Skip to main content
electionsresults-large electionsresults-mobile

கோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கினாரா பிரபல டாக்டர்? -அதிரவைக்கும் மெடிக்கல் க்ரைம் குற்றச்சாட்டு!

indiraprojects-large indiraprojects-mobile

 

     ராகவேந்திரா புக் ஸ்டால், எஸ்.டி.டி. பூத், ஜானு ட்ராவல்ஸ், மகாசக்தி ஃபைனான்ஸ்… 14 விலையுயர்ந்த கார்கள்… பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு… என மதுரையில் கோடீஸ்வரனாக கொடிக்கட்டிப்பறந்த குமாரசாமி தற்போது சென்னையிலுள்ள பிரபல கோயில் வாசலில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். இதற்குக்காரணமாக, அவர் குற்றஞ்சாட்டுவது பிரபல டாக்டரைத்தான்.
 

என்ன நடந்தது? என்று நாம், விசாரிக்க ஆரம்பித்தபோதுதான் டாக்டர்களிடம் செல்லும்போது ஒவ்வொருவரும் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது குமாரசாமியின் ஃப்ளாஷ்பேக்….
 

1999 செப்டம்பர்-29 இரவு 11:30…
 

நண்பர்களுடன் மதுரையிலிருந்து சேலத்துக்கு காரில் சென்றுகொண்டிருந்தார்  ‘கோடீஸ்வரன்’ குமாரசாமி. அதிவேகத்தில், ராசிபுரம் அருகில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் நின்றுகொண்டிருந்த டிப்பர் லாரியில் மோதியது கார். அதிகாலை… விபத்துக்குள்ளான இடத்திற்கு வந்த காவல்துறை, காருக்குள்ளிருந்த ஐந்துபேரும் விபத்தில் இறந்துவிட்டார்கள் என முடிவுசெய்து அதற்கான வேலையில் ஈடுபட ஆரம்பித்தது. ஆனால், காருக்குள்ளிருந்து உயிருக்குப்போராடும் முனகல் சத்தம் வெளியில் கேட்க… பொதுமக்களில் ஒருவர் பதறியடித்துக்கொண்டு போலிஸிடம் சொன்னபோதுதான் குமாரசாமி உள்ளிட்டவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள பிரபல மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார்கள். கோமாவில் இருந்த குமாரசாமிக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டது. கண்விழித்தபோதுதான் தெரிந்தது இடதுபக்கம் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது என்ற தகவல்.
 

 

இரண்டுவருடங்களுக்குப்பிறகு….

 

2001 ஆம் ஆண்டு சென்னை நண்பர் ஸ்ரீராம் மூலம் குமாரசாமிக்கு அறிமுகமாகிறார் மெடிக்கல் எக்யூப்மெண்ட்களை விற்கும் மேனேஜர் சண்முகவேல். அவர்கள், இருவரும் சென்னை மந்தைவெளியிலுள்ள பிரபல  டாக்டரிடம் குமாரசாமியை இடுப்பு எலும்புமாற்று அறுவைசிகிச்சைக்கு அழைத்துசென்றார்கள். அதற்குப்பிறகு, என்ன நடந்தது?

 

subramanian

                                                         டாக்டர் சுப்பிரமணியனின் க்ளினிக்“அரசு இராயப்பேட்டை மருத்துவமனையில ஆர்த்தோ டிபார்ட்மெண்ட் சீஃப் டாக்டரா இருக்காரு. தனியா க்ளினிக்கும் வெச்சிருக்காரு. அவரோட, அப்பாயின்மெண்ட் வாங்கணும்னா 15 நாட்களுக்கு முன்பே 5,000 ரூபாய் முன்பணம் கட்டணும். அப்போதான், தேதி கிடைக்கும். 15 நிமிடத்துக்குமேல அவர் யார்க்கிட்டேயும் பேசமாட்டார்” என்ற பில்ட்-அப்புகளோடு அழைத்து செல்லப்பட்டார் குமாரசாமி.
 

 ‘இவர்தான் நாங்க சொன்ன டாக்டர். இவர், பேரு சுப்பிரமணியன்’ என்று நண்பர்கள் அறிமுகப்படுத்திவைத்ததும், “ராயப்பேட்டை ஹாஸ்பிட்டலில் எப்போ வந்து அட்மிட் ஆகலாம் டாக்டர்?” என்று கேட்டார் குமாரசாமி.
 

“ராயப்பேட்டை வேணாம்… நான் சொல்ற தனியார் ஹாஸ்பிட்டல் வா… அங்க, வெச்சு ரீ ப்ளேஸ்மெண்ட் பன்றேன். 15 நாள்ல நடக்க வெச்சிடுறேன்” என்றதும் மற்றவர்கள்போல் நாமும் நல்லபடியாக நடக்கலாம். தான் வைத்திருக்கும் விதவிதமான கார்களை ஓட்டுவதிலும் இனி பிரச்சனை இருக்காது என்று நம்பிக்கையுடன் டாக்டரை ஏறெடுத்துப் பார்த்தார் குமாரசாமி.
 

“புதிய ஹிப் ஜாயின் போர்ன் (இடுப்பு மூட்டு எலும்பு) இம்ப்ளேண்ட் பண்ண 1 லட்சத்து 25,000 ரூபாய், என்னோட ஃபீஸ் 50,000 ரூபாய், ஹாஸ்பிட்டல் ஃபீஸ் தனி”என்று மருத்துவச்செல்வை பட்டியலிட்டார் டாக்டர் சுப்பிரமணியன்.
 

“எவ்வளவு, செலவானாலும் பரவாயில்ல… எழுந்து நடந்தாப்போதும்” டாக்டர்களிடம் எதைச்சொல்லக்கூடாதோ அந்த வார்த்தையைச் சொல்லிவிட்டார் குமாரசாமி.
 

subramanian

                                                   விருதுபெறும் டாக்டர் எம்.சுப்பிரமணியன்


2001 ஜூலை-23 சென்னை தனியார் மருத்துவமனை…
 

ஆபரேஷன் முடிந்து நார்மல் வார்டுக்கு வந்ததும் திடீரென்று டாக்டர் சுப்பிரமணியன் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்தார்.
 

“மகனே மன்னிச்சுக்கோ” என்ற அலறல் சப்தம் குமாரசாமியின் காதுகளில் ஒலித்தது.
 

எவ்வளவு பெரிய டாக்டர். தன்னைப்பார்த்து மகனே என்று ஓடிவந்து அழுதது குமாரசாமிக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒன்றும் புரியாமல்,
 

“என்னாச்சுப்பா?” மகனே என்று டாக்டர் அழைத்ததால் இப்படிக்கேட்டார் குமாரசாமி.  
 

“15 நாள்ல உன்னை நல்லா நடக்கவைக்கணும்ங்குற கனவு கெட்டுப்போச்சு” என்றதுமே குமாரசாமியின் தலையில் இடி விழுந்ததுபோல் இருந்தது. ஆனாலும், டாக்டர் சுப்பிரமணியன் அதற்கு என்னக் காரணம் சொல்லப்போகிறார்? என்றபடி பதைபதைப்போடு பார்த்தார்.
 

 “அரைமணிநேரம்தான் உனக்கு ஆபரேஷன் பண்ணனும்னு முடிவுபண்ணியிருந்தேன். ஆனா, தொடையில எக்ஸ்ட்ரா எலும்பு வளர்ந்து மசில்ஸுக்குள்ள பிண்ணிக்கிட்டிருக்கு. அதை, க்ளீன் பண்ணவே 5 ½ மணிநேரம் ஆகிடுச்சு. போராடி காப்பாத்தியிருக்கேன். அனெஸ்தடிக் (மயக்கவியல் நிபுணர்) கிட்ட இன்னும் ஒரு ஃபைவ் மினிட்ஸ் டைம் கேட்டேன். இன்னும் டூ மினிஸ்ட்ஸ் போனாலே ஜீரோவாகிடும்னு சிக்னல் காண்பிச்சுட்டார். அதனால, அர்ஜண்டா ஸ்டிச்சிங் பண்ணிட்டேன். இன்னும் ஒரு ஆறு மாசம் ஆகட்டும். உனக்கு ஹிப் போர்ன் ரீப்ளேஸ்மெண்ட் பண்ணி நடக்கவைக்கிறேன்” என்று டாக்டர் சுப்பிரமணியன் சொல்ல, வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டார் குமாரசாமி.
 

அதிலிருந்து, குமாரசாமியும் சுப்பிரமணியனும் டாக்டர்-நோயாளி என்றில்லாமல் அப்பா-மகனாய் பழக ஆரம்பித்தார்கள். 15 நாட்களுக்கு முன்பே பணம் கட்டி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கவேண்டிய டாக்டர் சுப்பிரமணியனிடம் சிகிச்சைக்கு எந்தவிதமான அப்பாயின்மெண்டும் இல்லாமல் அடிக்கடி, மதுரையிலிருந்து சென்னை மந்தவெளிக்கு வந்துசென்றார் குமாரசாமி.        
 

2002 பிப்ரவரி- 02 ந்தேதி…
 

மந்தவெளியிலிருந்து டாக்டர் சுப்பிரமணியனின் மகள் செல்ஃபோன் நம்பரிலிருந்து ஃபோன் வந்தது.
 

“அப்பா உங்கக்கிட்ட பேசணும்ங்கிறார்”
 

“அப்பாக்கிட்ட ஃபோனை கொடும்மா” என்றார் குமாரசாமி.  “மகனே, எப்படியிருக்க?” என்று வழக்கப்போல் நலம்  விசாரித்துவிட்டு,
 

“ரீப்ளேஸ்மெண்ட் ஆபரேஷனுக்கு ரெடியா?” என்று கேட்டார் டாக்டர் சுப்பிரமணி.
 

 “இப்போ, கூப்பிடுங்க… நாளைக்கு மார்னிங் வந்து  நிற்குறேன் டேடி” உணர்ச்சிவசப்பட்டார் குமாரசாமி.  
 

“ஜெர்மன்லேர்ந்து ஸ்பெஷலா உனக்காக ரெண்டு டாக்டர்களை இன்வெட் பண்ணியிருக்கேன். ஃப்ளைட் டிக்கெட்  புக் பண்ணிக்கொடுக்கமுடியுமா?”
 

“என்ன டேடி இப்படி கேட்குறீங்க… ஆல்வேஸ் ஐ ஆம் கெட் ரெடி டாடி…”
 

 “ஒரு டிக்கெட் 1.5 லட்ச ரூபாய். ரெண்டு டிக்கெட் ரெண்டரை லட்ச ரூபாய். எனக்கு 50,000 ரூபாய் அனுப்பிடு மகனே”
 

 “வித் இன் ஆஃப் அண்ட் ஹவர் டேடி… யுவர் அக்கவுண்ட் பர்ட்டிகுலர்லி மென்ஷன் அமவுண்ட் ஃப்ளைட் டிக்கெட் 2 1/2 லேக்ஸ்+ 50,000 டோட்டல் த்ரி லேக்ஸ் அக்கவுண்ட் ட்ரான்ன்ஸ்ஃபர் ஃபெடரல் பேங்க் ஆஃப் இண்டியா. போதுமா டாடி?”


 

kumarasamy

                                                                 பாதிக்கப்பட்ட குமாரசாமி “போதும்டா” என்று சிரித்தபடி ஃபோனை துண்டித்தார் டாக்டர் சுப்பிரமணியன்.
 

ஆகமொத்தம், மூன்று லட்ச ரூபாயை அன்று மாலை  மதுரை ஈஸ்ட்வேலி எதிரில் (சிந்தாமனி தியேட்டர் இருந்த இடத்தில்) இருந்த  ஃபெடரல் பேங் ஆஃப் இண்டியா அக்கவுண்ட் மூலம் அவருக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்தார் குமாரசாமி. பணம் வந்துவிட்டது என்று டாக்டர் சுப்பிரமணியிடமிருந்து மீண்டும் மகிழ்ச்சியுடன் ஃபோன் வந்தது.
 

சென்னை தனியார் மருத்துவமனை…
 

மறுநாள் சனிக்கிழமை மருத்துவமனையில் அட்மிட் ஆனார் குமாரசாமி. செவ்வாய்க்கிழமை ஆபரேஷனுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு ஸ்ட்ரெக்சரில் வைத்து தள்ளிக்கொண்டு ஆபரேஷன் தியேட்டருக்குள் செல்கிறார்கள். அப்போது, டாக்டர் சுப்பிரமணியின் காதில் ஜெர்மன் டாக்டர் ஏதோ சொல்கிறார். உடனே, குமாரசாமியின் ஸ்ட்ரெக்சரை நிறுத்திவனார் டாக்டர் சுப்பிரமணியன்.
 

 “மகனே… நீ உடனே தேவி ஹாஸ்பிட்டலுக்கு போயி சி.டி.ஸ்கேன் எடுத்துவிட்டு வா’ என்றதும் குழப்பமானார் குமாரசாமி.
 

“என்னாச்சுப்பா… எனக்கு நீங்க ரீப்ளேஸ்மெண்ட் ஆபரேஷன் பன்றதா சொல்லித்தானே  கூப்ட்டீங்க. இப்போ, திடீர்ன்னு தேவி ஹாஸ்பிட்டல் போயி ஸ்கேன் எடுக்கச் சொல்றீங்க? ஆபரேஷன் பண்ணலையா?”
 

 “அப்பா, சொல்றதை செய். நீ போயிட்டு வர்றதுக்குள்ள எனக்கு  ரிப்போர்ட் வந்துடும் உடனே போயி எடு” என்று அவசரப்படுத்தினார்.  
 

டாக்டர் சொல்வதை கேட்டுத்தானே ஆகவேண்டும். டாக்டர் சுப்பிரமணியன் சொன்னபடி தேவி மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் எடுத்துவிட்டு வந்தார் குமாரசாமி.
 

மதியம் 3:30 மணியளவில், தலையில ஓங்கி அடித்துக்கொண்டு,  “மகனே மகனே” என்று அழுதபடி ஓடிவந்தார் டாக்டர் சுப்பிரமணியன்.  
 

“எதுக்குப்பா அழுவுறீங்க?” என்று பதட்டத்துடன் கேட்டார் குமாரசாமி.
 

குமாரசாமியின் தோள்மீது கையைப் போட்டவர், “நல்ல வேளை உனக்கு ரீப்ளேஸ்மெண்ட் ஆபரேஷன் பண்ணல. ஆபரேஷன் பன்றதுக்கு ஓப்பன் பண்ணியிருந்தா உன் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியாதுடா மகனே… இந்நேரம் நீ டெட் ஆகியிருப்படா மகனே” என்று ஓ….வென்று அழுதவரை சமாதானப்படுத்தினார் குமாரசாமி.  
 

டாக்டர் குமாரசாமியின் பக்கத்தில் இன்னொருவர் நின்றுகொண்டிருந்ததைப்பார்த்த குமாரசாமி,
 

 ‘யாருப்பா இது?’ என்று கேட்பதற்குள்  டாக்டர் சுப்பிரமணியனே அறிமுகப்படுத்த ஆரம்பித்தார்.
 

“என்னோட க்ளாஸ்மெட் இவன். 30 வருடத்துப்பிறகு இன்னைக்குத்தான் பார்த்தேன். ஆர்டிஃபிஷியல் கால் சேல்ஸ் பண்றவன். உனக்காக இவனை கையோட கூட்டிக்கிட்டு வந்திருக்கேன். இவன்கிட்ட ஒரு 10,000 ரூபாய் கொடு. காலிபர் ஷூ செஞ்சு கொடுப்பான். அதைவெச்சு நீ நடக்கலாம்” என்று சொல்ல… குமாரசாமியின் இதயத்தில் இடிவிழுந்ததுபோல் இருந்தது.  
 

 “இவ்ளோ பணம் செலவழிச்சும் இனிமே என்னால ஸ்டிக் இல்லாம நடக்கமுடியாதாப்பா? எனக்கு இனிமே வேற ஆபரேஷனே கிடையாதா? ஆர்டிஃபிஷியல் கால் மூலமாத்தான் நடக்கணுமா?” என்று டாக்டர் சுப்பிரமணியனிடம் பரிதாபக் கேட்ட குமாரசாமி டாக்டரின் நண்பர் பக்கம் திரும்பினார்.
 

 “10,000 ரூபாய் பணம் வேணும்னா வெச்சுக்கோங்க. எனக்கு, எந்த காலும் வேணாம்… நான் கிளம்புறேன்”என்றார் வேதனையோடு.
 

“இப்போ, உன் கால் இருக்குற நிலைமைக்கு நீ எங்க போனாலும் ஆபத்துடா”
 

“பரவாயில்லப்பா… நான் ஏழுமலையானுக்குபோயி அங்கப்பிரதட்சணைப்பண்ணப்போறேன். எல்லாம் என் விதி” என்று சொல்லிட்டு கிளம்பினார்.
 

 “இனிமே, அந்த தனியார் மருத்துமனை வேணாம். வீட்டுக்கு வந்துடு” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.
 

2012 ஆகஸ்டு -8 ந்தேதி மந்தவெளி…
 

பத்து வருடங்கள் ஓடிவிட்டாலும் கால் நடக்க முடியாத குமாரசாமி முடியாமல் பல்வேறு கொடுமைகளை வேதனைகளையும் எதிர்கொள்ள ஆரம்பித்தார். குடும்பத்திலும் பல பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பித்தது.
 

மனைவியும் மகளும் வீட்டில் இல்லை. தூக்கமே இல்லை. ஒரு கட்டத்துக்குமேல் கால் யானைக்கால் சைஸுக்கு வீங்கிவிட்டது. முகமெல்லாம் கருத்துப்போனது. கண்ணாடியில் முகத்தை பார்க்கவே குமாரசாமிக்கு பயமாக இருந்தது. மனவலி ஒருபக்கம் இடுப்பெலும்பு பகுதிவலி இன்னொருபக்கம் என முடியாமல் சென்னை மந்தவெளியில் இருக்கும் டாக்டர் சுப்பிரமணியனின் வீட்டுக்கு கிளம்பினார் குமாரசாமி.
 

மதியம் 1 மணி இருக்கும். கிளினிக்குற்குள் நுழைந்த குமாரசாமியை அதிர்ச்சியுடன் பார்த்தார்  டாக்டர் சுப்பிரமணியின் மகன் டாக்டர் மாணிக்கவேலாயுதம்.
 

“என்னண்ணா, இவ்ளோ டேஞ்சராகி வந்திருக்கீங்க?” டாக்டர் சுப்பிரமணியன் அப்பா என்றால் அவரது மகனுக்கு குமாரசாமி அண்ணன் என்ற அர்த்தத்தில் அப்படிக்கேட்டார் டாக்டர் மாணிக்கவேலாயுதம்.
 

 “அத நம்ப டாடிக்கிட்டதான் கேட்கணும் தம்பி. டாடியை கூப்பிடுங்க” என்றார் கெஞ்சலாக.
 

”அவர் யூ.எஸ். ஏ. போயிருக்காருண்ணா”
 

“என்னோட பிரச்சனை அப்பாவுக்குத்தான் தெரியும். அப்பாவுக்கு ஃபோன் பண்ணுங்க தம்பி”
 

அப்பாவிடம் பேசிவிட்டு வந்த டாக்டர் மாணிக்கவேலாயுதம், “டாடிக்கிட்ட பேசிட்டேன். டோண்ட் ஒர்ரி… சில டேப்ளட்ஸ் கொடுக்க சொல்லியிருக்காங்க. கோவ்ச்சுக்காதீங்கண்ணே. உங்களை டச் பண்ணி ட்ரீட்மெண்ட் பண்ணமுடியாத அளவுக்கு ஹை டேஞ்சர்ல இருக்கீங்க. மேல போயி ரெஸ்ட் எடுங்க” என்றவர் மாத்திரைகளைக்கொடுத்து சாப்பிடச்சொன்னார். மறுத்த, குமாரசாமி மாத்திரைகளை மட்டும் வாங்கிக்கொண்டு மரண வேதனையுடன் மதுரைக்கு திரும்பினார்.
 

2016 ஜனவரி- 1 காலை 5:30   மதுரை மாட்டுத்தாவணி பேருந்துநிலையம்…
.

தங்குவதற்கு வீடுகூட இல்லாமல் பேருந்துநிலையத்தில் படுத்துக்கிடந்த குமாரசாமிக்கு ஒன் பாத்ரூம் வருவதுபோல் இருந்தது. ஓரமாக ஒதுங்கியபோது திடீரென்று சிறுநீர் வருவதற்குபதில் ஏதோ ஒரு ‘ப்ளாஸ்டி நாப்’ வெளியில் வர ஆரம்பித்ததைப்பார்த்து பேரதிர்ச்சி அடைந்தார். ஒருநிமிடம் அவருக்கு ஒன்றுமே புரியாமல் நிலைகுலைந்துபோனார்.
 

அதை பிடிச்சு லேசா இழுத்ததும் தலையில் ஆணி அடித்ததுபோன்று சுர்ர்ர்ரீரீர் என  மூளைவரைக்கும் அப்படியே இறங்கியது. உடம்பெல்லாம் சிலிர்த்துப்போனது. சாதாரண வலி அல்ல… மரண வலி. ரோஸ் கலர் ட்யூப் வெளியில் வந்து நின்றது. வலி பொறுக்கமுடியாமல் மதுரை மீனாட்சி மிஷனுக்கு ஓடினார். அங்கு, குமாரசாமியின் ஸ்கூல்மெட் நண்பர் டாக்டர் கண்ணன் கடவுளைப்போல் நின்றுகொண்டிருந்தார். குமாரசாமியைப் பார்த்துவிட்டு ஓடிவந்த டாக்டர் கண்ணன்,
 

 “என்னடா ஆச்சு?” என்று கேட்க, குமாரசாமி அதைக் காண்பிக்க அதிர்ந்துபோய் யூராலஜி டாக்டர் நாகராஜனிடம் (ஆரப்பாளையம் கிராஸ் ரோடு) அனுப்பிவைத்தார். அப்போதான், தெரிந்தது குமாரசாமியின் உடம்பில் யூரினரி ட்யூப் இருந்தது என்கிற அதிர்ச்சிக்குரிய விஷயம்.
 

2001-ல் தனியார் மருத்துவமனையில்  ‘மகனே மகனே’ என்று சொல்லிக்கொண்டு அன்பையும் பாசத்தையும் பொழிந்த பிரபல டாக்டர் சுப்பிரமணியன் ஆபரேஷன் செய்தாரே அப்போது உடலுக்குள் வைத்து தைக்கப்பட்ட ட்யூப்தான் அது. முதல்முறை ஆபரேஷன் செய்தபோது  ‘யூரினரி  ட்யூபை எங்க வெச்சேன்னு தெரியலையே?’என்று தேடியது குமாரசாமியின் நினைவுக்கு மின்னல் வேகத்தில் வந்துபோனது.  

 ‘அப்படின்னா, இவ்ளோநாளும் மகனே மகனேன்னு பேசினதெல்லாம் இந்த தப்பை மறைக்கத்தானா?’என்று அதிர்ச்சிமேல் அதிர்ச்சிடைந்தார் குமாரசாமி.  
 

2016 சிலமாதங்கள் கழித்து….
 

சென்னைக்கு வந்தார். டீ வாங்கிக்குடிக்கக்கூட கையில் காசு இல்லை. பசி ஒருபக்கம்… மனைவி, பிள்ளைகள் எல்லாம் விட்டுப்போன மனவலி இன்னொரு பக்கம். இதையெல்லாம், தாண்டி கால் நடக்கமுடியாத வலி. எல்லா, வலிகளையும் தாங்கிக்கொண்டு அலைந்தார் குமாரசாமி.
 

ஒருகட்டத்தில் இராயப்பேட்டை ஜி.ஹெச்சுக்கே சிகிச்சைக்கு வந்தார். மூன்று நாட்கள் கட்டுப்போட்டவர்கள், ‘உண்மைய சொல்லுங்க… இது, சாதாரணமா அடிபட்ட காயமெல்லாம் இல்ல. என்ன ஆச்சு?” என்று கேட்டார் இராயப்பேட்டை ஜி.ஹெச் டாக்டர்.
 

அப்போதான், வேற வழியில்லாமல் டாக்டர் பாலசுப்பிரமணியனிடம் ட்ரீட்மெண்டுக்குப்போய் இப்படி ஆகிவிட்டது என்று சொல்லியிருக்கிறார்.  
 

“அந்த ஆளா? இங்கதான், டாக்டரா இருந்தாரு. சரியான லஞ்சப்பேர்வழியாச்சே” என்று சொல்ல குமாரசாமியின் மனவலி இன்னும் ரணவலியானது. மற்றவர்களும் அவரைப்பற்றி சொன்னதும் ஆபரேஷன் செய்த இசபெல்லா மருத்துவமனைக்குச் சென்றார்.
 

“உங்களுக்கு மெடிக்கல் நெக்லிஜென்ஸ் நடந்தது உண்மைதான். ஆனா, எங்க மருத்துவமனையில் நீங்க அட்மிட் ஆகல. டாக்டர் சுப்பிரமணியன் தன்னோட கெஸ்ட்டுன்னு சொல்லி அட்மிட் பண்ணி அவரேதான் ட்ரீட்மெண்ட் பண்ணியிருக்காரு. சோ… நீங்க அவர்மேல சட்டரீதியா என்ன கம்ப்ளைண்ட் பண்ணணுமோ பண்ணுங்க” என்று சொல்லி அனுப்பினார்கள். அதுமட்டுமல்ல, ஜெர்மனியிலிருந்து இரண்டு டாக்டர்களை ஸ்பெஷலாக வரவழைப்பதாக 2 ½ லட்சரூபாய் ஃப்ளைட் டிக்கெட்டிற்கான பணத்தை வாங்கியது சீட்டிங் என்பது தெரியவந்தது. காரணம், வழக்கம்போல் அந்த மருத்துவமனை நிர்வாகத்தால் கெஸ்டாக அழைக்கப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.  
 

கோபம் கொப்பளிக்க மந்தைவெளியில் இருக்கும் டாக்டர் சுப்பிரமணியனின் வீட்டுக்குப்போனார் குமாரசாமி.
 

“என்னப்பா இப்படி பண்ணிட்டீங்களே?”என்று கேட்டார்.
 

”என்னாச்சு?” என்று கேஷுவலாக கேட்டார் டாக்டர் சுப்பிரமணியன்.
 

“முதல் முதலில் ஆபரேஷன் பண்ணிட்டு யூரினரி ட்யூப்பை காணோம்னு தேடிக்கிட்டிருந்தீங்களே ஒண்ணுல்ல… அந்த டியூப் 17 வருஷம் என் வயித்துக்குள்ளதான் இருந்தது. இதனால, என் காலும் வெளங்காம போச்சு. என் வாழ்க்கையும் வெளங்காம போச்சு. என்னைய காப்பாத்துங்கப்பா… தப்பு செஞ்சது நீங்க” என்று கதறினார் குமாரசாமி.
 

எந்தவித எதிர்ப்பும் கோபமும் காண்பிக்காமல்,
 

  “பெட்டுல ஏறி படு” என்றார் டாக்டர் சுப்பிரமணியன்.
 

படுத்ததும் டிஞ்சர் ஊற்றி க்ளீன் பண்ணி ஆயின்மெண்ட் தடவி கட்டுப்போட்டார்.
 

மூன்று நாட்கள் கட்டுப்போட்டு முடிந்ததும், தம்பிக்கிட்ட போ என்று தனது மகன் டாக்டர் மாணிக்கவேலாயுதத்திடம் அனுப்பிவைத்தார். ஐந்து நாட்கள் ட்ரீட்மெண்ட் செய்த டாக்டர் சுப்பிரமணியனின் மகன் டாக்டர் மாணிக்கவேலாயுதம்,
 

 “அண்ணே… வேஸ்டா அலைய வேணாம். நீங்களே தண்ணிய ஊத்தி கழுவிட்டு துணிய ஊற்றி சுத்திடுங்க” என்று அனுப்பிவைக்க… புண்ணும் ஆறவில்லை. இவ்வளவையும் செய்துவிட்டு எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல் இருக்கிறார்களே என்று தீப்பிழம்பாய் மாறினார் குமாரசாமி.
 

2016 ஜூன் – 17….
 

டாக்டர் சுப்பிரமணியனின் அறைக்கதவு ஓரமாக காத்திருந்தார் குமாரசாமி. உள்ளிருந்து, நோயாளி ஒருவர் கன்சல்டிங் முடித்துவிட்டு வெளியே வந்ததும் வாக்கிங் ஸ்டிக்கை வைத்து தள்ளிக்கொண்டு உள்ளே சென்றார்.  
 

“டேய் சுப்பிரமணியா.. இப்படியாடா ஏமாத்துவ? இத்தன வருஷமா அப்பா அப்பான்னு கூப்ட்டுக்கிட்டு இருந்தேன். என்னை இப்படி பண்ணிட்டியேடா. ட்ரீட்மெண்டுக்கு பையனப்பாருன்னு சொல்லி அனுப்பின. அவனும் என்னை அனுப்பிவிட்டுட்டான். என் வாழ்க்கையே போச்சு. நாளைக்கு நான் வரும்போது சரி பண்ணலைன்னா. நீ இல்ல சுப்பிரமணி… ஜாக்கிரத சுப்பிரமணி…. உண்மை தோற்காது” என்று சொல்லிட்டு வந்துவிட்டார்.
 

மறுநாள்…
 

மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்ஸிடம் முறையிட்டார் குமாரசாமி. ஏற்கனவே, மதுரையில் தனது மனைவி மற்றும் சொத்து பிரச்சனைக்காக புகார் கொடுக்கும்போது துணை ஆணையர் பாலகிருஷ்ணன் அறிமுகம் என்பதால்  ‘புகாருடன் வாருங்கள் நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று அனுப்பிவைத்தார் துணை ஆணையர்.
 

ஆனால், முதல்முதலில் டாக்டர் சுப்பிரமணியனை அறிமுகப்படுத்திவைத்த நண்பன் ஸ்ரீராமின் அண்ணனோ,  “நீங்க இருக்கிற நிலைமைக்கு போலீஸ் ஸ்டேஷன் கோர்ட்டுன்னு அலைஞ்சி என்ன பண்ணமுடியும்? இன்னும் ஒரு தடவ டாக்டர் சுப்பிரமணியனை நேர்ல போயி பாருங்க. உங்களுக்கு அவர் ஏதாவது உதவி செய்ய சான்ஸ் இருக்கு”என்றார்.
 

20…ந்தேதி டாக்டர் சுப்பிரமணியனின் வீட்டிற்கு சென்றார் குமாரசாமி. சில நிமிடங்களிலேயே டாக்டரின் அறைக்கு அழைத்துசென்றார்கள். டாக்டர் சுப்பிரமணியன் தலையை குனிந்துகொண்டு  எதுவும் பேசாமல் நின்றுகொண்டிருந்தார். அப்போதுதான், தெரிந்தது அபிராமிபுரம் காவல்நிலையத்திலிருந்து வந்த  எஸ்.ஐயும் கான்ஸ்டபிளும் வந்து குமாரசாமியை மிரட்ட ஆரம்பித்தார்கள்.
 

 “இஸ் நாட் ஏ ரைட் சொலியூஷன் சார். என் உடம்புக்குள்ள யூரினரி ட்யூபை வெச்சு ஆபரேஷன் பண்ணினது ஒருபக்கம் இருக்கட்டும். அது, அவர் வேணும்னே பண்ணியிருக்கமாட்டார். ஆனா, ஹிப் போர்ன் ரீப்ளேஸ்மெண்ட் பன்றதா 1 ½ லட்ச ரூபாய் வாங்கிக்கிட்டு ரீப்ளேஸ்மெண்ட் பண்ணல. அப்புறம், எனக்காக ஜெர்மன் டாக்டரை வரவழைக்கிறேன்னு சொல்லி ஃப்ளைட் டிக்கெட்டுக்காக 2 ½ லட்ச ரூபாய் வாங்கின லஞ்சப்பணத்தை மட்டும் திருப்பிக்கொடுக்க சொல்லுங்க சாப்பாட்டுக்கூட என்கிட்ட  காசு இல்ல” என்று அபிராமிபுரம் போலிஸாரிடம் கதறிப்பார்த்தார் குமாரசாமி.
 

எதுவுமே கிடைக்காமல் விரட்டப்பட்டு அழுதுகொண்டே வெளியில் வந்தவரை அபிராமிபுரம் காவல்நிலையத்துக்கு அழைத்துசென்று போலிஸார்  மிரட்டுகிறார்கள். டாக்டரின் தவறை குறிப்பிட்டு எழுதிய குமாரசாமி, காவல்துறையை வைத்து மிரட்டுகிறார் டாக்டர் சுப்பிரமணியன் என்று எழுதிக்கொடுத்துவிட்டு வந்துவிடுகிறார்.
 

பிறகு, தற்கொலைக்கு முயன்று படகு ஓட்டுநர்களால் காப்பாற்றப்படுகிறார். பிறகு, சென்னையில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தவர் நக்கீரன் புத்தகத்தை வாங்கி அலுவலகத்தை தொடர்புகொண்டு டாக்டர் சுப்பிரமணியன் குறித்து புகார் கொடுக்க… நாம் விசாரித்தபோது அவர் கொடுத்த வாக்குமூலம்தான் இது.   
 

குற்றச்சாட்டு குறித்து, சென்னை மந்தவெளியைச்சேர்ந்த டாக்டர் சுப்பிரமணியனை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, “அவருக்கு ஆபரேஷன் செய்யலாம் என்று முடிவுசெய்தோம். ஆனால், அதில் சிக்கல் இருக்கிறது என்று வெளிநாட்டு டாக்டர்கள் சொன்னதால் ஆபரேஷனை தவிர்த்துவிட்டோம்” என்றவரிடம், 2001- முதல் முதலில் ஆபரேஷன் செய்தீர்கள் அல்லவா? அப்போது, யூரினரி ட்யூபை வைத்து தைத்துவிட்டீர்களா? என்று நாம் கேட்டபோது, “நான், ஆர்த்தோ டாக்டர் எனக்கும் யூரினரி ட்யூபுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அதனால், நான் அப்படிப்பட்ட ஒரு ஆபரேஷனை செய்யவில்லை. இதற்குமுன் விபத்து ஏற்பட்டபோது அப்படி வைக்கப்பட்டிருக்கலாம். அதேபோல், வெளிநாட்டு மருத்துவர்களுக்கு ஃப்ளைட் டிக்கெட் பணமெல்லாம் அவர் அனுப்பவில்லை. அவரும் நானும் அப்பா-மகன் என்று பழகவில்லை. அவர் என்னை டாக்டரைய்யா என்றுதான் அழைப்பார். குடும்பச்சூழ்நிலை மற்றும் பிசினஸ் காரணமாக அவர் இப்படியாகிவிட்டார். அதனால், இப்படி என்னைப்பற்றி தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதையெல்லாம் நம்பாதீர்கள்” என்றார் தனது தரப்பு விளக்கமாக.
 

மெடிக்கல் நெக்லிஜென்ஸ் என்பது மருத்துவ அலட்சியம். எவ்வளவு  சிறந்த மருத்துவர்களுக்கும் மருத்துவ அலட்சியத்தின் மூலம் நோயாளிக்கு ஆபத்து ஏற்படலாம். அது, நிரூபிக்கப்பட்டால் அதற்கான இழப்பீட்டை மருத்துவர் கொடுக்கவேண்டும். ஆனால், குமாரசாமியின் குற்றச்சாட்டுகள் வெறும் மெடிக்கல் நெக்லிஜென்ஸ் மட்டுமல்ல, நம்பி வந்த நோயாளியிடம் பணமோசடியிலும் ஈடுபட்டிருக்கிறார் என்பதுதான். இதனால், தன்னுடைய வாழ்க்கையையே இழந்து கோடீஸ்வரனாக இருந்தவர் பிச்சை எடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இதுகுறித்து, சுகாதாரத்துறையும் மருத்துவக்கவுன்சிலும் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏனென்றால், நம் நாட்டில் மருத்துவர்களின் அலட்சியத்தால் பல உயிர்கள் மட்டுமல்ல… பணத்தையும் இழந்து பல குமாரசாமிகள் உலாவிக்கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...