m.k.stalin
Advertisment
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. திமுக ஆட்சி அமைக்கவிருப்பதுஉறுதியாகியிருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நாடெங்கிலுமிருந்துவாழ்த்துகள் வந்தபடி இருக்கின்றன. கடந்த 2016 தேர்தலிலேயேதமிழக வழக்கப்படி ஆட்சி மாற்றம் நடந்துதிமுக ஆட்சியை பிடிக்கும் என்றேநம்பப்பட்டது. ஸ்டாலின், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தார். ஆனால், மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்தது. கட்சிக்குள்ளும் ஸ்டாலினுக்கு செயல்தலைவர்பதவி கிடைத்தது கிட்டத்தட்ட 50 ஆண்டு பொதுவாழ்க்கைக்குப்பிறகுதான். கலைஞர் மறைந்த பின் திமுகவின் தலைவரானார் ஸ்டாலின்.
ஸ்டாலின் அரசியல் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டம் அவர் திமுகவின் இளைஞரணி தலைவராக இருந்த காலகட்டம். அவருக்கு இளைஞரணி செயலாளர் பதவி அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை. அதற்குப்பின் 20 ஆண்டுகால உழைப்பு இருந்தது. சிறு வயதிலிருந்தே ஸ்டாலின் அரசியல் பணிகளை மேற்கொண்டுவந்தார். அவற்றில் முக்கியமானது அவர் இளைஞர் திமுக என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியது.
ஸ்டாலின் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, அதாவது 1967-68ல் இளைஞர் திமுக என்ற அமைப்பை கோபாலபுரத்திலுள்ள ஒரு முடிதிருத்தும் கடையில் தெரு நண்பர்களுடன் தொடங்கினார். பள்ளிக்கூடத்திலிருக்கும் நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் கட்சி பணிகளில் ஈடுபட்டார். பெரியார், அண்ணா பிறந்தநாளின்போது கொடியேற்றுவது, இனிப்புகள் வழங்குவது, கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வது, கட்சிக்கு நிதி திரட்டுவது போன்ற பணிகளை தொடக்க காலத்தில் செய்து வந்தார். 1973ல் திமுகவின் பொதுக்குழு உறுப்பினரானார்.
Advertisment
stalin kalaignar old pic
அப்போது நடந்த சென்னை மாநகராட்சி தேர்தலின்போது, கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற பெயரில் நண்பர்களுடன் தெருத்தெருவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அடுத்தது அவர் கையிலெடுத்தது நாடகம் என்ற ஊடகத்தை, அதற்கு சிறப்பு விருந்தினர்களாக பிரபலங்களை அழைத்தார், அது அவரது நாடகம் மக்கள் மத்தியில் சென்றுசேர உதவிசெய்தது. ‘முரசே முழங்கு’ என்பதுதான் அவரின் முதல் நாடகம் அதற்கு தலைமையேற்றவர் எம்.ஜி.ஆர். அவரின் நாடகங்களில் முக்கியமானது திண்டுக்கல் தீர்ப்பு, நாளை நமதே, தேவன் மயங்குகிறான் உள்ளிட்டவை.
1975ம் ஆண்டு இந்திராகாந்தி அவசரநிலை பிரகடனத்தை அறிவித்தார். திமுக அரசு கலைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 1976 பிப்ரவரி 1 அன்று, ஸ்டாலினை மிசா சட்டத்தின்கீழ் கைதுசெய்தது காவல்துறை. சிறைக்குள் அடைக்கப்பட்ட ஸ்டாலினுக்கு சிறைத்துறை கொடுத்த அறை தொழுநோயாளிகள் அடைக்கப்படும் 9ம் எண் சிறை. உடன் சிட்டிபாபு, ஆற்காடு வீராசாமி, நீலநாராயணன், வி.எஸ். கோவிந்தராஜன் ஆகியோர் அடைக்கப்பட்டனர்.
Advertisment
வெறும் சிறைவாசமாக அது நின்றுவிடவில்லை, அரசியல் ரீதியாக கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரையும் அடித்து துவைத்தனர். ஸ்டாலினும் அதற்கு விதிவிலக்காகவில்லை. பூட்ஸ் கால்களால் எட்டி உதைக்கப்பட்டது, கன்னத்தில் ஓங்கி அறைந்தது போன்ற சம்பவங்களும் நடந்தன. இதனால் ஸ்டாலின் மயங்கி விழுந்திருக்கிறார். ஸ்டாலின்மீது அடிபடக்கூடாது என தடுத்தார் சிட்டிபாபு. அந்த அடிகள் அனைத்தும் அவர்மீது விழுந்தது. சிட்டிபாபு சில நாட்கள் கழித்து காலமானார். இப்படியாக பல கொடுமைகளை சந்தித்தார்.
stalin in car
அதன்பிறகு ஜனவரி 23, 1977 அன்று விடுதலையானார், பின்னர் கட்சிப்பணிகளிலும், அரசியலிலும் மிகத்தீவிரமாக செயல்பட்டார். கலைஞர் ஒரு இடத்தில், ‘ஸ்டாலினை நான் உருவாக்கியதாக கூறுகிறார்கள், அது தவறு ஸ்டாலினை உருவாக்கியது இந்திராகாந்திதான்’ என்றுகுறிப்பிட்டார். மிசாவிற்குப்பிறகு அவர் அவ்வளவு தீவிரமாக இயங்கினார்.
பிறகு 1980ஆம் ஆண்டு மதுரை, ஜான்சி ராணி பூங்காவில் திமுக இளைஞரணி தொடங்கப்பட்டது. அதன்பிறகு அதன் இரண்டாம் ஆண்டுவிழாவில் அதாவது 1982ல், திருச்சியில் நடந்த விழாவில் 7 பேர்கொண்ட ஒரு தலைமைக் குழு அமைக்கப்பட்டது. அதில் ஒருவராக ஸ்டாலின் இருந்தார். திமுக மூத்த தலைவர் ஆலோசனை வழங்கினர்.
இதன்கீழ் பல விழாக்களும், கூட்டங்களும் நடத்தப்பட்டன. அதுதவிர்த்து பெருநகரங்கள் முதல் கிராமங்கள் வரை திமுக இளைஞரணி குழுக்களை உருவாக்கினர். இதனால் இளைஞரணி அமைப்பு ரீதியாக வலுப்பெற்றது. இவைகளுக்குபிறகுதான் ஸ்டாலின் 1984ம் ஆண்டு திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். 1967 முதல் தொடங்கிய பயணத்திற்கு1984ம் ஆண்டு ஒரு அங்கீகாரம் கிடைத்தது.
இப்படி இளைஞர் அணி தலைவராக ஸ்டாலின் கடந்த தூரம் போல முதல்வராகவும் நெடுந்தூரம் கடந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இந்த வெற்றியை அடைவது அவருக்கு எளிதாக இல்லை. அடைந்திருக்கும் இந்த நேரமும் கூட சவாலானதுதான். நாடே கொரானாவின்கோரத்தாண்டவத்தில் துன்பப்பட்டுக்கொண்டுஇருக்கிறது. தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும், ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவ வசதிகள் பற்றாக்குறை உள்ளிட்டவற்றை சரி செய்யவேண்டும். பொருளாதார சூழலும்சீர் செய்யப்பட வேண்டியிருக்கிறது. இப்படி வெற்றி கிடைத்ததும் எளிதாக இல்லை, வெற்றிக்குப் பிறகு ஆட்சியும் எளிதாக இருக்கப்போவதில்லை.