Skip to main content

இதுதான் 'அம்மா' ஆட்சியா..? அவர் இருந்திருந்தால் சுட்டுக்கொல்ல விட்டிருப்பாரா? - மயில்சாமி சுளீர் பேட்டி!

 

gh


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்துச் சென்றனர். 

 

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். தந்தை-மகன் இருவரும் மரணம் அடைய அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட காவலர்களே காரணம் என்று நாடு முழுவதும் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய காவலர்கள் தற்போது ஒருவர் பின் ஒருவராகக் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக நடிகர் மயில்சாமி கருத்துத் தெரிவித்துள்ளார். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில் வருமாறு, 

 

சாத்தான்குளத்தில் போலிசார் அடித்ததில் தந்தை மகன் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. காவலர்கள் ஒருபுறம் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்தச் சம்பவத்திற்குப் பலவேறு நடிகர், நடிகைகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? 

 

அவர்கள் இருவரும் என்ன தவறு செய்தார்கள். அவர்களைச் சித்தரவதைச் செய்வதில் உங்களுக்கு என்ன அப்படி இன்பம் கிடைத்துவிடப் போகிறது. அவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்று முதலில் கூறுங்கள். கொள்ளை அடித்துக்கொண்டு, பிக் பாக்கெட் அடிப்பவர்களை முதலில் பிடியுங்கள். அவர்கள் எல்லாம் தற்போது சுதந்திரமாக ரோட்டில் சுற்றுகிறார்கள்.  அவர்களை எல்லாம் பிடித்துத் தண்டனை கொடுங்கள். பொள்ளாட்சியில் தப்பு நடந்து இருக்கிறது. தற்போது வேறு சில இடங்களில் தவறு நடந்துள்ளது அம்பலத்துக்கு வந்துள்ளது. அவர்களை எல்லாம் பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டனை வாங்கிக் கொடுங்கள் அதை யார் தடுத்தது. ஏன் அப்பாவிகளை அடித்துத் துன்புறுத்துகின்றீர்கள். அதில் உங்களுக்கு என்ன இன்பம் கிடைக்கிறது. 

 

தப்பு செய்பவர்களைப் பிடித்து எதையும் செய்ய மாட்டீர்கள், அவர்கள் ஜாலியாக இருப்பார்கள். ஆனால் தவறு செய்யாத இவர்கள் இருவரையும் கைது செய்து அசிங்கப்படுத்தி, அடித்துத் துன்புறுத்தி, அவமானப்படுத்திக் கொன்றுள்ளீர்கள். இதை மனிதத் தன்மை உள்ளவர்கள் ஏற்றுக்கொள்வார்களா, இது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல். இதற்கு அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும். 'இந்தியன்' படத்தில் கமல் நடித்திருப்பார். அதில் அப்பா கேரக்டர் சுதந்திர போராட்ட தியாகியாக நடித்திருப்பார். லஞ்சம் கொடுக்க மாட்டார். எதையும் நியாயப்படிதான் செய்வார். பணம் வாங்குபவர்களையும் சும்மா விடமாட்டார். ஆனால் அவருடைய மகன் அதற்கு நேர்மாறாக படத்தில் நடித்திருப்பார். பணம் கையூட்டு வாங்குவார். அதில் தவறாக ஒரு வண்டிக்கு ஃஎப்.சி. வழங்கியதால் அந்த வண்டி விபத்துகுள்ளாகி பல குழந்தைகள் இறந்திருப்பார்கள். இது வெளியே தெரியக் கூடாது என்று அந்த வண்டி ஓட்டுநருக்கு சிரஞ்சி மூலம் மகன் கமல், மதுவை செலுத்த முயல்வார். இதைப் பார்த்த அந்தப் பெரியவர் தன் மகனே ஆனாலும் பரவாயில்லை என்று அவரை கொல்ல முயன்று இறுதியில் அதில் வெற்றிபெறுவார். 

 

போலிஸ்காரர்கள் இரண்டு பேரை கொன்று விட்டார்கள், அந்த டாக்டர் ஏதோ தப்பு தப்பாக எழுதிக் கொடுத்துவிட்டார்கள். அவர்களை எல்லாம் மருத்துவர்கள் என்றே சொல்லக் கூடாது. மருத்துவர்கள் எல்லாம் தெய்வத்துக்குச் சமமாகப் பார்த்து வருபவர்களால் இனிமேல் அப்படி எல்லாம் பார்க்க முடியுமா? என்ன கொடுமை இதெல்லாம். பேசவே முடியவில்லை. இந்த மாதிரி ஆளுங்களால மத்த மருத்துவர்கள் அனைவருக்கும் கெட்ட பெயர் வந்துவிடுகிறது. அதைவிட இந்த அரசாங்கத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர்களில் ஒருவர் மூச்சுத் திணறல் காரணமாக இறந்துவிட்டார் என்கிறார், இன்னொருவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார் என்கிறார். எப்படிச் சொல்ல முடிகிறது? ரிப்போர்ட்டே வராமல் அவரால் எப்படிச் சொல்ல முடிகிறது. கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாமா? நீங்கள் சாத்தான்குளம் விவகாரத்தைக் கேட்டீர்கள், நான் சென்னை வரை வந்துவிட்டேன். அம்மா ஆட்சி என்று சொல்லிவிட்டு இந்த மாதிரி அவலமான காட்சி நடைபெறுகிறது. அவர் இருந்திருந்தால் தூத்துக்குடி சம்பவம் நடந்திருக்குமா அல்லது சாத்தான் குளம் சம்பவம்தான் நடந்திருக்குமா? அம்மாவின் பெயரைச் சொல்லி ஆட்சியாளர்கள் அவமானப்படுத்த வேண்டாம், என்றார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்