ADVERTISEMENT

பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலை நடைப்பயணமாக கூட்டிவந்த எம்ஜிஆர்; 50 ஆண்டுகளுக்கு முன்னால் எம்ஜிஆர் செய்த சம்பவம்

06:36 PM Oct 19, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலைப் பற்றி தமிழக மக்கள் அறிந்திருப்பார்கள். பலர் அந்த ரயிலில் பயணமும் செய்திருப்பார்கள். கிட்டதட்ட சென்னை எழும்பூரில் பயணத்தை ஆரம்பித்தால் 7 மணி நேரத்தில் மதுரையை அடைந்துவிடும். குறிப்பாகத் திண்டுக்கல்லிலிருந்து ஏறக்குறைய ஒரு மணி நேரத்தில் மதுரையைச் சென்றடைந்துவிடும். ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்னால் இதே அக்டோபர் மாதத்தின் குறிப்பிட்ட ஒருநாள் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் டூ மதுரையை மட்டும் 9 மணி நேரத்துக்கும் அதிகமாகப் பயணித்துக் கடந்தது என்றால் யாராவது நம்ப முடியுமா? பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் பாசஞ்சர் ரயிலாக ஏன் மாறியது? 66 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க 500 நிமிடங்களுக்கு மேல் ஏன் தேவைப்பட்டது? யார் காரணம்? தொழில்நுட்ப பிரச்சனையா? தொலைத்தொடர்பு பிரச்சனையா? என்றால் இது எதுவும் இல்லை.

ஒரு குறிப்பிட்ட மனிதரைக் காண, அவர் வரும் பாதையில் கூடிய கூட்ட நெரிசலால் ஏற்பட்ட சிக்னல் குறைபாடே பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலைக் குழந்தை மாதிரி தள்ளாடித் தள்ளாடி வரவைத்தது. யார் அந்த நபர்? அரசியல்வாதியா? ஆன்மீகவாதியா? சினிமா நடிகரா? என்று யாரேனும் யோசித்தால் அவர் நடிகர், ஆன்மீகவாதி, தமிழக அரசியலை புரட்டிப் போட்ட அரசியல்வாதி என இந்த மூன்றுக்கும் சொந்தக்காரர். அவர் பெயர் என்னவோ மூன்றெழுத்து. அதிமுக என்ற பேரியக்கத்தின் தலையெழுத்து. ஆம், பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலை நடைப்பயணமாக கூட்டிக்கொண்டு வந்த அவர் வேறு யாருமல்ல சாட்சாத் எம்.ஜி.ஆர் தான். ரசிகர்களின் திடீர் எழுச்சி ஏன்? என்ன காரணம்?

கலைஞரோடு இருந்த சின்ன சின்ன பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்திருந்த நிலையில் 1972ம் ஆண்டு அக்டோபர் 10ம் நாள் அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்படுகிறார். " என் இருபது ஆண்டுகால இனிய நண்பரை வருத்தத்தோடு நீக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன் " என்ற அறிக்கையோடு கலைஞர் எம்ஜிஆரை நீக்கியிருந்தார். இந்நிலையில் தன் நலவிரும்பிகளோடு ஆலோசனை செய்த எம்ஜிஆர், தனிக்கட்சி துவங்க முடிவெடுத்த நிலையில், மதுரை ஜான்சி ராணி பூங்காவில் அதற்கான துவக்க விழாவை நடத்தச் சென்னையிலிருந்து மதுரைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸில் புறப்பட்டார். சென்னையில் அலை அலையாகக் குவியத் தொடங்கிய ரசிகர்கள் திருச்சியைத் தாண்டியதும் பேரலையாகக் குவிந்தனர். 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் 20 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாகத் திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து மதுரை செல்ல முடியாமல் ரசிகர் கூட்டத்தில் சிக்கி பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் பரிதாபமாக நின்றது.

ஒரு கட்டத்தில் ரயிலை விட்டு இறங்கி வாகனத்தில் மதுரை சென்றுவிடலாம் என்ற முடிவுக்கு எம்ஜிஆர் வர, ரயில்வே அதிகாரிகள் அவரிடம் நீங்கள் ரயிலை விட்டு இறங்கி விட்டீர்கள் என்று தெரிந்தால் ரயில் மதுரை சென்றடையும் என்ற உறுதிமொழியை கொடுக்க இயலாது. கோபத்தில் ரயிலை நொறுக்கிவிடுவார்கள். தயவுசெய்து தொடர்ந்து பயணியுங்கள் என்று எம்ஜிஆரிடம் கேட்டுக்கொண்டார்கள். இதனையடுத்து குழந்தை தள்ளாடி வருவது போல் 66 கிலோ மீட்டர் தூரத்தை ஏறக்குறைய பத்து மணி நேரம் பயணித்து மதுரையை வந்தடைந்தது பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில். இந்தியாவில் மிகக்குறைந்த தூரத்தை இவ்வளவு கால நேரம் எடுத்துக்கொண்டு ஒரு ரயில் பயணித்தது என்றால் அது இந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் தான் என்ற ஆச்சரிய பெருமையையும் அந்த ரயில் பெற்றுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT