Skip to main content

மாயாவதியை பயம் ஆட்டுவிக்கிறதா?

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

பாஜக அரசின் பெரும்பான்மை பலமும், ஊழல் புகார்களில் தன்னை கைது செய்துவிடுவார்களோ என்ற பயமும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை ஆட்டுவிப்பதாக கூறப்படுகிறது.
 

mayawati

 

 

கடந்த மக்களவைத் தேர்தலில் மெகா கூட்டணியிலிருந்து காங்கிரஸை கழற்றிவிட்டபோதே மாயாவதியும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் மற்றும் அகிலேஷும் பாஜகவுக்கு பயப்படுவதாக கூறினார்கள்.
 

 மக்களவைத் தேர்தல் சமயத்தில் காங்கிரஸை விட பாஜகவே மேல் என்று இருவரும் வெளிப்படையாகவே கூறினார்கள். மாயாவதி மீதும், முலாயம் மற்றும் அகிலேஷ் மீதும் ஏராளமான ஊழல் புகார்கள் நிலுவையில் இருக்கின்றன. அந்த புகார்கள் மீது இதுவரை பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

இந்நிலையில்தான், காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்காகவும் அங்கு சிறைப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்களின் நலம் அறியவும் ராகுல் தலைமையில் சென்ற தலைவர்கள் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
 

இதை மாயாவதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்கள் காஷ்மீர் சென்றது பிரச்சனையை அரசியலாக்க அரசுக்கு உதவியாக அமைந்துவிட்டது. காஷ்மீரில் நிலைமை சீராகும்வரை பொறுத்திருந்து, பிறகு சென்றிருக்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

காஷ்மீர் விவகாரத்தில் மட்டுமின்றி, பாஜகவின் எல்லா முடிவுகளையும் மாயாவதி கட்சி ஆதரித்தே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 

 

Next Story

மக்களவைத் தேர்தல்; கூட்டணி குறித்து மாயாவதி உறுதி!

Published on 15/01/2024 | Edited on 15/01/2024
Lok Sabha elections; Mayawati is sure about the alliance!

இந்தாண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். இந்த இந்தியா கூட்டணியில் உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்திருந்தார்.

இதற்கிடையில், கடந்த 12 ஆம் தேதி காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி இடையே நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மாயாவதி, பா.ஜ.க.வை உண்மையாகவே எதிர்ப்பதாக கருதினால், பகுஜன் சமாஜ் கட்சி இந்தியா கூட்டணியில் இணைய வேண்டும். பகுஜன் சமாஜ் கட்சிக்கு மோடியை எதிர்க்க துணிவில்லை என்றால் பரவாயில்லை” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மக்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து அவர்களின் வறுமையை போக்குவதற்குப் பதிலாக மத்திய மற்றும் மாநில அரசுகள் இலவசங்களைக் கொடுத்து மக்களை அடிமையாக வைத்திருக்க முயற்சிக்கின்றன.

எங்களுடைய அனுபவத்தில் கூட்டணிகள் எப்போதும் எங்களுக்கு பலனளித்ததில்லை. கூட்டணியால் நாங்கள் இழந்ததே அதிகம். இந்த காரணத்தினால் நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகள் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட விரும்புகின்றனர். ஆனால் வரும் மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என்பதில் உறுதியாக இருக்கிறது. தேர்தல் முடிந்த பிறகு கூட்டணி குறித்து பரிசீலிக்கப்படும். வாய்ப்பு இருந்தால் தேர்தலுக்குப் பிறகு பகுஜன் சமாஜ் கட்சி மற்ற கட்சிகளுக்கு ஆதரவளிக்கும்” என்று கூறினார்.

Next Story

"சமாஜ்வாதி கட்சியிடம் இருந்து பாதுகாப்பு தர வேண்டும்" - உ.பி அரசுக்கு மாயாவதி கோரிக்கை

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
Mayawati's request to UP Government

உத்தர பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், உத்தர பிரதேசத்தில் பிரதான எதிர்கட்சிகளான அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சிக்கும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இரு கட்சிகள் இடையே சாதிய ரீதியிலான மோதல் போக்கு அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில், தன் கட்சி அலுவலகத்தை பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற உதவ வேண்டும் என உத்தர பிரதேச அரசுக்கு மாயாவதி கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து மாயாவதி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சமாஜ்வாதி கட்சி பிற்படுத்தப்பட்டோருக்கான கட்சி மட்டுமல்ல, தலித் மக்களுக்கு எதிரான கட்சியும் கூட. கடந்த பொதுத் தேர்தலில், சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்த போது, சமாஜ்வாதி கட்சியின் தலித் விரோத உத்திகள் மற்றும் குணத்தை பகுஜன் சமாஜ் கட்சி மாற்ற முயற்சித்தது. ஆனால், தேர்தல் முடிந்த பிறகு, சமாஜ்வாதி கட்சி மீண்டும் தனது தலித் விரோத உத்தியை கொண்டு வந்தது. 

இப்போது சமாஜ்வாதி கட்சித் தலைவர் யாருடன் கூட்டணி பற்றி பேசினாலும், அவரது முதல் நிபந்தனை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று ஊடகங்களில் பரவலாக விளம்பரப்படுத்தப்படுகிறது. கடந்த 1995ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி ஆட்சியின் போது, எங்கள் கட்சி அலுவலகத்தின் மீதும், எனது வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தினர். தண்ணீர், மின்சாரம் போன்றவையும் துண்டிக்கப்பட்டன. 

பகுஜன் சமாஜ் மாநில அலுவலகம் மற்றும் ஊழியர்களுக்கு சில தீய சக்திகளால் அச்சுறுத்தல் ஏற்படுகின்றன. இந்த பாதுகாப்பின்மையைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு ஆலோசனைகளின் பேரில், கட்சித் தலைவர்கள் இப்போது பெரும்பாலான கட்சிக் கூட்டங்களை அவர்களது இல்லத்தில் நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதேசமயம் கட்சி அலுவலகத்தில் நடைபெறும் பெரிய கூட்டங்களில், கட்சித் தலைவர்கள் அங்கு சென்றதும், பாதுகாப்புப் பணியாளர்கள் கூடுதலாக நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்படுகின்றது.

இதுபோன்ற சூழ்நிலையில், தற்போதைய கட்சியின் மாநில அலுவலகத்திற்கு பதிலாக வேறு எங்காவது பாதுகாப்பான இடத்தில் ஏற்பாடுகளை செய்யுமாறும், இல்லையெனில் எந்த நேரத்திலும் இங்கு அசம்பாவிதம் நிகழலாம் என்றும் உ.பி. அரசுக்கு பகுஜன் சமாஜ்வாதி கட்சி சிறப்பு வேண்டுகோள் விடுக்கிறது. மேலும், தலித் விரோதப் போக்கை அரசு கடுமையாகக் கையாள வேண்டும் என்றும் கட்சி கோருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.