Advertisment

அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் பேச்சை உரக்க கேட்க செய்த ‘மைக் செட்’ மணிகுண்டுவின் நினைவுகள்..! 

Mic set Manikandan who offers mic to DMK Leaders

Advertisment

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திராவிட இயக்கம் தோன்றியபோது கிராமம் கிராமமாகச் சென்று பொதுக்கூட்டங்களை நடத்தி இயக்கத்தை வளர்த்தார்கள். அன்றைய பொதுக் கூட்டங்களுக்குத் துண்டு பிரசுரம் வெளியானால் 25 கி.மீ தூரத்திற்கு அப்பால் இருந்தும் வந்துவிடுவார்கள் பொதுமக்கள். பொதுக்கூட்டங்களில் தலைவர்களின் பேச்சைக் கேட்க அத்தனை ஆர்வம். விடிய விடிய பேசினாலும் இருந்து கேட்பார்கள். (இப்போது பொதுக்கூட்டத்திற்குப் பணமும்குவாட்டரும்கோழிப் பிரியாணியும் கொடுத்து வாகனங்கள் மூலம் கூட்டம் சேர்த்தாலும் சிறிது நேரம்தான்.)

அந்த சமயங்களில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், நாவலர், பேராசியர் என பல தலைவர்கள் செல்லாத கிராமங்களும் இல்லை; அவர்களின் பேச்சைக் கேட்காத மக்களும் இல்லை. இந்தத் தலைவர்களில் பலர் பேசிய மைக்கை இன்றுவரை பாதுகாப்பாக வைத்திருக்கிறார் வடகாடு ‘மைக்செட்’ மணிகுண்டு.

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கிராமத்தைச் சேர்ந்த 74 வயதான ‘மைக்செட்’ மணிகுண்டு, தீவிர திமுககாரர். தனது 16 வயதில் தொடங்கியதுமுதல் இன்றுவரை மைக்செட் கடை வைத்து நடத்திவருகிறார். அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், நாவலர், பேராசிரியர், எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் பேசிய மைக்கை, தான் இன்னும் பாதுகாப்பாக வைத்திருப்பதாக கூறியவர் மேலும் நம்மிடம்.. “1963இல் மைக்செட் வாங்கினேன். தொடர்ந்து நாடகங்களுக்கு ஓட்டுவேன். பிறகு எந்த ஊர்ல அரசியல் பொதுக்கூட்டம் நடந்தாலும் என்னை அழைப்பாங்க. அப்படித்தான் வெட்டன் விடுதியில பள்ளிக்கூடம் திறப்பு விழாவுக்கு அண்ணா வந்தார். அப்ப, வேற ஒருத்தர் மைக் செட் கட்டியிருந்தார். அவர், நல்ல மைக் இல்லை; வேற வேணும்னு கேட்டார். அப்பதான் அமெரிக்கா தயாரிப்புல ‘குண்டு மைக்’ ஒன்றை 135 ரூபாய்க்கு வாங்கி வச்சிருந்தேன். 10 அடிக்கு அந்தப் பக்கம் இருந்து பேசினாலும் கினீர்னு கேட்கும்.

Advertisment

Mic set Manikandan who offers mic to DMK Leaders

அண்ணா பேசுகிறார் என்றதும் அந்த மைக்கைகொண்டு போனேன். அதில் பேசினவர், “மைக் நல்லா இருக்கு”னு பாராட்டினார். அதேபோல, வடகாடு சுற்றியுள்ள கிராமங்கள்ல கலைஞர் பேசினப்பவும், வடகாடு அரச மரத்தடியில எம்.ஜி.ஆர், அப்பறம் நாவலர், பேராசிரியர் எல்லாருக்கும் இதே குண்டு மைக்தான். அதேபோல, வடகாடு முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவுல முதல்முறையா நாகூர் ஹனிபாவை பாட அழைத்தோம். (அப்ப திமுக - காங்கிரஸ் எதிர் எதிர் முனையா இருந்த காலம்) ‘கோயில் திருவிழாவுல நான் வந்து என்ன பாடுறது’ன்னு கேட்டார். ‘திமுகவுக்காக பாடிய பாடல்களைப் பாடுங்க’ன்னு சொல்லி அழைத்து வந்தோம்.

ஒரு இஸ்லாமியர், இந்து கோயில் திருவிழாவுல என்ன பாடப் போறார்னு சுற்றியுள்ள கிராம மக்கள் திரண்டு வந்தாங்க. கார், சைக்கிள் போட இடமில்லை. கட்சிக்காக பாடிய பாடல்களைப் பாடப்பாட கைதட்டல் அதிகமானது. கடைசியில திமுக - காங்கிரஸ் தேர்தல் போட்டி பற்றி பாடி முடிச்சுட்டு, இந்தக் குண்டு மைக்கை உருவி முத்தம் கொடுத்துட்டு என்னையும் பாராட்டிட்டுப் போனார்.

அதேபோல ஒரு நாடகத்தில் என் மைக்செட் நல்லா இருந்ததைப் பார்த்து நெடுவாசல்காரங்க அவங்க ஊர் பள்ளிக்கூடம் கட்ட நிதி திரட்ட எஸ்.எஸ்.ஆரை வச்சு நாடகம் நடத்த என்னை மைக்செட் போட அழைச்சாங்க. 6 மைக் வேணும்னு எஸ்.எஸ்.ஆர் சொன்னதால, 6இல் ஒன்று இந்தக் குண்டு மைக் வச்சோம். முதல்ல அவரே வந்து ஹலோ ஹலோனு டெஸ்ட் பண்ணாம கனைச்சுப் பார்த்தார். இந்தக் குண்டு மைக் சத்தம் கூட இருந்ததால இதுதான் எனக்கு வேணும்னு அதில் பேசி நாடகத்தில் நடிச்சவர், அடுத்தமுறை வடகாடு கூட்டத்துக்கு வந்தவர், மேடையில இருந்து என் மைக்கை பார்த்துட்டு அவருக்கு கொண்டு வந்த டீயை, ‘முதல்ல கீழ இருக்கிற மைக்செட் காரருக்கு குடுத்துட்டு வா’ன்னு சொன்னார்.

Mic set Manikandan who offers mic to DMK Leaders

இப்படி பல பேரோட பாராட்டுகளை வாங்கிக் கொடுத்த இந்தக் குண்டு மைக்கை இப்பவரை வச்சு பாதுகாக்கிறேன். ஆல் ரவுண்ட் மைக்-க்கு இணையான மைக் இந்தக் குண்டு மைக். முன்ன மாதிரி இப்ப யாரு பொதுக் கூட்டத்துல பேசுறாங்க.அவங்க பேசுறதைக் கேட்க யாரு போறாங்க தம்பி. போனாலும் கொஞ்ச நேரம் நின்னுட்டு போயிடுறாங்க. இல்லன்னா செல்ஃபோனைப் பார்த்துட்டு போறாங்க. இப்ப எனக்கு வயசானாலும் மைக் செட் வச்சிருக்கேன். இதைப் பாதுகாப்பதைப் பெருமையாக நினைக்கிறேன்” என்றார்.

இதுபோன்ற திமுக முன்னோடிகளால்தான் திமுக வளர்ந்தது. இப்ப அந்த வயதான திமுக தூண்களைக் கண்டுக்காம இருப்பதுதான் வேதனை என்கிறார்கள் மைக் செட் மணிகுண்டு பகுதியினர்.

puthukottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe