Skip to main content

EPS மகனைப்போலவே தனது மகனையும் கொண்டுவர முயற்சி! அமைச்சரின் குடும்ப அரசியல்! குட்டி விமானத்தில் ஆட்டம்போடும் மகன்!

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

DDDD

 

அடுத்தடுத்து மாணவர்களின் உயிரைப் பறித்துக் கொண்டிருக்கிறது நீட். அமைச்சரின் மகனான அந்த மாணவரோ ஆஸ்திரேலியாவில் தனது நண்பர்களுடன் கூத்தடித்து கொண்டிருப்பதை இன்ஸ்டாகிராமில் படமாக வெளியிட்டு கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

 

22 வயதாகும் இவர், அமைச்சர் வேலுமணியின் மகன். சுகுணா மில்ஸில் வேலை பார்த்து சொந்த வீடும் ஒரு ஏக்கர் நிலமும் கொண்டிருந்த பழனிசாமியின் பேரன். பழனிசாமி தனது மகன்கள் அன்பரசன், வேலுமணி, செந்தில் ஆகியோருடன் எளிமையான நடுத்தர வாழ்வு வாழ்ந்து வந்தார். வேலுமணி நல்ல உயரம். சினிமாவில் நடிக்க விரும்பி, கோடம்பாக்கத்தில் சுற்றிவிட்டு கோவைக்குத் திரும்பியபோது, மில் தொழிலாளியான பழனிசாமி, தனது அண்ணா தொழிற் சங்கம் மூலம் அமைச்சர் தாமோதரனிடம் வேலுமணியை வேலைக்கு சேர்த்துவிட்டார்.

 

வேலுமணியின் விசுவாசத்தால், ஒப்பந்த வேலைகளில் சிலவற்றை மேற்பார்வையிட அனுமதி கொடுத்தார் தாமோதரன். அப்புறம் என்ன அதிரடிப்படை அமாவாசை தான். தனது நண்பரான கே.சி.பி. நிறுவனத்தினர் மூலம் ஒப்பந்ததாரர் ஆனார். முன்னாள் மேயர் செ.ம. வேலுச்சாமி, சசிகலா உறவினர் ராவணன் எல்லாருக்கும் நெருக்கமாகி, எம்.எல்.ஏ. சீட் வாங்கி, 2001ல் அமைச்சர் பதவியும் பெற்றுவிட்டார். திடீரென அமைச்சர் பதவியை ஜெ. பறித்து விட, பின்னர் கோவை வந்த ஜெ.வின் கார் டயரை ஜெயா டி.வி. கேமராமேன் சிபாரிசில் தொட்டுக் கும்பிட்டு, செ.ம.வேலுச்சாமியின் மா.செ. பதவியை வாங்கினார். 2011, 2016 என அமைச்சர் பதவிகளை வகித்தவர், ஜெ மறைவுக்குப் பிறகு, தனது தொண்டா முத்தூர் தொகுதிக்குள் ஆசிரமம் நடத்தும் ஜக்கிக்கு நெருக்கமானார்.

 

மத்திய அரசுடன் நேரடி தொடர்பு வைத்திருக்கும் ஜக்கி, வேலுமணியை தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்கிற ரேஞ்சுக்கு டெல்லியில் காய் நகர்த்துகிறார். வேலுமணி உயர, அவரது மகனும் உயர்ந்தார். நெதர்லாந்தில் இருந்த செந்தில்தான் வேலுமணி குடும்பத்தில் முதன்முதலில் அந்நிய மண்ணை தொட்டவர். வேலுமணி அமைச்சரான பிறகு அவரையும் இந்தியாவிற்கு வரவழைத்து அவருக்கு தனியாக கோவை மதுக்கரை ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமலையம்பாளையம், பாலத்துறை, ஆகிய பகுதிகளில் மூன்று பிரமாண்ட கல்குவாரிகளை உருவாக்கி கொடுத்து கேரளாவிற்கு சட்ட விரோதமாக எம்-சேண்ட் மற்றும் கற்களை கொண்டு போகும் தொழிலை ஒப்படைத்தார்.

 

சூயஸ் என்கிற பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிறுவனம் கோவையில் குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள வந்தது. இந்த சூயஸ் நிறுவனம் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் மேலாண்மையை மேற்கொள்கிறது. இதை பார்க்க சென்றதுதான் வேலுமணியின் முதல் வெளிநாட்டு பயணம், முதல்வர் எடப்பாடி வெளிநாட்டிற்கு சென்றபோது வேலுமணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றார். அவருடன் அவர் மகன் விகாஸும் சென்றிருந்தார். எடப்பாடியின் மகன் மிதுன் எடப்பாடியின் வியாபார நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதை பார்த்த வேலுமணி தனது மகன் விகாஸையும் மிதுனைப் போல கொண்டுவர முடிவு செய்தார்.

 

எஞ்சினியரிங் படித்துக் கொண்டே பொள்ளாச்சி ஜெயராமன் மகனுடன் நட்பு வட்டாரத்தில் சுற்றிவந்த விகாஸை கொரோனோ பாதிப்புகள் தமிழகத்தில் அதிகமானபோது, பாதிப்பு அதிகமில்லாத ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்தார் வேலுமணி. சூயஸ் கம்பெனி தயவுடன் ஆஸ்திரேலியாவில் தனது நண்பர்களுடன் கலக்கி கொண்டிருக்கிறார் விகாஸ்.

 

ddd

 

ஆஸ்திரேலியாவில் சுற்றித்திரிவதெற்கென தனியாக குட்டி விமானம் ஒன்று ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. விமானம் மட்டுமல்ல ஹெலிகாப்டர், ஜீப் என பயணம் செய்து ஸ்விமிங்பூல் பீச், என ஜாலியாக பொழுதை போக்கிக்கொண்டே வேலுமணியின் வியாபார நடவடிக்கைகளையும் கவனித்து கொண்டிருக்கிறார் விகாஸ். ஆஸ்திரேலியாவில் அவர் நடத்தும் களியாட்டாங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி கோவை உள்பட தமிழகத்தை கலக்கி கொண்டிருக்கின்றன.

 

Ad

 

தனது அண்ணன் அன்பரசனை தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆகவும் தனது தம்பி செந்திலை கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ ஆகவும் தான் சூலூர் தொகுதியிலும் போட்டியிட திட்டமிட்டுள்ள வேலுமணி, தனது மகனை அரசியல்-வணிகத் தொடர்புகளுக்குத் தயார் படுத்துகிறார். தனது இளம்வயது சினிமா கனவை விகாஸை நடிகராக்கி நிறைவேற்றி, உதயநிதி போல அரசியலுக்கு கொண்டுவரவும் திட்டம் உள்ளதாம்.

 

வேலுமணி குடும்பத்தினரின் அபார வளர்ச்சியும், விகாஸின் ஆடம்பரமும் கோவை அ.தி.மு.கவினரை கடுப்பாக்கியுள்ளது. இதுபற்றி கருத்தறிய விகாஸ் வேலுமணியின் இன்ஸ்டா கிராமைத் தொடர்புகொள்ள நுழைய முயன்றோம். விகாஸ் அதை ஒரு தனிப்பட்ட பக்கமாக மாற்றிவிட்டார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை மற்றவர்கள் பார்க்கக்கூடாது என தடுத்துள்ளார். இதுபற்றி வேலுமணியின் கருத்தை அறிய அவரது தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டோம். அவர் நமக்கு பதில் அளிக்கவில்லை.

 

-தாமேதரன் பிரகாஷ், சிவா

 

 

Next Story

“இனியும் கட்சியில் நீடிக்க முடியாது” - ஆம் ஆத்மி அமைச்சர் அதிரடி ராஜினாமா!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
 Aam Aadmi Party minister resigns and says Can't stay in the party anymore

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து, அவரிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை சட்டவிரோத கைது என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ‘முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்புச் சலுகையும் காட்ட முடியாது. மதுபானக் கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது. பொதுவாழ்வில் ஈடுபடும் நபர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்’ என்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று (09.04.2024) உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து ராஜ்குமார் ஆனந்த் கூறுகையில், “ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் வலுவான செய்தியைப் பார்த்த பிறகு, நான் அதில் சேர்ந்தேன். ஆனால் இன்று, கட்சி ஊழல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தன்னைக் கண்டறிந்துள்ளது. அதனால்தான் நான் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

ஆம் ஆத்மி ஊழலில் ஆழமாக உள்ளது. மேலும் ஊழல்வாதிகளுடன் என்னால் வேலை பார்க்க முடியாது.  அரசியல் மாறினால் நாடு மாறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். இன்று அரசியல் மாறவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் மாறிவிட்டார்கள். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன். எங்களிடம் 13 மாநிலங்களவை எம்பிக்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் பட்டியலினத்தவர், பெண்கள் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்த கட்சியில் பட்டியலின எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை. அத்தகைய சூழ்நிலையில், அனைத்து பட்டியல் இன மக்களும் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இதனால், இனியும் நான் கட்சியில் நீடிப்பது கடினம்.” என்றார்.

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.