Skip to main content

மெலுகோட் டூ மெரினா... ஜெயலலிதா - ஒரு டைம்லைன் பகுதி 1

1948, பிப்ரவரி 24 கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள மாண்டியா மாவட்டத்தில் மெலுகோட் என்னும் ஊரில் ஜெயராமன் அய்யங்கார்-வேதவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார் ஜெ. இவருக்கு ஒரே ஒரு அண்ணன், பெயர் ஜெயக்குமார்.  
ஜெயலலிதாவின் தாத்தாவும் அப்பாவும் மைசூர் மகாராஜா அரண்மனையில் பொறுப்பில் இருந்தனர். ஜெயலலிதாவுக்கு இரண்டு வயது இருக்கும்போது தந்தை ஜெயராமன் இறந்துவிட மகன் ஜெயக்குமாரையும் மகள் ஜெயலலிதாவையும் அழைத்துக் கொண்டு, பெங்களூர் நகரில் குடியேறுகிறார் வேதவதி. 
அங்கேயும் வாழ்க்கை வண்டி ஓட சிரமப்பட்டதால் பிள்ளைகளுடன் சென்னையில் குடியேறுகிறார் வேதவதி. ஆரம்பக் கல்வியை பிஷப் காட்டன் பெண்கள் உயர் நிலைப் பள்ளியிலும், மெட்ரிகுலேஷன் படிப்பை சர்ச் பார்க்கான் வென்ட்டிலும் 1964-ல்  முடிக்கிறார் ஜெயலலிதா. 
குழந்தைகளின் படிப்பு செலவுக்காகவும் வாழ்க்கைச் செலவுக்காகவும் சினிமாவில் நடிக்க ஆரம்பிக்கிறார் வேதவதி. நடிகையானதும் "சந்தியா' என பெயர் மாறுகிறது. 
பரதநாட்டியம், மோகினி ஆட்டம், கதக், மணிப்புரி ஆட்டங்களை மகள் ஜெயலலிதாவுக்கு கற்றுக் கொடுக்கிறார் சந்தியா. சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்த சந்தியா தனது மகளையும் சினிமாவில் நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கினார். 

 

t

 

 

1961 முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரியின் மகன் தயாரித்த ‘எபிஸ்டில்’(ஊடஒநபகஊ) என்னும் ஆங்கில சினிமாதான் திரைத்துறையில் விசிட்டிங் கார்டு. தாயாரைப் போலவே சின்னச்சின்ன வேடங்கள், நாட்டிய நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் ஜெயலலிதா. 
1964 பிரபல இயக்குனர் பி.ஆர்.பந்துலு "சின்னாட கொம்பே' தெலுங்குப் படத்தில் ஜெய லலிதாவை ஹீரோயினாக அறிமுகம் செய்கிறார்.  
1965 "வெண்ணிற ஆடை'’படம் மூலம் தமிழில் அறிமுகம் செய்கிறார் இயக்குனர் ஸ்ரீதர். 
1966 "மனுஷிலு மமதலு'’என்னும் தெலுங் குப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். 1965-ல் முதல் முறையாக  எம்.ஜி.ஆருடன் "ஆயிரத்தில் ஒருவன்'’படத்தில் ஹீரோயினாக நடித்தார். வரிசையாக எம்.ஜி.ஆரின் பல வெற்றிப் படங்களில் அவருடன் ஜோடியாக நடித்தார். ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர். "அம்மு'’என செல்லமாக அழைப்பார். 

 


1980-ல் வெளியான "நதியைத் தேடி வந்த கடல்'தான் ஜெயலலிதா நடித்த கடைசித் திரைப் படம். 
அதன்பின் சில வருடங்கள் தெலுங்கு நடிகர் சோபன்பாபுவுடன் வாழ்க்கை நடத்தினார். இந்த வாழ்க்கை குறித்து ஒரு வாரப் பத்திரிகையில் தொடர் எழுத ஆரம்பித்த ஜெயலலிதா, அதில்  எம்.ஜி.ஆருக்கும் தனக்குமிடையிலான உறவு குறித்து எழுதப் போவதாக அறிவித்ததும் திடீரென தொடர் நிறுத்தப்பட்டது.  
1982 எம்.ஜி.ஆரின் அழைப்பின்பேரில் அ.தி.மு.க.வில் உறுப்பினரானார். அதே ஆண்டில் நடந்த அ.தி.மு.க. மாநாட்டில் "பெண்ணின் பெருமை'’எனும் தலைப்பில் பேசி எம்.ஜி.ஆரின் பாராட்டைப் பெற்றார். 
1983 அ.தி.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போது நடந்த திருச்செந்தூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்காக பிரச்சாரம் செய்தார். அதன் பின் தமிழகம் முழுக்க கட்சியினர் ஜெயலலிதாவை அழைத்து பொதுக்கூட்டங்கள்போட ஆரம்பித்தனர். 
ஜெயலலிதா எழுதிய "நெஞ்சிலே ஒரு கனல்' என்ற தொடர்கதை லட்சக்கணக்கான பெண் வாசகர்களை ஈர்த்தது.
1984 எம்.ஜி.ஆரால் ராஜ்யசபா எம்.பி. ஆக்கப்பட்டார். அதே ஆண்டில் சத்துணவுத் திட்ட ஆலோசனைக்குழுத் தலைவர் என்ற அரசுப் பதவியில் அமர்த்தப்பட்டார். அதே ஆண்டு அக்டோபரில் எம்.ஜி.ஆருக்கு உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இப்போது ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவமனையில்தான் எம்.ஜி.ஆரும் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
சிகிச்சைபெறும் எம்.ஜி.ஆருக்கு உதவியாக அவரது மனைவி ஜானகி அம்மையார் இருந்தார். ஜெயலலிதா தானும் அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அமெரிக்கா விற்குச் செல்ல முயற்சி செய்து, தன்னுடன் வருமாறு, அப்போது அவருக்கு மேடைப் பேச்சு எழுதிக் கொண்டிருந்த பத்திரிகையாளர் சோலையை வற்புறுத்த மறுத்துவிட்டார் சோலை. 
அதன்பின் ராஜீவ்காந்தியைச் சந்தித்து அவர் மூலம் அமெரிக்கா செல்லும் முயற்சியாக சோலையுடன் டெல்லி செல்கிறார் ஜெயலலிதா. அவருக்கும் முன்பாகவே ஆர்.எம்.வீரப்பனும் பண்ருட்டி ராமச்சந்திரனும் டெல்லியில் முகாமிட்டு, ஜெயலலிதாவின் அமெரிக்கப் பயணத்திற்கு தடை போடுகின்றனர். 

 

 

tt

 

1984 -அக்டோபர் 31 தனது மெய்க்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்படுகிறார் பிரதமர் இந்திராகாந்தி. முதல்வர் எம்.ஜி.ஆருக்கு அமெரிக்காவில் சிகிச்சை தொடர்கிறது. 
கட்சியில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஒரு கோஷ்டி உருவாகத் தொடங்கியது. எம்.ஜி.ஆரின் பேரன்பைப் பெற்ற திருநாவுக்கரசு உள்ளிட்ட அமைச்சர்களே மறைமுகமாக ஜெ.வின் வளர்ச்சிக்கு உதவ ஆரம்பித்தனர். 
அமெரிக்காவில் இருந்தபடியே ஆண்டிப்பட்டியில் எம்.ஜி.ஆர். போட்டியிட்டு, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுகிறார். நாடாளுமன்றத் தேர்தலில்  வென்று  பிரதமராகிறார் ராஜீவ்காந்தி. 
1985 -பிப்ரவரி 05ஆம் தேதி தமிழகம் திரும்பிய எம்.ஜி.ஆர். 10-ஆம் தேதி முதல்வராக பதவி ஏற்கிறார்.  
""எம்.ஜி.ஆரால் பேச முடியவில்லை, செயல்பட முடியவில்லை, அதனால் என்னை முதலமைச்சராக்குங்கள்'' என பிரதமர் ராஜீவ் காந்திக்கு கடிதம் அனுப்பினார் ஜெயலலிதா.  பிரதமர் ராஜீவ்காந்தி சென்னைக்கு வந்து கவர்னர் மாளிகையில் தங்கியிருந்தபோது, அவரைப் பார்க்க எம்.ஜி.ஆர். செல்கிறார். ஆனால் அவருக்கு முன்பாகவே அங்கு ஜெயலலிதா சென்றுவிட்டார்.
அ.தி.மு.க.வின் பொதுக்குழுவைக் கூட்டிய எம்.ஜி.ஆர்., அம்மு (ஜெயலலிதா)வுடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என வாய்மொழி உத்தரவிடுகிறார். 
1984 -டிசம்பர் 20ஆம் தேதி கட்சியிலிருந்து ஜெயலலிதாவை நிரந்தரமாக நீக்கிய அறிவிப்பை கட்சிப் பத்திரிகையான "அண்ணா'வில் வெளியிடுமாறு, அதன் ஆசிரியராக இருந்த சோலைக்கு உத்தரவிடுகிறார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக இருந்தவர்கள் அதனை வெளியிடாதபடி கேட்டுக் கொண்டனர்.. 
1987 -டிச.24 எம்.ஜி.ஆர் மரணமடைந்தார். ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆரின் உடல்  வைக்கப்பட்டிருந்த அவரது தலைமாட்டில் ஜெ. இருந்தார். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியும் ஒருபக்கம் நின்றுகொண்டிருந்தார். 
எம்.ஜி.ஆரின் உடலைச் சுமந்து பீரங்கி வண்டி இறுதி ஊர்வலம் கிளம்பியபோது, அந்த வண்டியில் ஏற முயற்சித்த தன்னை, எ.வ.வேலுவும் கே.பி.ராமலிங்கமும் கீழே தள்ளிவிட்டதாகவும் எம்ஜி.ஆருடன் உடன்கட்டை ஏற தான் நினைத்ததாகவும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார் ஜெயலலிதா. 

 

அடுத்தப் பகுதி :

மெலுகோட் டூ மெரினா... ஜெயலலிதா - ஒரு டைம்லைன் பகுதி 2

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்