் உள்ளவர்களை காவல்துறை தீவிர விசாரணை செய்து, இவர்களுக்கு எப்படி இவ்வளவு சொத்துகள் வந்தது என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்து நேர்மையான காவல்துறையினரை நியமித்து இந்த நவீன கொள்ளையர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்களில் சிலர்.

government officials house police robbers
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe