Skip to main content

கொல்கத்தாவில் ஸ்டாலின் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்!

mk stalin


மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள மிகப்பெரிய பிரிகேட் மைதானத்தில் இந்தியாவில் உள்ள முக்கியமான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூடி மோடி அரசைத் தூக்கி எறிவோம் என்று சபதம் எடுத்திருக்கிறார்கள்.
 

22க்கு மேற்பட்ட கட்சிகள் தனக்கு எதிராக அணி அமைத்திருப்பதாகவும், அது மக்களுக்கு எதிரான அணி என்றும் பிரதமர் மோடி கூறியிருக்கிறார். அதாவது தனக்கு எதிராக அணி அமைத்தால் அது மக்களுக்கு எதிரானது என்றால் அர்த்தம்? மோடி என்றால் மக்கள்… மக்கள் என்றால் மோடி என்று சொல்ல வருகிறாரா?
 

2014 ஆம் ஆண்டு அவர் பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து மோடியை விமர்சிப்பவர்கள் அனைவரும் தேசவிரோதிகள் அல்லது ஆண்ட்டி இண்டியன் என்று குற்றம்சாட்டப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. அதாவது, மோடி என்றால் தேசம்… தேசம் என்றால் மோடி என்பதைப்போல.
 

இப்படித்தான், 1977 ஆம் ஆண்டுக்கு முன் இந்திராவே இந்தியா, இந்தியாவே இந்திரா என்று காங்கிரஸ் தலைவர்கள் ஒரு முழக்கத்தை உருவாக்கினார்கள். ஆனால், அதே இந்திரா தனது தொகுதியிலேயே தோல்வி அடைந்தார். காங்கிரஸும் படுதோல்வி அடைந்தது.
 

அதே நிலைதான் இப்போதும் இந்தியாவில் நிலவுகிறது. பதவியேற்ற நாளில் இருந்து இன்றுவரை மோடி இந்தியாவில் தங்கிய நாட்களைவிட வெளிநாடுகளில் சுற்றித்திரிந்த நாட்களே அதிகம். அவரை சுற்றுலா பிரதமர் என்றே அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.
 

மக்களுடைய வாழ்வாதாரத்தையும், இந்தியாவின் அடிப்படைத் தன்மையான வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டையும் தகர்த்து, மக்களை பிரித்தாளும் முயற்சியிலேயே பாஜக காலத்தை ஓட்டிவருகிறது. கார்பரேட் நிறுவனங்களின் வேலைக்காரரைப் போல மோடி, இந்திய மக்களின் பணத்தை எடுத்து பெருமுதலாளிகளுக்கு தாரைவார்த்து, அவர்களை வெளிநாடுகளுக்கு தப்பவிடும் வேலையையும் செய்துவருகிறார். எப்போதும் இல்லாத அளவுக்கு, அம்பானிகளும், அதானிகளும் விரும்புகிற வேலையை அவர்கள் விரும்பியபடி நிறைவேற்றித்தரும் நம்பிக்கையான வேலைக்காரராக மோடி செயல்படுகிறார் என்று பகிரங்கமாகவே அவர்மீது குற்றம்சாட்டுகிறார்கள்.
 

அவருக்கு எதிராக எத்தனையோ ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும் எதற்குமே அவர் பதிலளிப்பதில்லை. இது ஒருவிதமான கல்லுளிமங்கன் நிலை என்றும் கேலிசெய்கிறார்கள். நாடாளுமன்றத்தில் 19 நாட்களே இருந்திருக்கிறார். எந்த ஒரு விவாதத்திலும் உறுப்பினர்களின் கேள்விகளை நேரடியாக எதிர்கொண்டு பதிலளிக்கவில்லை. ஒரு விவாதம் நடந்தால், இறுதியாக காட்டுக்கூச்சலாக ஏற்ற இறக்கத்தோடு நீளமாக பேசுவதையே தனது பாணியாக வைத்திருக்கிறார் மோடி. குறுக்கே யாரும் புக முடியாத நிலையை உருவாக்கிக் கொண்டே பேசுகிறார்.
 

இப்படிப்பட்ட பிரதமரை இனியும் விட்டுவிடக்கூடாது என்றே, மக்கள் நலன்சார்ந்த சிந்தனையோடு, இந்தியாவின் அரசியலமைப்பை பாதுகாக்கவேண்டும் என்ற லட்சியத்தோடு எதிர்க்கட்சிகள் இணைந்திருக்கின்றன. அவர்கள் நடத்திய கொல்கத்தா கூட்டத்தில் எல்லாத் தலைவர்களுமே தங்களுக்குள் வேற்றுமையை மறந்து, மோடியை தூக்கியெறிய வேண்டியதன் அவசியத்தை ஒட்டுமொத்தமாக வலியுறுத்தி இருக்கிறார்கள்.
 

பங்கேற்ற தலைவர்களில், திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய பேச்சுதான் மிகவும் வெளிப்படையான, மோடியை முழுவதுமாகத் தோலுரித்த பேச்சாகும். இந்திய அரசை பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக மாற்றிவிட்டார் மோடி என்று கூறிய ஸ்டாலின், நூறு கூட்டங்களில் மோடி பேசிய ஆயிரம்பொய்களை அம்பலப்படுத்தினார். இந்தியர்களின் வங்கிக் கணக்கில் ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் போடுவதாக சொன்ன பொய்யை நம்பி வாக்களித்த மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்தவர். ஆண்டுக்கு ஒரு கோடி வேலை வாய்ப்பை உருவாக்குவேன் என்று மோடி சொன்ன பொய்யை நம்பி வாக்களித்த இளைஞர்களின் எதிர்காலத்தை நாசமாக்கி, பக்கோடா விற்பதும் ஒரு வேலைவாய்ப்புதான் என்று கேலி பேசியவர் மோடி. கருப்புப்பணத்தை ஒழிக்கப்போவதாக பணமதிப்பிழப்புச் செய்து, நாடு முழுவதும் சிறு, குறு தொழில்களை இழுத்துமூடக் காரணமானவர் மோடி என்று ஸ்டாலின் ஆவேசமாக குற்றம்சாட்டினார்.
 

இப்படிப் பேசியது மட்டுமின்றி, நாடுமுழுவதும் எல்லா மாநிலங்களிலும் இதுபோன்ற கூட்டங்களை நடத்தி மோடியையும் பாஜகவையும் அம்பலப்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார் ஸ்டாலின். அவருடைய பேச்சு இந்திய அளவில் கவனம் பெற்றது. எல்லாக் கட்சிகளும் தங்களுக்குள் வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு மோடி தலைமையிலான பாஜக அரசை தூக்கியெறிய வேண்டும் என்று ஸ்டாலின் எழுப்பிய குரல் எல்லாப் பக்கத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்