ADVERTISEMENT

வீழ்ந்துவிட்டாரா மெஸ்ஸி?

04:32 PM Jun 22, 2018 | santhoshkumar

இந்திய நேரப்படி அந்த ஆட்டம் 11:30 மணிக்கு தொடங்கியது, அர்ஜென்டினாவுக்கும், குரோஷியாவிற்கும்தான் போட்டி. குரோஷியா இதற்கு முன் நைஜீரியாவுடனான ஆட்டத்தில் 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. அர்ஜென்டினாவோ ஐஸ்லாந்துடனான மேட்ச்சில் 1-1 என்று சமன் மட்டுமே செய்தது. நேற்று நடந்த போட்டியில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது அர்ஜென்டினா, அர்ஜென்டினாவின் நம்பிக்கை நட்சத்திரமான மெஸ்ஸியும்தான். கடந்த போட்டியில் அவர் கோல் எதுவும் அடிக்காமல் எல்லோரையும் ஏமாற்றின்னார். அதற்கு ஏற்றார்போல ரொனால்டோவோ செம ஃபார்மில் ஸ்பெயினுடன் மூன்று கோல், மொரோக்கோவுடன் ஒரு கோல் என்று வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தார். இதுவும் மெஸ்ஸிக்கு ஒரு சவாலாக இருந்தது. மெஸ்ஸி மீது வைக்கும் பெரும்பாலான குற்றச்சாட்டு என்னவென்றால்? அவர் கிளப் மேட்ச்சுகளில் மட்டும்தான் சிறந்து விளையாடுவார், நேஷனுக்கு இல்லை என்பது.

ADVERTISEMENT



ADVERTISEMENT

அர்ஜென்டினா அணி தற்போது க்ரூப் சுற்றுக்கு தேர்வானதற்கே மெஸ்ஸியின் 7 கோலும், இறுதி ஆட்டத்தில் அவர் தனியாக அடித்த ஹாட்ரிக் கோலும்தான் இங்கு வரவைத்தது. ஆனால் அதேதான் இன்று அவரின் நிலையை சோதித்துக்கொண்டு இருக்கிறது. க்ளப் ஆட்டங்களில் பார்சிலோனாவுக்காக விளையாடும் மெஸ்ஸியுடன் இனியஸ்தா, சுவாரஸ் போன்ற சிறந்த வீரர்களும் பார்வர்ட் விளையாடி அவருக்கு உதவுவார்கள். ஆனால், இங்கோ அவர் தனித்துவிடப்பட்டவர் போல நிற்கிறார். எதிரணிகள் இவரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர டிபன்ஸ் வீரர்கள் அனைவரையும் இவரை சுற்றி மடக்கிவிடுகின்றனர். ஆட்டத்தில் இவருக்கு கிடைக்கும் மூன்று நான்கு பாஸ்களும்கூட டி பாக்ஸை தாண்ட முடியாமல் போகிறது. இது அனைத்தும் மெஸ்ஸி ரசிகர்களின் புலம்பல்.

ஆம் புலம்பிதானே ஆக வேண்டும் மெஸ்ஸியின்மீது ரசிகர்கள் நம்பிக்கை வைத்தால் பரவாயில்லை. ஒட்டுமொத்த தேசம், தேசத்துக்காக உலகக்கோப்பை வென்றுகொடுத்த மரடோனாவுடன் விளையாடும் வீரர்கள் முதல்கொண்டு அனைவரும் மெஸ்ஸி இருக்கிறார் அவர் பார்த்துக்கொள்வார் என்றே இருந்தால் என்னதான் நடக்கும். மெஸ்ஸியோ தனிமனிதனாகவே இருக்கிறார். எந்த ஒரு அணி வீரருடனும் கலந்துகொள்ளவில்லை, அன்று காதல் தோல்வியடைந்தவர் போலவே காட்சியளித்துக்கொண்டிருந்தார் இந்த மிஸ்டர் கூல்.

அன்றைய ஆட்டத்தில் குரோஷியாவுடன் 49 முறை பந்தை உதைத்திருக்கிறார். அதில் இரண்டு மட்டுமே எதிரணியின் டி பாக்ஸ்குள் வந்திருக்கிறது. ஆட்டத்தின் 64 நிமிடத்தில்தான் மெஸ்ஸி பந்தையே ஷாட் செய்துள்ளார். இந்த இரண்டு போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 12 ஷாட்கள் அடித்துள்ளார். இருந்தாலும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை என்பதுதான் சங்கடமான ஒன்றாக இருக்கிறது. முதல் ஆட்டத்தில் மேட்ச் சமனான பிறகும் மெஸ்ஸி, அணியிலிருக்கும் எவருடனும் கலந்துகொள்ளவில்லை, ஹோட்டலில் தன் அறையில் மட்டுமே இருந்துள்ளார்.

மெஸ்ஸியை உடனடியாக எல்லோரும் விமர்சிக்க ஒரே காரணம். ஐஸ்லாந்துடனான மேட்ச்சில் வெற்றி வாய்ப்பாக அமைய இருந்த பெனால்டி வாய்ப்பை தவறவிட்டதுதான். இது அவருடைய வரலாற்றையும் மீண்டும் திரும்பிப் பார்க்க அழைத்து சென்றது, கோபா, அமெரிக்கா இறுதியாட்டத்தில் தவறவிட்ட பெனால்டி. உள்ளிட்ட நேஷனல் மேட்சுகளில் அவரால் தோற்றதை நினைவுக்கு கொண்டுவந்தது. நேற்று குரோஷியாவின் ஆட்டத்தையும், அர்ஜென்டினாவின் ஆட்டத்தையும் பார்த்தால் சிறந்த அணி என்ற பெயரை அர்ஜென்டினா எப்படி பெற்றது என்பது போல இருந்தது. கடைசிவரை மெஸ்ஸியையே நம்பிக்கொண்டுதான் இருக்கின்றனர். ஒரு அணியாகவும், அணியின் தலைவனாகவும் மெஸ்ஸி விளையாடவில்லை என்பதுதான் இங்கு விமர்சனமே. இது அவரின் ஒய்வு காலம், செல்வதற்குள் ஏதேனும் தேசத்துக்காக செய்தால் மட்டுமே பீலே, மரடோனா போன்று வரலாற்றில் அவரது பெயரும் இடம் பெரும் இல்லையென்றால் இந்த 15 ஆண்டுகளில் உலகமே கொண்டாடப்பட்ட மெஸ்ஸி, வருங்காலத்தில் காணாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். பொறுத்திருந்து பார்ப்போம் மெஸ்ஸி வீழ்ந்துவிட்டாரா என்று ?

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT