vijaya baskar minister

கரோனா தொற்று பரவத் தொடங்குவதை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் நலிவடைந்துள்ள மக்களுக்கு உணவு பொருள் நிவாரணம் வழங்கி வருகின்றனர்.

Advertisment

Advertisment

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக அ.தி.மு.க.வினரும், 5 கிலோ அரிசி அடைக்கப்பட்ட பைகளில் தங்கள் கட்சித் தலைவர்கள் மற்றும் தங்கள் படங்களை அச்சிட்டு விளம்பரங்களோடு கொடுத்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சி பிரமுகர்கள் மூலம் முக கவசம் வழங்கி வரும் அமைச்சர் விஜயபாஸ்கர், தனது விராலிமலைத் தொகுதியில் நலிவடைந்தவர்களுக்கு அரிசி பைகளை வழங்கினார். அந்த பையில் முன்னாள் முதல்வர் ஜெ, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் படங்களுடன் தனது படத்தையும் அச்சிட்டு மண்ணச்சநல்லூா் பொன்னி அரிசி வழங்கினார்.

இந்த நிகழ்வு முடிந்த அடுத்த சில மணி நேரங்களில் ''நாளைய முதல்வர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்'' என்று அரிசி பையில் கிராபிக்ஸ் வேலைப்பாடுகள் செய்து வட்டமிட்டு காட்டிய விஜயபாஸ்கரின் அரிசி பைகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதில் சிலர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்ணில் படும் வரை பகிருங்கள் என்ற வாசகங்களுடன் பகிர்ந்திருந்தனர்.

இந்த செய்தியை நக்கீரன் இணையத்தில் முதன் முதலில் “அமைச்சர் விஜயபாஸ்கரை சுற்றிச் சுற்றி வரும் ''நாளைய முதல்வர் கிராபிக்ஸ் வாசகம்” என்ற தலைப்பில் மே 3ந் தேதி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தி பல தரப்பிலும் அதிர்வை ஏற்படுத்தி இருந்தது. மேலும் பொதுமக்களுக்கு நிவாரணம் கொடுக்க நினைப்பவர்கள் ஏதோ சாதாரண பைகளில் அரிசியை வாங்கி கொடுத்துவிட்டு போகிறார்கள். ஆனால் அ.தி.மு.க வினர் மட்டும் சுய விளம்பரத்திற்காக முன்னாள் முதல்வர், முதல்வர், துணை முதல்வர் படங்களுடன் தங்களின் படங்களையும் அச்சிட்டு விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். இந்த பை தயாரிக்க கொடுக்கப்படும் செலவில் பல ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி வாங்கி கொடுத்திருக்கலாம் என்ற விமர்சனங்கள் அதிகமாகவே உள்ளது.

இந்த நிலையில்தான் நாளைய முதல்வர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் என்ற வாசகம் சென்னை வரை எதிரொலித்த நிலையில், புதுக்கோட்டை அ.தி.மு.க தகவல் தொழில் நுட்ப பிரிவு நகரச் செயலாளர் குணசீலன் நகர காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் நாளைய முதல்வர் என்று மார்பிங் செய்யப்பட்ட வாசகத்தை வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறியிருந்தார்.

vijaya baskar minister

அந்த புகாரின் அடிப்படையில் விஜயபாஸ்கர் பெயரில் இயங்கும் சமூக வலைதளங்களில் பொதுமக்களுக்கு அரிசி கொடுக்கும் முன்பே விளம்பரத்திற்காக வெளியிடப்பட்ட அரிசி பையில் அமைச்சர் விஜயபாஸ்கர் படத்திற்கு கீழே, பெயருக்கு மேலே நாளைய முதல்வர் என்று மார்பிங் செய்து வெளியிட்டது அ.ம.மு.க மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விழுப்புரம் முத்துக்குமார்தான் என்று புதுக்கோட்டை போலிசார் விழுப்புரம் சென்று முத்துக்குமாரை கைது செய்துள்ளனர்.