எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு..! வாக்கு சதவீதமா? வழக்கு பயமா?

ddd

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடக்க உள்ளது. இந்தநிலையில், ''மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மையங்களில் கொண்டு வந்து வைக்கப்பட்ட பிறகு அவற்றைக் காவல்துறையும், தேர்தல் அதிகாரிகளும் பாதுகாத்துக்கொள்ளட்டும் என்று நாம் இருந்திடலாகாது. நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை மக்களவைத் தொகுதியில் அதிகாரிகள் சிலர் அனுமதியின்றி நுழைந்ததை மறந்துவிடக் கூடாது; வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை மையங்களைப் பாதுகாப்பது நம் கடமை.

வேட்பாளர்களும், நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் பாதுகாக்கப்பட்ட மையங்களை 24 மணி நேரமும், இரவு பகல் பாராது கண் விழித்துப் பாதுகாத்திட வேண்டும். வாக்குப்பதிவிற்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் உள்ள இடைப்பட்ட காலத்தில், மிகுந்த விழிப்புணர்வுடன் 'டர்ன் டியூட்டி’ அடிப்படையில்அமர்ந்து கண்காணித்திட வேண்டும். தேர்தல் பணி என்பது தொடரவே செய்கிறது" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ddd

இதையடுத்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், ''வாக்குப்பதிவு நிறைவுபெற்று, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற 2ஆம் தேதி அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும், கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும், கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்'' என கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

ddd

இந்தநிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் சேலத்தில் தங்கியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வியாழக்கிழமை (08.04.2021) சந்தித்துப் பேசியுள்ளனர்.

ddd

விஜயபாஸ்கர் போட்டியிட்ட விராலிமலை தொகுதியில் 85.43 சதவீத வாக்குகளும், எம்.சி.சம்பத் போட்டியிட்ட கடலூர் தொகுதியில் 76.50 சதவீத வாக்குகளும், உதயகுமார் போட்டியிட்ட திருமங்கலம் தொகுதியில் 78.11 சதவீத வாக்குகளும், கே.சி.வீரமணி போட்டியிட்ட ஜோலார்பேட்டை தொகுதியில் 80.92 சதவீத வாக்குகளும், எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் 85.60 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

ddd

அமைச்சர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் அதிக வாக்கு சதவீதம் பதிவாகியிருக்கிறது. இதன் பின்னணி என்ன? ஆளும் தரப்பு கடைசிக் கட்ட நேரத்தில் மேற்கொண்ட பணப்பட்டுவாடா உள்ளிட்டவற்றால் இந்த வாக்கு சதவீதம் கூடியிருக்கிறதா? என்பது குறித்தெல்லாம் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

ddd

அதேநேரத்தில் சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் அனைவருமே ஊழல் புகார்களுக்கு ஆளானவர்கள். குறிப்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குட்கா ஊழல் தமிழ்நாடு முழுவதும் புகழ்பெற்றது. சட்டமன்றத்திலேயே குட்கா பாக்கெட்டுக்களை எடுத்துவந்து மிகப்பெரிய குற்றச்சாட்டுக்களை வைத்தனர். அதுதொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய பிரச்சாரத்தின்போது, ஊழல் அமைச்சர்கள் மீது திமுக ஆட்சி வந்ததும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். தேர்தல் அறிக்கையிலும் திமுக அதனை தெரிவித்திருக்கிறது.

ddd

அதுமட்டுமல்லாமல் தேர்தல் பிரச்சாரத்தின்போது, திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் நடவடிக்கை விஜயபாஸ்கர் மீது எடுக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அதேபோல், சென்னை கோயம்பேட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தைக் குறைந்த விலைக்கு தனியாருக்கு விற்பனை செய்தது தொடர்பாக அமைச்சர் உதயகுமார், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மீது அண்மையில் திமுக சார்பில் ராஜ்யசபா எம்பி ஆர்.எஸ்.பாரதி ஆளுநருக்கு புகாரை அனுப்பியிருந்தார். அந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ddd

இதேபோல் கே.சி.வீரமணி மீது நிலஅபகரிப்பு புகார்கள் எழுந்தன. சொந்தக் கட்சிக்காரர்களே இதுகுறித்து புகார்கள் எழுப்பியுள்ளனர். எதிர்க்கட்சியினர் இதுதொடர்பாக போராட்டங்களும் நடத்தியுள்ளனர். திமுக தரப்பில் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் வெளிநாடு பயணம் மேற்கொண்டவர் எம்.சி.சம்பத். மற்ற நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு முதலீடுகள் வந்ததா? அல்லது தமிழக ஆட்சியாளர்களின் முதலீடுகள் வெளிநாடுகளுக்குச் சென்றதா என்ற கேள்விகள் எழுந்திருக்கின்ற சூழலில், அதுகுறித்தும் விசாரிக்கப்படும் என்று திமுக தரப்பில் கூறப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில் புகார்களுக்கு உள்ளான அமைச்சர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசியிருப்பது வாக்கு சதவீதம் பற்றியா? வழக்கு பயம் குறித்தா? என்ற கேள்வியும் பரபரப்பும் தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

admk Edappadi Palanisamy Election ministers
இதையும் படியுங்கள்
Subscribe