The message of the 13th century AD inscription ..!

Advertisment

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே தேவன்குறிச்சி ஈஸ்வரப்பேரி கண்மாய் மடையில் கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு, தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் து.முனீஸ்வரன், வழக்கறிஞர் மோ.நாகபாண்டியன், வி.சிவகுமார் ஆகியோர் தே.கல்லுப்பட்டி பகுதியில் மேற்கொண்டிருந்த கள ஆய்வின்போது, அக்னீஸ்வரர் கோயில் பட்டர் கி.செல்லப்பா, ஈஸ்வரப்பேரி கண்மாய் மடையில் பழமையான ஒரு கல்வெட்டு இருப்பதாககொடுத்த தகவலின்பேரில் அக்கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, உதவிப் பேராசிரியர் முனைவர் து.முனீஸ்வரன் ஆகியோர் கூறியதாவது,

Advertisment

“தே.கல்லுப்பட்டியின் அடையாளமாகத் திகழ்வது தேவன்குறிச்சி மலை. இம்மலையின் வடகிழக்குப் பகுதியில் ஈஸ்வரப்பேரி என்ற கண்மாய் உள்ளது. மலைச்சரிவில் இயற்கையாக அமைந்த பாறையை வெட்டி இக்கண்மாய்க்கு மடை அமைத்துள்ளனர். இதில் நீர் வெளியேற மூன்று கண் மடை அமைப்பு உள்ளது. இதன் முதல் கண்ணில், தரையில் பதிக்கப்பட்டுள்ள 3 அடி நீளமும், 1 அடி அகலமும் உள்ள ஒரு கல்லில் 7 வரிகள் கொண்ட கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு உள்ளது.

The message of the 13th century AD inscription ..!

நீர் வழிந்தோடும் இடத்தில் இருந்ததால் இக்கல்வெட்டின் பல சொற்கள் அழிந்தநிலையில் உள்ளன. ஸ்வஸ்திஸ்ரீ எனத்தொடங்கும் இக்கல்வெட்டு பாடல் போன்ற வடிவில் அமைந்துள்ளது. ‘கலிங்கத்தரையர் பெயர் கொண்ட பெருங்குன்றைப் பெரியகுளம்’ என கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம் இக்கண்மாய் மற்றும் மடை கலிங்கத்தரையரால் கி.பி.13ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டதாகக் கருதலாம். கலிங்கத்தரையர் என்பவர்கள் பிற்காலப் பாண்டியர் ஆட்சிக்காலத்தில் கி.பி.12, 13 ஆம் நூற்றாண்டுகளில் இருந்த குறுநிலத் தலைவர்கள் ஆவர். கல்வெட்டில் சொல்லப்படும் கலிங்கத்தரையர் இப்பகுதியில் இருந்த குறுநிலத் தலைவராக இருக்கலாம். இக்கண்மாய் அமைத்த அவருடைய சிறப்பை கல்வெட்டு விவரிக்கிறது. இதில் மன்னர் பெயர் அழிந்துள்ளது. கல்வெட்டில் கார் கொண்ட நிறத்தான், இன்னோசை, கடலிடத்தே போன்ற சொற்களும் வருகின்றன.

Advertisment

இம்மடையின் மேற்குபகுதியில் உள்ள பாறையில் திரிசூலம், சூரியன், சந்திரன், பாண்டியரின் செண்டுக்கோல் ஆகியவை கோட்டோவியமாகசெதுக்கப்பட்டுள்ளன. மடையை அமைத்துகொடுத்து, சந்திரனும் சூரியனும் இருக்கும் வரைக்கும் இந்த தர்மம் நிலைத்திருக்கும் என்பதன் அடையாளமாக இச்சின்னங்கள் இடப்பட்டுள்ளன.

தேவன்குறிச்சி அக்னீஸ்வரர் கோயிலில் உள்ள முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தை சேர்ந்த துண்டுக் கல்வெட்டுகளில் இவ்வூர் செங்குடி நாட்டு பெருங்குன்றத்தூர் எனவும், இங்குள்ள குன்று பெருங்குன்றம் எனவும், இவ்வூர் கண்மாய் பெரியகுளம் எனவும் குறிப்பிடப்படுகிறது. இக்கல்வெட்டில் ‘பெருங்குன்றைப் பெரியகுளம்’ என சொல்லப்படுகிறது. சிவன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளின் எழுத்தமைதியே இதிலும் காணப்படுகிறது. எனவே இக்கல்வெட்டு கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாககருதலாம்”இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.