Skip to main content

மெலுகோட் டூ மெரினா... ஜெயலலிதா - ஒரு டைம்லைன் பகுதி 2

1988 -ஜனவரி 07-ல்  ஜானகி அம்மையாரை முதல்வராக தேர்ந்தெடுத்தனர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள். ஆனால் 23 நாட்களிலேயே -அதாவது ஜனவரி 30-ஆம் தேதி  தனக்கு ஆதரவாக இருந்த எம்.எல்.ஏ.க்களின் உதவியுடன் ஜானகி ஆட்சியைக் கவிழ்த்தார் ஜெயலலிதா. 
ஜா.அணி, ஜெ.அணி என இரண்டாக உடைகிறது அ.தி.மு.க. இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படுகிறது. தமிழகத்தில் ஓராண்டு காலம் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 
1989-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. போடி தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா வெற்றி பெறுகிறார். அவர் அணியில் 26 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றனர். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார் ஜெயலலிதா.
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தைக் கைப்பற்ற ஜா-ஜெ. அணிகளுக்கிடையே நடந்த கலவரத்தில் தலைமை அலுவலகம் சீல் வைக்கப்படுகிறது. 
சில நாட்களில் இரு அணிகளுக்கிடையே சமரசம் ஏற்பட்டு ஒரே அணியாகி, இரட்டை இலைச் சின்னம் மீண்டும் கிடைக்கிறது. 
முதல்வர் கலைஞர் சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய ஆயத்தமான பொழுது, கோபாவேசமாக எழுந்த ஜெ. பட்ஜெட்டைப் பிடுங்கி கிழித்தெறிய, ரணகளமானது சட்டமன்றம். 
"சபைக்குள் துரைமுருகன் என் சேலையைப் பிடித்து இழுத்தார்' என தலைவிரி கோலத்துடன் சபையிலிருந்து வெளியே வந்தார் ஜெயலலிதா. 
1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான தி.மு.க.வை காங்கிரஸ் துணையுடன் வீழ்த்தினார் ஜெ.
தி.மு.க. ஆட்சி பற்றி டெல்லிக்கு புகார்களை அனுப்பிக் கொண்டே இருந்தார். 

 

 

ja

 


1991 -ஜனவரி 30 ஜெ. முயற்சியின் பலனாக தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு, தமிழ்நாட்டில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. தமிழக சட்டமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் மே மாதம் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 
ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார்  ராஜீவ்காந்தி.  ராஜீவ் மரணத்தால் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க. அமோக  வெற்றி பெறுகிறது. பர்கூர், காங்கேயம் தொகுதிகளில் போட்டியிட்ட ஜெயலலிதா, இரண்டிலும் வெற்றி பெற்று முதல்வராகிறார். பின்னர் காங்கேயம் தொகுதியை ராஜினாமா செய்தார். 
1991-ல் முதல்வரானதும் ஜெயலலிதாவின் உடையில் மாற்றம் வருகிறது. சேலை அணிந்து, அதன் மேல் அதே கலரில் கோட் மாதிரியான உடை அணிகிறார் ஜெ. 
தொழிலதிபர் மிட்டன் என்பவருக்கு விதிமுறைகளை மீறி  கொடைக்கானலில்   பிளசண்ட் ஸ்டே என்ற ஹோட்டல் கட்ட அனுமதி தருகிறார். விதிகளுக்குப் புறம்பாக பல அடுக்குகளைக் கட்டுகிறது ஹோட்டல் நிர்வாகம். 
1992-ஆம் ஆண்டு சென்னை கிண்டியில் உள்ள அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை விலைக்கு வாங்கினார். அதே ஆண்டு பிப்ரவரி மாதம் மகாமகத்தையொட்டி, கும்பகோணம் மகாமகக் குளத்தில் தனது உடன்பிறவா சகோதரி சசிகலாவுடன் சேர்ந்து புனித நீராடினார். லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடிய அந்தக் குளத்தின் ஒரு பகுதியை ஜெ.-சசி இருவரும் குளிப்பதற்காக ஒதுக்கினார்கள். ஜெ. வருகையால் ஏற்பட்ட நெருக்கடியால் விபத்து ஏற்பட்டு, மூச்சுத்திணறி 60 பேர் உயிரிழந்தனர். 
காவிரிப் பிரச்சினைக்காக 1993இல் சென்னை மெரீனா கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தார். அப்போதைய நீர்வளத்துறை அமைச்சர் வி.சி.சுக்லா வாக்குறுதி தந்து, உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
அகில இந்தியாவையே வாய்பிளக்க வைத்த ஒரு நிகழ்ச்சியை 1995-ல் நடத்திக் காட்டினார் ஜெயலலிதா. அதாவது உடன்பிறவாச் சகோதரி சசிகலாவின் உடன்பிறந்த சகோதரி வனிதாமணியின் மகனான 27 வயது சுதாகரனை திடீரென தனது வளர்ப்பு மகனாக அறிவிக்கிறார் ஜெயலலிதா. அந்த மகனுக்கு நடிகர்திலகம் சிவாஜியின் பேத்தி, அதாவது சிவாஜியின்  மகளான சாந்தி-நாராயணசாமி தம்பதியரின் மகள் சத்தியவதியைப் பெண் கேட்டு, சிவாஜியின் அன்னை இல்லத்துக்கு தனது உடன்பிறவாச் சகோதரி சகிதம் சென்று நிச்சயதார்த்தம் செய்தார்.

 

aa

 

 

1995 -செப்டம்பர் 07ஆம் தேதி ரூபாய் 100 கோடி செலவில் ஆடம்பரத் திருமணம் நடத்தி வைத்தார். ஒட்டுமொத்த சென்னையே ஸ்தம்பித்தது. பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை,  மின்சார வாரியம், குடிநீர் வாரியம் என ஒட்டு மொத்த அரசுத்துறைகளும் திருமண வேலைகளில் தீவிரம் காட்டின. 
சென்னை கடற்கரைச் சாலையில் நடந்த மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தில் ஜெயலலிதாவும் சசிகலா சொந்தபந்தங்களும் உடல் முழுவதும் தங்க நகைகள் அணிந்து பவனி வந்தனர். அப்போதைய டி.ஜி.பி. தேவாரம் பாதுகாப்பாக வந்தார். 
பிளசண்ட் ஸ்டே ஹோட்டலுக்கு அனுமதி வழங்கியது, அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை வாங்கியது, இவற்றை யெல்லாம் எதிர்த்து வழக்குத்தொடர, அப்போது கவர்னர் சென்னாரெட்டியிடம் அனுமதி வாங்கினார் சுப்பிரமணியசாமி. இதனால் டென்ஷனான அ.தி.மு.க. மகளிரணிப் பிரபலங்கள், உயர்நீதிமன்றத்துக்கு வந்த சுப்பிரமணியசாமிக்கு மோசமான முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா, தமிழக கவர்னர் சென்னாரெட்டி தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக குற்றம்சாட்டினார்.
டான்சி நிலத்தை வாங்கியது சட்டவிரோதம் என வழக்குத் தொடர்ந்தார், ஆலந்தூர் நகரசபைத் தலைவராக இருந்த தி.மு.க.வின் ஆர்.எஸ்.பாரதி. இந்த வழக்கில் ஆஜரான வக்கீல் சண்முகசுந்தரத்தின் வீடு புகுந்து கொலைவெறித்தாக்குதல் நடத்தியது கூலிப்படை. 
1991-ஆம் ஆண்டு ஆட்சிக்குவந்த ஜெயலலிதாவின் பதவிக்காலம் முடிந்ததையொட்டி 1996-ஆம் ஆண்டு மே மாதம் தமிழக சட்டசபைக்குத் தேர்தல் நடந்தது. எதிலும் ஊழல், எங்கும் அராஜகம் என்ற நிலையைப் பார்த்து கொந்தளிப்பில் இருந்த மக்கள் அ.தி.மு.க.வுக்கு படுதோல்வியை வழங்கினர். பர்கூரில் போட்டியிட்ட ஜெயலலிதாவே  தி.மு.க. சுகவனத்திடம் தோல்வியைத் தழுவினார். 234 தொகுதிகளில் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது அ.தி.மு.க.  
தி.மு.க. ஆட்சியின்போது ஜெயலலிதா ஆட்சிக் காலத்து ஊழல்கள் குறித்த விசாரணை வேகம் பெற்றன. 
நீதிபதி சிவப்பா உத்தரவின்படி ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, ஏராளமான தங்க நகைகள், பட்டுச் சேலைகள், டஜன் கணக்கில் சூட்கேஸ்கள், 200 ஜோடி செருப்புகள் கைப்பற்றப்பட்டன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குத் தொடரப்பட்டு, அதை விசாரிப்பதற்காக மூன்று தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. 

 


2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டலுக்கு அனுமதி வழங்கியதில் ஊழல் நடந்திருப்பது நிரூபணமானதால் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்தது தனி நீதிமன்றம். இதனால் ஆத்திரமான அ.தி.மு.க.வினர் கலவரத்தில் இறங்கினர். கோவை வேளாண் பல்கலைக் கழக மாணவியர்கள் சென்ற பேருந்தை தர்மபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டியில் வழிமறித்து தீவைத்துக் கொளுத்தினர்  அ.தி.மு.க.வினர். 3 மாணவிகள் உடல் கருகி இறந்தனர். 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் தீக்காயமடைந்தனர். 
அதே 2000-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 09-ஆம் தேதி "டான்சி நிலத்தை வாங்கியது சட்டவிரோதம். எனவே ஜெயலலிதா குற்றவாளி' எனக்கூறி மூன்று ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது தனி நீதிமன்றம். 
ஜெயலலிதாவுக்கு எதிரான இத்தீர்ப்புகள் 2001-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடத் தடையாக இருந்தன. 
அப்படியும் அந்தத் தேர்தலில் மெஜாரிட்டி தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. எம்.எல்.ஏ.வாகத் தேர்வாகாத ஜெயலலிதாவுக்கு அவசரம் அவசரமாக மே -14ஆம் தேதி  முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் அப்போது கவர்னராக இருந்த ஃபாத்திமாபீவி.
2001, ஜூன் 30ஆம் தேதி ஜெ. உத்தரவுப்படி கலைஞரின் கோபாலபுரம் வீட்டிற்குள் நள்ளிரவில் நுழைந்து, வேட்டி-சட்டை மாற்றக்கூட அவகாசம் கொடுக்காமல் கைலியுடன் கைது செய்து, சி.பி.சி.ஐ.டி.அலுவலகத்துக்கு இழுத்துச் சென்றனர் போலீசார். சென்னை மாநகரில் மேம்பாலம் கட்டியதில் ஊழல் என்று கலைஞர் மீது வழக்கு பதியப்பட்டது. அந்த வழக்கில் குற்றப்பத்திரிகைகூட தாக்கல் செய்யப்படவில்லை.
முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது             என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால்           2001, அக்டோபர் மாதம் 09ஆம்  தேதியன்று முதல்வர் நாற்காலியில் இருந்து இறங்க வேண்டிய கட்டாயம் ஜெய லலிதாவுக்கு ஏற்பட்டது. நிதி அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்ச ரானார். 
சில மாதங்களில் டான்சி வழக்கி லிருந்து ஜெயலலிதாவை உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததையடுத்து, ஆண்டிப்பட்டித் தொகுதியின் எம்.எல்.ஏ. வாக இருந்த தங்கதமிழ்ச்செல்வன் ராஜினாமா செய்ததால், ஜெ. அத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, 2002-ல் மீண்டும் முதல்வரானார். 
"ஜெயலலிதா முதல்வராக இருப்பதால், தமிழக நீதிமன்றத்தில் நடைபெறும் ஜெ.மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நியாய மாகவும் நேர்மையாகவும் நடைபெறாது. எனவே வழக்கை வேறு மாநிலத் துக்கு மாற்ற வேண்டும்' என உச்சநீதிமன்றத்தில் 2003ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்  வழக்கை பெங்களூருக்கு மாற்றி 2003-ஆம் ஆண்டு நவ.18-ஆம் தேதி உத்தரவிட்டது.  
2006-ல் ஜெயலலிதா பதவிக் காலம் முடிவடைந்ததையொட்டி தமிழக சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலில் 95 எம்.எல்.ஏ.க்களுடன் தி.மு.க.வெற்றி பெற்றது. அறுதிப் பெரும்பான்மை  இல்லாததால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் முதல்வரானார் கலைஞர். அ.தி.மு.க.சார்பில் 64 பேர் எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெற்றனர். தி.மு.க. அரசை "மைனாரிட்டி அரசு' என தொடர்ந்து விமர்சித்த ஜெ., தனது கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டபோது, தன்னந் தனியாக சட்டமன்றம் சென்று குரல் எழுப்பினார்.  

 


2011-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றி மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா. இந்தக் காலகட்டத்தில்தான் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசு இதழில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தனது வெற்றி என்றார் ஜெ. அதுபோலவே முல்லைப் பெரியாறு அணை தீர்ப்பிலும் உரிமை கோரினார். தமிழக சட்டமன்றத்தில் ஈழப் போர்க் குற்றங்கள் -தமிழீழ ஆதரவு தீர்மானங்களும் ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருப்பவர்களின் விடுதலைக்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதும் ஜெயலலிதாவின் இந்த ஐந்தாண்டுகால ஆட்சியில்தான். 
சொத்துக்குவிப்பு வழக்கில் 2014 செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி  தீர்ப்பை வழங்கினார் நீதிபதி குன்ஹா. ஏ-1 ஜெயலலிதா, ஏ-2 சசிகலா, ஏ-3 இளவரசி, ஏ.-4 சுதாகரன் ஆகிய நால்வருக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம் என செப்-30 பிற்பகலில் தனது தீர்ப்பை வாசித்தார் குன்ஹா. இதையடுத்து பெங்களூர்  பரப்பன அக்ரஹார ஜெயிலில் ஜெயலலிதா உட்பட நால்வரும் அடைக்கப்பட்டனர்.  நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வரானார். 
ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை அக்-07-ஆம் தேதி தள்ளுபடி செய்கிறது கர்நாடக உயர்நீதிமன்றம். உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது ஜெ.தரப்பு. அக்-17ஆம் தேதி ஜாமீன் வழங்கினார் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து. 
இதையடுத்து சென்னை ஆர்.கே.நகர் தொகுதியின் அ.தி.மு.க.  எம்.எல்.ஏ.வான வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். 2015, ஜூன்.27-ஆம் தேதி அத்தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றிபெற்று மீண்டும் முதல்வரானார். 
2016 -மே மாதம் நடந்த தமிழக சட்டமன்றத்துக்கான பொதுத் தேர்தலில் அ.தி.மு.க.வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வரானார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆருக்குப் பிறகு 32 ஆண்டு காலம் கழித்து ஆட்சியைத் தக்கவைத்த பெருமையைப் பெற்றார் ஜெ.
2016 -செப்.22ஆம் தேதி இரவு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா.
2016 டிசம்பர் 5 இரவு 11.30 மணிக்கு காலமானார்.

 

முந்தையப் பகுதி :

மெலுகோட் டூ மெரினா... ஜெயலலிதா - ஒரு டைம்லைன் பகுதி 1

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்